மாறும் உலகினில் கைக்கு வரும் புதுமைகள்

 அறிவியல் -விஞ்ஞானம் 

எந்த ரத்தத்தினரும் எவருக்கும் உறுப்பு தானம் செய்யலாமா?

உறுப்பு செயலிழந்து, இரவல் உறுப்புக்காக மருத்துவமனைப் படுக்கையில், காத்திருப்போரின் பட்டியல் நீண்டு வருகிறது. இதற்குக் காரணம், நோயாளியின் ரத்த வகையை சேர்ந்தவர்களின் உறுப்பையே பொருத்த முடியும்.

 

இந்த நிலையை மாற்ற வருகிறது ஒரு புதிய தொழில்நுட்பம்.. கனடாவைச் சேர்ந்த மருத்துவர்கள் இந்த உத்தியை உருவாக்கியுள்ளனர். அவர்கள் ஒரு என்சைம் சிகிச்சை வாயிலாக, கிடைக்கும் எந்த ஒரு உறுப்பையும், '' வகை ரத்த வகையைச் சேர்ந்த உறுப்பைப் போல மாற்றிவிட முடியும் என்று காட்டியுள்ளனர்.

 

பொதுவாக ஓ வகை ரத்தத்தை, யுனிவர்சல் பிளட் குரூப் என்பர். அதாவது, எவருக்கும் ஓ வகை ரத்தம் ஏற்புடையதாகவே இருக்கும்.மனித குடலில் இருக்கும் இரு வகை என்சைம்கள், '' ரக ரத்த செல்களை, ஓ ரக ரத்த செல்களாக மாற்றுகின்றன என்பதை ஏற்கனவே ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

 

இதே முறையில் நீண்ட ஆய்வுகளைச் செய்து, எந்த ரத்தவகையைச் சேர்ந்தவரின் உறுப்பையும், ஓ வகை ரத்தமுள்ள உறுப்பைப் போல மாற்றும் தொழில்நுட்பத்தை கனடா விஞ்ஞானிகள் உருவாக்கினர்.சோதனைகளில், இத்தகைய உறுப்புக்களை, எந்த வகை மனித உடலும் ஏற்றுக்கொள்ளும் என்பது தெரிய வந்தது.இது நடைமுறைக்கு வந்தால், உலகின் உறுப்புத் தட்டுப்பாடு வெகுவாக குறையும்.

 

 

இயற்கை அம்மோனியா உரம் தரும் பாக்டீரியா!

பயிர்களுக்கு பரவலாக அம்மோனியா உரம் போடுகின்றனர். ஆனால், தேவைக்கு அதிகமாக அந்த உரம் போடப்படுகிறது. இதனால், வயலிலிருந்து வழிந்தோடும் மிகையான அம்மோனியா கலந்த தண்ணீர், கால்வாயில், நீர் நிலைகளில் கலந்தால், அவை வேதியியல் மாசடைகின்றன.

 

செயற்கை அம்மோனியாவுக்கு பதிலாக, இயற்கையாகவே அதை உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள் இருந்தால் எப்படி இருக்கும்? அமெரிக்காவின் வாஷிங்டன் மாநில பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஒருவகை பாக்டீரியாவை தேர்ந்தெடுத்தனர்.

 

அது இயல்பாகவே சுற்றுப்புறத்திலுள்ள நைட்ரஜன் வாயுவைக் கிரகித்து, அம்மோனியாவாக மாற்றி, கழிவாக வெளியேற்றும் தன்மை கொண்டது. அந்த பாக்டீரியாவை மேலும் கூடுதலாக அம்மோனியாவை வெளியேற்றும்படி மரபணு திருத்தம் செய்தனர்.

 

இந்த புதிய பாக்டீரியாவை, நெல் விளையும் மண்ணில் விட்டபோது, அவை பல்கிப் பெருகி, அம்மோனியாவை வெளியேற்றின. இதை, அந்த நெற்பயிர்களும் உள்வாங்கிக்கொண்டன.

 

இப்போது, வெவ்வேறு அளவுகளில் அம்மோனியாவை வெளியேற்றும் திறன்கொண்ட பேக்டீரியாக்களை உருவாக்க விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர். இதனால் எந்தப் பயிர்களுக்கு எத்தனை அம்மோனியா தேவை என்பதை அறிந்து அதற்கேற்ற உற்பத்தித் திறனுள்ள பாக்டீரியாவை மண்ணில் பரவவிட முடியும்.அது நடைமுறைக்கு வரும்போது, விவசாயிகள் செயற்கை அம்மோனியா உரத்தை அடியோடு நிறுத்திவிட்டு, அம்மோனியாவை உற்பத்தி செய்யும் பாக்டீரியாவை இலவசமாக வாங்கி, மண்ணில் வாழவிடப்போகிறார்கள்.

 

'செல்பி'யால் உடல்நலத்தை அளக்கும் செயலி!

வெறும் 30 வினாடிகளுக்கு 'வீடியோ செல்பி' எடுத்துக் கொடுத்தால் போதும். ஒரு செயலி, அதை அலசி, பொதுவான உடல்நலன் குறித்த 30 விதமான காரணிகளை அளந்து சொல்லிவிடும்.

 

ஆச்சரியமாக இருக்கிறதா? ஆனால், கனடாவின் டொரோன்டோவிலுள்ள நியூராலாஜிக்ஸ், 'அனுரா' என்ற செயலி மூலம் இதை சாதித்துள்ளது. இந்த செயலி மொபைல் மற்றும் கணினி ஆகிய இரண்டிலும் செயல்படும். இதை பயன்படுத்தி ஒருவர் அரை நிமிடம் செல்பி எடுத்தால், அதை மருத்துவ ரீதியில் செயற்கை நுண்ணறிவு மென்பொருள் ஒன்று அலசி ஆராயும்.

 

செல்பியில் தெரியும் நபரின் ரத்த அழுத்தம், மூச்சு விடும் வேகம், மனச்சுமை, செரிமானத் திறன் என்று உடல்நலத்துக்கு அடிப்படையான பல காரணிகளை இந்த செயலி அலசி, முடிவை அரை நிமிடத்தில் சொல்லிவிடுகிறது.மனித தோலில் பிரதிபலிக்கும் ஒளி, அவரது ரத்த ஓட்டத்தையும் தெளிவாகக் காட்டும்.

 

இது தான் செல்பி வீடியோவில் செயற்கை நுண்ணறிவுக்கு கிடைக்கிறது. இந்த தகவல்களை வைத்தே, அது ஒரு மருத்துவருக்கு இணையாக நோயறிதல் பணியை நொடிகளில் முடித்து தருகிறது. அனுரா செயலியை ஒரு தேர்ந்த மருத்துவரின் ஆலோசனைக்கு மாற்றாக பயன்படுத்தக் கூடாது என, இதன் தயாரிப்பாளர்கள் எச்சரிக்கின்றனர்.

 

தினமும் தன் உடல்நலனை கண்காணிக்க வேண்டும் என்று நினைப்போருக்கு, அனுரா செயலி ஒரு உதவியாளர் அவ்வளவு தான் என, இதன் வடிவமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

படித்ததில் பிடித்தது

 

No comments:

Post a Comment