(சுயமரியாதையுடைய பெண்கள்)
கணவனாலோ, பிறராலோ சிறுமைப்படுத்தப்பட்டால், ‘மரியாதை’ என்று அடங்கிப்போய், அதை ஏற்கமாட்டார்கள் சில பெண்கள். இவர்களுக்கு சுயமரியாதை முக்கியம்.
இவர்களுக்கு புத்திசாலித்தனத்துடன் துணிச்சலும் உண்டு.
கதை:
‘பெண்ணை
அதிகம்
படிக்க வைத்துவிட்டால், ஆண்களை மதிக்கமாட்டாள். அடங்கவேமாட்டாள்!’ என்று அச்சுறுத்தியவர்களை அலட்சியம் செய்யும் விவேகம் காயத்ரியின் பெற்றோருக்கு இருந்தது.
சிறுவயதிலிருந்தே, ‘நீ தைரியசாலி. புத்திசாலி!’ என்று ஊக்கமளித்து அவளை வளர்த்தார்கள்.
‘எந்தக் காரியமாக இருந்தாலும், அதில் முழுக்கவனத்தையும் செலுத்து. அப்போதுதான் சிறப்பாகச் செய்து வெற்றி பெறமுடியும்,’ என்று தினமும் போதித்தார் தந்தை.
பெற்றோர் தனக்கு நல்லதுதான் சொல்வார்கள் என்று நம்பி, அவர்கள் சொற்படி நடந்தாள். சிறு வெற்றிகள் கிடைக்க, தன்னம்பிக்கை வளர்ந்தது.
வாழ்க்கையில் எத்தனை மாறுதல்கள் நிகழ்ந்தபோதும், யாருக்காகவும் காயத்ரி தன் ஆற்றலை விட்டுக்கொடுக்கவில்லை.
அவளைப் பார்த்துப் பயந்த ஆண்கள் புகழ்ச்சியால் அவளைக் கவர முயற்சித்தார்கள் — அப்படியாவது அவளைத் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரலாம் என்ற எண்ணத்துடன்.
இப்படி வளர்க்கப்பட்ட ஒரு பெண்ணை எந்த ஆணும் வசப்படுத்தவோ, பலகீனப்படுத்தவோ முடியாது என்று அவர்களுக்குப் புரியாது நடந்ததால் அவமானத்திற்கு ஆளானார்கள்.
பல ஆண்களுக்கு இன்றும் இது புரியாததால்தான் விவாகரத்து அதிகரிக்கிறது.
அழகும் மகிழ்ச்சியும்
ஒருசில பெண்கள் கவனமாக அலங்காரம் செய்துகொள்வார்கள். ‘மூக்கும் முழியுமாக இருக்கிறாள்!’ என்று பெண்களே பாராட்டும்வகையில் இருப்பார்கள். ஆனால், ‘அழகு’ என்று பிரமிக்கவைக்கும்படி இருக்கமாட்டார்கள்.
இன்னொரு வகையினர் எளிமையான தோற்றத்துடன் இருந்தாலும், அவர்களை நாடத் தோன்றும். ஏனெனில், பிரச்னைகள் நிறைந்ததுதான் வாழ்க்கை என்று புரிந்து, தம் மகிழ்ச்சியை அறவே இழக்காமல் இருப்பவர்கள் அவர்கள்.
இந்த உண்மையை உறுதி செய்கிறார் நடிகை AUDREY HEPBURN: “மகிழ்ச்சியாக இருக்கும் பெண்கள்தாம் அழகானவர்கள்”.
பெற்றோரும், ஆசிரியரும், ‘இதுதான் நீ போகவேண்டிய பாதை’ என்று வற்புறுத்தினால், அதில் ஆர்வமே இல்லாதபோது எப்படி மகிழ்ச்சி ஏற்படும்?
‘காதல் திருமணம்கூட இரு வருடங்களுக்குப்பின் அலுப்பைத்தான் தருகிறது,’ என்று சலிப்புடன் ஒத்துக்கொண்டாள் ஆங்கிலேயப்பெண்ணான அலெக்ஸாண்டரா.
