(சிடுசிடுப்பான கடைக்காரர்கள்)
“புன்னகை
புரியும் முகமாக இல்லாதவன் கடை திறக்கக் கூடாது” (சீனப் பழமொழி).
சீனாவிலிருந்த ஒருவர் தன் எட்டு வயது மகனை மலேசியாவுக்கு கப்பலில்
ஏற்றிவிட்டார், தனியாக.
‘அங்கு போய்
பிழைத்துக்கொள்!’ என்ற அறிவுரை மட்டும் கூறி வழியனுப்பினார்.
என் பக்கத்து வீட்டில் குடியிருந்த பெட்ரீஷியா என்ற கணக்காய்வாளர் தன்
தந்தையைப்பற்றிக் கூறிய கதை இது.
எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவ்வளவு சிறு வயதில் தனியாக ஏதோ ஒரு நாட்டுக்கு
அனுப்புவார்களா!
‘நேர்மையாக
இரு. கடுமையாக உழை,’ என்று தான் போதித்த பாடங்களை வைத்துக்கொண்டு மகன் பிழைத்துவிடுவான்
என்ற நம்பிக்கை அந்த தந்தைக்கு இருந்திருக்கிறது.
சிறுவன் வாங் ஒரு மளிகைக்கடையில் வேலைக்குச் சேர்ந்தான்.
பள்ளிக்கூடத்தில் அவன் கல்வி பெறவில்லை.
ஆனாலும், கடின உழைப்பு, எதையும்
கற்றுக்கொள்ளும் ஆர்வம், பிறரை மரியாதையாக நடத்துவது முதலிய குணங்கள் அவனை சொந்தக்கடை
நடத்தும் அளவிற்கு படிப்படியாக உயர்த்தின.
தன்னைப்போல் தன் குழந்தைகளும் கஷ்டப்படக்கூடாது என்ற உறுதியுடன், அவர்களைப்
பள்ளிக்கூடத்திற்கு அனுப்பினான் வாங்.
அவர்களது மதிப்பெண்கள் சிவப்பு மையால் எழுதப்பட்டிருந்தபோது அவர்களுக்கு அடி
விழும். மாறுகின்ற காலத்தை ஒட்டி நடக்க குழந்தைகளை வளர்க்கவேண்டும் என்று கடையின்
ஓரத்தில் ஒரு கணினி.
சாயங்கால வேளைகளில் விளையாடி முடிந்ததும், எல்லாக்
குழந்தைகளையும் ஓர் அறையில் புத்தகங்களை எடுத்துக்கொண்டு போகச் சொல்லி, கதவை வெளியில்
சாத்திவிடுவான் வாங்.
‘சிறிது நேரம்
சும்மா உட்கார்ந்திருப்போம். அப்புறம், என்ன செய்வதென்று புரியாது, படிக்க
ஆரம்பித்துவிடுவோம்,’
என்கிறாள் பெட்ரீஷியா.
தந்தை எதிர்பார்த்தபடியே, எல்லாரும் உயர்கல்வி பெற்று, நல்ல வேலைகளில்
அமர்ந்தார்கள்.
தந்தை தன் வாழ்க்கையைப்பற்றி அடிக்கடி கூறி வளர்த்திருந்ததால், அவருடைய
நற்குணங்கள் குழந்தைகளிடமும் அமைந்தன.
கடையில் வேலை செய்யும் ஒருவருக்கு அவசியம் இருக்கவேண்டிய குணங்களை இதிலிருந்து
நாம் புரிந்துகொள்ளலாம்.
ஒரு கடைக்காரர் எப்படி இருக்கக்கூடாது?
1. பல வருடங்களுக்கு முன்பு, கோலாலம்பூரில்
பிரபலமாக இருந்த ஒரு கிளினிக்கிற்குப் போயிருந்தேன். சிறிது தாமதத்திற்குப்பிறகு
மருத்துவரின் அறைக்குள் நுழைய அனுமதி.
அந்த மனிதரோ, நான் வந்ததைக்
கவனியாது, சுவாரசியமாக ஒரு
ஜனரஞ்சகமான தமிழ் பத்திரிகையைப் படித்துக்கொண்டிருந்தார்.
நான் பொறுமையை இழந்துகொண்டிருந்தேன்.
