மொழியின் தோற்றம்: - பகுதி:04

மொழி எப்போது தொடங்கியது? எவ்வாறு உருவானது? ( Origin of Language: When Did It Start and How Did It Evolve?)


உலக மொழிகள் அனைத்தும் தோன்றிய நாள் முதல் இன்று வரை பல்வேறு மாற்றங்களைப் பெற்று வருகின்றன. இம்மாற்றம் மொழியில் -  பேச்சு நிலையிலும் நிகழ்கின்றது; எழுதும் நிலையிலும் நிகழ்கின்றது.

 

பேச்சு மொழியில் நிகழும் மாற்றத்தால் கிளைமொழிகள் (Dialects) உருவாகின்றன. எழுத்து மொழியில் நிகழும் மாற்றத்தால் அம்மொழியில் புதிய வரிவடிவங்கள் தோன்றுகின்றன. பேச்சு மொழி ஓடும் ஆறு போன்றது; எழுத்து மொழி அந்த ஆற்றில் மிதக்கும் பனிக்கட்டி போன்றது என்பர் அறிஞர். குளிர் மிகுதியால் பனி உறைந்து வேறுபட்டதைப் போல் கற்றவர்களின் முயற்சியால் மொழி இறுகி அமைந்ததே எழுத்து மொழி.

 

பொதுவாக, ஒருவருக்கு ஒருவர் நேர் நின்று கருத்தை வெளிப் படுத்தப் பயன் படுத்தும் ஒலி வடிவிலான குறியீட்டைப் - பேச்சு மொழி என்று குறிப்பிடு கின்றோம். இது, அதாவது பேச்சு, எல்லா கலாச்சாரங்களிலும் மொழிக்கான இயல்பு நிலையிலேயே இருந்து வந்துள்ளது [Speaking is the default modality for language in all cultures]. உதடு, நாக்கு மற்றும் குரல்வளைகளின் பிற கூறுகளை கட்டுப்படுத்தும் திறன்களைப் பொறுத்தே பேச்சு அமைகின்றன. நம்முடைய உடல் கூறுகள் இயல்பாகவே ஒலி ஒலிக்கும் திறன்களை கொண்டுள்ளது.

 

குழந்தை பிறந்து பத்து மாதங்களுக்குப் பிறகு தான் வாய் திறந்து குரல் மூலம் ஒலிகளை பேச்சாக (தாய்மொழியில்) உச்சரிக்கத் தொடங்குகிறது. ஆனால் குழந்தை தனது உடலை அசைக்கத் தொடங்கிய நொடி முதலே, உடலியல் ரீதியாக உணர்ச்சிகளை வெளிப்படுத்தத் தொடங்கி விடுகிறது. அவ்வாறு தான் மனிதன் தோன்றி ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு தான் பேச்சு மொழி பிறந்திருக்கும் என்பதில் ஐயம் இல்லை.

 

மொழி எந்த சான்றுகளையும் விட்டு செல்லாததால், எழுத்து மொழி 6000 ஆண்டுகளுக்கு பிற்பாடு தான் புழக்கத்தில் வந்ததாலும், உண்மையில் பேச்சு மொழி எப்பொழுது வந்தது என்று கூறுவது மிக கடினமாகும்.  எனவே மொழியின் தோற்றம் குறித்த முக்கியமான விவாதம், தேவையான உடற் கூற்றியல், நரம்பியல் வல்லமைகள் வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும் போதே படிப் படியாக மொழிப் பயன் பாடு ஏற்பட்டதா ["Continuity theories" build on the idea that language exhibits so much complexity that one cannot imagine it simply appearing from nothing in its final form; therefore it must have evolved from earlier pre - linguistic systems among humans' primate ancestors] அல்லது எல்லா வல்லமைமைகளையும் பெற்ற பின்னரே சடுதியாக மொழி தோற்றம் பெற்றதா ["Discontinuity theories" take the opposite approach - that language, as a unique trait which cannot be compared to anything found among non - humans, must have appeared fairly suddenly during the course of human evolution] அல்லது ஆண்டவர் மனிதனுக்கு கொடுத்த கொடையா [The language was created by God, gods or divine sages] என்பதாகும். இங்கு, இரண்டாவது கருதுகோளில், மொழியின் தோற்றம் என்பது, மனிதரின் படிமலர்ச்சியின் ஒரு காலகட்டத்தில், அவர்கள் மொழியைப் பயன்படுத்துவதற்கான வல்லமையைப் பெற்றதைக் குறிக்கிறது. இத் தலைப்பு, ஹோமோ சேப்பியன்கள், மொழியைப் பயன்படுத்தும் வல்லமையற்ற, மனிதரல்லாத மூதாதையிலிருந்து தோன்றினர் என்பதை உட்கிடக்கையாகக் கொண்டுள்ளது ஆகும்.  இந்த யோசனை, ''மனிதர்கள் மட்டுமே மொழியைப் பயன்படுத்தும் உயிரினமாக இருக்கிறார்கள். விலங்குகளிடம் இருந்து நம்மை தனித்துவமாக்கிக் காட்டுவதும் அதுதான்,'' என்ற அடிப்படையில்,  உரையாடுவதற்கான இந்தத் திறன் பரிணாம வளர்ச்சியில் முக்கியமான நிலை மாறுதலாக இருந்து இருக்கும் என்றும், வாழ்க்கை நிலையில் மாறுதலை ஏற்படுத்தியதில் மற்றவற்றைக் காட்டிலும், உண்மையான அம்சம் இதுவாகத் தான் இருந்து இருக்கும் என்றும், ஆகவே இதனை தொல்பொருள் ஆய்வுகள் மூலம் சரியாக கண்டறியலாம் என்ற நம்பிக்கையில் இவர்களின் ஆய்வு முன்னெடுக்கப் பட்டது.