கதை:
நன்கு படித்து, உத்தியோகத்திலும் அமர்ந்த ஜெயமலரை மணக்க அவள் அலுவலகத்திலிருந்த பலர் போட்டியிட்டனர்.
அவள் தேர்ந்தெடுத்தது வேணுவை. ஏனெனில், அவன்தானே அவளை நிறையப் புகழ்ந்து, பரிசுப்பொருட்கள் வாங்கிக் கொடுத்து, அவளைத்தவிர தனக்கு வேறு எந்த சிந்தனையும் இல்லை என்பதுபோல் நடந்துகொண்டான்!
அவள் கிடைத்ததும், ‘இனியும் அவளை மயக்க முயற்சிகள் செய்வானேன்!’ என்று எண்ணியதுபோல், நண்பர்களுடனேயே காலத்தைக் கழிக்க ஆரம்பித்தான் வேணு.
புதிதாகக் கல்யாணமான பெண், கணவன் தன்னை தினந்தோறும் வெளியில் எங்காவது அழைத்துப் போகவேண்டும் என்று எதிர்பார்க்கிறாள். காதலித்தபோது அப்படித்தானே நடந்துகொண்டான்?
ஆணுடைய எண்ணப்போக்கே வேறு. காதலியுடன் கொண்ட நெருக்கம் முன்பு அவனுக்குக் கிளர்ச்சியைக் கொடுத்திருக்கலாம். சற்று பழகியபின், அதிலுள்ள கவர்ச்சி, எதிர்பார்ப்பு, அலுத்துவிடுகிறது.
இந்தக் குணம் பெண்களுக்குப் புரிவதில்லை.
மனைவியின் ‘தொணதொணப்பு’ தாங்காது, முன்போல் நண்பர்களை நாடுகிறான். அவர்கள்தாம் தன்னைப் புரிந்துகொள்வார்கள் என்ற நம்பிக்கை பிறக்கிறது.
பொதுவாக, வீட்டு வேலை, குழந்தைகள் இதெல்லாம் பெண்கள் வேலை என்று ஆண்கள் ஒதுங்கிவிடுகிறார்கள். மாற்றமில்லாமல் காலம் கழிக்க நேரிட்டால் எவருக்கும் அலுப்பு ஏற்பட, ஆத்திரம் எழாமல் என்ன செய்யும்!
‘எதற்கு வீண் சண்டை!’ என்று யோசித்து, வேறு உபாயங்களைக் கடைப்பிடிக்கலாமே!
கதை:
ஒரு பெண் வேறொரு உபாயத்தைக் கைப்பிடித்தாள்.
“இரண்டு நாட்கள் நான் செய்யும் வேலைகளையெல்லாம் நீங்கள் செய்யுங்கள். என் நிலை புரியும்,” என கணவரும் ஒப்புக்கொண்டார்.
அந்த காலக்கெடு முடிந்ததும், “ஓயாத வீட்டு வேலை இவ்வளவு சலிப்பானதா! எனக்குத் தெரியாமல் போயிற்று!” என்று அயர்ந்தார்.
அதன்பின், அவளுடைய வேலைகளில் பங்குகொண்டார். நிறையப் பேசும் தருணங்கள் வாய்த்தன.
ஓயாத சண்டையா?
“நான் அடிக்கடி எங்க வீட்டுத் தோட்டத்திலே புதிய பூஞ்செடிகள் வாங்கிவைப்பேன். எங்கம்மா, ‘தண்ணீர் விடாம எல்லாத்தையும் வாடவெச்சு, திரும்பவும் வேற வாங்குவே!’ன்னு கேலி செய்வாங்க,” என்று சிரித்தபடி ஒத்துக்கொண்டாள் என் தோழி ஒருத்தி.
தகுந்த பராமரிப்பு இல்லாவிட்டால் இல்லற வாழ்க்கையும் இப்படித்தான் துவண்டுபோகிறது.
