நான் உயர்தரம் முடித்து, அரசாங்கம் அறிமுகப் படுத்திய தரம் அற்ற, இனரீதியான
தரப்படுத்தல் மூலம்,
பல்கலைக்கழக நுழைவை இழந்து, தனியார் நிலையம்
ஒன்றில் தொழில் சார்ந்த கல்வி ஒன்றில்
அன்று பயின்று கொண்டு இருந்தேன். பொழுது போக்காக சில பேனா நண்பர்களை உள்வாங்கி, எனது ஓய்வை பயன்
படுத்திய காலம் அது.
நாளடைவில், அதில் ஒரு பேனா
நண்பன் முன்னிலை வகுக்க தொடங்கினார். அரசியல் தொடங்கி சமயம் வரை எமக்குள் கருத்து
பரிமாற்றங்கள் நடந்தன. இருவருக்கும் சில உடன்பாடுகளும் மாறுபட்ட கருத்துக்களும்
இருந்தாலும் நட்பு வலுவாகிக் கொண்டே போனது.
நம்பிக்கை வளர,
இயல்பாகவே, எந்தவித தயக்கமும் இன்றி கடிதங்கள் பரிமாற
தொடங்கினேன். அவனை பற்றிய தனி விபரங்களையும் அறிய என்னுள் ஒரு அவா வந்தது. எனினும்
எப்படி கேட்பது என்று தெரியாமல் இருந்த
அந்த நேரத்தில், அவனும் எனோ என்
படத்தை கேட்டு ஒரு கடிதம் போட்டு இருந்தான். இது தான் சாட்டு
என்று, 'நான் பெண், முதலில் நீ உன்
படத்தையும், முன்பு தரப்படாத
விபரங்களையும் தா'
என்று கேட்டேன்.
அதன் பின் ஒரு சில கிழமை கடிதங்கள் வரவில்லை, ஆனால் பிறகு 'தான் பட்டம்
பெற்று, அண்மையில்
கொழும்பில் வேலை பெற்று, கல்வி அமைச்சில்
அதிகாரியாக வேலை பார்ப்பதாக' பட்டமளிப்பு படம், வேலைத்தள
படங்களுடன் கடிதம் வந்தது .
அவன் படங்களை பார்த்தவுடனே, அவனின் முன்னைய கருத்தாடல்களும் ஒன்று சேர 'அண்ணலும்
நோக்கினான் அவளும் நோக்கினாள்' போல என்னுள் 'உள்ளம் கவர்ந்த
கள்வன்' ஆக குடிபோய் விட்டான்! ஆனால் நான் ஒன்றை மனதில்
எடுக்க மறந்துவிட்டேன். நான் நோக்கியது வெறும் படமே என்று!
நானும் எனோ அவசரம் அவசரமாக படம் எடுத்து, என்னை பற்றி கூடுதலாக எழுதி, அவனின் படத்துக்கும், வேலைக்கும் வாழ்த்து கூறி, பதில் போட்டேன். அவன் என்னை பற்றி என்ன சொல்லுவான் என்று வேறு கற்பனை கூட!
அவனின் பதில் வந்தது, சாதாரணமாக நன்றி கூறியதுடன், தான் விடுதலையில்
வீடு வருவதாகவும்,
நேரம் இருந்தால், நான் படிக்கும் தனியார் நிலையம் வந்து
சந்திப்பதாகவும் எழுதி இருந்தான். மற்றும்
படி என் படத்தை பற்றி ஒன்றுமே எழுதவில்லை, எனக்கு ஒரே கோபம், என்றாலும் அவனை
திட்ட முடியவில்லை.
"நெஞ்சத்தார் காத
லவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக் கறிந்து"
என்பது போல, என் உள்ளத்தில் அந்த
கள்ளன் குடிகொண்டு விட்டதால், என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை, வாரான் என்கிறான், சிலவேளை வந்து
சொல்லுவானோ ?, இப்படி என்னையே
ஆறுதல் படுத்தினேன்.
வந்தான் சொன்னபடியே, என் கண்கள் அவனையே பார்த்தபடி இருந்தது. நான் என் தோழியுடன் அவனை சந்தித்து, அங்கே இருக்கும் சிற்றுண்டி சாலையில் மூவரும் மூன்று மணித்தியாலத்துக்கு மேல் கதைத்திருப்போம். அந்த கள்ளன் எந்த சந்தர்ப்பத்திலும் என்னிடம் எந்த விருப்பமும் வெளிக்காட்ட வில்லை. நான் அவனிடம் என் ஆசையை சொல்ல விரும்பினாலும், எனோ அதை சொல்ல முடியவில்லை? அதைத்தான் தொல்காப்பியர்
"அச்சமும் நாணும்
மடனும் முந்துறுதல்
நிச்சமும் பெண்பாற் குரிய என்ப"
என்கிறாரோ யான் அறியேன்!
அதன் பின் அவன் என்னை நேரடியாக என்றுமே சந்திக்கவில்லை, அந்த 'உள்ளம் கவர்ந்த
கள்வன்' இன்று தன் திருமண
பத்திரிக்கையை அனுப்பி உள்ளான். என் நெஞ்சம் இன்னும் அவனை
மறக்கவில்லை?
கைக்கூடிய காதல் உண்டு, கைக்கூடாத காதல் உண்டு, கைக்கூடி பிரிந்த
காதல் உண்டு, கைக்கூடாமல்
நினைவுகளோடே வாழும் காதல் உண்டு!. அதில் நான் கடைசி பிரிவு !! அவன் என்றும் என் 'உள்ளம் கவர்ந்த கள்வன்' !!
ஆமாம் அவன் இன்று ஒருவளின் கணவன் தானே! அது தான் அவன் என்னுள் கள்வனாகவே வாழ்கிறானோ ? நீங்களே சொல்லுங்கள் ??
[கந்தையா
தில்லைவிநாயகலிங்கம்]
No comments:
Post a Comment