நான்மணிக்கடிகை/16/வாழ்க்கை உண்மைகளை வெளிக்காட்டும்.

 சங்ககால இலக்கியங்களில், பதினெண் கீழ் கணக்கு நூல்களில் ஒன்றான 'நான்மணிக்கடிகை' என்பது நான்கு இரத்தினத் துண்டங்கள் என்னும் பொருளைத் தரும். ஒவ்வொரு பாடலிலும் நான்கு சிறந்த கருத்துக்களைக் கூறுவதால் 'நான்மணிக்கடிகை' எனப் பெயர் பெற்றது. இதனை இயற்றியவர் விளம்பி நாகனார்.இவரின் காலம் கி.பி. 200 க்கு முன்னர் ஆகும்.

 


தொடர்ச்சி……

 

76.👇👇👇

சாவாத இல்லை, பிறந்த உயிர் எல்லாம்;

தாவாத இல்லை, வலிகளும்; மூவா

இளமை இயைந்தாரும் இல்லை; வளமையில்

கேடு இன்றிச் சென்றாரும் இல்.    

:-பிறந்த உயிர்கள் எல்லாம் இறவாதன இல்லை. கெடாத வலிமைகளும் இல்லை. மூவாத இளமைகளும் இல்லை. குறையாத செல்வங்களும் இல்லை.

 

77.👇👇👇

சொல்லான் அறிப, ஒருவனை; மெல்லென்ற

நீரான் அறிப, மடுவினை; யார்கண்ணும்

ஒப்புரவினான் அறிப, சான்றாண்மை; மெய்க்கண்

மகிழான் அறிப, நறா. 

:-ஒருவனுடைய நன்மை தீமைகளை அவன் கூறுஞ் சொற்களாலேயே அறிஞர்கள் அறிந்து கொள்வார்கள். மடுவின் மண் தன்மையை மென்மையான நீரால் அறிவர். பெருந்தன்மையை யார் மாட்டும் ஒப்ப நடக்கும் நடுநிலைமையால் அறிவர். கள் குடித்ததை அவனது உடம்பில் ஏற்படும் மாற்றத்தால் அறிவர்.

 

78.👇👇👇

நா அன்றோ, நட்பு அறுக்கும்? தேற்றம் இல் பேதை

விடும் அன்றோ, வீங்கப் பிணிப்பின்? அவாஅப்

படும் அன்றோ, பல் நூல் வலையில்? அடும் அன்றோ,

மாறு உள் நிறுக்கும் துணிபு?

:-பதறிய நாக்கினால் நட்புக் கெடும். கட்டாயப்படுத்தினால் தெளிவில்லாத பேதை மக்களின் நற்செயல்கள் கெடும். நூல்களைப் பயில்வதால் மாணாக்கருக்கு அவாக்கெடும். பகைமைக் கண் ஒருவன் வைக்கும் தீராத பகைமையால் அவனே கெடுவான்.

 

79.👇👇👇

கொடுப்பின், அசனம் கொடுக்க! விடுப்பின்,

உயிர் இடையிட்ட விடுக்க! - எடுப்பின்,

கிளையுள் அழிந்தார் எடுக்க! கெடுப்பின்,

வெகுளி கெடுத்துவிடல்.      

:-ஒருவன் கொடுப்பதானால் ஏழைகளுக்கு உணவு கொடுக்க வேண்டும். ஒன்றை விடுவதானால் பற்றை விட வேண்டும். ஒருவரைத் தாங்கி மேலுயர்த்துவதானால் சுற்றத்தாருள் ஏழையாக உள்ளவரை மேல் உயர்த்த வேண்டும். கெடுப்பதானால் கோபத்தைக் கெடுக்க வேண்டும்.

 

80.👇👇👇

நலனும் இளமையும் நல்குரவின்கீழ்ச் சாம்;

குலனும் குடிமையும் கல்லாமைக்கீழ்ச் சாம்;

வளம் இல் குளத்தின்கீழ் நெல் சாம்; பரம் அல்லாப்

பண்டத்தின்கீழ்ச் சாம், பகுடு.        

:-அழகும் இளமையும் வறுமையால் கெடும். குலத்துயர்வும், குலத்தொழுக்கமும் கல்லாமையால் கெடும். நீர் வருவாயற்ற ஏரியின் கீழ் விளையும் நெற்பயிர் கருகிப் போகும். சுமக்க முடியாத சுமையைத் தாங்கும் எருதுகள் இறக்கும்.

 

நான்மணிக்கடிகை தொடரும்…..பகுதி:17 வாசிக்க அழுத்துக..👉.Theebam.com: நான்மணிக்கடிகை/17/வாழ்க்கை உண்மைகளை வெளிக்காட்டும்..:


ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக👉

Theebam.com: 'நான்மணிக்கடிகை' /01/வாழ்க்கை உண்மைகளை வெளிப்படு...

தேடல் தொடர்பான தகவல்கள்:

நான்மணிக்கடிகை - பதினெண் கீழ்க்கணக்கு, இல்லை, அன்றோ, கெடும், வேண்டும், சாம், அறிப, இலக்கியங்கள், கீழ்க்கணக்கு, அறிவர், நான்மணிக்கடிகை, பதினெண், கொடுக்க, இளமையும், ஒருவன், பேதை, உயிர், எல்லாம், பிறந்த, சங்க

No comments:

Post a Comment