மாறிடும் உலகம் கூறிடும் புதுமைகள் (அறிவியல்)



கறக்காத பால் தயார்!

பசுவிலிருந்து கறக்காத, ஆனால் அதே மணம், சுவை, சத்துள்ள பாலை தயாரிக்க முடியுமா? விலங்குகளிலிருந்து கிடைக்கும் பாலை தவிர்க்க விரும்புவோருக்கு இந்த செய்தி இனிக்கும். அமெரிக்காவிலுள்ள 'பெட்டர்லேண்ட்' பசுவில்லாப் பாலை தயாரிப்பதில் வெற்றிகண்டுள்ளனர். சில ஆண்டுகள் பரிசோதனைக்கு பின், தற்போது, பெட்டர்லேண்ட் பால் பாக்கெட்டுகள் விற்பனைக்கு தயாராகிவிட்டன.

 

பெட்டர்லேண்டின் ஆராய்ச்சியாளர்கள், 'வே புரோட்டீன்' எனப்படும், தயிரின் மீது பிரிந்து வரும் தண்ணீர் போன்ற திரவத்தில் உள்ள புரதங்களை கண்டறிந்தனர். பின்னர், அதே போன்ற புரதங்களை உற்பத்தி செய்யும் பூஞ்சைகளை கண்டுபிடித்து, பொறுப்பை அவற்றிடம் ஒப்படைத்துவிட்டனர்.

 

அவை, பசுவின் பாலில் உள்ள புரதத்தை அதேபோல உற்பத்தி செய்து தள்ளின. அதைவைத்து, விலங்குப் புரதங்களை உணவில் சேர்க்க விரும்பாத 'வீகன்' பிரியர்கள் போன்றோருக்கு என்று தனியாக பெட்டர்லேண்ட் பாலை அவர்கள்விற்பனைக்கு கொண்டுவந்துவிட்டனர்.

 

அதுமட்டுமல்ல, நுண்ணுயிரிகள் தந்த பால்புரதங்களை வைத்து ஐஸ்கிரீமையும் தயாரித்து, ருசிபார்த்து பாராட்டுகளை பெற்றுள்ளனர். இந்த வகை பால் 8 கிராம் புரதமும், அசல் பாலைவிட 67 சதவீதம் குறைவான சர்க்கரைகளும் கொண்டவை. எனவே வீகன் மற்றும் பத்தியக் காரர்கள் இதை விரும்பி அருந்தலாம்.

 

ஆனால், அசல் பால் புரதத்தின் அதே அமைப்புள்ள புரதம் தான் பெட்டர்லேண்ட் பாலிலும் உள்ளபடியால், பால் அலர்ஜி கொண்டோருக்கு இதுவும் பிடிக்காது என்று பெட்டர்லேண்ட்விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

 

'மோப்பம்' பிடித்து நோயறியும் கருவி!

பெரும்பாலான புற்று நோய்களைப் போலவே, பார்க்கின்சன்ஸ் நோயையும், தொடக்கத்திலேயே கண்டறிந்தால் நல்ல சிகிச்சை தரமுடியும். ஆனால், முற்றிய நிலையில், தசைக் கட்டுப்பாடு இழப்பு போன்ற அறிகுறிகள் தோன்றிய பிறகே பார்க்கின்சன்ஸ் நோய் இருப்பதை கண்டறிய முடிகிறது.

 

தொடக்கத்திலேயே இதை கண்டறிய முடியாதா? ஏ.சி.எஸ். ஒமேகா என்ற ஆய்விதலில் வெளியாகியுள்ள தகவல்படி 'இ- நோஸ்' என்ற தொழில்நுட்பம் இதற்குப் பயன்படும் எனத் தெரிகிறது.

 

செயற்கை மூக்கு அல்லது மின்னணு மூக்கு என்று இந்தக் கருவியை அழைக்கின்றனர். பார்க்கின்சன்ஸ் நோய் உள்ளவர்களின் தோலில் சுரக்கும் எண்ணெயில் சில வேதிப் பொருட்கள் இருக்கும். அது வெளிப்படுத்தும் வாடை வித்தியாசமானது. அந்த வாடையை உணரும் மூக்குத் திறன் சில மனிதர்களுக்கே உண்டு. எனவே தான், சீனாவிலுள்ள ஷெஜியாங் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இ- நோஸ் கருவியை பயன்படுத்த முடிவு செய்தனர்.

