கடைசி வாரம் வெளிவந்த திரைப்படங்கள் எப்படி?

 சுருக்கமான ஒரு பார்வை

 

''ரங்கா'' ( 2019 )  விமர்சனம் :

 வினோத் டி எல் இயக்கத்தில் சிபிராஜ், நிகிலா விமல், சதிஷ் நடித்த தமிழ் அதிரடித் திரைப்படம்விஜய் கே செல்லையா தயாரிக்கராம்ஜீவன் இசையமைத்துள்ளார்.

ஏலியன் ஹேண்ட் சிண்ட்ரோம் என்கிற நோய்த் தாக்கம் உள்ள நாயகன் சிபிராஜ் , நாயகி நிகிலாவிமலின் கையை இறுகப்பிடித்துவிட அதன்விளைவு அவர்களுக்குள் காதல். கல்யாணமும் ஆகிறது.தேனிலவுக்காக காஷ்மீர் செல்கிறார்கள். அங்கு, உயிருக்கும் உயிருக்கும் மேலான மானத்துக்கும் ஊறுவிளைவிக்கும்  எதிர்பாராத சிக்கலை எதிர்கொள்ளவேண்டிய நிலைஅப்படி என்ன சிக்கல்? அதிலிருந்து அவர்கள் மீண்டார்களா? என்பதைத் தொய்வின்றிச் சொல்லிச் சென்றிருக்கிறது ரங்கா.

ஒரு முறை கண்டு ரசிக்கலாம்.

📽📽📽📽📽📽

''டான்'' விமர்சனம் :

சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன், சமுத்திரக்கனி, எஸ் ஜே சூர்யா எனப்  பலர்  நடித்திருக்கும் நகைச்சுவை - திரில்லர் திரைப்படம். சுபாஷ்கரன் தனது லைக்கா தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.

அப்பா சமுத்திரகனி தன் மகனை என்ஜினியர் ஆக்க ஆசைப்பட்டு மகனின்  (சிவகார்த்திகேயன்)விருப்பத்திற்கு மாறாக என்ஜினியரிங் கல்லூரியில் கொண்டுபோய் சேர்க்கிறார். அங்கு படியாமல்  எஸ்.ஜே சூர்யாவுடன் ஏற்படும் மோதலை  தாண்டி சென்று  சமுத்திரக்கனியின் கனவை மகன்  பூர்த்தி செய்தாரா என்பதுதான்டான்மீதிக்கதை.

கதை சொல்ல வரும் கருத்துகளுக்காக வேண்டுமானால் ஒருமுறை பார்க்கலாம்.

 📽📽📽📽📽📽

''ஐங்கரன்'' விமர்சனம்:

 ரவிஅரசு  இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் குமார், மஹிமா நம்பியார், காளி வெங்கட் மற்றும் பலர் நடித்துள்ள அதிரடி திரைப்படம். கணேஷ் தயாரிக்க , ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

 

புதுப்புது கண்டுபிடிப்புகளைச் செய்யும்  மெக்கானிக்கல் எஞ்சினியர்   ஜிவி பிரகாஷ்குமார்  அவற்றிற்கு உரிமம் பெற நடைநடையாய் நடந்தும் அவருக்கு எந்த அங்கீகாரமும் கிடைக்கவில்லை. இதனிடையே, அவர்களது ஊரில் ஆழ்துளை குழாயில் விழுந்த ஒரு குழந்தையின் உயிரை தன்னுடைய கண்டுபிடிப்பால் எப்படிக் காப்பாற்றுகிறார்?. அதோடு, வட இந்தியக் கும்பல் ஒன்று செய்யும் வைரக் கொள்ளையை தனது சாதுர்யத்தால் எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதுதான்  கதை.[3/5]

புதிய கதை என்ற திருப்தியோடு பார்க்கலாம்.

