மொழியின் தோற்றம்: - 02


 மொழி எப்போது தொடங்கியது?

எவ்வாறு உருவானது?

(Origin of Language: When Did It Start and How Did It Evolve?)

 


பல மொழியியலாளர்கள், ஒரு கொள்கையின் அல்லது ஊகத்தின் அடிப்படையில், ஒரு 'புரோட்டோ - மொழி' இருந்து இருக்கும் என்று எடுத்த முடிவு, விவிலியத்தில் (திருவிவிலியம், Bible) கூறப் பட்டுள்ள பாபேல் கோபுரத்தின் கதைக்கு ["Babylonian confusion of languages"] ஒரு சான்று போலவும் அமைவது குறிப்பிடத் தக்கது. அதனால் அந்த ஊகம் மேலும் பிரசித்தி அடைந்தது எனலாம்.

 

விவிலியத்தின் படி, வெள்ளப் பெருக்கிற்குப் பின் உலகம் முழுவதிலும் ஒரே மொழியும் ஒரே விதமான சொற்களும் இருந்தன. மனிதர்கள் கிழக்கிலிருந்து வந்து, சினயார் [Shinar]  சமவெளியில் குடியேறினர். அப்பொழுது அவர்கள்,

வாருங்கள், உலகம் முழுவதும் நாம் சிதறுண்டு போகாத படி வானளாவிய கோபுரம் கொண்ட நகர் ஒன்றை நமக்காகக் கட்டி எழுப்பி [build a city and a tower tall enough to reach heaven], நமது பெயரை நிலை நாட்டுவோம்

என்றனர். மானிடர் கட்டிக் கொண்டிருந்த நகரையும் கோபுரத்தையும் காண்பதற்கு ஆண்டவர் கீழே இறங்கி வந்தார். அப்பொழுது ஆண்டவர்,

இதோ! மக்கள் ஒன்றாக இருக்கின்றனர். அவர்கள் எல்லோரும் ஒரே மொழி பேசுகின்றனர். எனவே அவர்களின் இந்த செயலை நிறுத்த [அல்ல விட்டால் அவர்கள் எல்லோரும் சொர்க்கம் வந்து விடுவார்கள்?]  நாம் கீழே போய் அங்கே ஒருவர் மற்றவரின் பேச்சைப் புரிந்து கொள்ள முடியாத படி, அவர்கள் மொழியில் குழப்பத்தை உண்டாக்குவோம்

என்றார். [ஒன்று பட்டால் உண்டு வாழ்வு, ஆண்டவனுக்கே பொறுக்கவில்லை ?, ஏன் ??, இதைத்தான் அரசும் சிறுபான்மை மக்களை ஆள கையாளும் தந்திரம் கூட இன்று, ஆண்டவன் போதித்த பாடம் அல்லவா ???]  அப்படியாயின் அவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள மாட்டார்கள். எனவே ஒன்றாக வேலை செய்ய முடியாது. அவர்கள் கட்டுவதைக் கைவிட்டு சிதறுண்டு போவார்கள் என்றார். ஆகவே அது பாபேல் [“தாறுமாறு” என்பது அதன் பொருள் / Babel] என்று வழங்கப் பட்டது. ஏனெனில் அங்கே ஆண்டவர் உலகெங்கும் வழங்கி வந்த மொழியில் குழப்பத்தை உண்டாக்கினார். அங்கிருந்து அவர்களை ஆண்டவர் உலகம் முழுவதிலும் சிதறுண்டு போகச் செய்தார். (Genesis 11:5–8  / தொடக்க நூல் 11:5-8).


இந்த கருதுகோளின் படி, மனித வரலாற்றின் ஆரம்பத்தில் [at the very dawn of human history], அங்கு ஒரு குறிப்பிட்ட மனிதர்கள், ஒரு வரையறுக்கப் பட்ட நிலப் பரப்பில் இருந்த பொழுது, அதிகமாக 150,000 ஆண்டுகளுக்கு முன்பு, மனிதர்களின் தகவல் தொடர்பு தேவைகளை பூர்த்தி செய்ய, கட்டாயம் மொழி ஒன்று தோன்றியது எனலாம். அப்பொழுது ஒரு மொழி மட்டுமே  அதிகமாக பேசி இருப்பார்கள். என்றாலும் கிழக்கு ஆப்பிரிக்கா, முழு ஐரோப்பாவை விட பெரிது என்பதால், அவர்கள் [வேட்டையாடுபவர்கள் மற்றும் சேகரிப்பவர்களின் சிறிய சமூகங்கள் / Small communities of hunters and gatherers] சிதறி ஒவ்வொரு திக்கிலும் ஆப்பிரிக்காவிற்கு உள்ளேயே பரவத் தொடங்கும் பொழுதே, மொழி கட்டாயம் சிதறி இருக்கும். அதில் ஐயம் இல்லை. ஏன் என்றால், பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக ஒரே மொழியை  வெவ் வேறு இடத்தில், வெவ் வேறு சூழலில், போக்கு வரத்துக்கள் அற்ற அந்த காலத்தில் வைத்திருக்க முடியாது என்பதால் ஆகும் [how could they preserve one language for tens of thousands of years?].


