அறிந்து கொள்ள வேண்டிய புதிய கண்டுபிடிப்புகள்

 அறிவியல் 


மின்சாரம் பாய்ந்தால் மாறும் கண்ணாடி!:

சீனாவிலுள்ள ஹேபெய் தொழில்நுட்பப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், ஒரு புதுமையான குவி ஆடியை வடிவமைத்துள்ளனர்.இது செல்பேசி, புகைப்படக் கருவி போன்றவற்றில் பயன்படுத்த ஏற்றது. வழக்கமான கண்ணாடி ஆடிகளைவிட, இலகுவான எடைகொண்டது. ஒரு ஆடிக்குள், டைபியூடைல் அடிபேட் எனப்படும் திரவத்தை நிரப்புவதன் வாயிலாக இந்த புதுமையான குவி ஆடி உருவாக்கப்பட்டுள்ளது.

 

இந்த திரவம் எதிர்மறை மின்னணு மூலக்கூறுகளைக் கொண்டது. இந்த மூலக்கூறுகள், நேர் மின்சாரம் பாய்ச்சினால் விரிவடையும் தன்மை கொண்டவை. எனவே, ஆடியின் குவியத்தை மாற்ற, லேசான மின்சாரம் பாய்ச்சினால் போதும்.

 

மின்சாரம் பாய்ச்சினால், இமைப்பொழுதில் குவியத்தை மாற்றும் கண்ணாடி பலவகைகளில் சிறந்ததாகவே இருக்கும் என புகைப்பட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

 

கிரானைட் குவாரியில் லித்தியம்:

பிரிட்டனைச் சேர்ந்த புத்திளம் நிறுவனமான பிரிட்டிஷ் லித்தியத்திற்கு ஜாக்பாட் அடித்திருக்கிறது. அதன் ஆராய்ச்சியாளர்கள், கார்ன்வால் பகுதியிலிருக்கும், கிரானைட் குவாரி ஒன்றில் ஒரு மாறுபட்ட ஆய்வை மேற்கொண்டனர். ஐந்து ஆண்டுகள் ஆய்வு நடத்திய பிறகு, கிரானைடிலிருந்து, லித்தியம் எனப்படும் உலோகத்தை பிரித்தெடுக்கும் வித்தையை அவர்கள் கண்டறிந்துள்ளனர்.

 

பூமியிலிருந்து வெட்டியெடுக்கப்படும் கிரானைட் பாறைகளில் ரேகை, ரேகையாக பல தாதுக்கள் இருப்பதுண்டு. அதில் மைக்காவும் ஒன்று. கிரேனைட் பாறைகளை துாளாக்கி, துாய்மைப்படுத்தி மைக்காவைப் பிரித்து, அயனிப் பரிமாற்றத்திற்குள்ளாக்கி, இறுதியில் லித்தியம் கார்பனேட்டை தனியே எடுக்கும் முறையை ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர். கிரானைட் குவாரியிலேயே நிகழ்த்தும் இந்த ரசவாதத்திற்கு மூன்று தனித்தனி காப்புரிமைகளை பெற பிரிட்டிஷ் லித்தியம் விண்ணப்பித்துள்ளது. இந்த முறை வாயிலாக, தினமும் தற்போது 5 கிலோ லித்தியத்தை அவர்களால் பிரித்தெடுக்க முடிகிறது. இன்னும் வேகப்படுத்தினால், ஆண்டுக்கு 21 ஆயிரம் டன்கள் லித்தியம் உற்பத்தி செய்ய அவர்களால் முடியும்.

 

இன்று தங்கத்தைவிட மிகவும் வேண்டப்படும் உலோகமாக லித்தியம் மாறியிருக்கிறது. காரணம், விரைவில் உலகெங்கும் சாலைகளை ஆக்கிரமிக்கவிருக்கும் மின்சார வாகனங்களுக்கு, அடிப்படையான லித்தியம் அயனி மின்கலன்களில் லித்தியம் பயன்படுகிறது. சிலி, ஆஸ்திரேலியா, சீனா, அர்ஜென்டினா, போன்ற சில நாடுகளில்தான் லித்தியம் சுரங்கங்கள் உள்ளன. ஆனால், இந்தியா உட்பட பல நாடுகளில் கிரானைட் சுரங்கங்கள் உள்ளன. எனவே, அவை இந்த புதிய தொழில்நுட்பம் வாயிலாக லித்தியம் தயாரிக்கும் நாடுளாக மாற முடியும்.

