பழகத் தெரிய வேணும் –07

 


இன்று இப்படி. அன்றோ!

இந்தியா சுதந்திரம் வாங்கியபோது என் சுதந்திரம் பறிபோயிற்று. என்னை ஆரம்பப்பள்ளியில் சேர்த்துவிட்டார்கள்.

 

மதராஸ், டி.நகரில் இருந்த ராமகிருஷ்ணா மிஷன் பள்ளி அது. தரையில் போட்டிருந்த மரப்பலகைமேல் சப்பணம் கட்டி உட்காருவோம். எதிரில் மேசையெல்லாம் கிடையாது. மடியில் சிலேட்டு இருக்கும். பலப்பம்தான் எழுதுகோல். ஆசிரியர் பார்க்காத சமயங்களில் திருட்டுத்தனமாக எச்சிலைத் தொட்டு அழிப்பதில் ஓர் ஆனந்தம்.

 

கணக்கு என்றால் மனக்கணக்குதான். வகுப்பில் எல்லாரையும் நிற்கவைத்து, ‘பதில் சொல்கிறவர்கள் மட்டும் உட்காரலாம்’ என்றதால், பல கைகள் ஒரே சமயத்தில் உயரும்.

 

ஐயோ, பையன்!

ஆறே வயதானாலும், பள்ளியில் ஆண்களும் பெண்களும் பேசிக்கொள்ளக்கூடாது என்ற கடுமையான உத்தரவு இருந்தது. அதனால் பயந்து, அதே பள்ளியில் படித்த அண்ணன்-தங்கையர்கூட ஒருவரையொருவர் அறியாததுபோல் நடப்பர்.

 

பையன் யாராவது அருகே வந்தால், பெண்கள் என்னமோ, பிசாசைக் கண்டு பயந்து ஓடுவதைப்போல் நடப்போம், ‘பாய்’ (BOY) என்று கூவியபடி. நான் கற்ற முதல் ஆங்கில வார்த்தை அதுதான் என்று நினைக்கிறேன். (பெண்களைப் பார்த்து ஆண்கள் ஓடவில்லையே, ஏன்?)

 

சிறு வயதிலிருந்தே இப்படிப் பிரித்து வைத்துவிட்டால், திருமணமானபின்னரும்கூட ஒரு பெண் கணவருடன் இயல்பாகப் பழக இயலாதுபோக நேரிடுகிறது.

 

சாயந்திர வேளைகளில் என் அண்ணனுடன் விளையாட எங்கள் வீட்டுக்கு வரும் பிற பையன்கள் தோட்டத்தில் ஓடிப் பிடித்து விளையாடும்போது, என்னை வருந்தி அழைப்பார்கள். அவர்களைவிட உருவத்தில் மிகச் சிறியவளாக இருந்த என்னை எளிதாகத் தோற்கடிக்கலாம் என்கின்ற அவர்களது திட்டம் புரியாது, நானும் மகிழ்ச்சியுடன் சேர்ந்துகொள்வேன்.

 

முதன்முறையாக வருபவனைப் பார்த்து, “உன் பேர் என்ன?” என்று மிரட்டலாகக் கேட்பேன். மரியாதையுடன் கைகளைக் கட்டிக்கொண்டு, ஆங்கிலத்தில் தந்தை பெயரின் முதல் எழுத்துடன் முழுப்பெயரையும் சொல்வான்.

 

மறுநாள் பள்ளியில் பார்க்க நேர்ந்தால், முன்பின் அறியாதவர்கள்போல் கடந்துவிடுவோம். மாலையில், மீண்டும் நண்பர்கள், சண்டை, அழுகை, அம்மாவிடம் முறையீடு. (`அழுகுண்ணி ஆட்டம் ஆடறான்!)

 

ஒரு முறை, மழையில் வெகுவாக நனைந்துவிட்ட பெண்ணின் சட்டையைக் கழற்றி விட்டாள் ஆசிரியை, காய்ச்சல் வந்துவிடப்போகிறதே என்ற கரிசனத்துடன். ஆண்கள் எதிரில் வெற்று மார்புடன் உட்கார நேர்ந்த அவமானம் தாங்காது, சிறுமி அன்று முழுவதும் கதறி அழுதாள்.

 

நான்காவது வகுப்பில் மேசை, நாற்காலி!