 

மேலே கூறிய மூன்று கருதுகோளையும் கருத்தில் கொண்டால், முதலாவதான "தொடர்ச்சி கோட்பாடு", ஏற்புடையதாக தோன்றவில்லை, ஏன் என்றால், படிப்படியான மாற்றம் என்பதால், அது குரங்கில் இருந்தே [குறைந்தது சிம்பன்சி மற்றும் போனோபோ குரங்குகளில் இருந்தே] அல்லது அதற்கு முதலே ஆரம்பித்து இருக்க வேண்டும். ஆனால் மனிதனை தவிர எந்த விலங்கினமும் பேசியதாக சரித்திரமே இல்லை.  அதே போல மூன்றாவதான கடவுளின் கொடையும் ஏற்புடையதாக தோன்றவில்லை. எனவே "தொடர்ச்சியின்மை கோட்பாடு" ஒன்றையே நாம் ஏற்கக் கூடியதாக உள்ளது. ஏனென்றால்,  ஒரு திடீர் வினோதமான நிகழ்வாக,  மரபியலில் ஏற்பட்ட ஒரு  சடுதிமாற்றம்  அல்லது ஒரு பிறழ்வு நிகழ்வு, மொழி ஒன்றை பாவிக்கக் கூடிய திறனை மூளைக்கு கொடுத்ததாக கருதப் படுவதால் ஆகும். [Discontinuity theory argues for a sudden freak occurrence, such as a single mutation event that promptly equipped the human brain to operate language.]

 

மனிதன் உச்சரித்து பேசத் தொடங்குவதற்கு முன் அதிகமாக பறவைகளின் ஒலியையும், விலங்குகளின் சப்தத்தையும் கேட்டு அது போலவே திரும்ப ஒலி எழுப்பியும் அங்க அசைவுகளை காட்டியுமே தகவல்களைப் பரிமாறியிருப்பான்.  இந்தக் கால கட்டத்தில் தான் உடலியல் ரீதியாக மனிதனின் மூளையும் பெரிதாகியிருக்கிறது. பேச்சு வருவதற்கு முன், உடல் மொழியும், உடலின் அங்கங்களைக் கொண்டு உண்டாக்கும் சப்தங்களும் தான் மனித உணர்வுகளை வெளிப் படுத்த முக்கியமாக உதவியிருக்கிறது என்கிறார்கள் மானுட வியலாளர்கள். மொழி உணர்வுகளில் இருந்து தோற்றம் பெற்றதாக சிந்தனையாளர்கள் கருதுகின்றனர்.

 

ஏனைய உயிர்களிடம் இருந்து மேம்பட்டு தனித்துவமான உயிரினமாக மனிதர்களைக் காட்டுவது அவர்களது பகுத்தறிவும், சிந்திக்கும் ஆற்றலும் தான். மனித சிந்தனை வளர்ச்சியில் மிக முக்கியமான அம்சம் கருத்துப் பரிமாற்றம் ஆகும். ஆதி மனிதர்கள் தங்களுக்கிடையே தகவல்களை, தங்கள் எண்ணங்களைப் பரிமாறிக் கொள்ள ஓவியங்களையும் (paintings) , படங்களையும் (diagrams), குறியீடுகளையும் (symbols) பயன்படுத்தி வந்தனர். உலகின் பல்வேறு இடங்களில் நமக்கு காணக் கிடைக்கிற தொல் குகை ஓவியங்கள் (Ancient Cave Paintings) இதற்கு சான்றுகளாக உள்ளன. மேலே சொன்ன எல்லாவற்றையும் நாம் ஒரே பதத்தில் (terminology) சொல்வ தென்றால் வாய்மொழி அல்லாத தொடர்பு [Non-verbal Communication] என்று சொல்லலாம்.

