கொழும்பு நோக்கி அந்த விமானம் பறந்துகொண்டிருந்தது. அவ்விமானத்தில் பல் நாட்டு
பயணிகள் பல்வேறு நோக்கங்களுடன் விமானத்தில் இருந்தாலும் பாக்கியம் மட்டும் ஒரு உறுதியான முடிவுடனேயே அன்றைய பயணம் அவளுக்கு
அமைந்திருந்தது.
அட,எத்தனை வருடங்கள்
கடந்து விட்டன. 30 வருடங்கள்
எப்படி ஓடியது என்று அவளால் நம்ப முடியவில்லை.
அன்று இருந்த யுத்த சூழ்நிலையில் ஒரு இரவில் இராணுவ முகாமிலிருந்து ஏவப்பட்ட
எறிகணையில் அவளது கண்முன்னே கணவன் துடிதுடித்தது மாண்டிட ,இரு ஆண்
பிள்ளைகளுடன் செய்வகை அறியாது துடித்தவளை, மாமனின் உதவியினால் அவளது சொத்துக்களை விற்று ,அப்பணத்தில் பிள்ளைகளுடன் ஒரு அகதியாக கனடா வந்து
சேர்ந்தாள் பாக்கியம்.
பிள்ளைகளுக்காகவே வாழ, கனடா வந்து சேர்ந்த பாக்கியம் பிள்ளைகளின் எதிர்காலம் கருதி, ஆண்களைப்போன்று
ஒன்றுக்கு இரு வேலைகள் செய்து அவர்களின் கல்வியில் பெரும் கவனம் செலுத்தினாள்.
மேலும் வீட்டு வேலைகள்,சமையல், கடைகள்,பிள்ளைகளின் மேலதிக வகுப்புகள்,பாடசாலை கல்வி
என, சகல வழிகளிலும் பிள்ளைகளின் வளர்ச்சியில் கடும் கவனம் செலுத்தி ஒரு இயந்திரம்
போல் செயற்பட்டாள் பாக்கியம். அவளது அயரா
முயற்சியின் பலனாக பிள்ளைகள் பல்கலைக் கழகமும் நிறைவுசெய்து கொண்டபோது பெரும்
நிம்மதிப் பெருமூச்சினை விட்டுக்கொண்டாள் பாக்கியம்.
பிள்ளைகளுக்கான அடுத்த நகர்வு அவர்களின் திருமணம் என்று பேச்சினை அவள்
எடுத்தபோதுதான் அவர்களின் காதல் கதைகள் வெளிப்பட ,அவர்கள்
விரும்பியவாறே காதலித்தவர்களையே திருமணமும் முடித்துக் கொடுத்தபோது இனி தனக்குபெண்
பிள்ளைகள் இல்லாத குறையினை மருமகளவை நீக்கினர்
என்று கனவு கண்டாள் பாக்கியம்.
கொடுமையான இப் பனி மண்ணில் இயந்திரமாய் நீண்ட காலம் உழைத்த அவளின் உடம்பு
எவ்வளவு காலம்தான் அதற்கு சம்மதிக்கும்? வயதும்
65 நிரம்பியதால், தனது
ஓய்வூதியத்திற்கும் விண்ணப்பித்துக்கொண்டு மூத்த மகனுடன் இருக்கலாம் என்று அவர்கள்
வீடு சென்றபோது
மருமகள்: 'உங்கட அம்மா
எத்தின நாளுக்கு இங்க நிற்கப்போறா?''
மகன்:''அம்மா என்னோட
இருக்க விரும்புறா போல.இருக்கட்டுமன்.''
மருமகள்:''ஏனாம்,உங்கட தம்பியும்
இருக்கிறாரெல்லே.''
இதன்பின்னர் அவர்கள் உரையாடல் பாக்கியத்தின் காதில் எட்டிடவில்லை. ஏக்கத்தால்
அவள் காதுகள் அடைத்துக் கொண்டன. மறுநாளே தனது அடுத்த மகன் வீடு சென்றபோது,
மருமகள்: ''ஏன் மாமி.நீங்க தனிய இருக்கிறது உங்களு சுதந்திரம் தானே.''
என்று நேரடியாகவே மருமகள்
போட்டுவைத்தாள் ஆப்பு!