 

அவர்களது ஆய்வில், பார்க்கின்சன்ஸ் நோய் உள்ளோர், அந்த நோய் இல்லாதோர் என பலரது தோலில் சுரக்கும் எண்ணெயை ஒரு பஞ்சில் தோய்த்து எடுத்தனர். அதை இ- நோஸ் கருவியில் கொடுத்து ஆய்வு செய்தபோது, பார்க்கின்சன்ஸ் நோய் உள்ளோரின் 'சாம்பிள்'களை, அக்கருவி 79.2 சதவீத துல்லியத்துடன் கண்டறிந்தது.

 

இ -நோஸ் கருவியில் உள்ள உணரிகள், ஆரோக்கியமாக உள்ளோரின் தோலில் இல்லாத, ஆனால் நோய் உள்ளோரின் தோலில் இருக்கும் சில வேதிப் பொருட்களை கண்டறிந்து செயற்கை நுண்ணறிவு மென்பொருளுக்கு தெரிவிக்க, அது அலசி முடிவை தெரிவித்தது.இ -நோஸ் கருவியின் திறனை மேலும் அதிகரிக்க முடியும் என சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

 

பூமிக்கடியில் தீராத வெப்ப ஆற்றல்!

பூமிக்கடியில் அள்ள அள்ளத் தீராதது பெட்ரோலியம், நிலக்கரி போன்றவை என்று நினைத்த காலம் போய்விட்டது. அவை புதுப்பிக்கத்தக்க எரிபொருட்கள் அல்ல என்பது நிறுவப்பட்ட உண்மை.

 

ஆனால், தோண்டத் தோண்டத் தீராத ஒரு ஆற்றல் பூமிக்கடியில் புதைந்து இருக்கிறது என்றால் நம்புவீர்களா? அமெரிக்காவிலுள்ள எம்.ஐ.டி., தொழில்நுட்ப நிலையத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் தனியாக தொடங்கிஉள்ள, 'குவேய்ஸ்' அதை நம்பித்தான் இருக்கிறது.

 

பூமிக்கடியில் இன்னும் ஆறாமல் தகித்தபடி இருக்கும் தீக்குழம்பு தான் அந்த தீராத ஆற்றல். இதில், 0.1 சதவீதத்தை பயன்படுத்தினால், அடுத்து வரும் 2 கோடி ஆண்டுகளுக்கு, பூமியின் மின் ஆற்றல் தேவையை பூர்த்தி செய்யலாம் என, விஞ்ஞானிகள் கணக்கிட்டுள்ளனர்.

 

ஏற்கனவே, நிலக்கரி சுரங்க தொழில்களுக்காக, நிலத்தடியில் நீண்ட சுரங்கங்களைத் தோண்டியுள்ளனர். இவற்றில், புவி வெப்பத்தைப் பயன்படுத்தி, நீராவியால் இயங்கும் மின் உற்பத்தி நிலையங்களைத் தொடங்கலாம் என, குவேய்ஸ் ஆராய்ச்சியாளர்கள் திட்டமிட்டுள்ளனர். இதன் முதல் திட்டம், 2028ல் தொடங்கும். பின்னர், குவேய்ஸ் தனது தொழில்நுட்பத்தை மேம்படுத்தி, உலகிலுள்ள 8,500 நிலக்கரி அனல் மின் நிலையங்களை அணுகும்.

 

ஏனெனில், அவை அனைத்தும், 2050க்குள் செயல்பாட்டை நிறுத்த திட்டமிட்டுள்ளன. பூமிக்கடியில், 3 முதல் 20 கி.மீ வரை தோண்டினால் கிடைக்கும் வெப்பம், இலவசமாக கிடைக்கும் ஆற்றல். அதை, அனல் மின்சாரமாக ஆக்கும் திட்டம் அபாரமானது தான். அதாவது, செயலுக்கு வந்தால்.

