பழகத் தெரிய வேணும் – 08

 (மாணவர்களை வழிநடத்துவது)

 


நான் பரீட்சைகளில் தேர்ச்சி பெறாவிட்டால் உங்களுக்கென்ன அக்கறை? எப்படியும் உங்களுக்குச் சம்பளம்தான் கிடைத்துவிடுமே!”

 

என் மாணவன் ஒருவன் இப்படி என்னைக் கேட்டபோது, நான் அதிர்ந்தேன்.

 

பலவிதமாக மரியாதையின்றி ஆசிரியர்களை நடத்துவார்கள் வேறு சிலர்.

 

ஒருமுறை, அப்படிப்பட்ட மாணவன் ஒருவனுடைய தாயிடம் நான், இப்படிப் பேசுகிறானே!’ என்று ஆதங்கத்துடன் கேட்டேன், அவள் அவனுக்கு அறிவுரை கூறுவாள், இல்லை, கண்டிப்பாள் என்ற நம்பிக்கையில்.

 

அவள் கூறியதோ! “வீட்டிலும் இப்படித்தான்!”

 

சிறுவயதில் கண்டிக்காமல் விட்டால், பதின்ம வயதில் அவர்களை மாற்றமுடியாது.

 

சில வருடங்களுக்குப்பின், பதின்ம வயதினர் அப்படிப் பேசுவது நம் தவறல்ல, அவர்கள் ஏதோ மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்கள் என்று புரிந்தது.

 

அதன்பின், குறிப்பிட்ட மாணவனைத் தனியாக அழைத்துப் பேசுவதை வழக்கமாக்கிக்கொண்டேன்.

 

‘”வீட்டில் அப்பா இருக்கிறாரா?” என்று ஆரம்பிப்பேன்.

 

(அப்பாவுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருக்கலாம். அதனால் அம்மாவுடன் ஓயாது சண்டை. அந்த நிலையில், தன்னால்தான் இருவருக்கும் மனம் ஒத்துப்போவதில்லை என்ற வருத்தம் பிள்ளைகளுக்கு எழுவது இயற்கை).

 

அனேகமாக, சில சமயம்,” என்று தயக்கத்துடன் பதில் வரும்.

 

இது பெரியவர்களுக்கிடையே இருக்கும் பிரச்னை. நீ நல்ல பையன். அதில் தலையிடாது, ‘அவர்கள் பாடு!’ என்று விடு. நீ குழம்பினால், அது உன் எதிர்காலத்தைத்தான் பாதிக்கும்,” என்று அறிவுரை கூறுவேன்.

 

ஒரு பதின்ம வயதுப் பையன், “என் தாய், ‘இது நம் குடும்ப விவகாரம். பிறரிடம் சொல்லாதே,’ என்கிறார்கள்,” என்று தன் குழப்பத்தைத் தெரிவித்தான்.

 

எல்லாரிடமும் சொல்லிக்கொண்டிருக்க வேண்டாம், அவர்களுக்குக் கேலியாகப் போய்விடும் என்று அப்படிச் சொல்லி இருப்பார்கள். உனக்கு நிம்மதி கிடைக்கும் என்று தோன்றினால், என்னிடம் சொல்லியதுபோல, நெருக்கமான நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளலாமே!”

 

நம் மனநிலையைப் புரிந்து, இந்த ஆசிரியை ஆறுதல் அளிக்கிறார்களே!’ என்று அதன்பின், கடுமையாக உழைப்பார்கள். அம்மாதிரியான ஆசிரியைமீது காதல் வயப்படுவதும் உண்டு!

 

ஆசிரியை என்றால் அதிகாரம்

 

சிறு குழந்தைகளுக்கும் ஆரம்பப்பள்ளி மாணவ மாணவிகளுக்கும் இயற்கையாகவே கற்பனாசக்தி மிகுந்திருக்கும். ஆனால், பலருடைய கற்பனைத்திறன் காணாமல் போய்விடுகிறதே, ஏன்?

 

சில (பல?) குடும்பங்களில் பெண்களுக்கு இரண்டாவது இடம்தான். அண்ணனுக்கோ, அல்லது வயதில் இளையவனாக இருந்தாலும் தம்பிக்கோ, கூடுதலான சலுகை கிடைக்கும்.

 

இப்படிப்பட்ட குடும்பத்திலிருந்து வந்த சில ஆசிரியைகள் தாம் சிறுவயதில் இழந்த அதிகாரத்தை மாணவர்கள்மேல் செலுத்துவார்கள்.

 

கதை-

ஆங்கில மொழி போதிக்கும் மிஸஸ் தேவா முதலில் கட்டுரைக்கான தலைப்பைக் கொடுத்துவிட்டு, அதை விவாதிப்பாள். மாணவிகள் குறிப்பெடுத்துக்கொள்ள வேண்டும்.