மொழியியலாளர் அலெக்சாண்டர் மிலிடரேவின் [Alexander Militarev, a Russian leading linguistic] கூற்றுப்படியும் உலகின் அனைத்து மொழிகளின் தோற்றம் ஒரே மொழியிலிருந்து ஆரம்பித்ததாகவும் [monogenesis theory of language], இப்போது இஸ்ரேலும் லெபனானும் இருக்கும் கிழக்கு மத்தியதரைக் கடலில் மனித குலத்தின் மூல மொழி சிதைந்து விட்டது எனவும் பாபேல் கோபுர [Tower of Babel] புராண கதையுடன் ஒத்து போகிறார். மேலும் இந்த கட்டத்தில், மரபியலின் படி, கிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்து சுமார் 40,000 - 50,000 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இடம் பெயர்வு பதிவு செய்யப் பட்டது குறிப்பிடத் தக்கது. ஆனால் அதே நேரத்தில், ஆப்பிரிக்க மேக்ரோ குடும்பங்கள் இன்று மேற்கு ஆசியாவிலிருந்து திரும்பிய மக்களின் இரண்டாம் நிலை விநியோகமாகும் [பரவலாகும்], இதனால் முன்னர் இருந்த மொழிகளை அது "அழித்துவிட்டது" [A. Militarev believes that the proto-language of mankind disintegrated in the Eastern Mediterranean, where Israel

and Lebanon are now. At this point, genetics recorded a migration from East Africa about 40-50,000 years ago. But at the same time, African macrofamilies today are a secondary distribution of peoples who returned from

Western Asia and, thus, "erased" the previously existing languages.] மேக்ரோ குடும்பங்கள் என்பது, சில அடிப்படை உறவுகளை பகிர்ந்து கொள்ளும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மொழிக் குடும்பங்களின் குழு ஆகும். மேலும் மனித குழுக்கள் எவ்வளவு அதிகமாக வேறு படுகிறதோ, அவ்வளவு மொழிகள் ஒருவருக் கொருவர் விலகிச் செல்கின்றன என்பது ஒரு தர்க்கரீதியான கருத்தும் ஆகும் [It is logical that the more human groups diverge, the more languages ​​move away from each other.]

 

ஆகவே, நாம் வாழும் இவ் உலகம் பல்வேறு பகுதிகளாய் பிரிந்து கிடக்கிறது. ஒவ்வொரு பகுதியிலும் பற் பல மொழிகள் பேசப் படுகின்றன. உலகில் ஒரு குறிப் பிட்ட பகுதியில் பேசப் படும் மொழிகள் ஒன்றோ டொன்று ஒற்றுமை உடையனவாய் இருத்தல் இயல்பு. ஒற்றுமையுடைய மொழிகள் ‘ஒரு குடும்ப மொழிகள்’ என மொழியியல் அறிஞர்களால் கூறப் படுகின்றன. இந்தோ - ஐரோப்பிய மொழிக் குடும்பம், சித்திய மொழிக் குடும்பம் [சிதியர் அல்லது சகர் / Scythian], திராவிட மொழிக் குடும்பம், சீனோ - திபேத்திய மொழிக் குடும்பம், ஆப்பிரிக்க மொழிக் குடும்பம், அமெரிக்க மொழிக் குடும்பம் முதலியனவாகப் பல்வேறு மொழிக் குடும்பங்கள் பேசப் படுகின்றன.

