நான் சொல்வதெல்லாம் உண்மையா?

 


சில பொய்களைத் திரும்பத் திரும்பச் சொன்னால் அவை உண்மை என்று மக்கள் நம்பத் தொடங்கி விடுவர்.உண்மையா?

அவற்றுள் சில:


பொய் 1: இந்தியா:

இந்தியா என்ற ஒரு நாடு இருந்ததில்லை. சிந்து நதிக்குக் கீழே உள்ள பகுதியை பெர்சிய நாட்டவர்கள் -அவர்கள் மொழியில் '' வை '' என்று உச்சரிப்பதால்- ஹிந்து என்று பெயரிட, அப்படியே கிரேக்க பயணிகளும் அழைக்கலானார்கள்.

 

'ஹிந்து' என்ற- அவர்கள் கூறிய இந்தப் பகுதியில் வெவ்வேறு நிலங்களை, பல நூறு அரசர்களும், வெளி நாட்டவர்களும் மாறி, மாறிப் போர் புரிந்து, தனித்தனியே ஆண்டு கொண்டிருக்கும் பொழுது, உள்ளே நுழைந்த ஆங்கிலேயர்கள் (1858) தங்கள் ஆயுத பலத்தால் எல்லாப் பகுதிகளையும் ஒரு குடைக்குக் கீழ் கொண்டு வந்து, அதற்கு 'இந்தியா' என்று பெயர் வைத்தனர்.

ஆங்கிலேயர் வராது விட்டிருந்தால் இந்தியா என்று ஒன்று உருவாகியே இருக்காது; இன்னமும் பல நாடுகள்தான் இந்த நிலப்பரப்பில் முட்டி மோதிக்கொண்டு இருந்திருக்கும்.

 

பொய் 2: தேச பிதா காந்தி.

காந்தியால்தான் சுதந்திரம் கிடைத்தது என்பது அடுத்த பொய். இதற்காக ஆயுதம் எடுத்துப் போராடி (உ+ம்: நேதாஜி) ஆங்கிலேயரைக் கதி கலங்கச் செய்தவர்கள், காயப்பட்டவர்கள், உயிர்ப்ப பலி கொடுத்தவர்கள், மறியல் சென்றவர்கள் ஏராளம்.  காந்திக்கு ஒரு கீறலும் படவில்லை. அகிம்சாவாதி காந்தி, உலகப்போருக்கு ஆங்கிலேயருக்கு படைகளை அனுப்பி அவர்களை மகிழ வைத்தார்.

 

உலகப் போர் முடிவில், இந்தியர்களைக் கொண்ட அவர்கள் கடல் படையினர் அவர்களின் கட்டுப்பாடுகளை மீறிச் செய்யும் பல  கார்யங்களினாலும், மறைந்திருந்து தாக்கும் கொரில்லாப் படையினரைச் சமாளிக்க முடியாமையாலும், உலகம் முழுவதுமே காலனித்துவ ஆட்சிமுறை அஸ்தமித்துக் கொண்டு வருவதாலும், தருணம் இதுதான் என்று அவர்களாகவே விலக முடிவு செய்தார்கள். காந்தியின் அகிம்சைப் போராட்டத்துக்கு 'அஞ்சி' விட்டுவிட்டு ஓடவில்லை.

 

சுதந்திர பேச்சுவார்த்தைக்குத் தம்மைக் கொன்று திரிபவர்களை அழைத்து அவர்களுக்கு மதிப்புக்கு கொடுக்க விரும்பாது, தமக்குக் குடை பிடித்த சிலரை மட்டும் அழைத்து உடன்படிக்கை செய்து வெளியேறினார்.

 

அதிகாரம் வட நாடடவர்கள் கையில் எப்பொழுதும் இருக்குமாறு அரசியல் சட்டத்தை வரைந்துகொண்டனர். மாநில அரசுகளை அவர்கள் விரும்பாவிடின் கலைக்கும் அதிகாரத்தையும் ஏற்படுத்திக் கொண்டனர். (வேறு எந்த ஒரு நாட்டிலும் ஒன்றிய அரசுக்கு இப்படியான அதிகாரம் இல்லை).

