நம்மைச் சுற்றி -அறிந்துகொள்ள வேண்டியவை.../அறிவியல்

 


சரக்கு டெலிவரி செய்யும் 'ரோபோ'க்கள்!

சரக்குப் போடும் தானியங்கி ரோபோக்கள் சாலைகளில் வலம்வரத் தொடங்கி ஓரிரு ஆண்டுகள்தான் ஆகின்றன. அதற்குள் ஸ்டார்ஷிப் டெக்னாலஜீஸ், பெட்டிபோல உள்ள நான்கு சக்கரம் கொண்ட 1700 ரோபோக்களை அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் களமிறக்கியுள்ளது. சாலைகளில் தானாகவே ஊர்ந்து சென்று சரக்குகளை உரிய முகவரிதாரர்களிடம் தந்துவிட்டுத் திரும்புகின்றன.


இப்போதைக்கு அவை நடைபாதைகளில் என்றாலும், மனித வழிகாட்டல் இன்றி, பரபரப்பான சாலைகளைக் கடக்கவும், பனி போன்ற காலநிலை மாற்றங்களை உணர்ந்து பயணிக்கவும் ஸ்டார்ஷிப் ரோபோக்கள் கற்றுக்கொண்டு இதுவரை 30 லட்சம் முகவரிகளுக்கு டெலிவரியை முடித்துவிட்டன என்றால் அது பெரிய சாதனைதான்.

பிரிட்டனில், டெஸ்கோ போன்ற தொடர் கடைகளின் மளிகை சாமான்கள் முதல், அமெரிக்காவில் தெற்கு கரோலினா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்களின் பீட்சா ஆர்டர் வரை பலவகை டெலிவரிகளை ஸ்டார்ஷிப் ரோபோக்கள் செய்து வருகின்றன.

தற்போது தினமும் 10 ஆயிரம் டெலிவரிகள் வரை அவை செய்யுமளவுக்கு வேகமும் திறனும் பெற்றுள்ளன.ஸ்டார்ஷிப் ரோபோக்கள், டெலிவரிக்குப்போகும் வழியில் தினமும் புதுப்புது சூழல்களை சந்திக்கின்றன. எனவே, அவற்றை சமாளித்து முன்னேறும் திறன்களையும் தானாகவே அவை வளர்த்து வருகின்றன.

எனவே, சில ஆண்டுகளுக்குள் மனிதர்களை இத்தகைய பணியில் அமர்த்துவதை உலகெங்கும் நிறுத்திவிடுவர் என ஸ்டார்ஷிப்பின் படைப்பாளிகள் கருதுகின்றனர்.டெலிவரி ரோபோக்கள் யுகம் இன்னும் 5 ஆண்டுகளில் துவங்கிவிடும் என்று வல்லுனர்கள் கணித்துள்ளனர்.

மூளையின் அளவைக் குறைக்கும் குடி?

குடிப்பது புத்தியை மழுங்கடிக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். இப்போது, குடியால் எந்த அளவுக்கு மூளை பாதிக்கப்படும் என்பதை, அறிவியல் அளந்து சொல்லியிருக்கிறது. அமெரிக்காவிலுள்ள பென்சில்வேனியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள், 36 ஆயிரம் பேரின் மூளையின் எம்.ஆர்.., ஸ்கேன் படங்களை வைத்து குடியால் மூளைக்கு ஏற்படும் மாற்றங்களை ஆராய்ந்தனர்.

தினமும் இரண்டு கோப்பை பீர் அல்லது இரண்டு குவளை ஒயின் அருந்துபவருக்கு, மூளையின் கட்டமைப்பிலேயே மாறுதல் ஏற்படுவதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.அதுமட்டுமல்ல, தினமும் இரண்டு குவளை முதல் நான்கைந்து குவளை மது அருந்துவோருக்கு மூளையின் அளவு கணிசமாக குறைந்துவிடும் என்றும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

எந்த அளவுக்கு?சராசரி நபருக்கு 10 ஆண்டுகள் வயது கூடும்போது, அதற்கேற்ப மூளையின் அளவு குறையும். ஆனால், தினமும் நான்கு குவளை மது குடிப்பவருக்கு அதே அளவு மூளை குறைவு சில ஆண்டுகளிலேயே ஏற்படும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதுவரை குடிப் பழக்கத்திற்கும், மூளை பாதிப்புக்கும் உள்ள தொடர்பு குறித்து நடத்தப்பட்ட மிகப் பெரிய ஆய்வு இது. இதற்கு முன்பு சில நுாறு பேர்களுக்கு இடையே தான் இத்தகைய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. எப்படி பார்த்தாலும், குடிப்பழக்கம் உள்ள நபருக்கு மூளை நாளடைவில் பாதிக்கும் என்பது உறுதி.

சுவர்களிலும் மின்சாரம் தயாரிக்கலாம்!

கூரை மட்டும் தான் சூரிய மின் பலகைகளிலிருந்து மின் ஆற்றலை உற்பத்தி செய்ய உகந்த இடமா? கட்டடம் என்று இருந்தால், நான்கு சுவர்கள் மீதும் வெயில் படத்தான் செய்கிறது. அதை விட்டுவைப்பானேன்? சுவர்களுக்கு சூரிய ஒளிப் பலகைகள் வராததற்கு அதன் கரிய நிறம்தான் காரணம். சுவர்களின் அழகை அவை மட்டுப்படுத்துவதாக பலர் நினைப்பதால், சுவரின் வெயில் ஆற்றல் வீணாவதை சில விஞ்ஞானிகள் விரும்பவில்லை.

உடனே, பல வண்ணங்கள் மற்றும் வடிவமைப்புகளில் சூரிய மின் பலகைகளை தயாரிக்கத் துவங்கியுள்ளனர்.கனடாவிலுள்ள மிட்ரெக்ஸ் நிறுவனம், பலவித வடிவமைப்புகள் மற்றும் வண்ணங்களில் சூரிய மின் பலகைகளை வடிவமைத்துள்ளது. இவை வெளிச் சுவர்களுக்காகவே தயாரிக்கப்படுபவை. கட்டடத்துடன் ஒருங்கிணைந்த சூரிய மின் பலகை (BIPV) என்று இந்த பலகைகளுக்கு பெயர்.சுவரின் மேற்பரப்பில், எந்த வடிவத்திலும் வெட்டி ஒட்டும்படி பலகைகளை மிட்ரெக்ஸ் தயாரித்து வருகிறது.

ஒரு சராசரி வீட்டின் சுவர்களில் இப்பலகைகளை அமைத்தால், 350 வாட் மின்சாரம் வரை தயாரிக்க முடியும் என்கின்றனர் மிட்ரெக்சின் ஆராய்ச்சியாளர்கள்.விரைவில் இந்த தொழில்நுட்பம் உலகில் பரவிவிடும் என்பதில் சந்தேகமில்லை.

தொகுப்பு: செ. மனுவேந்தன்

No comments:

Post a Comment