 

ஒரு மொழியும் அதிலிருந்து பிறந்த பல மொழிகளும், ஒரு மொழியும் அதிலிருந்து பிரிந்த பல மொழிகளும், ஒரு மொழி திரிந்து வேற்று மொழிகளின் கலப்பினால் உரு மாறிய பல மொழிகளும் - ஒவ்வொரு குடும்பம் எனக் கூறப் படும். ஒரு குடும்ப மொழிகள் நாளடைவில் தமக்குள் பல் வேறு வகையான மாறு பாடுகள் பெற்றிருப்பினும், அவற்றின் அடிச் சொற்கள் பெரும் பாலும் ஒத்திருக்கும். ஒரு குடும்ப மொழிகட்குள்ளே, மிக மிக நெருங்கிய மொழிகளின் அடிச் சொற்கள் கட்டாயம் ஒத்திருக்கும்; நெருக்கம் குறைந்த ஒரு குடும்ப மொழிகளில் பெரும்பாலான அடிச் சொற்கள் ஒத்தில்லா விடினும், அப்பா, அம்மா முதலிய முறைப் பெயர்களும், ஒன்று, இரண்டு முதலிய எண்ணுப் பெயர்களும் இன்ன பிறவுமாவது ஒத்திருக்கும். இவ்வாறான சில அல்லது பல ஒற்றுமைகளைக் கொண்டு ஒரு குடும்ப மொழிகளை அடையாளங் கண்டு கொள்ளலாம். இந்த அடிப் படையிலேயே, உலக மொழிகள் மேற் கூறிய பல் வேறு குடும்பங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளன.

 

அடிப்படை மொழி என்றும், முன்னை மொழி என்றும் தொன்மை மொழி என்றும் மூல மொழி வழங்கப் படுகிறது. தமிழ் ஒரு மூல மொழி. ஏனென்றால் தமிழின் சொற்களில் பெரும் பாலானவை வேர்ச் சொற்கள். இவற்றில் இருந்து தான் எண்ணற்ற சொற்கள் உருவாக்கப் படுகின்றன. திராவிட மொழிகளில் உள்ள சொற்களின் வேர்ச் சொற்களை ஆய்ந்து பார்த்தால் அவை தமிழ் வேர்ச் சொற்களாகவே உள்ளன. எனவே, ‘முன்னைத் திராவிடம்’, ‘மூலத் திராவிடம்’, ‘தொல் திராவிடம்’ என்றெல்லாம் கூறுவது தமிழுக்கு வெகுவாகப் பொருந்தும் என்பார் தேவநேயப் பாவாணர்.

 

திராவிடம் என்ற சொல்லை முதன் முதலில் குறிப்பிட்டவர், குமரிலப்பட்டர் ஆகும். இவர் (சமசுகிருதம்: कुमारिल भट्ट), கி. பி., ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த அசாம் பகுதியை சேர்ந்த, வேத தத்துவ தரிசனங்களில் ஒன்றான மீமாம்சை தர்சன அறிஞர் ஆவார் [Kumārila Bhaṭṭa (fl. roughly 700 AD) also used several Tamil words in his works, including one of the earliest mention of the name Dravida in North Indian sources, found in his Tantravārttika.] இவருக்கு பின்பு தான், 1856  இல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூலில் கால்டுவெல் திராவிடம் என்ற சொல்லை பாவித்தார் என்பது குறிப்பிடத் தக்கது. அப்படியே ஈராஸ் பாதிரியார் தான்  'ஸ்பெயினில் உள்ள திராவிடன்' (I am Dravidian from Spain) என்று அறிவித்தார். இவை எல்லாவற்றிற்கும் முதலே, கி மு இரண்டாம் நூற்றாண்டுக்கும் கி பி மூன்றாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட [variously dated to be from the 2nd century BCE to 3rd century CE] மனுஸ்மிருதி [மனுதரும சாத்திரம்] 10ஆம் அத்தியாயம் 44 செய்யுளில் திராவிடம் என்ற சொல் காணப்படுகிறது.  “பௌண்டாம், ஔண்டரம், திராவிடம், காம்போசம், யவநம், சகம், .....  இந்தத் தேசங்களை ஆண்டவர்களனைவரும் மேற்சொன்னபடி சூத்திரனாய் விட்டார்கள்" என்று அது பாடுகிறது.

 

மொழிகளில் கலப்பு ஏற்பட்டுப் பொதுவான ஒரு புது மொழிதோன்றுவ துண்டு. இந்தப் பொது மொழி என்பது, மொழியின் ஒற்றுமைக் கூறுகளைக் கொண்டு பொது வானதாக

அமைவது ஆகும். ஆப்பிரிக்காவில், பிரெஞ்சு மொழியும் ஆப்பிரிக்க மொழியும் கலந்த ‘பிட்கின் மொழிகள்’ (Pidgin / முன்னர் கெயிம் (Gaim) என்றறியப் பட்டது) பல பேசப் படுகின்றன. இவற்றைப் பொது மொழிக்குச் சான்றாகக் குறிப்பிடலாம்.