 

பொய் 3: இந்து மதம்

இந்து மதம் என்ற ஒரு மதம் இருந்ததே இல்லை. அல்லாவை மட்டுமே வணங்கத் தெரிந்திருந்த பெர்சிய கூட்டம், சிந்து நதிக்கு இந்தப் பகுதியில் இருப்பவர்கள்,

'இதென்ன? அல்லாவை விட்டால் ஜேசுவைத்தானே வணங்க வேண்டும்? இவர்கள் நூற்றுக்கணக்கான தெய்வங்களாக கும்பிடுகிறார்களே!  இவர்கள் சமயம் என்ன? சரி, ஹிந்து என்று பெயர் வைப்போம்"

 என்று யாரோ அந்நியர் வைத்த பொதுவான பெயர்தான் 'இந்து சமயம்' என்பது.

ஆனால், அதனுள்ளே இருக்கும் பெரும்பாலான சமயங்கள் எல்லாம் மிகவும் தொன்மையானவை என்பது மறுக்கமுடியாத உண்மை.

 

பொய் 4: தமிழ் மொழி.

"கல் தோன்றி மண் தோன்றா காலத்தே மூத்த மொழி"

(நான் ஒரு தமிழ் பற்றாளன். என்றாலும்........)

கொஞ்சம் மிதமிஞ்சி இல்லை? உண்மையில் பழைய மொழிகள் பட்டியலில் தமிழ் முதலில் இல்லை என்பதுதான் உண்மை.

எகிப்தியன்      - 4700 வருடங்கள்.

சமஸ்கிருதம்  - 3500

கிரேக்கம்        - 3500

சீனம்                - 3300

அராமிக்          -  3100

ஹீப்று              - 3000

பார்சி               - 2500

தமிழ்                - 2300

கொரியன்       - 2100

இத்தாலியன்   - 2100

அரபு                  -1900

தமிழ் 2500, 5000, 10000 வருடங்கள் பழைமை வாய்ந்தது என்று கூறுவதெல்லாம் தமிழ் ஆர்வலர்களால் சான்றுகள் வைக்கப்படாத வெறும் ஊகங்கள் மட்டும்தான்.

 

தெலுங்கு, கன்னட மொழியினரும் தாங்கள் மகாபாரதத்தில் கூறப்பட்ட்டவர்கள் என்றும், சிந்துவெளி நாகரிக காலத்தவர்கள் (5000 வருடங்கள்) என்று கூறிக் கொள்வதும் வழக்கம் என்பது உங்களுக்குத் தெரியுமோ இல்லையோ!

 

இவற்றைவிட, பேசப்பட்டு அழிந்துபோன மொழிகள் 40, 60 ஆயிரங்களுக்குக் முன்பிருந்தே இருந்திருக்க வாய்ப்புகள் பல உண்டு. அத்தோடு 60 ஆயிரம் காலமாக இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கும் ஆதிவாசிகள் உலகெங்கும் இன்னும் இருக்கிறார்கள்.

 

பொய் 5: ஆண்ட பரம்பரை:

"ஆண்ட பரம்பரை மீண்டும் ஒரு முறை ஆள நினைப்பதில் என்ன குறை?"  இது ஒரு வீர வசனம்.

( விருப்பம்தான், என்றாலும்...கூறிக் கூறியேஎம்மைக் கூறிட்டு ஆழப் போய்க்கொண்டு இருக்கிறோம்)

அறிந்த வரலாறுகளின்படி, தமிழர் வாழும் பகுதிகள் நீண்ட காலமாக தமிழர் இல்லாத இனத்தவர்களாலேயே ஆளப்பட்டு வரப்பட்டுள்ளன; ஆளப்படுக்கொண்டிருக்கின்றன.  வீரத் தமிழன் உலகெங்கும் மீன் கொடி  நாட்டினான்  என்பதெல்லாம், சன்மானம் வேண்டி, ஏழைப் புலவர்களால் அரசன்மார்களைப் புகழ்ந்து பாடிய பாடல்களில்தான் காணப்படுகிறது -அப்படிப் பாடாவிட்டால் பாதாளச் சிறை!-. இடைக்கிடை, சில பகுதிகளை சில, பல,  சிறு, பெரு தமிழ் மன்னர்கள் ஆண்டிருக்கலாம். [அண்மையில் கூட ''உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே'' என முருகன் புகழ் பாடிய திருவருள் படத்தினை ஆதாரமாக கொண்டு, முருகன் உலகம் முழுக்க ஆண்டான் என்று பெருமை அடித்திட முடியுமோ?]

