பிரபாகரன், சமூகவியல்
துறையில் பட்டம் பெற்று, தன் தந்தை போலவே சமூகப் பணிசார்ந்த துறையில் எங்காவது வேலை
கிடைக்குமா என்று தேடி போகாத இடம் இல்லை. தந்தையின் ஒற்றை வருமானத்தில் படிப்பை
முடித்த கையோடு, தந்தை சிறு
நீரகம் அடைத்து மாற்ற வழியின்று மறைய, தொடர்ந்து விபத்தொன்றில் கண்பார்வை இழந்த
தாயாரும் ஈரல், மற்றும் கணைய
கோளாறுகள் காரணமாக இறந்துவிட்டார்.
இப்பொழுது பிரபாகரன் சொந்த, பந்தம் அற்ற தனி மரம். வயசு 30 ஐத் தாண்டியும், தொழிலோ, வருமானமோ ஒன்றும்
இன்றி இருப்பதால் திருமணம், குழந்தை என்று ஒன்றிலும் எந்தவொரு எதிர்பார்ப்பும்
இல்லாது இருக்கிறான். அவனுக்கு பெரும் பொருள் ஈட்டவேண்டும் வேண்டும் என்றோ, வசதியுடன்
வாழவேண்டும் என்றோ அக்கறை இல்லை. அவனின் ஒரே குறி, ஒரு வேலை, சிறிய வருமானம், அன்றாடம்
சாப்பிடுவதற்கு இருந்தால் போதும், ஆனால் சமூக சேவை கொண்டதாக இருக்கவேண்டும்
என்பதே.
வேலை தேடிய அசதியில், அந்த பெரியாஸ்பத்திரியின் முன்னே அமைக்கப்பட்டிருக்கும்
விநாயகர் ஆலயத்தின் அருகே உள்ள திண்ணையில் அமர்ந்திருந்தபடி அன்றைய தினப்
பத்திரிகையின் தலைப்புச் செய்தியை படிக்கலானான்:
"மரணப் படுக்கையில் இருக்கும் பெரும் செல்வந்தர்
ஒருவர் தான் இறந்து உடலைப் புதைக்கும்போது, தன்னுடன் சேர்த்து தன் புதை குழியில் தனது பல கோடி ரூபா மதிப்புள்ள ஆடம்பர
சொகுசு மோட்டார் வண்டியையும் சேர்த்துப் புதைக்குமாறு செய்தி
வெளியிட்டுள்ளார்"
"இச்செய்தியைக் கேட்ட பொதுமக்கள் கொதித்து எழுந்துள்ளனர். 'எவ்வளவு பணச் செருக்கு; எவ்வளவு திமிர், கஞ்சன் ' என்று வசை பாடித் தீர்த்துள்ளனர்."
பத்திரிகையில் மூழ்கி இருந்த பிரபாகரனை, ஒன்றன்பின் ஒன்றாக வந்து பிள்ளையாரைப்
பிரார்த்தனை செய்து கொண்டிருக்கும் பக்தர்களின் புலம்பல்கள் திசை திருப்பியது.
"ஐயனே பிள்ளையார் அப்பா, என்னுடைய பிள்ளையின் கண்களைத் திரும்பக் கிடைக்கச் செய். உனக்கு 1000 மோதகம் செய்து படைக்கிறேன்"
இன்னொருவர்,
‘’பிள்ளையாரே, என் தந்தையின் இதயத்தைச் சரிசெய்து தா, உனக்கு நான் 108 தேங்காய் உடைக்கிறேன்"
மற்றொருவர்,
‘’விநாயகா, என் கணவனின் இரண்டு சிறு நீரகங்களும் பழுதடைந்து, வேறு மாற்றவேண்டும் என்று கூறுகிறார்கள். நீதான் எனக்கு ஒரு வழி காட்டவேண்டும்"
🏥🏥🏥🏥
மறு நாள்,
அதே பிள்ளையார் திண்ணையில் சடலமாய்க் கிடந்த பிரபாகரனைச் சுற்றி ஒரே பொலிஸ்
கூட்டம்.
அத்துடன் அன்றைய பத்திரிகையும், ஒரு கடிதமும் அவன் உடல்மீது இருந்தது.
பத்திரிகையில் தொடர்ந்து வந்த அந்த செல்வந்தரின் செய்தி பேனாவினால்
வட்டமிடப்பட்டிருந்தது. செய்தியில்,
"நம்மில் பெரும்பாலானவர்கள், இறந்தவுடன் உடலில், விலையே மதிக்கமுடியாத எத்தனையோ உறுப்புகளை, மரணப் படுக்கையில் உறுப்பு தானங்களை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும்
நோயாளிகளுக்கு உயிர் காக்கும் தானம் செய்ய மனம் இன்றி, அநியாயமாக மண்ணில் போட்டுப் புதைத்து அழுகி அழியச்செய்தும், எரித்துச் சாம்பராக்கி கங்கையில்
கரைத்து வளத்தினை மாசுபடுத்தியும் யாருக்கும் பயனற்று மாள்கிறோம். அதிலும் பார்க்க இந்த மோட்டார் வண்டி என்ன
பெரிய பெறுமதியா?" என்ற விழிப்புணர்வை வரப்பண்ணுவதற்காகவே அப்படி
தான் அறிவித்ததாக, செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
அக்கடிதம் பிரபாகரனாலேயே எழுதப்பட்டிருந்தது. கடிதத்தில்,
பொலிஸ்
அன்பர்களுக்கு: தயவுசெய்து போஸ்ட்மோர்டம், விசாரணை என்று வீணாக நேரம் விரயம் செய்யாது, என் உடலை உடனடியாக இந்த ஆஸ்பத்திரியில் ஒப்படைக்கவும். அங்கு உள்ள எத்தனையோ
நோயாளிகளுக்கு என் உடம்பில் இருக்கும் எல்லா உறுப்புகளையும் எடுத்து, மாற்று உறுப்பு சத்திர சிகிச்சை செய்து அவர்கள் எல்லோரையும் சுகப்படுத்தி
வீட்டுக்கு அனுப்பி வைக்குமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்"
"பி.கு.: எனது சாவு மூச்சடக்கி துறந்த இயற்கைக்
சாவு; எந்த நச்சுப் பொருட்களையும் உட்கொள்ளவில்லை
என்பதனை உறுதிப்படுத்துகிறேன்.
இப்படிக்கு
பிரபாகரன்
வாழ்வில் சமூக சேவை எனும் கனவு கண்ட
பிரபாகரனின் எண்ணம் உயிர்நீத்து ஈடேற, அவனது வெற்றுடல் தீயில் சங்கமமானது.
--சந்திரகாசன்
செல்வதுரை [ tamil short story]
No comments:
Post a Comment