அது புரிந்தோ என்னவோ, மெல்ல தலைநிமிர்ந்து, “கொஞ்சம் இருங்கள்,” என்றுவிட்டு, மீண்டும்
படிப்பதில் ஆழ்ந்தார்.
அடுத்த முறை போனபோது, நான் அவரைப் பார்க்க விரும்பவில்லை.
அங்கிருந்த சீன மருத்துவரின் அறைக்குள் எதற்கோ நுழைந்தவர், என்னை அங்கு
பார்த்து திடுக்கிட்டார்.
‘நம் இனத்தவரே
நம்மை ஒதுக்குகிறார்களே!’ என்று வருந்தியிருப்பார்.
இதில் யார்மேல் தவறு?
கடைக்கு வரும் வாடிக்கையாளரோ, மருத்துவமனைக்கு வரும் நோயாளியோ, நம்மை நாடி
வருகிறவர்களின் தேவை அல்லது பிரச்னை என்னவென்று புரிந்துகொள்ள ஆர்வம்
காட்டவேண்டாமா?
சுரத்தே இல்லாது, வேறு வேலையில் ஈடுபட்டிருப்பது ஒருவரை அவமதிப்பதுபோல்தான்.
2. அதே கிளினிக் இரவு ஒன்பது மணிவரை திறந்திருக்கும் என்று
தெரிந்து, நான் போனபோது, எட்டே முக்கால்
மணி.
“கொஞ்சம்
முன்னாலேயே வருவதற்கென்ன?” என்று ஒரேயடியாகக் கோபித்தாள் மருந்துகளை எடுத்துக்
கொடுக்கும் பெண்.
இனி யாரும் வராவிட்டால், வீட்டுக்கு முன்னதாகவே போய்விடலாமே என்ற ஆசை
அவளுக்கு. உடல்நலக்குறைவுடன் வருகிறவர்களிடம் இனிமையாகப் பேச அவளுக்குத்
தெரியவில்லை. நிர்வாகத்தினர் சொல்லிக்கொடுக்கவும் இல்லை.
3 . இரவில் ஒரு மளிகைக்கடைக்குப் போனபோது, கடை மூட அரைமணி
இருந்தது.
நாற்பது வயது மதிக்கத்தக்க கடைச் சிப்பந்தி, “கடைசி
நிமிஷத்திலே வந்து உயிரை வாங்கறீங்களே!” என்று இரைந்தார்.
‘நாள் முழவதும், குறைந்த
சம்பளத்தில் வேலை செய்து, களைத்துப்போயிருக்கிறார், பாவம்!’ என்று
புரிந்தது. இவரை எப்படிக் கோபிப்பது?
“சாமான்கள் எங்கே
இருக்குன்னு காட்டினா, நாங்களே எடுத்துக்கறோம்,” என்றேன்.
அவருடைய வேலை பாதியாகக் குறைய, இறுதியில், “இன்னிக்கு ரொம்ப
வேலை,” என்றார், மன்னிப்புக்
கேட்கும் வகையில்.
வாடிக்கையார்களை உற்ற நண்பர்கள்போல் நடத்தினால் வியாபாரம் செழிக்கும்.
4. சில கடைக்காரர்கள் தாம் விற்கும் சாமான்களை ஒரேயடியாகப்
புகழ்ந்து, வலுக்கட்டாயமாக
நம் தலையில் கட்டப்பார்ப்பார்ப்பார்கள்.
“நான் இவ்வளவு
சொல்கிறேன், உங்களுக்கு
வேண்டாமா?” என்று ஒரு சீனர்
இரைய, எரிச்சல்
தாங்காது, “உங்களுக்குத்தான்
இவ்வளவு பிடித்திருக்கிறதே! நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்,” என்று
நடையைக்கட்டினேன்.
5. நானும், மகளும் ஒரு கடையில் சாப்பிடும்போது, மடியில் இருந்த
ஒருவயதுப் பேரனுக்கும் ஒரு வாய் ஊட்டினேன்.
“பிள்ளைக்கும்
குடுத்தீங்களே!” என்று மூன்று பேருக்கான பணத்தைக் கேட்டான் அங்கு வேலை
செய்துகொண்டிருந்தவன்.
சீக்கிரமே பெரும் பணக்காரனாகிவிடலாம் என்று எண்ணியிருப்பான். அதனால், கடைக்கு வரும்
வாடிக்கையாளர்களுக்கு மரியாதை அளிப்பதன் முக்கியத்துவத்தை அவன் அறியவில்லை.