 

தகவல் பரிமாற்றத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியாக மனிதர்கள் ஒலிகளை (sounds) பயன்படுத்தத் துவங்கினார்கள். இந்த கால கட்டத்தில் தான் பேச்சு மொழி (Spoken Language) உருவாகியது. வார்த்தைகளை (words) அடிப்படையாகக் கொண்ட பேச்சு மொழியை நாம் வாய்மொழி தொடர்பு [Verbal Communication] என்று அடையாளப் படுத்தலாம். பேச்சு மொழி, கருத்துப் பரிமாற்றத்தில், ஒரு மிகப் பெரிய மாற்றத்தை கொண்டு வந்தது. பேச்சு மொழிகள் புழக்கத்திற்கு வர ஆரம்பித்ததற்குப் பிறகு தான், கருத்துகள் பரவலாக பரிமாறிக் கொள்ளப் பட்டது.  மனிதர்கள் தங்களுக்குள் கருத்துகளையும், தங்களது எண்ணங்களையும் பகிர்ந்து கொள்வதற்கு, மொழி ஒரு மிகச் சிறந்த கருவியாக அன்று முதல் இன்று வரை இருந்து வருகிறது. மனித கண்டு பிடிப்புகளில் மகத்தானதும் மிகச் சிறந்ததும் நிச்சயமாக மொழி தான்.

 

பேச்சு மொழி மனிதர்களிடையே தகவல் தொடர்பு (Communication) பல மடங்கு மேம்பட உதவிய போதிலும், கருத்துப் பரிமாற்றத்தை எளிமையாக்கிய போதிலும் அதில் சில குறைகள் இருக்கவே செய்தன. மொழி என்பது மிகச் சிறந்த தகவல் தொடர்பு கருவி (communication tool) என முன்னரே பார்த்தோம். பேச்சு மொழியானது வாய்மொழியாக மட்டுமே பரவலாக்கப் படக் கூடிய ஒன்று. ஒரு மொழிக்குரிய பேச்சு மொழியானது மனிதர்களால் பேசப்படும் வரையில் மட்டுமே புழக்கத்தில் (usage) இருக்க முடியும். ஏதோ ஒரு மொழியைப் பேசக் கூடிய கடைசி மனிதர் இறக்கும் போது அவரோடு சேர்ந்தே அந்த மொழியும் இறந்து விடுகிறது. மனித வரலாற்றில் நாம் இப்படி எண்ணற்ற மொழிகளை இழந்திருக்கிறோம். எனவே, நம்மிடையே புழங்கும் மொழிகளைப் பாதுகாப்பது மிக மிக அவசியமானது.

 

மொழியானது பேச்சு வடிவில் (spoken form) மட்டுமே நின்று போகாமல் அதன் அடுத்த கட்டமாக எழுத்து மொழியாக (Written language) அது வளர்ச்சி அடைந்தது. ஒரு மொழியைப் பாதுகாக்க அது எழுத்து வடிவம் (written form) கொண்டதாக இருப்பது இன்றியமையாதது. ஏனெனில் பேச்சு வடிவில் இருக்கும் மொழியை விடவும், எழுத்துப்பூர்வமாக இருக்கும் மொழியை பாதுகாப்பது என்பது ஒப்பீட்டளவில் சுலபமானது. சொல்லப் போனால், ஒரு மொழியின் வரலாறு, அம்மொழியின் எழுத்துப்பூர்வமான பிரதிகளைக் கொண்டே மொழியியலாளர்களால் (Linguists / Linguistic experts) வரையறுக்கப்படுகிறது.

 

 

எனவே, மொழியியலாளர்கள் மற்றும் மானிடவியலாளர்கள் தமது சில ஊகங்கள் அடிப்படையிலும், சில அறிவியல் ரீதியான தொல்பொருள் சான்றுகள் அடிப்படையிலும் மற்றும் பண்டைய இலக்கியங்கள் புராணங்கள் மூலமாகவும்  'மொழி எப்போது தொடங்கியது? எவ்வாறு உருவானது?' போன்றவற்றிற்கு,  தங்களால் இயன்ற விடைகளை கூறுகிறார்கள் அல்லது சுட்டிக்காட்டுகிறார்கள். அவ்வற்றில்  முக்கியமான சிலவற்றை இனி ஒவ்வொன்றாக பார்ப்போம்.

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]/பகுதி: 05 வாசிக்க அழுத்துக👉 Theebam.com: மொழியின் தோற்றம்: - 05: 

ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக👉

Theebam.com: மொழியின் தோற்றம்: - 01

No comments:

Post a Comment