 

சுமித்ரா என்ற மாணவி நிறையப் படித்து, தன் அறிவைப் பெருக்கிக்கொண்டிருந்தவள். சுயமாகச் சிந்தித்து, ஆசிரியையின் கருத்துடன், தன்னுடையதையும் இணைத்து எழுதினாள்.

 

வந்தது வினை. அவளுடைய கருத்தை, ‘பிழை’ என்ற குறிப்புடன் அடித்து, குறைவான மதிப்பெண்களை அளித்தாள் ஆசிரியை. திட்டு வேறு.

 

வருட இறுதியில் அரசாங்கப் பரீட்சை வந்தது. வேறு பள்ளிகளில் படித்த பலரும் தத்தம் ஆசிரியைகளின் கருத்துக்களை துளியும் மாற்றாது வெளியிட்டிருந்தனர். அவர்களை யார் யோசிக்கவிட்டார்கள், பாவம்!

 

சுமித்ரா மட்டும் மிகச் சிறப்பாகத் தேர்ச்சி பெற்றிருந்தாள், வயதுக்கு மீறிய சிந்தனையுடன்.

 

பிற்காலத்தில் பெரிய உத்தியோகத்தில் அமர்ந்தபின்னும், பள்ளிக்கூடம் என்றாலே எனக்கு வெறுப்பு,’ என்று அவள் அடிக்கடி கூறுவதில் என்ன ஆச்சரியம்?

 

அறிவும் பண்பும்-

 

பள்ளியில் கல்வி கற்பது பரீட்சைகளில் தேர்ச்சிபெற மட்டுமில்லை. `படித்தால் அறிவு வளரும்,’ என்று புரிந்து, மாணவர்கள் என்றுமே படிக்கும் பழக்கத்தை விரும்புவர்களாக ஆக்கவேண்டும்.

 

பொதுவாக, ஆசிரியர்கள் புத்தகத்திலிருப்பதுபோலவே தமது பாடங்களை நடத்துவதுடன் கடமை முடிந்துவிட்டதாக எண்ணுகிறார்கள். இளவயதிலேயே பண்பையும் புகட்ட வேண்டாமா?

 

ஒரு முறை, என் வகுப்பில், ஒரு மாணவன் தும்மினான். அப்போது, `அருகிலிருப்பவர்களிடம் `sorry,’ என்று மன்னிப்புக் கேட்கவேண்டும்,’ என்று நான் கூற, `ஐயே! இதையெல்லாமா சொல்லிக்கொடுப்பார்கள்!’ என்ற சலிப்புக்குரல் கேட்டது.

 

பெரிய வேடிக்கை என்றெண்ணி, தும்மியவன் எழுந்து நின்று, நாலாபுறமும் திரும்பி, மன்னிப்பு கேட்டபடி இருந்தான்!

 

பாடம் மட்டும் வேண்டாமே!

 

பாடத்திற்குச் சம்பந்தம் இல்லாத, ஆனால் வாழ்க்கைக்கு உதவும் விஷயங்களையும் அவ்வப்போது சொல்லிக்கொடுப்பது என் வழக்கம். இல்லாவிட்டால், அவர்களுடைய கொட்டாவி நம்மையும் தொற்றிவிடுமே!

 

REFLEXOLOGY-யில் நான் பயின்றது:

 

இரு கை விரல்களையும் கோர்த்துக்கொண்டு, உள்ளங்கைகள் ஒன்றையொன்று தொடும்படி பிடித்துக்கொள்ளுங்கள். நன்றாக இறுக்கிவிட்டு விலக்கினால், கைகளில் ரத்த ஓட்டம் புலனாகும்.

 

இதனால் என்ன பலன்?

 

நம் மன இறுக்கத்தைத் தளர்த்திக்கொள்ள. பரீட்சைக்குமுன் செய்யலாம். நல்ல பலன் கிடைக்கும்.

 

விளையாட்டாக, ‘’யாருடனாவது சண்டை போடுமுன் இப்பயிற்சியைச் செய்தால், நம்மை யாரும் வெல்ல முடியாது,” என்று சேர்த்துக்கொண்டேன்.

 

டீச்சர், நீங்கள் கணவருடன் சண்டை போடுவதற்குமுன் இப்படித்தான் செய்கிறீர்களா?” ஒரு துடுக்கான கேள்வி எழுந்தது ஆண்குரலில்.

 

நான் முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டு, அதுவும்தான்!” என்றேன். ஆனால், புன்னகையைத் தவிர்க்க முடியவில்லை.

 

முதலில் அதிர்ச்சியடைந்த மாணவிகளும் அப்போது எழுந்த சிரிப்பில் கலந்துகொண்டார்கள்.