தொற்றுநோய் பரவாதிருக்க வீட்டுக்குள்ளேயேதான் ‘அடைந்து கிடக்க’வேண்டும் என்ற தற்கால நிலையில், குடும்பச் சண்டைகள் அதிகரித்துவிட்டனவாம்.
அதையொட்டி ஒரு துணுக்கு: எப்படி ஒரே வீட்டில் பேசாமல் இருப்பது என்று கற்றுக்கொடுக்க, பதினேழு ஆண்டுகளுக்குமேல் ஒன்றாக இருக்கும் தம்பதிகள் தேவை!
திருமணம் செய்துகொண்ட பின்னர் வாழ்க்கை முடிந்துவிடுவதில்லை. ஒரு செடிக்குத் தினமும் நீர் பாய்ச்சி கவனித்துக்கொள்வதுபோல், ஒவ்வொரு நாளும் இல்லற வாழ்க்கை தழைக்க ஏதாவது செய்யவேண்டும்.
ஏன் கோபம் எப்போதும்?
‘எனக்குப் பொறுமையே கிடையாது!’ என்பாள் ஒரு தாய், தான் பெற்ற குழந்தைகளை திட்டுவதையும் அடிப்பதையும் நியாயப்படுத்துவதுபோல்.
அவளுக்கு என்னென்னமோ ஆசைகள். ஆனால், அவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கவில்லை. பொய்த்துப்போன கனவுகள் எரிச்சலில் கொண்டுவிட்டன.
ஒன்றை இழந்தால் வேறொன்று கிடைக்கலாம். கடந்ததையே எண்ணி வருந்தி, அந்த வருத்தத்தை ஆத்திரமாக மாற்றிக்கொள்வதால் யாருக்கு நிம்மதி?
திருமணத்திற்குப்பின்,
பல பெண்கள் தாம் ரசித்து ஈடுபட்ட பொழுதுபோக்குகளை விட்டுவிடுகிறார்கள். ஆர்வக்குறைவால் அல்ல.
‘பாடுவதாக இருந்தால் தினமும் சாதகம் செய்ய வேண்டுமே!’
‘குழந்தைகள், வீட்டுவேலை! மற்றதற்கெல்லாம் எங்கே நேரம் கிடைக்கிறது!’
‘முன்பெல்லாம் நிறைய எழுதினேன். இப்போது கற்பனையே வரண்டுவிட்டது!’
இப்படி ஏதேதோ காரணங்களைக் காட்டி சமாளித்தாலும், கணவரைவிட கூடுதலான வெற்றி பெற்றால் குடும்ப ஒற்றுமை குலைந்துவிடுமோ என்ற பயம் ஒரு முக்கிய காரணம்.
‘எடுத்த காரியத்தை எப்படி நல்லபடியாக செய்து முடிப்பது?’ என்ற தயக்கமும் எழக்கூடும்.
தன் தவறு எங்கே என்று புரிந்தாலும் அதை மாற்றிக்கொள்ளத் துணிவு அவசியம். பயத்தையும், தயக்கத்தையும் மீறிச் செய்தால் வெற்றி கிடைக்கும்.
பெரிதாக எதையும் சாதிக்க வேண்டும் என்பதில்லை. செய்வதைக் கருத்துடன் செய்தாலே மகிழ்ச்சி கிடைக்குமே!
ஏதோ கொஞ்சம் சாதித்துவிட்டு, அதையே எண்ணிப் பெருமைப்பட்டுக் கொண்டிருப்பது எப்போதும் மகிழ்ச்சியைத் தருமா?
‘துணிவிற்கும் தசைநார்களுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு’ என்கிறார்கள்.
நம்பிக்கையை இழக்காது, துணிச்சலைப் பயன்படுத்திக்கொண்டே இருந்தால்தான் அது விருத்தியடையும்.
அலட்சியமாக விட்டுவிட்டால், தசைநார்கள்போல் துணிச்சலும் வலுவிழந்துவிடும்.
:நிர்மலா ராகவன்/-எழுத்தாளர், சமூக ஆர்வலர். மலேசியா.
No comments:
Post a Comment