 அதற்காக ஒரே அடியாய் இன்னமும் பழைய பெருமைகள் என்று அடிக்கிக்கொண்டு போவதால் எங்களுக்கு இப்பொழுது என்ன இலாபம் என்று தெரியவில்லை.

 

எனக்கு விளங்காத ஒரு கேள்வி:

அவ்வளவு வீரனாய், சூரனாய்,உலகெல்லாம் ஆண்டவன் என்று சொல்லப்படும் தமிழன், ஏன்தான் இப்பொழுது ஒரு நாடு இன்றி, மொழி குன்றி, இடமின்றி, கதியற்று அடிமையாய் வாழ்கிறான்?

 

ஏன்தான் தமிழன் விரட்டி அடிக்கப்பட்டு, ஏனையோரால் கழித்து விடப்பட்ட நிலப்பகுதிகளான அதி வெப்பம் கூடிய, வறண்ட, செழிப்பற்ற, ஆறு, குளம், மலைகள் அற்ற, குளிர் காற்று வீசாத, நீரோட்டம் இல்லாத, விவசாயத்துக்கு உதவாத, இயற்கை அழகு இல்லாத ஒரு சிறு பகுதிகளுக்குள் ஒடுக்கப்பட்டுள்ளான்?

 

உண்மையோ, பொய்யோ பழைய பெருமைகள் பற்றி பேசித் தெரிவதில் ஒரு பயனும் இல்லை.

 

இனி என்ன செய்தால் தமிழன் தலை நிமிரலாம் என்று செயல் படுவதுதான் புத்திசாலித் தனமாகும்.

 

- சந்திரகாசன் செல்வதுரை

 

3 comments:

  1. கந்தையா தில்லைவிநாயகலிங்கம்Saturday, March 19, 2022

    பொய் 1: இந்தியா & பொய் 3: இந்து மதம் ----


    வரலாற்று மற்றும் சான்றுகள் மூலம் இவை பொய்தான்


    இந்து[Hindu] எனும் சொற்பதம் முதலில் பாரசீகரால் ['பெர்ஷியன்'/ Persians] சிந்து[Sindu] நதியை குறிப்பதற்கு பாவிக்கப் பட்டது.அவர்களால்,"S" என்ற சொல் சரியாக உச்சரிக்க முடியாமல்,"S" க்கு பதிலாக "H" ஆக உச்சரிக்கப் பட்டு அது "இந்து"["Hindu "]வாக மாறியது என்கிறார்கள் மொழி அறிவியல் வல்லுநர்கள்.பாரசீகர்களின் ஆப்பு வடிவ கல்வெட்டும் மற்றும் புனித அவெத்தா[ஜெந்த் அவெஸ்தா/Zend Avesta] வும் ,"இந்து" என்ற சொல் புவியியல் பெயர் என்றே குறிப் பிடுகிறது,இது ஒரு மதம் சார்ந்த சொல் என்று அது குறிப்பிட வில்லை. கி.மு.546 ல், ஆசியாவில் ஆழமாக காலுன்றி இருந்த பாரசீக சாம்ராஜ்யம்[பேரரசு] இந்தியா உப கண்ட த்தின் எல்லை வரை நீடிக்கப் பட்டது .மற்றும் பாரசீக மன்னன் டரியஸ் [Darious 1] இன் படையிலும் இந்தியர்கள் பணி யாற்றினார்கள்.இந்த மக்களை பாரசீகர்கள் இந்து ["Hindus"] என குறிப் பிட்டதாக வரலாறு கூறுகிறது.அதே போல வேறு சில ஆதாரங்கள் மூலம் கிரேக்கர்கள் இலகுவாக உச்சரிக்கும் பொருட்டு, பேரரசர் அலெக்சாந்தர் [ Alexander the Great ] சிந்து நதியை இந்து நதி என "S" ஐ தவிர்த்து இந்து[Indus] நதி என குறிப்பிட்ட தாகவும் அறிகிறோம்.கி மு 325 இல் பேரரசர் அலெக்சாந்தர் இந்தியாவிற்குள் படை எடுத்த போது, அவருடைய மாசிடோனிய [Macedonian forces] படையினர் இந்து நதிக்கு கிழக்கே உள்ள பிரதேசத்தை,இதனால், இந்தியா என அழைத்தனர். அதற்கு முன்பு,வேத கால பெயர் பாரத்[பாரத/Bharat ] ஆகும்.