(அதற்குப்பிறகு
நாங்கள் அங்கு போகவில்லை. கடையையும் காணோம்).
6. எங்கள் வீட்டருகே, தன் வீட்டின் முன்பகுதியையே மளிகைக்கடையாக
மாற்றி இருந்தார் அந்த மலாய்க்காரர். பாக்கிச் சில்லறை கொடுப்பதில் ஏமாற்றுவது, யாரும் பார்க்காத
சமயத்தில் அழுகலான உருளைக்கிழங்கை அவர்கள் சாமான்களுடன் சேர்த்துப் போட்டுவிடுவது
– இதிலெல்லாம் கைதேர்ந்தவர். எல்லாரிடமும் எரிந்துவிழுவார். அந்த இடமே அசுத்தமாக
இருக்கும்.
யாரோ புகார் செய்ய, ‘இப்பகுதியில் உள்ள வீடுகளில் கடை வைத்துக்கொள்ள அனுமதி
இல்லை. வேறு இடத்திற்குப் போகவும்,’ என்று அரசாங்க சார்பில் கடிதம் வந்திருந்தது.
சில வார்த்தைகள் புரியாது, என்னை விளக்கும்படிக் கேட்டுக்கொண்டார்.
“பொறாமை!” என்று
புகார் செய்தவர்களைத் திட்டினார்.
ஆனால், அன்றிலிருந்து
என் குடும்பத்தினருக்கு அலாதி மரியாதை. நான் அவருக்குக் கற்றுக்கொடுத்த ஆசிரியை
ஆயிற்றே!
சிறு லாபம், கடுமையான உழைப்பு
பொதுவாக, எந்தத்
துறையானாலும், பிரதிபலனை
எதிர்பார்க்காது நேர்மையான வழியில் சென்றால் என்றாவது பலன் கிடைக்கும்.
லாபம் சிறிதாக இருந்தாலும் அதற்காக கடுமையாக உழைப்பது
வியாபாரத்தில் முன்னுக்கு வரும் வழி.
சில கடைகளில் சிப்பந்திகள் எல்லாரும் சிரித்த முகமாக இருப்பார்கள். நமக்கு
வேண்டிய பொருள் இன்னதென்று கோடி காட்டினாலே போதும். புரிந்துகொள்வார்கள். அவர்கள்
முதலாளியால் நல்லவிதமாக நடத்தப்படுகிறார்கள் என்று அவர்களுடைய பணிவிலிருந்தும், வேலையில் அவர்கள்
காட்டும் ஆர்வத்திலிருந்தும் நாம் புரிந்துகொள்ளலாம்.
கதை
தமிழ்நாட்டிலிருந்து வந்த சாப்பாட்டுக்கடை சிப்பந்தி வேலு. ஐம்பது
வயதிருக்கும்.
ஒரு மாலை வேளையில், நான் அங்கு போயிருந்தபோது, அவர் முகம்
சிடுசிடுவென்று இருந்தது.
“ரொம்ப வேலையா?” என்று கேட்டேன், மெல்ல.
‘நம் நலனில்கூட
ஒருவர் அக்கறை காட்டுகிறாரே!’ என்ற நிறைவுடன், தன் கஷ்டங்களை
என்னிடம் பகிர்ந்துகொண்டார்.
காலை ஏழு மணியிலிருந்து இரவு ஒன்பதுவரை வேலை. அதன்பின், கணக்குவழக்கைப்
பார்க்கவேண்டும்.
சாப்பாடு இலவசம் என்றாலும், குடும்பத்தைவிட்டு, தனியாக
அயல்நாட்டில் உழைப்பது எளிதல்ல.
வந்துவிட்டாலோ,
புதிய வாழ்க்கைக்குத் தன்னைப் பழக்கிக்கொள்ள வேண்டியதுதான்.
எரிச்சலுடன்/ வெறுப்புடன் செயல்பட்டால், பணம்
கிடைத்தாலும், மகிழ்ச்சியும் நிம்மதியும் கிடைக்குமா?
:-நிர்மலா
ராகவன்/எழுத்தாளர், சமூக
ஆர்வலர். மலேசியா.
👉அடுத்த பகுதியை வாசிக்க அழுத்துக
Theebam.com: பழகத் தெரிய வேணும் – 11:
👉ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக
No comments:
Post a Comment