 

போதையோடு புற்றுநோயையும் தூண்டும் மது!:

மது அருந்துவது, புற்று நோயைத் துாண்டக்கூடும் என்று ஒரு மரபணு ஆய்வில் தெரிய வந்துள்ளது. குறிப்பாக உணவுக்குழாய் புற்று நோய், கழுத்து மற்றும் தலை புற்றுநோய்கள் வருவதற்கும் மது அருந்தும் பழக்கத்திற்கும் நேரடி தொடர்பு இருப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

 

சீனாவில், 1.5 லட்சம் பேரிடம், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள், 'இன்டர்நேஷனல் ஜர்னல் ஆப் கேன்சர்' இதழில் வெளியாகிஉள்ளது. மதுப் பழக்கம் இல்லாதவர்களின் மரபணுவில் அதைக் குறிக்கும் சில தன்மைகள் இருப்பதுண்டு. இதையும், பல ஆண்டுகளாக மது அருந்துவோரின் மரபணுக்களில் தோன்றும் அறிகுறிகளையும் ஒப்பிட்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

 

எனவே, மது அருந்துவதாலேயே புற்றுநோய் துாண்டப்பட்டது என்பதை அறிவியல் பூர்வமாக மருத்துவர்களால் சொல்ல முடிந்திருக்கிறது. எனினும், முழுதும் கிழக்காசிய மரபணுவினருக்கு, மதுவால் புற்றுநோய் உருவாகக்கூடும் என்பதை இந்த ஆய்வு தெரிவிப்பதாக மேற்குலக மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எல்லாருக்கும் இது பொருந்துமா என்பதை, மற்ற நாடுகளிலும் சோதித்துப் பார்த்தால்தான் உறுதிப்படுத்த முடியும்.

 

பழைய பாணியில் தயாராகும் ஓமைக்ரான் தடுப்பூசி!:

பிரான்சைச் சேர்ந்த வால்னேவாவின் ஆராய்ச்சியாளர்கள், ஒரு புதிய முழு வைரஸ் கோவிட் தடுப்பூசியை பரிசோதித்து வருகின்றனர். ஐரோப்பாவில் சில நாடுகளில் நடக்கும் இதன் சோதனைகள், மூன்றாவது கட்டத்தை எட்டியுள்ளன. வால்னேவா வெளியிட்டுள்ள தகவல்படி, இந்தத் தடுப்பூசி, ஒமைக்ரான் வகை வைரஸ்களை வெற்றிகரமாக செயலிழக்கச் செய்யும் திறன் கொண்டவை.

 

இந்தத் தடுப்பூசி, முழுமையாக செயலிழக்கச் செய்த கோவிட்-19 வைரஸ்களைக் கொண்டது. இன்று போடப்படும் கோவிட் தடுப்பூசிகளில், சார்ஸ்-கோவ்- - 2 வைரசின் முள் நீட்சி போல உள்ள புரதங்களே உள்ளன.

 

ஆனால், வால்னேவாவின் தடுப்பூசிகள், வெப்பம் அல்லது வேதிப் பொருள் வாயிலாக கொல்லப்பட்ட முழு கொரோனா வைரஸ்களை கொண்டவை. இதே முறையில்தான், ஜோனாஸ் சால்க் போலியோ தடுப்பூசியை உருவாக்கினார். இந்த பழைய முறையில் தான் பல இன்புளூசென்சா தடுப்பூசிகள் தயாரிக்கப்படுகின்றன.

 

எனவே, வால்னேவாவின் சோதனைகள் வெற்றிகரமாக நிறைவடைந்தால், ஒரு நம்பகமான ஒமைக்ரான் தடுப்பூசி கிடைக்கும் என வல்லுநர்கள் கருதுகின்றனர்.

படித்ததில் பிடித்தது

0 comments:

Post a Comment