    ஆகவே,இந்து என்ற மூல[வேர்] சொல்,சிந்து என்ற சமஸ்கிருத சொல்லில் இருந்து பெறப் பட்ட ஒன்றே.சிந்து ஒரு பண்டைய நதியின் பெயர். அவ்வளவு தான்.மற்றும் படி ஒன்றும் இல்லை.என்றாலும் வேறு ஒரு பார்வையில்,இந்து [Hindu] என்ற சொல்லிற்கு வேறு சில பொருளும் உண்டு.
    .......................................................................................

    பொய் 4: தமிழ் மொழி.

    இது ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியது.


    ஏன் என்றால் இன்றைய அண்மைக்கால முக்கியமாக, கீழடி [Keezhadi], சிவகலை [Sivakalai in Thoothukudi district of Tamil Nadu] , மற்றும் இலங்கை பூநகரி ஆய்வுகள் பல உண்மைகளை கொண்டு வருகின்றன, உதாரணமாக A carbon dating analysis of rice with soil, found in a burial urn at Sivakalai in Thoothukudi district of Tamil Nadu, by the Miami-based Beta Analytic Testing Laboratory has yielded the date of 1155 BC, indicating that the Thamirabarani civilisation dates back to 3,200 years.

    ReplyDelete
  2. கந்தையா தில்லைவிநாயகலிங்கம்Saturday, March 19, 2022

    பொய் 4: தமிழ் மொழி.[தொடர்கிறது]

    மேலும் உலகின் முதல் எழுதப்பட்ட மொழியான சுமேரிய மொழியின் [இந்த மொழி ஏனோ இங்கு குறிப்பிடப்படவில்லை] மற்றும் சிந்து வெளி நாகரிக மொழியின் மூல வேர் சொற்கள் , இன்று நடைமுறையில் உள்ள தமிழில் கூடுதலாக இருப்பது மொழியியல் ஆய்வாளர்களால் சான்றுகளுடன் சுட்டிக் காட்டப்படுள்ளதும் குறிப்பிடத் தக்கது.

    'தெலுங்கு, கன்னட மொழியினரும் தாங்கள் மகாபாரதத்தில் கூறப்பட்ட்டவர்கள் என்றும், சிந்துவெளி நாகரிக காலத்தவர்கள் (5000 வருடங்கள்) என்று கூறிக் கொள்வதும் வழக்கம் என்பது உங்களுக்குத் தெரியுமோ இல்லையோ!'

    எல்லோருக்கும் தெரியும் , ஏன் என்றால், அவையும் தமிழும் ஒரே குடும்பம்

    ஆனால் அவை சமஸ்கிரதம் அதிகமாக சேர்க்கப்பட்டவை. அவ்வளவுதான்!


