மொழியின் தோற்றம்: - 01

மொழி எப்போது தொடங்கியது? எவ்வாறு உருவானது?

 (Origin of Language: When Did It Start and How Did It Evolve?)


 மொழி என்றால் என்ன என்று பரந்த முறையில் அணுகினால், மனிதன் முதலாகக் கொண்ட எல்லா உயிர் இனங்களும் - உதாரணமாக, விலங்குகள், பறவைகள்,  ஊர்வனங்கள், மீன்கள் உட்பட - தங்களது உணர்வுகளையும் கருத்துக்களையும் செய்திகளையும் பரிமாற்றும் எந்த முறையும் 'மொழி' என்ன கூறலாம். உதாரணமாக, மிருகங்களும் தமக்கிடையில் எதோ ஒரு வகையில், எதோ ஒரு சத்தம் மூலம் தொடர்புகளை நிகழ்த்துகின்றன. ஆனால் இவை சத்தங்களுடனும் முகம் மற்றும் உடல் பாவனையுனும் நின்று விடும். அது மட்டும் அல்ல, இவை சாதாரண அறிகுறிகள் மட்டுமே ! எனவே உண்மையில் இவையை மொழி என வகுக்க முடியாது.  ஏன் என்றால், இன்று நாம் மொழி என சொல்லுவது ஒலி வரி வடிவங்களின் ஒழுங்கு படுத்தப் பட்ட அமைப்பே ஆகும். அதற்கு என ஒரு கட்டமைப்பு, அதாவது இலக்கண ஒழுங்கு முறை உண்டு என்பது குறிப்பிடத் தக்கது.

 

இன்று வளர்ச்சி அடைந்த மொழியில், நாலு திறன்களான 'கேட்டல், பேசுதல், எழுதுதல், வாசித்தல்'  அடங்கி உள்ளன. மேலும் பேசும் பொழுது, வாயோடு சேர்ந்து சில உறுப்புகளையும் உபயோகிக்கிறோம். உதாரணமாக வாயை தவிர, தொண்டை, பல், உதடு போன்ற ஒலிகளை எழுப்பும் உறுப்புகளையும் பாவிக்கிறோம். பேச்சு மொழியில், ஒழுங்காக அடுக்கப் பட்ட ஒலிகள் கருத்து தரும் பொழுது சொல்லாகி விளங்க வழிவகுக்கிறது. பேச்சு மொழி, மொழியின் எல்லா செயற் பாடுகளையும் நிறைவு செய்ய முடியாததால், பிற்காலத்தில் எழுத்து மொழி உருவானது எனலாம்.

 

 

மொழியினை ஆக்கிய பெருமையும் அதை அபிவிருத்தி செய்த பெருமையும் மனிதனுக்கே உரியது. அது பற்றி பிறகு விபரமாக பார்ப்போம். அவன் ஒலிகளுக்கு வரிவடிவம் கொடுத்து, அதனை ஒழுங்காக அமைத்து, கருத்து விளங்க உருவாக்கி, வளர்ச்சி அளித்துள்ளான். மொழித்திறன் மனிதனுக்கு கிடைத்த பிறப்புரிமையாகும். அவனில் ஏற்பட ஒரு முக்கிய மரபணு மாற்றமே இதற்கு முக்கிய காரணமாகிறது. இதை பற்றியும் பின் பார்ப்போம். மனிதன் தான் பிறந்த சூழலை வென்று, நுண்மதியாலும், உச்சரிக்கும் உறுப்பு திறனாலும், மற்ற உயிர் இனங்களை விட, விரைவில் மொழி திறனை பெற்றான் எனலாம்.

 

 

மொழியின் சிறப்பு என்னவென்றால், மொழி மட்டுமே கருத்துக்களையும் மனப்பாங்குகளையும் தொடர்புபடுத்த / பரிமாற வல்ல சாதனங்களில் மிகவும் ஆற்றலும் பொதுமையும் வாய்ந்ததோர் ஊடகமாகும். உதாரணமாக, ஒரு பிள்ளை தனது தேவையை நிறைவு செய்ய

 

"அம்மா, எனக்கு பசிக்கிறது"

 

என பேசி தொடர்பு படுத்தலாம், அல்லா விட்டால், ஒரு சைகை அல்லது எதாவது குறியீடு மூலம் [உதாரணம் நிற மின்குமிழ் ஒளிகள்] நிறைவேற்றலாம்.  ஆனால் இவற்றில் எவையும் மொழியினை போல ஆற்றலோ, பரந்த அளவு திறனோ கொண்டவை அல்ல. அவை ஒரு எல்லைக்குள் ஒரு குறுகிய நோக்கத்துக்கு மட்டுமே பயன்படுவன.  எனவே சுருக்கமாக மிகவும் கூடிய வாய்ப்பு கொண்ட தொடர்புறுத்தும் ஊடகம் மொழியாகும்.