அது மட்டுமா?

எழுதுவதற்குப் பேனா! மிகப் பெருமையாக இருந்தது. இனி, எச்சிலைத் தொட்டு அழித்துவிட்டதைப் பார்த்துவிட்டு, ஆசிரியர் திட்டமாட்டார்.

 

பேனா என்றால், மரத்தாலான நீண்ட பிடியில் கூரான முனையுடன்கூடிய ஒரு உலோகம், மைக்கூடு. அவ்வளவுதான். அவ்வப்போது மைக்கூட்டில் பேனாவின் நுனியை விட்டு எழுத வேண்டும். காகிதத்தில் மை புள்ளியாக புள்ளியாக விழுந்து தொலைக்கும். எப்படிச் சரியாக எழுதுவது என்று பிடிபடுவதற்குள் இடைநிலைப்பள்ளியை அடைந்தேன்.

 

எட்டு வயதில் ஒரு கட்டுரைப்போட்டியில் முதல் பரிசு வாங்கினாலும் வாங்கினேன், `வருங்காலத்தில் எழுத்தாளராக வேண்டும், அப்போது என் பெயர் எல்லாருடைய கண்ணிலும் படுமே!’ என்ற அடக்கமுடியாத ஆசை எழுந்தது. (அடுத்த பத்தாண்டுகள், `உபயோகமா ஏதாவது பண்ணேன்!’ என்று அம்மா கெஞ்சியதைப் பொருட்படுத்தாது, கிறுக்கித் தள்ளினேன். யோசிக்கும்போது நன்றாக இருப்பதைப்போல் தோன்றும். எழுதியபின் எனக்கே சகிக்காது).

 

அடுத்து, பெங்களூர் கமலாபாய் பள்ளியில் ஆறாம் வகுப்பு. அங்கு மையை உள்ளே அடைத்திருக்கும் பேனாவை உபயோகிக்கவேண்டும். சற்று நிம்மதி. ஒவ்வொரு நாளும் வீட்டிலிருந்து பள்ளிவரை மைக்கூட்டை பத்திரமாக எடுத்துக்கொண்டு போக வேண்டியதில்லை.

 

ஒன்றன்பின் ஒன்றாக, உயர்ந்த ரகப் பேனாக்களாக அம்மா வாங்கித் தருவார்கள், மகள் ஆசையாக எழுதுகிறாளே என்று.

 

பன்மை ஏன்?’ என்று கேட்கிறீர்களா?

 

எனக்கிருந்த படபடப்பில், அடிக்கடி பேனா கீழே விழுந்து, கூர்முனை வளைந்து போய்விடும். அம்மாவிடம் கூறப் பயந்து, அதையே வைத்துக்கொண்டு எப்படியோ சமாளிப்பேன்.

 

ஒழுங்கீனம் பிடிச்ச பிள்ளை’ என்று ஆசிரியைகள் ஒருமொத்தமாகத் திட்டுவார்கள். (பல வருடங்கள் கழித்து, ‘நீ முன்னுக்கு வருவேன்னு அப்பவே தெரியும்,’ என்று கட்டி அணைத்தார்கள். திட்டி முன்னுக்குக் கொண்டுவர முயலும் கலாசாரம்!)

 

கையெழுத்து மோசம்!’ என்ற ஆசிரியரின் குறிப்பைப் பார்த்துவிட்டு, புதிய பேனா வாங்கித் தருவார்கள். (அதனால் கையெழுத்து அப்படியொன்றும் சிறந்துவிடவில்லை).

 

என் எண்ண ஓட்டத்திற்கு சிறு கையால் ஈடுகொடுக்க முடியவில்லை. அடித்து, அடித்து எழுதுவேன். பேனா என்ன பண்ணும், பாவம்!

 

புகுமுக வகுப்பில் புகுந்தேன், பெங்களூர் மவுண்ட் கார்மல் பெண்கள் கல்லூரியில்.

 

தமிழாசிரியை, “உங்கள் வகுப்பில் எல்லாருடைய கையெழுத்தும் மகா மோசம். இரட்டைக் கோடுகள் போட்டிருக்கும் காகிதத்தில் தினமும் ஒரு பக்கம் எழுதிக் கொண்டுவாருங்கள்,” என்று கட்டளையிட்டார்.