    "கல் தோன்றி மண் தோன்றா காலத்தே மூத்த மொழி"

    ஒன்று முழுமையாக பாடலை அறியவேண்டும். இரண்டாவது எந்த இலக்கியமும், புராணமும் சிலவேளை அழகுக்காக மற்றும் உணர்ச்சிக்காக பொய் சேர்ப்பது வழக்கம்


    இந்த வரி இடம்பெற்றுள்ள முழு பாடலை பார்ப்போம்:


    “பொய் அகல, நாளும் புகழ்விளைத்தல் என் வியப்பாம்?
    வையகம் போர்த்த, வயங்கு ஒலி நீர் – கையகலக்
    கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே, வாளோடு
    முன் தோன்றி மூத்த குடி!”


    'புறப்பொருள் வெண்பா மாலை' இலக்கண நூல் கி.பி 9 ஆம் நூற்றாண்டு.


    இப்பாடலின் விளக்கத்தை பார்ப்போம்:


    கல் என்றால் 'மலை' என்ற பொருளும் உண்டு
    மண் என்றால் 'வயல்' என்ற பொருளும் உண்டு!
    எடுத்துக்காட்டு:
    1) கல் உயர் தோள், கிள்ளி பரி = மலை போன்ற உயரமான தோள் உடைய கிள்ளிச் சோழன்
    2) கல் இயங்கு கருங் குற மங்கையர் = மலையில் இயங்கும் கருப்பு நிறக் குறத்திப் பெண்கள்
    3) மணிநீரும் “மண்ணும்” மலையும் அணிநீழற்
    காடும் உடையது அரண் (குறள்)
    அதாவது மண் வளம்
    இப்போ, இவற்றை சேர்த்து பாருங்கள்
    கல் தோன்றி = மலை தோன்றி
    மண் தோன்றா = வயல் தோன்றா காலத்தே..
    கையில் வேல்-வில்-வாளோடு, முன்பு இருந்த = ஆதி குடிகள்!

    அவன் கையில் = கல்/ எஃகு/ இரும்பால் ஆன வேலும் வாளும் தானே இருந்தது (Natural Evolution Process!)
    இதைதான் இப்பாடல் கூறுகிறது.
    முல்லை/குறிஞ்சி தோன்றி,
    மருதம் தோன்றாக் காலத்தே..
    கையில் வாளோடு தோன்றிய ஆதி குடிகள் தமிழர்கள் என்று.

    அவ்வளவுதான் !

    ReplyDelete
  3. கந்தையா தில்லைவிநாயகலிங்கம்Saturday, March 19, 2022

    பொய் 5: ஆண்ட பரம்பரை:

    "ஆண்ட பரம்பரை மீண்டும் ஒரு முறை ஆள நினைப்பதில் என்ன குறை?" இது ஒரு வீர வசனம்.

    இங்கு கூறுவது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நாமே எம்மை பல பல ஆண்டுகளாக ஆண்டோம், அந்நியர் ஆட்சி தவிர. நாம் இன்னொரு தேசத்துக்கு அடிமையாக வில்லை என்பதே !!


    இது வீர வசனம் என்பதை விட, மக்களுக்கு விளங்க படுத்தும் ஒரு வசனமும் கூட!!!

    சேர சோழ பாண்டியர் ஆகிய மூவேந்தர்கள் தவிர, மற்றவர்களும் ஆண்டாளும், உதாரணமாக முத்தரையர் (களப்பிரர்களின் கிளைக்குடியினர், பல்லவர் [தொண்டை மண்டலத்துப் பழங்குடிகள்; பஹலவர்கள் எனும் பாரசீக மரபினர் என்று பல்வேறு கருத்து வேற்றுமைகள் உண்டு, எனினும் .வின்சென்ட் ஸ்மித் என்னும் ஆங்கில வரலாற்றாசிரியர் தமது நூலின் முடிவாகப் பல்லவர் தென்னிந்தியரே என்று வரையறுத்துள்ளார்], நாயக்கர் [நாயக்கர் என்பவர்கள் ஆந்திரா, கருநாடகம், தமிழ்நாடு, கேரளம் ஆகிய தென்னிந்திய மாநிலங்களில் வாழும் சில சமூகங்கள் பயன்படுத்தும் பட்டம் ஆகும். இவர்கள் தென்மாநிலங்களில் மக்கள் தொகையில் அதிகமாக காணப்படுகிறார்கள்.] போன்றோர்கள், ஆனால் அவர்கள் எல்லோரின் காலத்திலும் தமிழ், தமிழர் பண்பாட்டில் எந்த தொய்வும் ஏற்படவில்லை, உதாரணமாக களப்பிரர் காலத்தில் தமிழ் மொழியும் இலக்கியமும் நன்கு வளர்ந்தது ஒரு சான்றாகும். மேலும் வட நாட்டு அசோகன் கூட கைப்பற்ற முடியாமல் இருந்தது, தென் மாநிலங்களில் , தமிழகம் மட்டும் என்பது வரலாறு. [Considered by many to be one of India's greatest emperors, Ashoka expanded Chandragupta's empire to reign over territory stretching from present-day Afghanistan in the west to present-day Bangladesh in the east. It covered the entire Indian subcontinent except for parts of present-day Tamil Nadu]


