சங்ககால இலக்கியங்களில், பதினெண் கீழ் கணக்கு நூல்களில் ஒன்றான 'நான்மணிக்கடிகை' என்பது நான்கு இரத்தினத் துண்டங்கள் என்னும் பொருளைத் தரும். ஒவ்வொரு பாடலிலும் நான்கு சிறந்த கருத்துக்களைக் கூறுவதால் 'நான்மணிக்கடிகை' எனப் பெயர் பெற்றது. இதனை இயற்றியவர் விளம்பி நாகனார்.இவரின் காலம் கி.பி. 200 க்கு முன்னர் ஆகும்.
51-👇👇👇
யாறு உள் அடங்கும் குளம் உள; வீறு சால்
மன்னர் விழையும் குடி உள; தொல் மரபின்
வேதம் உறுவன பாட்டு உள; வேளாண்மை
வேள்வியோடு ஒப்ப உள.
ஆறுகள் தம்முள் அடங்கத்தக்க குளங்களும் உள்ளன. அரசர்களால் விரும்பப்படும் குடிகளும் உள்ளன. வேதக் கருத்துக்களையுடைய பழைய தனிப் பாட்டுகளும் உள்ளன. வேள்விக்கு நிகரான ஈகைகளும் உள்ளன.
52-👇👇👇
எருது உடையான் வேளாளன்; ஏலாதான் பார்ப்பான்,
ஒரு தொடையான் வெல்வது கோழி; உருவோடு
அறிவு உடையாள் இல்வாழ்க்கைப் பெண் என்ப; சேனைச்
செறிவு உடையான் சேனாபதி.
உழவு மாடுடையவன் வேளாளன். ஒரு காலால் பெடையை வயப்படுத்துவதான கோழியைப் போல எவரோடும் மாறுபடாது ஒற்றுமையுடன் வாழ்பவன் பார்ப்பனன். அழகும் அறிவும் உடையவள் வாழ்க்கைத் துணை. சேனையோடு ஒன்றுபட்டு உடனுறைபவன் சேனாபதி.
53-👇👇👇
யானை உடையார் கதன் உவப்பர்; மன்னர்
கடும் பரி மாக் காதலித்து ஊர்வர்; கொடுங் குழை
நல்லாரை நல்லவர் நாண் உவப்பர்; அல்லாரை
அல்லார் உவப்பது கேடு.
யானையை உடையவர்கள் அதன் சினத்தை விரும்புவார்கள். அரசர்கள் விரைந்து செல்லும் குதிரையை விரும்புவார்கள். நல்லியல்புடைய ஆடவர்கள் நன்மங்கையரின் நாணத்தை விரும்புவார்கள். தீய ஆடவர்கள் தீய பெண்களின் தீதையே விரும்புவர்.
54-👇👇👇
கண்ணின் சிறந்த உறுப்பு இல்லை; கொண்டானின்
துன்னிய கேளிர் பிறர் இல்லை; மக்களின்
ஒண்மைய வாய் சான்ற பொருள் இல்லை; ஈன்றாளின்
என்ன கடவுளும் இல்.
ஒருவனுக்குக் கண்ணைப் போலச் சிறந்த உறுப்பில்லை. குலமகளுக்குக் கணவனைப் போல் நெருங்கிய உறவினர் வேறில்லை. பெற்றோருக்கு மக்களைப் போல ஒளியுள்ள பொருள்கள் வேறில்லை. குழந்தைகளுக்குத் தாயைப் போல கடவுள் வேறெதுவுமில்லை.
55-👇👇👇
கற்றன்னர், கற்றாரைக் காதலர்; கண்ணோடார்
செற்றன்னர்; செற்றாரைச் சேர்ந்தவர், தெற்றென
உற்றது உரையாதார்; உள் கரந்து பாம்பு உறையும்
புற்ற அன்னர், புல்லறிவினார்.
கல்வியறிவுடையவர்களுடன் விரும்பி உடனிருப்பவர்கள், கல்வியறிவுடையவர்களுக்கு இரக்கம் இல்லாதவர்கள் இடர் செய்வாருக்கு ஒப்பாவர். உண்மையைத் தெளிவாகச் சொல்லாதவர்கள் பகைவருக்கு நிகராவர். சிற்றறிவுடையோர் பாம்புப் புற்றுக்கு ஒப்பாவர்.
நான்மணிக்கடிகை தொடரும்…..
Theebam.com: 'நான்மணிக்கடிகை' /01/வாழ்க்கை உண்மைகளை வெளிப்படு...
நான்மணிக்கடிகை - பதினெண் கீழ்க்கணக்கு, இலக்கியங்கள், இல்லை, நான்மணிக்கடிகை, பதினெண், விரும்புவார்கள், கீழ்க்கணக்கு, ஆடவர்கள், சிறந்த, வேறில்லை, ஒப்பாவர், வேளாளன், சங்க, மன்னர், உடையான், சேனாபதி, உவப்பர்
No comments:
Post a Comment