 📽📽📽📽📽📽

தொகுப்பு:செ.மனுவேந்தன்





மாறிடும் உலகில் புதிய புதுமைகள்

 -:அறிவியல்:-

பெட்ரோலியத்திற்கு மாற்றாகும் மர உருண்டைகள்!

காட்டில் விளையும் மரத்தை எரிபொருளாக பயன்படுத்துவது புதிதல்ல. ஆனால், அந்த மரத்தை சிறிய உருண்டைகளாக்கி அவற்றை எரிபொருளாக பயன்படுத்துவதுதான் புதிது.கோஸ்டா ரிகாவில் ஆண்டுக்கு 1.2 மில்லியன் டன் மரம் விளைவிக்கப்படுகிறது. அதில் 40 சதவீதம் வீணாக்கப்படுகிறது. இதே விகிதத்தில் உலகெங்கும் மரங்கள் வீணாக்கப்படுகின்றன. வீணாக குப்பையில் சேரும் மரங்கள், மட்கும்போது மீத்தேன் வாயுவை வெளியேற்றுகின்றன.இவை புவி வெப்பமாதலுக்கு துணைபோகின்றன.

 

பெல்லட்டிக்ஸ் என்ற கோஸ்டா ரிக்கா நிறுவனம், மரங்கள் மற்றும் வேளாண் கழிவுகளை, அடித்து நெகிழ்த்தி, உலர்த்தி, இறுக்கி, உருண்டைகளாக ஆக்கும் புதிய தொழில்நுட்பத்தை படைத்துள்ளது.இதனால், சிறிய மர உருண்டைகள் நின்று நெடுநேரம் எரிவதோடு, பெட்ரோலிய பொருட்களைவிட 50 சதவீதம் விலை குறைவாகவும் உள்ளன.

 

மேலும் பெல்லெடிக்ஸ் உருவாக்கியுள்ள இந்த நுட்பத்தால், சிறிய ஆலைகளை பல இடங்களில் கட்டுவிக்க முடியும். உதாரணமாக, மரவேலைகள் அதிகம் நடக்கும் மர அறுப்பு மில்கள், மரக் கடைகள், மர குடோன்களுக்கு அருகிலேயே பெல்லெட்டிக்ஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் ஆலைகளை நிறுவ முடியும். இதன் மூலம், மர உருண்டைகளை வெகு தூரம் எடுத்துச் செல்லும் செலவும், அந்த வாகனங்கள் உமிழும் மாசும் மிச்சப்படும்.பெல்லெட்டிக்சின் மர உருண்டைகள் பாய்லர்கள், தொழிற்சாலை உலைகள், வீடுகளுக்கு கதகதப்பூட்டுதல் போன்றவற்றுக்கு மிகவும் ஏற்றவை.

 

ஏழு நொடிகளில் மாத்திரை தயார்!

'தனிநபருக்கென்றே மருந்து தயாரிப்பு' என்ற புதுமை, விரைவில் நடைமுறைக்கு வரும்போலத் தெரிகிறது. அதற்கு, லண்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ள நவீன முப்பரிமாண அச்சியந்திரம் உதவும்.இன்று மாத்திரை மருந்துகள், பெரிய தொழிற்சாலைகளில் எல்லோருக்கும் பொதுவாகத் தயாராகின்றன. ஆனால், ஒவ்வொருவரின் தனிப்பட்ட உடலமைப்பு, நோயின் தன்மை ஆகியவற்றை உணர்ந்து தயாரிக்கப்படுவதில்லை.

 

இந்த முறையை மாற்ற, 'பர்சனலைஸ்டு மெடிசின்' என்ற தனி மருந்துத்துறை மெல்ல உருவெடுத்து வருகிறது. அதில் ஒன்றுதான், லண்டன் ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ள, மாத்திரையை நொடிகளில் அச்சிட்டுத்தரும் முப்பரிமாண அச்சியந்திரங்கள்.