    மேலும் இவர்கள் எல்லோரும் தென் இந்தியர்கள், ஒரே திராவிட இனம், ஒரு மொழி குடும்பத்தை சேர்ந்தவர்கள், அதில் தமிழ் முதன்மையாக இருந்தது. அத்துடன், அன்றைய சூழலில், அவர்கள் எல்லோரும் ஒரு இனமாக [திராவிடம்] கருதப்பட்டது. உதாரணமாக, கி மு இரண்டாம் நூற்றாண்டுக்கும் கி பி மூன்றாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட [variously dated to be from the 2nd century BCE to 3rd century CE] மனுஸ்மிருதி [மனுதரும சாத்திரம்] 10ஆம் அத்தியாயம் 44 செய்யுளில் திராவிடம் என்ற சொல் காணப்படுகிறது.


    “பௌண்டாம், ஔண்டரம், திராவிடம், காம்போசம், யவநம், சகம், ..... இந்தத் தேசங்களை ஆண்டவர்களனைவரும் மேற்சொன்னபடி சூத்திரனாய் விட்டார்கள்"

    இங்கு எல்லா தென் இந்தியரையும் ஒரு இனமாக, ஒரே சொல்லில் தான் குறிக்கிறார்கள். மேலும் குமரிலப்பட்டர் (சமசுகிருதம்: कुमारिल भट्ट), கி. பி., ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த அசாம் பகுதியை சேர்ந்த, வேத தத்துவ தரிசனங்களில் ஒன்றான மீமாம்சை தர்சன அறிஞர் ஆவார்] இவரும் தனது Tantravārttika வில் திராவிடர் [Dravida] என்றே குறிப்பிடுகிறார்.




    தமிழ் இனம் என்பது ஒரு மாபெரும் இனம்....மிகப்பெரிய வரலாறு...பண்பாடு...நாகரீகம் ஆகியவற்றைக் கொண்டு விளங்கிய/விளங்கும் ஒரு இனம் அது. அத்தகைய நாகரீகத்தை வெறும் மன்னர்கள் மட்டுமா கட்டி இருப்பார்கள். இல்லை...!!! பல்வேறு அறிஞர்கள், ஞானிகள், வீரர்கள், கலைஞர்கள், சான்றோர்கள் போன்ற மேலும் பல சிறந்தவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து உருவாக்கியது தான் தமிழ் நாகரீகம். அனைத்துத் துறையிலும் சிறந்து விளங்கிய ஒரு இனம் தமிழ் இனம்.

    குறிப்பாக மன்னர்கள் யாராக இருந்தாலும் அங்கு ஆண்டது தமிழ்! அது தான் முக்கியம். மற்றது அவர்களின் பண்பாடும் ஆகும்!!

    அப்படிப்பட்ட ஒரு இனம் இன்று ஒன்றும் இல்லாது கிடக்கின்றது. அது கண்ட சிகரங்கள் வெறும் வரலாறாய் உறைந்துக் கிடக்கின்றது. இந்நிலையில் தான் தமிழ் இனத்திற்கு உரிமைக் கொண்டாடும் குரல்களை நாம் காண வேண்டி இருக்கின்றது. அவ்வளவுதான்.

    ReplyDelete