 

 

எனவே பொதுவாக வெற்றி நிறைந்த ஒரு சமூக வாழ்வுக்கு மொழி முக்கியமாகிறது. சமூகங்களுக்கிடையான உறவுப் பிணைப்புகளை வளர்க்க, மற்றும் பொருள் விளக்கம், பங்கு கொள்ளல், அறிவு வளர்ச்சி போன்றவை எல்லாம் மொழியிலேயே தங்கி உள்ளன. பொதுவான செயல் பாடுகளான, வினாவுதல், கலந்துரையாடல், உரையாற்றல், கருத்தை வெளிப்படுத்துதல், பிரச்சனைகளை பேசி தீர்த்தல், விவாதித்தால், போன்ற செயல் பாடுகளில் மொழி முதன்மையான இடத்தை இன்று வகுக்கிறது. இவை மட்டும் அல்ல, மொழி இன்றி நீங்கள் சிந்திக்கவும்  முடியாது.

 

 

மனித வாழ்வின் பாங்குகளின் கூட்டுத் திரட்சியே பண்பாடாகும். மரபுகள், உடைகள், மொழி என்பன இப் பண்பாட்டின் சில கூறுகள் ஆகும். பண்டைய மனித சமூகத்தின் பண்பாடு வளர்ச்சி அடைந்ததாய் அன்று இருக்கவில்லை. அதற்கு காரணம் வளர்ச்சி அடையாத மொழியே என வல்லுநர்கள் கூறுவர்.  சிறந்த இலக்கியத்தோடு இணையும் பொழுது தான் மொழி வளர்கிறது. வளர்ச்சி பெற்ற எந்த சமூகமும் இலக்கிய வளம் கொண்டதாகவே இருக்கும். உதாரணமாக, மெசொப்பொத்தேமியா, எகிப்து, கிரேக்கம், ரோம், சங்க தமிழகம் ஆகிய நாடுகளின் உன்னத பண்பாட்டிற்கு அந்தந்த நாடுகளில் வளர்ச்சி பெற்ற பேரிலக்கியங்களே காரணம் எனலாம். இவை மொழியானது பண்பாட்டின் கண்ணாடி என்பதை வெளிப் படுத்துகிறது.

 

மொழி எப்போது தொடங்கியது? எவ்வாறு உருவானது? என்பதை இனி பார்ப்போமாயின், நாம் முதலில் மனிதன் எப்போது பிறந்தான் , எவ்வாறு உருவாகினான் என்பதை சற்று அறிய வேண்டி இருக்கும். ஏன்  என்றால், விலங்குகளோ அல்லது பறவைகளோ தமது பசி கருதி அல்லது தமது எதாவது தேவை கருதி அல்லது சக இனத்தவர்களிடம் எதாவது செய்தி பரிமாற போடும் சத்தம் அல்லது உடல் சைகை, மொழி இல்லை என்பதை நாம் ஏற்கனவே சுட்டிக் காட்டி உள்ளோம். ஆகவே மொழி மனிதனின் பிறப்பிற்கு பிறகே தொடங்கி இருக்கும். அதாவது  ஹோமோ எரெக்டஸ் [இரக்டஸ் / Homoerectus],  நியாண்டர்தால் மனிதன் [Neanderthal], ஹோமோ சேப்பியன் [Homo sapiens] போன்ற மனிதர்கள் எப்ப பிறந்தார்கள் என்பது முக்கியமாகிறது.

 

13.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் அண்டம் தோன்றியதாகவும், 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமி  தோன்றியதாகவும், உடற் கூற்றியலின் படி தற் கால மனித இனம் (anatomically modern Homo sapiens) 200,000 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியதாகவும் அறிவியலாளர்கள் கருதுகின்றனர். சுமார் 100000 - 50000 ஆண்டுகளுக்கு முன்னர் கிழக்கு ஆபிரிக்காவில் இருந்து மனிதர் மத்திய ஆசியா ஊடாக ஐரோப்பா, ஆசியா, அமெரிக்கா ஆகிய இடங்களுக்குப் பரவினர். எனவே சுமார்  50,000 – 150,000  ஆண்டுகளுக்கு முன்பு, மனிதர்களின் தகவல் தொடர்பு

தேவைகளை பூர்த்தி செய்ய,  பேச்சு மொழி தோன்றி இருக்கலாம் எனக் கருதப் படுகிறது.

 

மொழியின் தொடக்கம் ஒரு தனி மூல மொழியாக [single proto-language / "புரோட்டோ - மொழி"] இருந்து, பின் அது மெல்ல மெல்ல மாற்ற மடைந்து [பரிணாமம் அடைந்து] உலகின் வெவ் வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப் பட்டு இருக்கலாம் என பொதுவாக நம்பப் படுகிறது. ஒரு சொல், அதன் மூல சொல்லில் இருந்து முற்றிலும் வேறு பட்ட ஒரு சொல்லாக பரிணாமம் அடைய முடியுமா என்ற கேள்வி இதன் மூலம் பலர் மனதில் எழலாம்?

