"தமிழர்களின் பண்டைய நான்கு கற்கள்" / பகுதி 06



கல் உரல் / செக்கு கல்:

செக்கு [oil-press] என்பது எண்ணெய் வித்துக்களில் இருந்து எண்ணெய் எடுக்கும் ஒரு கருவி ஆகும். இதனை பெரும்பாலும் இன்றும் கிராமங்களில் சமையல் எண்ணெய் எடுக்க பயன்படுத்துகின்றனர். செக்கானது மரத்தாலோ கல்லாலோ செய்யப்பட்டிருக்கும். மாடு முதலான விலங்குகள் செக்கை இயக்க  பயன்படுத்தப் பட்டது.  எனவே, இதை, ​பெரிய உரல் போன்ற அமைப்பின் நடுவில் பொருத்தப்பட்டுள்ள உலக்கை போன்ற தடியை மாடுகளைக் கொண்டு வட்டமாகச் சுழலச் செய்வதன் மூலம் வித்துகளை அரைத்து எண்ணெய் எடுக்கப் பயன்படும் ஒரு வகைச் சாதனம் என்று நாம் கூறலாம்.

 

என்றாலும் செக்கு என்ற சாதனம் வர முன்பு, எண்ணெய் அல்லது சாரு புழிந்து எடுப்பதற்கு, ஒரு அரைத்தால் / இடித்தல் / நசுக்குதல் போன்ற உபகரணம் மூலம், உதாரணமாக, அரவை கல், கல் உரல் போன்ற ஒன்றால், விளைபொருட்களை நறுக்க அல்லது உடைக்க  வேண்டும். அதன் பின் அதை ஒரு வடிகட்டும் பொதியில் [filter bag] மூடி கட்ட வேண்டும். அதன் பின் ஆயிரக்கணக்கான இராத்தல் எடை சக்தியைப் பயன்படுத்தி மெதுவாக அழுத்த வேண்டும். இத்தகைய  முறை கி மு ஏறத்தாழ  6000 ஆண்டுகளுக்கு முன், இஸ்ரேலில் பெரிய பாரமான கல்லை பாவித்து ஒலிவ் சாரும் [olive juice], ஒலிவ் எண்ணெய்யும்  (இடலை எண்ணெய் / Olive oil) எடுக்க பாவித்தது இன்று தொல் பொருள் ஆய்வு மூலம் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இதன் அமைப்பும் செயல் பாடும் இரண்டாம் வகை நெம்புகோல் ஆகும்

 

இரண்டாம் வகை நெம்பு கோலில், சுழலிடம் ஒரு முனையிலும், முயற்சி மறு முனையிலும் இருக்க, சுமை அல்லது அமத்தும் நிறை  இவ்விரண்டுக்கும் இடையில் இருக்கும். இதன் அடிப்படையில் தான் இது செயல் படுகிறது. இதற்கு ஒரு இலகுவான உதாரணம் பாக்கு வெட்டி ஆகும். படம் 03, 04, 05 யை பார்க்கவும்.

 

இதை தொடர்ந்து செக்கு பாவனைக்கு வந்தது எனலாம். இப்படி எண்ணையை அமத்தி எடுத்த பண்டைய நாடுகள் அதிகமாக மத்திய தரைக்கடல் ஆற்றுப் பள்ளத்தாக்கு, மத்தியக்கிழக்கு நாடுகள் மற்றும் தெற்காசியா நாடுகள் [Mediterranean basin, the Middle East, and South Asia.] ஆகும். எனவே அங்கு நாம் பண்டைய செக்குகளை அடையாளம் காண முடியும். படம் 01, 02, 05, 08, 10, 11 யை பார்க்கவும்.

 

பாரம்பரியமாக ஆலிவ் எண்ணெய் எப்படி மத்திய தரைக்கடல் படுகையில் [Mediterranean basin] ஒரு வகை செக்கு கல் மூலம், கிருஸ்துக்கு முன் தயாரிக்கப் பட்டதோ, அவ்வாறே தமிழ் நாட்டிலும் கிருஸ்துக்கு முன் கரும்பை செக்கு மூலம் நெரித்து, சாறு எடுத்துள்ளார்கள் என்பது [படம் 08] சங்க பாடல் மூலம் தெரிய வருகிறது. 