 

இன வேறுபாடால் எழும் பிரச்னை-

 

ஸியூ ஙா (SIEW NGA) என்ற மாணவி என் மேசைக்கருகே வந்து, ஒரு புத்தகத்தை என்முன் தூக்கிப்போட்டாள்.

 

டீச்சர்! நான் நேற்று பள்ளிக்கு வரவில்லை. நீங்கள் நடத்திய பாடத்தைச் சொல்லிக்கொடுங்கள்,” என்றாள் அதிகாரமாக.

 

எனக்கு வந்த ஆத்திரத்தில், நான் இங்கு தனிப்பட்ட முறையில் டியூஷன் நடத்தவில்லை. உன் தோழிகளிடம் கேள், போ!” என்று பதிலடி கொடுத்தேன்.

 

திகைப்புடன், என்னையே பார்த்தபடி நின்றாள்.

 

இன்னும் ஏன் நிற்கிறாய்? உன் இடத்திற்குப் போ!” என்று விரட்டினேன்.

 

ஏற்பது நன்று (எல்லோரையும்)

 

நல்ல குடும்பத்திலிருந்து வரும் மாணவர்களுக்குச் சொல்லிக்கொடுப்பது எளிது.

 

குடும்பத்தில் அன்போ, அரவணைப்போ இல்லாத அபாக்கியசாலிகளையும் ஒதுக்காது, அவர்களுடைய திறமைகளைக் கூடியவரை வெளிக்கொணர்வது ஆசிரியர்கள் கையில்தான் இருக்கிறது.

 

கதை-

 

ஸிதி நோரா என் முன்னாள் மாணவி.

 

ஒருமுறை, ஆசிரியர்களின் பொது அறைக்குள் நுழைந்து, என்னருகே வந்து முகமலர்ச்சியுடன் முகமன் கூறினாள்.

 

அலுவலகத்திலிருந்து ஏதாவது எடுத்துக் கொண்டுபோக வந்தாயா?” என்று கேட்டேன்.

 

இல்லை,’ என்று தலையசைத்தாள்.

 

பின்னே?”

 

குரல் தழதழக்க, “டீச்சரைத்தான் பார்க்க வந்தேன். உங்களை ரொம்ப மிஸ் பண்ணுகிறேன்,” என்றபடி அழ ஆரம்பித்தாள்.

 

எனக்குப் பெருமையாகிவிட்டது. “ஹேய்! இதைக் கேட்டீர்களா? என்னைப் பார்க்கவென்று வந்திருக்கிறாள்!” என்று அறிவிப்பு செய்தேன்.

 

ஆசிரியப் பயிற்சியில் என்ன பாடம் எடுத்திருக்கிறாய்?” என்று நான் கேட்டதற்கு, ஃபிஸிக்ஸ் (PHYSICS),” என்று வேகமாகச் சொல்லிவிட்டு, வெட்கத்துடன் முகத்தை மூடிக்கொண்டாள்.

 

என்னிடம் ஆரம்பத்திலிருந்து கற்ற பாடம்!

 

அன்று அவள் வேறு எந்த ஆசிரியையும் சந்தித்துப் பேசவில்லை.

 

ஆசிரியப் பயிற்சியில் சேர்ந்தபின், உனக்கு எந்த ஆசிரியர்போல் ஆக விருப்பம்?’ என்று ஒரு கேள்வி எழுப்பப்படும்.

 

ஸிதி நோரா என் பெயரை எழுதிவிட்டு, என்னைப் பார்க்க வந்திருக்கிறாள்.

 

அவள் போனபின், பிறர் அவளை அலசினார்கள்.

 

இந்தப் பெண் ஏழை. படிப்பிலும் சுமார்தானே?”

 

ஆனாலும், நல்ல ஆசிரியையாக விளங்குவாள்!”

 

அதேபோல், நானும் என் இடைநிலைப்பள்ளி ஆசிரியையைக் குறிப்பிட்டிருக்கிறேன். கண்டிப்பு, நகைச்சுவை, கருணை மூன்றும் இணைந்தவர் மிஸ்.ராதாம்பாள்.

 

நான் புத்திசாலி. அதனால் முன்னுக்கு வந்தேன். பெற்றோராவது, ஆசிரியர்களாவது!’ என்ற மனப்பான்மை கர்வத்தை வளர்க்கிறது. இப்படி நம்புகிறவர்கள் பிறரை மதிக்கத் தெரியாதவர்கள்.

 

நிர்மலா ராகவன்/எழுத்தாளர், சமூக ஆர்வலர்- மலேசியா.

தொடரும்.... 
👉அடுத்த பகுதியை வாசிக்க அழுத்துக 
👉ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக 

0 comments:

Post a Comment