 

நமது பரிணாம வளர்ச்சியின் உயிரியல், மரபியல் மாற்றத்தின் படி ஆப்பிரிக்காவில் மனிதன் சிறிய மக்கள் குழுவாக தோன்றி, பின் உலகின் எல்லா பகுதிகளுக்கும் பரவின. பல ஆய்வாளர்கள் புரோட்டோ பாலூட்டி [Proto  - Mammal] ஒன்று இருந்ததாகவும், அது பின் வெளவால்கள், பூனைகள் மற்றும் மனிதனாக உருமலர்ச்சி [பரிணாமம்  / evolution] அடைந்தன என்பதில் ஒத்த கருத்து உள்ளார்கள். எனினும் அவ் வாறான புரோட்டோ பாலூட்டி ஒன்றின் தொல்லுயிர் எச்சங்களோ [பதை படிவம் / பல நூற்றாண்டுகளாக பாறைகளில் வைக்கப்பட்டுள்ள பண்டைய உயிரினங்கள் அல்லது தாவரங்களின் எச்சங்கள்./ Fossil] அல்லது வெளவாலுக்கும் , பூனைக்கும் முதல் அவை முற்று முழுதாக தனி இனமாக [completely separate species] மாற முன்பு தோன்றிய உயிர் இனங்களின் தொல்லுயிர் எச்சங்களோ கண்டு பிடிக்க வில்லை. அப்படி என்றால், ஏன் மொழிக்கு மட்டும் புரோட்டோ மொழி காண வேண்டிய அவசியம் ? முதலாவது பாலூட்டி புனரமைக்க முடியும் [can be reconstructed] என்றால், என முதலாவது மொழியும் புனரமைக்க முடியாது என சில வல்லுநர்கள் கேள்வி எழுப்பு கிறார்கள்.  இது தர்க்க ரீதியாக இருந்தாலும், தற் செயலாக மொழி ஒன்று ஏற்பட்டிருக்கக் கூடிய பங்கு இங்கு புறக்கணிக்கப் படுகிறது போலவும் உள்ளது.

 

பல மொழிகளில் காணப் படும் ஒத்த சொற்கள் இந்த "புரோட்டோ-மொழி" என்ற கருதுகோளுக்கு ஆதரவாக கருதப் படுகிறது. தனித்துவமான மொழிகளில் [in distinct languages],

ஒரே மாதிரி ஒலிக்கும் ஏதாவது ஒரு சொல் இருந்தால், இந்த மொழிகள் எல்லாம் ஒரே மூல மொழியில் இருந்து வந்தவை என்பதைக் காட்டுமா என்று கட்டாயம் சொல்ல முடியாது. அது கடன் வாங்கிய சொல்லாகக் [loanword] கூட இருக்கலாம்? எனினும் ஏராளாமான சொற்கள் அப்படி இருந்தால், அவை ஒரே மூல மொழியில் இருந்து வருவதற்கு சந்தர்ப்பம் கூட எனலாம் ?

 

ஒரு உதாரணமாக, பாதை என்பதும் - path என்பதும் ஒரே அர்த்ததில் தமிழிலும் ஆங்கிலத்திலும் உபயோகப் படுத்தப்படும் ஒரு வார்த்தை ஆகும்.  பாதை என்றால் என்ன என்று முதலில் பார்ப்போம். - இது வழி (way / வழி) என்றும் அழைக்கப்படும். வழி எப்படி தோன்றும்?  மனிதர்கள் நடந்து, நடந்து (மனிதர்கள் மட்டுமல்ல - மிருகங்கள் நடந்தாலும்) பாதை தோன்றும். அதாவது பாதம் தேய - பாதை தோன்றும். பாதம் + தேய் = பாதேய் ....... .இன்று பாதை - யாக உள்ளது என நாம் வாதாடலாம்?  எனவே தமிழிலிருந்துதான் ஆங்கிலத்திற்கு பாதை - PATH சென்றிருக்கிறது என தற்காலிகமாக நாம் முடிவு எடுக்கலாம். ஏனென்றால் இரு மொழிகளிலும் ஒரே அர்த்தத்தில் தான் இந்த வார்த்தை இன்று வரை பயன்பாட்டில் உள்ளது என்பதால்?. ஆனால் இது சரியான முடிவாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதை மொழியியலாளர்கள் போதுமான தக்க சான்றுகளுடன் உறுதிப்படுத்தினால் மட்டுமே நாமும் அப்படி கருதலாம் என்பதே என் நிலைப்பாடு.

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்/ பகுதி: 02 வாசிக்க அழுத்துக Theebam.com: மொழியின் தோற்றம்: - 02:  

1 comments:

  1. செ.மனுவேந்தன்Friday, March 04, 2022

    மீண்டும் ஒரு தொடரில் ''மொழி' தொடர்பான கட்டுரை வரவேற்கத்தக்கது.மொழியின் ஆரம்பம்,பரவல், பரிணாமம், வளர்ச்சி,அழிவு வரையில் உங்கள் ஆய்வு சிறப்பிக்க வாழ்த்துக்கள்.படிப்போம் பயன் பெறுவோம்.

    ReplyDelete