 

அவமானம்!’ என்று பல பெண்கள் அழுதனர். இரு மாணவிகள் மட்டும் தப்பித்தனர். அதில் நானும் ஒருத்தி.

 

முதலில் தமிழில் அழக்கற்று எழுதிப் பழகியதால், ஆங்கில எழுத்து அழகாக இல்லை என்று, பிற வகுப்புகளில் நிறைய திட்டு வாங்கினேன்.

 

கையெழுத்தைக் குறைகூறினார்களே! அதை எப்படி நல்லவிதமாக மாற்றிக்கொள்வது என்று சொல்லத் தெரியவேண்டாம்?

 

ஒரு பக்கமாவது அடித்துத் திருத்தாமல் எழுத வேண்டும்’ என்று உறுதி செய்துகொண்டபின், ஒழுங்காக எழுத முடிந்தது.

 

மலேசியாவில் சிறுகதைகள் எழுத ஆரம்பித்தபோது, தங்கத்தினால் ஆன பேனா முனையைப் பயன்படுத்தினேன். காகிதத்தில் வழுக்கிக்கொண்டு போகும். ஆனால், அடிக்கடி மொக்கையாகிவிடும்.

 

கையெழுத்து மோசமாக இருந்தால், படைப்பும் அப்படித்தானே இருக்கும்!’ என்று பத்திரிகை ஆசிரியர் நிராகரித்துவிட்டால்? பேனாவின் நுனியை அவ்வப்போது மாற்ற வேண்டியிருந்தது.

 

மாற்றும்போது, ‘இது வேண்டுமா?’ என்று கடைக்காரர் வளைந்த நுனியைக் காட்டி விசாரிப்பார்.

 

என்ன விலை இருக்கும்?’ என்று கேட்டுவிட்டு, அலட்சியமாக மறுத்துவிடுவேன்.

 

என் எதிரிலேயே, பதினெட்டு காரட் தங்கத்தால் செய்யப்பட்ட முனையை குப்பைத்தொட்டியில் வீசிவிடுவார்.

 

மலேசியாவில் தங்கம் மிகுதியாகக் கிடைத்ததால், 1960, 1970-களில் அதற்கு மதிப்பு கிடையாது. அதன் விலை இப்படி ஏறும் என்று அன்று தெரியாமல் போய்விட்டதே!

 

பல வருடங்களுக்குப்பின் கணினி. (முதலிலேயே கண்டுபிடித்திருக்கக் கூடாதோ? நான் எத்தனையோ வசவுகளிலிருந்து தப்பித்திருக்கலாம்).

 

ஆரம்பத்தில், கணினி கற்பது கடினமாக இருந்தாலும், அடித்துத் திருத்தும் வேலையெல்லாம் இல்லாமல் இருப்பது பெரிய சௌகரியம். எங்கேயோ, மூன்றாம் பக்கத்தில் இருப்பதை முதலில் கொண்டு வந்து, எப்படி எப்படியோ புரட்டிப்போட்டு, கதையையோ, கட்டுரையையோ எனது திருப்திக்கேற்ப மாற்ற முடிகிறது.

 

இப்போதும், அவ்வப்போது பேனா பிடிக்கிறேன், கடைகண்ணியில் வாங்கவேண்டிய சாமான்களுக்கான பட்டியல் போடும்போது.

 

காசோலையில் கையெழுத்திடும்போது, `கிறுக்கலான என் கையெழுத்தை யாரால் காப்பி அடித்துவிட முடியும்!’ என்ற பெருமிதம் எழுகிறது.

 

காசு கொடுக்கமாட்டோம், கையெழுத்து நன்றாக இல்லை,’ என்று சொல்லிவிடுவார்களோ?

 

நிர்மலா ராகவன்/ எழுத்தாளர், சமூக ஆர்வலர். மலேசியா.

தொடரும்.... 
👉அடுத்த பகுதியை வாசிக்க அழுத்துக 
👉ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக 

1 comments:

  1. How do you make money from betting? - Work Mamake Money
    The easiest way to get 더킹카지노 슬롯 started หารายได้เสริม with money from betting is 메리트 카지노 to learn to do it responsibly. 우리 카지노 Learn to 온카지노 검증 be a better gambler.

    ReplyDelete