 

இது எப்படி முடிகிறது? ஒரு உண்ணக்கூடிய பிசினில் மருந்தினை கலந்துவிடுவர். இத்துடன் ஒளி பட்டால் மாற்றமடையும் வேதிப் பொருளையும் சேர்ப்பர். பிறகு, முப்பரிமாண அச்சியந்திரத்தில் இந்த மூலப்பொருட்களை உள்ளிட்டு, அதன் மீது பல்வேறுகோணங்களில் ஒளியினை பாய்ச்சுவர். ஒளி படும் இடங்களில் எல்லாம் மருந்துப் பிசின் கெட்டியாகி, ஒரு திடமான மாத்திரை தயாராகிவிடும். ஒளிக் கதிர்கள் பலகோணங்களில் ஒரே நேரத்தில் பாய்ச்சப்படும் என்பதால், மாத்திரை திடவடிவமாக ஆவதற்கு சில விநாடிகள் போதும்.

 

லண்டன் ஆராய்ச்சியாளர்கள், தாங்கள் உருவாக்கிய முப்பரிமாண மருந்து அச்சியந்திரத்தில், ஒரு பாராசெட்டமால் மாத்திரையை உருவாக்கிக் காட்டியுள்ளனர். இந்த முறையில் மருந்து தயாரிக்கும் முறை பரவலானால், ஒவ்வொரு மருத்துவரின் மேசைக்கு அருகிலும் இந்த அச்சியந்திரம் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

 

நொதித்தல் முறையில் கொழுப்புச் சத்து!

மனிதர்களுக்கு கொழுப்புச் சத்து மிகவும் அவசியம். அவற்றை தற்போது இறைச்சியிலிருந்தே அதிகம் நாம் பெறுகிறோம். இதற்கு மாற்றாக, விலங்குக் கொழுப்புக்கு இணையான கொழுப்பு வகைகளை, புதுமையான வேதியியல் முறைகளில் தயாரிக்க முயற்சிகள் நடக்கின்றன.

 

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள 'யாலி பயோ' என்ற நிறுவனம், விலங்குக் கொழுப்பின் சுவை உள்ள கொழுப்பை தயாரிக்க, நொதித்தல் முறையை பயன்படுத்துகிறது. சில வகை நுண்ணுயிரிகளை கலன்களில் போட்டு, அவற்றுக்கு பலவித சர்க்கரைகளை உண்ணக் கொடுப்பது தான் யாலியின் அடிப்படை உத்தி.

 

நுண்ணுயிரிகள், கலனில் போடப்படும் சர்க்கரைகளை, விதவிதமான கொழுப்புகளாக மாற்றி வெளியேற்றுகின்றன. இவை உற்பத்தி செய்யும் கொழுப்புகள், விலங்குக் கொழுப்புகளின் மூலக்கூறுகளை ஒத்திருப்பதால், சுவையும், திடத் தன்மையும் அதேபோல உள்ளன. இந்த வகை கொழுப்புகள் சமைப்பதற்கு ஏற்றவையாகவும் இருக்கின்றன.

 

மேலும், தாவரங்களை வைத்து தயாரிக்கப்படும் கொழுப்புகளை விடவும், நுண்ணுயிரிகள் நொதித்தல் முறையில் உற்பத்தி செய்யும் கொழுப்புகள் அதிக சுவையாகவும், நல்ல மணத்துடனும் உள்ளன.தற்போது கோழி, மாடு போன்றவற்றின் செல்களை வைத்து, ஆய்வகத்தில் இறைச்சி தயாரித்து விற்கும் முறை அறிமுகமாகியுள்ளது.

 

ஆனால், அவற்றில் கொழுப்பு இல்லை. அத்தகைய செயற்கை செல் இறைச்சிகளுடன், யாலியின் நொதித்தல் முறைக் கொழுப்புகளை சேர்த்து விற்கும் காலம் விரைவில் வரும் என எதிர்பார்க்கலாம்.

 

தொகுப்பு:செ.மனுவேந்தன்