நான்மணிக்கடிகை/13/வாழ்க்கை உண்மைகளை வெளிக்காட்டும்...

சங்ககால இலக்கியங்களில், பதினெண் கீழ் கணக்கு நூல்களில் ஒன்றான 'நான்மணிக்கடிகை' என்பது நான்கு இரத்தினத் துண்டங்கள் என்னும் பொருளைத் தரும். ஒவ்வொரு பாடலிலும் நான்கு சிறந்த கருத்துக்களைக் கூறுவதால் 'நான்மணிக்கடிகை' எனப் பெயர் பெற்றது. இதனை இயற்றியவர் விளம்பி நாகனார்.இவரின் காலம் கி.பி. 200 க்கு முன்னர் ஆகும்.



தொடர்ச்சி..

 

 61. 👇👇👇

பழி இன்மை மக்களால் காண்க! ஒருவன்

கெழி இன்மை கேட்டால் அறிக! பொருளின்

நிகழ்ச்சியான், ஆக்கம் அறிக! புகழ்ச்சியான்,

போற்றாதார் போற்றப்படும்.

ஒருவன் தன் நன்மக்கட் பேற்றினால் பழிப்பிற்கு ஆளாவதில்லை. நட்பியல்பு உடையவனுக்குப் பொருள் கேடு ஏற்படாது. பொருள் வரவு அதிகரிக்க அவனுக்கு உயர்வு உண்டாகும். தான் பிறரால் போற்றப்படுவதால் அவன் பகைவராலும் வணங்கப்படும் தன்மையைப் பெறுவான்.

 

62. 👇👇👇

கண்ணுள்ளும் காண்புழிக் காதற்றாம்; பெண்ணுள்

உரு இன்றி மாண்ட உளவாம்; ஒருவழி,

நாட்டுள்ளும் நல்ல பதி உள; பாட்டுள்ளும்

பாடு எய்தும் பாட்டே உள.   

கண்களிற்குள்ளும் விரும்பப்படும் கண்களும் உள்ளன. அழகில்லாத பெண்களுள்ளும் மாட்சிமைப்பட்ட நற்குணம் கொண்ட பெண்களும் இருக்கின்றனர். நாட்டினுள்ளும் ஒரு பகுதியில் வளமான ஊர்களும் உள்ளன. பாட்டுகளுள்ளும் சிறப்பான பாட்டுகள் உள்ளன.

 

63. 👇👇👇

திரி அழல் காணின், தொழுப; விறகின்

எரி அழல் காணின், இகழ்ப; ஒரு குடியில்

கல்லாது மூத்தானைக் கைவிட்டு, கற்றான்

இளமை பாராட்டும், உலகு.  

விளக்கின் திரியில் இருந்து வெளிப்படும் அழல் சிறியதாக இருந்தாலும் அதை வணங்குவர். விறகில் எரியும் சுடர் பெரியதாக இருந்தாலும் மக்கள் அதை வெறுப்பர். அவ்வாறே ஒரு குடும்பத்தில் படிக்காத மூத்தவனை விட கற்ற இளையவனையே அனைவரும் மதித்துப் போற்றுவர்.

 

64. 👇👇👇

கைத்து உடையான் காமுற்றது உண்டாகும்; வித்தின்

முளைக் குழாம் நீர் உண்டேல், உண்டாம்; திருக் குழாம்

ஒண் செய்யாள் பார்த்துறின், உண்டாகும்; மற்ற அவள்

துன்புறுவாள் ஆகின், கெடும்.          

செல்வமுடையாருக்கு அவன் விரும்பிய பொருள் கிடைக்கும். நீருண்டானால் விதைகள் முளை கிளம்பும். திருமகள் கூடினால் செல்வம் பெருகும். அவள் நீங்கினால் செல்வம் அழியும்.

 

65. 👇👇👇

ஊன் உண்டு உழுவை நிறம் பெறூஉம்; நீர் நிலத்துப்

புல்லினான் இன்புறூஉம், காலேயம்; நெல்லின்

அரிசியான் இன்புறூஉம், கீழ் எல்லாம்; தம்தம்

வரிசையான் இன்புறூஉம், மேல்.   

புலி ஊன் உண்டு இன்புறும். பசு புல்லுண்டு இன்புறும். கீழோர் சோறுண்டு இன்புறுவர். மேலோர் மதிப்புணர்ந்து இன்புறுவர்.

 

நான்மணிக்கடிகை தொடரும்…..


ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக👉

Theebam.com: 'நான்மணிக்கடிகை' /01/வாழ்க்கை உண்மைகளை வெளிப்படு...

தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்:

நான்மணிக்கடிகை - பதினெண் கீழ்க்கணக்கு, இலக்கியங்கள், உண்டாகும், நான்மணிக்கடிகை, அழல், பொருள், இன்புறூஉம், கீழ்க்கணக்கு, பதினெண், அவள், செல்வம், இன்புறுவர், உண்டு, இன்புறும், நீர், அவன், இன்மை, சங்க, ஒருவன், அறிக, இருந்தாலும், காணின், குழாம் 


1 comment:

  1. நல்ல விடயங்கள் எனக்கு இந்தப்புத்தகம் தேவைப்படுகின்றது

    ReplyDelete