அதிர்ச்சியடைந்த பங்கயம் ஒரு முடிவுக்கு வந்தவளாக இளையவன் வேலையால் வந்தபின்
பங்கயம்: 'தம்பி நான் ஊருக்கு போகப்போறன்'
மகன்:' நல்லதம்மா, எல்லாரும் போய்
வருகினம். நீங்களும் போய் உங்கட சொந்தங்கள் பார்த்து,பேசி சந்தோசமாய்
இருந்து வரலாம் தானேயம்மா!
பங்கயம்: 'இல்லைத்தம்பி, இனியும் இந்த
குளிரை என்னால தாங்க முடியாது பிள்ளை. ஊரிலை போய் தொடர்ந்து சொந்தங்களோட
இருக்கப்போறன் தம்பி.'
மகன்: 'என்னம்மா
கதைக்கிறியள்.ஒரு வருத்தம் துன்பம் வந்தாலும் எல்லாத்துக்கும் இங்க வசதியெல்லே
அம்மா. ஏனம்மா இப்பிடி யோசிக்கிறியள்?
பங்கயம்: '' எல்லாம்
யோசிச்சுத்தான் ஒரு முடிவுக்கு வந்தனான். நான் பிறந்த மண்ணிலே இருக்கவேணுமெண்டு
பேராசையாய் இருக்கு.என்னை விடு.என் பாட்டிலை நான் போய் வாழப்போறன்''
மகன்: 'சரியம்மா.போங்கோ!
ஆனால் நீங்கள் விரும்பிற நேரம் திரும்பி வாருங்கோ அம்மா . எங்களோட இருக்கிறதை தான்
நாங்கள் எப்பவும் விரும்பிறம்'
இது மகனின் ஆசையாக இருந்தாலும், அதற்கு அவன் மனைவி இடம் கொடுக்க வேணுமே என்று
தனக்குள் கேள்வியினை தொடுத்துக்கொண்டு புறப்பட்டாள் தாயகம் நோக்கி பாக்கியம்.
விமானம் கட்டுநாயக்கா விமானநிலையத்தின் தரையினை தொட்டவாறு சிறு குலுக்கலை
கொடுத்தபோது, தன் பழைய
நினைவுகளிலிருந்து மீண்ட பாக்கியம், தான் இனி மீண்டும் வாழப்போகும் யுத்த காலத்திற்கு முந்திய அன்றயவாழ்வினை
எண்ணி மகிழ்ந்தவாறு, விமான நிலையத்தின் அனைத்து அலுவல்களையும் முடித்துக்கொண்டு தொடருந்து
மூலம் சொந்த ஊரான நீர்வேலி வந்து, தன் மாமன் வீடு வந்தடைந்தாள் பாக்கியம்.
'எப்பிடி இங்க
இருந்து போனாய் பங்கயம். இப்பிடி உருக்கெட்டு வந்து நிக்கிறியே பங்கயம்' என்று மாமனார்
பரிந்து பேச
'உங்க வெளிநாட்டில
இருந்து வாறவை எவ்வளவு மினுங்கி வந்து போகினம். இந்த ஊரில இருக்கிறவையை விட
கேவலமாய் போனியே பங்கயம்' என்று மாமியாரும் பக்கப் பாட்டுப் பாட, கடந்துவந்த கடினமான
பாதைகளையும், ஏமாற்றங்களையும்
எண்ணி அழுதே தீர்த்துக்கொண்டாள் பங்கயம்.
மாமனும் மாமியும் தங்களுடன் இருக்குமாறு எவ்வளவோ வற்புறுத்தியும், இளைய மருமகள்
கூறியதுபோல், தான் தனியே வீடு எடுத்து வாழந்து காட்டுவதாக எண்ணிய பங்கயம் ,அவர்களுக்குப்
பக்கத்திலேயே ஒரு வீட்டினை வாடகைக்கு எடுத்துக்கொண்டு, தன் சொந்த
மண்ணில் வாழ ஆரம்பித்துக்கொண்டாள்.
சில மாதங்கள் தான் கடந்திருக்கும்.
''வெளிநாட்டிலிருந்து வந்து நீர்வேலியில் தனியே வாழ்ந்திருந்த மூதாட்டி கொலை செய்யப்பட்டு , பணமும், அணிந்திருந்த நகையும் கொள்ளை.''
சகல ஊடகங்களிலும் வந்த அச்செய்தி
புலம் பெயர் தேசங்களில், பாக்கியம் போன்று
பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் முதியோர்கள் உட்பட அனைவருக்கும்
அதிர்ச்சியையே கொடுத்தது.
ஆக்கம்:செமனுவேந்தன்
No comments:
Post a Comment