உழைக்கும் ஆரோக்கியமான மனிதனையும், உழைக்காமல் உடலை வளர்ப்பவர்களையும் பார்த்த மாத்திரத்திலேயே கண்டுபிடித்து விடலாம். உழைப்பாளிகளிடம் உபரியான கொழுப்பு இருப்பதில்லை. ஆனால், உடலை வளர்ப்பவர்களுக்கு உபரியான கொழுப்பு அதிகமாக இருக்கும்.
நாம் சாப்பிடும் உணவின் கலோரியும், உழைப்பினால் எரிக்கப்படும் கலோரியின் அளவும் ஒன்றாக இருந்தால் பிரச்சனை இல்லை. அப்படியில்லாமல் உழைப்பால் கலோரி எரிக்கப்படாத பொழுது உடலில் அது கொழுப்பாக சேமிக்கப்படுகிறது. இப்படி கொழுப்பை உடலில் சேமித்து வைப்பதற்கும் காரணமிருக்கிறது. ஆதிகாலத்தில் இன்றைக்கு உணவு சேமித்து வைப்பதுபோல் சேமிக்கப்படவில்லை. அப்போது பஞ்சமும் பட்டினியும் அடிக்கடி ஏற்பட்டன.
அப்படி பட்டினி கிடக்கும் காலங்களில் உயிர் வாழ உடல் இந்த கொழுப்பை எடுத்துக்கொள்ளும். அதற்காக சேமிக்கப்படுவதே இத்தகைய கொழுப்பு. இன்றைக்கு பட்டினி இல்லை. பஞ்சமும் இல்லை அதனால் சேமிக்கப்படும் கொழுப்பு செலவாக வழியேயில்லை. உடலுழைப்பும் இல்லாததால் தொடர்ந்து கொழுப்பு சேகரிக்கப்படுகிறது.
மனித உடலில் கொழுப்பு சேமித்து வைப்பதற்கு என்றே சில இடங்கள் இருக்கின்றன. உடலின் முக்கிய உறுப்புகளுக்கும் அதிகமாக இயங்கும் உறுப்புகளையும் விட்டுவிட்டு மற்ற இடங்களில் கொழுப்பு சேமிக்கப்படுகிறது.
மூளை, இதயம், இனப்பெருக்க உறுப்புகள் மனிதனின் முக்கிய உறுப்புகள் பட்டியலில் வருகிறது. அதனால் இவற்றின் அருகில் கொழுப்பு சேமிக்கப்படுவதில்லை. வயிற்றுப்பகுதி சும்மாதானே இருக்கிறது. அதனால் அங்கு உபரியான கொழுப்பு சேமிக்கப்படுகிறது. தோலுக்கு அடியில் கொஞ்சம் கொஞ்சமாக சேரும் கொழுப்பு தான் பானை வயிறாக தோற்றம் தருகிறது. தொந்தி, தொப்பை என்று அழைக்கப்படும் பெருத்த வயிறு ஆண்களுக்கு மட்டும்தான். பெண்களுக்கு கிடையாது.
பெண்களுக்கு மூளை, இதயம், இனப்பெருக்க உறுப்புகள் தவிர இன்னொரு முக்கியமான உறுப்பு கூடுதலாக உள்ளது. அது கர்ப்பப்பை. ஒரு உயிரை உருவாக்கும் உறுப்பு. அதன் செயல்திறன் குறைந்து விடக்கூடாது என்பதற்காக இயற்கை பெண்களின் வயிற்றில் கொழுப்பை சேர்த்து வைப்பதில்லை. கர்ப்பத்தின்போது வயிறு பெருத்தும், அதன்பின் வயிறு சுருங்கியும் இருவேறு வேலைகள் நடைபெறுகின்றன. கர்ப்பம் என்ற ஒரு காரணத்திற்காகவே பெருத்த வயிறு இல்லாத பெண்கள் நடமாடுகிறார்கள்.