 

ஒரு கோட்பாடு என்னவென்றால், எல்லா மொழிகளுக்கும் மூல மொழி ஒன்று தான், என்றாலும் அவை நாளடைவில் மெல்ல மெல்ல பரிணாமம் அடைந்து, முற்றிலும் வேறு பட்ட மொழிகளை உருவாக்கியது. எப்படியாயினும் அனைத்து மொழிகளுக்கும் ஒரே வேரைக் கருத்தில் கொள்ளுவதற்கு இன்னும் பல சான்றுகளும் வேண்டும். உதாரணமாக, அல்கோன்குவியன் மொழியியலாளர்கள் [A linguist who specialises in studying Algonquian languages / Algonquianists] ஒன்று, விரல் என்ற சொற்கள், டிக் [tik] என்ற மூல வேரில் இருந்து பரிணாமம் அடைந்தது என்கின்றனர். இதற்கு ஆதாரம் என்னவென்றால், மக்கள் ஒன்றை விரல் மூலம் எண்ணுகிறார்கள் என்பதே! அடுத்த சான்றுகள் என்னவென்றால், மற்ற சில மொழிகளும் இன்னும் இதே போன்ற ஒத்த சொல்லை பயன்படுத்துகின்றன. உதாரணமாக, டிங்க [Dinka] என்ற சூடானிய மொழியில், ஒன்றுக்கு டொக் [tok] என்றும், அதே போல, துருக்கி மொழியில் மட்டுமே [only] என்ற சொல்லுக்கு டேக் [tek] எனவும் கூறுகிறார்கள். மட்டுமே [only] என்பது ஒன்று போல் என இலகுவாக கருதலாம் [that’s kind of like one]. மேலும் கால் விரலுக்கு [toe], பழைய ஆங்கிலத்தில் [Old English], தஹி [tahe] என்று கூறுகிறார்கள். கால் விரல் , கை விரலுக்கு ஒத்த ஒரு சொல் என்பது குறிப்பிடத் தக்கது. அதே போல ஜப்பான் மொழியில் கைக்கு ரெ [te] என கூறுகிறார்கள்.கையும் விரலுடன் தொடர்புடைய ஒன்றே. மேலும் எஸ்கிமோ மொழியில் [Eskimo language], ஆள்காட்டி விரலுக்கு [index finger]  டிக் [tik] என கூறுவார்கள். இப்படி ஏராளமான உதாரணங்கள் உண்டு. இவை எல்லாம் ஒரு கேள்வியை எழுப்புகிறது; இவைகள் அனைத்தும் ஒரே மூல மொழியில்  இருந்து தோன்றியவையா என்று ?

 

உலகின் முதலாவது மொழி, அதிகமாக எல்லா மொழிகளின் தாயாக இருக்கலாம் அல்லது ஒரு இறந்த மொழி [a dead language] இன்று புழக்கத்தில் இருக்கும் ஒரு சில மொழிகளை பிறப்பித்து இருக்கலாம். மொழி  150,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்றையும், எழுத்து  6000 ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்றையும் கொண்டு இருப்பதால், 6000 ஆண்டுகளுக்கு பின்பு தான் மொழியை பற்றி நாம் கூறக் கூடிய நிலையில் உள்ளோம். எழுத்து மொழியைப் போலன்றிப் பேச்சு மொழி அதன் இயல்புகள் குறித்தோ அல்லது அது இருந்ததைக் குறித்தோ எவ்விதமான நேரடி வரலாற்றுத் தடயங்களையும் விட்டுச் செல்லவில்லை. இதனால் மொழியின் தோற்றம் பற்றி அறிந்து கொள்வது கடினமாக இருப்பதால், இதற்காக அறிவியலாளர்கள் மறை முகமான முறைகளைப் பயன் படுத்த வேண்டியுள்ளது குறிப்பிடத் தக்கது.

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] / பகுதி: 03 வாசிக்க அழுத்துக👉 Theebam.com: மொழியின் தோற்றம்: - 03:

ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக👉Theebam.com: மொழியின் தோற்றம்: - 01

0 comments:

Post a Comment