 

திமிங்கலத்தால் மிச்சமாகும் விமான எரிபொருள்!

மின்சாரம் அல்லது ஹைட்ரஜனால் இயங்கும் விமானங்கள் வந்தால் தான்,மாசில்லாத வான் பயணம் சாத்தியமாகும்.அதுவரை, மாசுபாட்டை குறைக்கும் வழிகளைத்தான் நாடியாக வேண்டும். லுப்தான்சாவும், பி.ஏ.எஸ்.எப்பும் இணைந்து செய்துள்ள எளிய சோதனை, நல்ல பலனைத் தந்துள்ளது. வழக்கமான விமானத்தின் மேற்பரப்பில், 'ஏரோஷார்க்' என்ற ஒரு படலத்தை ஒட்டினர் ஆராய்ச்சியாளர்கள்.

 

இதன் பலனாக, விமானத்தின் எரிபொருள் பயன்பாடு குறைந்தது. இதனால், விமானம் வெளியேற்றும் மாசுபாடும் குறைந்தது. இந்த வான்வெளிக் கண்டுபிடிப்பிற்கு உந்துதலாக இருந்தது, கடல் வாழ் உயிரினமான திமிங்கலம்தான்.

 

கடலுயிர்களில் பெரியதான சுறா , வேகமாக நீந்துவதற்கு, அதன் உருவம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என, இயற்கை படைத்த விந்தை தான் அதன் தோல். பார்க்க மிக சமதளம் போலத் தோன்றினாலும், சுறா தோல் முழுதும் மிகமிக நுண்ணிய செதில் போன்ற நீட்சிகளை கொண்டிருக்கும்.இந்த நீட்சிகள், சுறா நீந்துவதற்குத் தடையாகத்தானே இருக்க வேண்டும்? இல்லை. ஒவ்வொரு நீட்சியும் நீரைக் கிழிக்கப்பயன்படுவதால், அத்தனை பெரிய உடல் கொண்ட சுறாவால், மிக வேகமாக நீந்த முடிகிறது.

 

நீரியங்கியலில் எது பயன்படுகிறதோ, அது காற்றியங்கியலிலும் பயன்படும். எனவே, லுப்தான்சாவின் ஆராய்ச்சியாளர்கள், சுறா தோல் போன்ற நுண் செதில் நீட்சிகளைக் கொண்ட ஸ்டிக்கர் போன்ற படலத்தை உருவாக்கினர். அதற்கு பொருத்தமாக 'ஏரோஷார்க்' என்ற பெயரையும் சூட்டினர்.

 

இந்தப் படலத்தை எந்த விமானத்தின் மீதும் ஒட்டலாம். அது, எதிர்க் காற்றுத் தடையைக் கிழித்துச் செல்ல உதவும். இதனால் லுப்தான்சா, தன்னிடமுள்ள 10 'போயிங் 777' விமானங்களில், 'ஏரோஷார்க்' படலத்தை ஒட்டியது. இதனால், ஆண்டுக்கு 3.7 ஆயிரம் டன் ஜெட் எரிபொருளை மிச்சம் செய்ய முடியும். மேலும், 11.7 ஆயிரம் டன் கார்பன்டையாக்சைடு மாசினை காற்றில் கலக்காமல் தடுக்க முடியும்.

 

ஏரோஷார்க்கின் பயனை ஸ்விஸ் ஏர் விமான நிறுவனமும் தனது எல்லா போயிங் 777 விமானங்களிலும் ஒட்டி ஓட்டுகிறது. ஏரோஷார்க் ஆராய்ச்சியாளர்களின் கருத்துப்படி, பயணிகள் விமானத்தைவிட, சரக்கு விமானத்தில் இந்தப் படலத்தை ஒட்டினால் பலன் கூடுதலாக இருக்கும். ஏன் தெரியுமா? சரக்கு விமானங்களில் சன்னல்களே இருக்காது. எனவே அந்தப் பகுதியிலும் ஏரோஷார்க்கை ஒட்டினால், கூடுதல் எரிபொருள் மிச்சமாகும்.

 

நன்றி:தினமலர்

No comments:

Post a Comment