குறுங் கவிதைகள்


"குட்டிச்சுவர்"

 

"தெரு ஒர குட்டிச்சுவரில் இருந்து

ஒரு வெட்டி வேதாந்தம் பேசி

குருவும் தலை குனியும் குட்டிச்சுவராகி

கருமம்  புடிச்ச தறுதலை  நான்’’

 

"கண்ணீரும் சொன்னதே!!"

 

"கங்கை ஆடியென்ன காவேரி ஆடியென்ன

கண்ணியவள் காதோரம் கெஞ்சி பேசியென்ன

கத்தை கத்தையாக மடல்கள் வரைந்தென்ன

கண்ணீரும் சொன்னதே காதல் பொய்யென!"

 

"கள்ளியவள் வலையில் மீனாய் விழுந்ததால்

கடைக்கண் பார்வையில்  மனதை பறிகொடுத்ததால்

கதறி அழுதென்ன உலகை வெறுத்தென்ன

கலங்காத நெஞ்சமும் கவலை அடைந்தென்ன!!"

 

[கண்ணி - (குறிப்பிட்ட குணம் பொருந்திய) கண்களை உடைய பெண்-உதாரணம் : அங்கயற்கண்ணி [ அம்+கயல்+கண்ணி]]

 

"பொட்டு வைத்த முகமோ"

 

"பொட்டு வைத்த முகமோ! -- இல்லை

'மெட்டி அணிந்த காலோ! -- என்னை

முட்டி மோதிய தோளோ! -- கொஞ்சம்

தட்டி கழித்த  நாணமோ! -- அவள்

ஒட்டி உடை அழகோ! -- எதை

கூட்டி குழைத்து உனக்கு -- சொல்வேன்!!"

 

"எம் மதமும் சம்மதம்"

 

"எம் மதமும் சம்மதம் என்றான்

எல்லா ஊரும் எம் ஊரென்றான்

எருவாகி பிறரை வாழ வைத்தான்

எரிவனமாய் தாய்பூமி இன்று கதறுது!!"

 

[எரிவனம் – சுடுகாடு]

 

"அதிக வேகம் அதிக ஆபத்து!"

 

"அண்ணாந்து பார்க்காதே கவனம் கலையாதே!

அளவான வேகத்தில் சரியான எடையில்

அக்கம் பக்கம் பார்த்து செலுத்தடா!!"

 

 

"அதிக வேகம் அதிக ஆபத்து!

அகிலத்தில் பிறந்தவை மகிழ்வாக வாழவே

அனைத்து உயிர்களும் பெறுமதி வாய்ந்தவையடா!!"

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

No comments:

Post a Comment