வயிற்றில் உபரிக் கொழுப்பு சேமிக்கப்படாவிட்டால் வேறு எங்காவது சேமிக்கவேண்டும். அப்படி இயற்கை பெண்களுக்கு தேர்ந்தெடுத்த இடம் தொடை. இதனால்தான் ஒல்லியாக இருக்கும் பெண்களின் தொடைகூட உருண்டு திரண்டு பெரிதாக இருக்கிறது. இப்படி தொடையிலும் ஓரளவே கொழுப்பு சேமிக்கப்படுகிறது. அதனையும் மீறி கொழுப்பு சேமிக்கப்படவேண்டும் என்ற நிலை வரும்போது உடல் பெண்ணின் பின்புறத்தை தேர்ந்தெடுக்கிறது. பெண்ணின் பின்புறம் பெரிதாக தெரிவதற்கு உபரி கொழுப்பே காரணம்.
பெண்களுக்கு இந்த இரண்டு இடங்களிலும் கொழுப்பு சேமித்து முடித்தபின் மூன்றாவதாக ஒரு இடத்தை இயற்கை தேர்ந்தெடுக்கிறது. அது கைகளின் மேற்புறத்தில் இருக்கும் பின்பகுதி. பல பெண்களுக்கு கையும் பெரிதாக தெரிய கொழுப்பே காரணம். இது குழந்தைகளுக்கு பால் கொடுக்கும்போது சக்தி தர பயன்படுகிறது.
சரி, ஆணுக்கும் தொடையில் கொழுப்பை சேமித்து வைக்கலாமே ஏன் வயிற்றில் என்று கேட்கலாம். அதற்கு மரபணுதான் காரணம். ஆதிகால ஆண் வேட்டையாடினான். அப்போது வேகமாக விலங்குகளை துரத்தி செல்ல அல்லது துரத்தும் விலங்குகளிடமிருந்து தப்பித்து ஓட கால்கள் மிக அவசியமாக இருந்தது. தொடையில் கொழுப்பை சேர்த்தால் ஓடமுடியாது. அதனால் ஆண்களுக்கு வயிற்றில் கொழுப்பு சேமிக்கப்பட்டது.
ஆதிகால பெண்கள் குகையில் குழந்தைகளை வளர்ப்பதில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் ஓடவேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தனர். அதோடு அவர்கள் தொடர்ந்து கர்ப்பம் அடைவதும் குழந்தைகளை பெற்றெடுப்பதுமாக இருந்தனர். அதனால் வயிற்றில் கொழுப்பை சேமிக்காமல் தொடையில் சேமித்து வைக்கப்பட்டது. அதோடு குழந்தை பிறப்புக்கு அதாவது பிரசவத்துக்கு வசதியாக பின்புறத்திலும் உபரி கொழுப்பு சேமிக்கப்பட்டது.
கடந்த தலைமுறை வரை பெருத்த வயிற்றோடு பெண்களை பார்ப்பது மிக மிக அரிது. அப்படியே இருந்தாலும் அது குழந்தை பேற்றை முடித்த வயதான பெண்களாக இருப்பார்கள். ஆனால், இப்போது பல பெண்கள் அதிலும் இளம் பெண்களே தொப்பையுடன் காணப்படுகிறார்கள். அதற்கும் காரணமிருக்கிறது. அந்தப் பெண்களிடம் கேட்டுப்பார்த்தால் அவர்கள் அறுவை சிகிச்சை மூலம் கர்ப்பப்பையை நீக்கியவர்களாக இருப்பார்கள். அதேபோல் மெனோபாஸ் என்ற மாதவிலக்கு நிரந்தரமாக நின்று போன பெண்களுக்கும் ஆண்களைப்போல் பானை வயிறு தோன்றுகிறது.
அதாவது, இனிமேல் குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என்று தெரிந்ததும் இயற்கை பெண்ணின் வயிற்றுக்கான முக்கியத்துவத்தை குறைத்துவிடுகிறது. அதிகப்படியான உபரி கொழுப்பை அங்கேயும் சேமிக்க தொடங்கிவிடுகிறது. ஏனென்றால் பெண்களுக்கு ஆண்களைவிட கொழுப்பின் அளவு கூடுதல். அதை சேமித்துவைக்க நிறைய இடம் தேவைப்படுகிறது.
இப்படி உபரியான கொழுப்புதான் ஆண்களுக்கு தொந்தியாகவும் பெண்களுக்கு தொடையிலும் பின்புறத்திலும் சேமித்து வைக்கப்படுகிறது. இதுவே ஆணுக்கும் பெண்ணுக்குமான வித்தியாசத்தை மேலும் அதிகப்படுத்துகிறது.
ஆக்கம்:S.P.SENTHIL KUMAR
0 comments:
Post a Comment