 

பேரியாழ் [இருபத்தொரு நரம்புள்ள பெரிய யாழ்] வாசிக்கும் பாணனொருவன் வறுமையால் வாடும் இன்னொரு பாணனைத் தொண்டைமான் இளந்திரையன் என்னும் மன்னனிடம் ஆற்றுப்படுத்துவதாக அமைந்த, பழைமை வாய்ந்த பெரும்பாணாற்றுப்படையில், கரும்பினைப் பிழிவதற்கு செக்கை பயன்படுத்தியுள்ளனர் என்ற தொழில் நுட்பத்திறனும் புலனாகின்றன. 'நீ மேலும் நெல்மணி விளையும் கழனிகளை அடுத்து கரும்புத் தோட்டங்கள் வழியே செல்வாயானால், அங்கு யானை பிளிறுவது போல் கரும்பை நெரிக்கும் செக்கின் [எந்திரத்தின்] ஓசை கேட்கும். அங்கே கரும்புப் பாலை கட்டியாகக் காய்ச்சுவார்கள். ஆகவே நீ அவ்விடம் சென்று கரும்புப்சாறு பருகலாம்' என்று அறிவுறுத்துகிறார் என "எந்திரம் சிலைக்கும் துஞ்சாக் கம்பலை,விசயம் அடூஉம் புகை சூழ் ஆலைதொறும்,கரும்பின் தீம்சாறு விரும்பினிர் மிசைமின்,"வரி 260-262 மூலம் தெரிய வருகிறது. இதே மாதிரி, கி மு 500 ஆண்டை சேர்ந்த சமஸ்கிருத இலக்கியத்திலும் செக்கை பற்றி கூறி இருப்பதாக அறிய முடிகிறது [In Sanskrit literature of about 500 BC there is a specific reference to an oil-press, although it was never described (Monier-Williams, 1899)]. இந்தியாவின் அண்டை நாடுகளான, ஆப்கானிஸ்தான், இலங்கை, மியான்மர் போன்ற இடங்களிலும் இப்படியான செக்கு கல் [கற்கள்] பாவிக்கப் பட்டன.  

 

தமிழ் நாட்டில் பாரம்பரியமாக எள்ளு எண்ணையும் , கடலை எண்ணையும் தயாரிக்கப் பட்டதுடன், கேரளத்தில் தேங்காய் எண்ணெய் தயாரிக்கப் பட்டதாக அறிகிறோம். அதே போல யாழ்ப்பாணத்திலும் பாரம்பரியமாக எள்ளு எண்ணெய் அல்லது நல்லெண்ணய் செக்கு கல்  மூலம் தயாரிக்கப் பட்டன.

 

பண்டைய காலத்து செக்கு கற்கள்  பல தமிழ் நாட்டில் தொல்லியலாளர்களால் இன்று கண்டு பிடிக்கப் பட்டுள்ளன. உதாரணமாக,  தாளவாடி மலையிலுள்ள மலைக் கிராமத்தில் மூன்றாம் நூற்றாண்டு காலத்தில் தமிழர்கள் வாழ்ந்ததை வெளிப் படுத்தும், கல்வெட்டு எழுத்துகளுடன் கூடிய கல் செக்கு கண்டறியப் பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், தாளவாடி வட்டம், மரூர் கிராமம் அருகே தொல்லியல் மேடு ஒன்றைக் கண்ட வரலாற்று ஆர்வலர்கள், அங்கு  ஆய்வு மேற் கொண்டனர். அந்த ஆய்வில் மரூர் கிராமத்தில், சுமார் 4 அடி உயரமுள்ள கல் செக்கு ஒன்றையும் அதன்  கீழ்ப்பகுதியில் தமிழ் பிராமி போன்ற குறியீடுகளும்  காணப்பட்டன. அதைப் படியெடுத்து தொல்லியல் அறிஞர்களான சென்னை ராஜகோபால், ஈரோடு புலவர் செ.ராசு ஆகியோர், கண்ணாடி பிம்பத் தோற்றத்தில் 'கோனு' என்று படித்தறிந்தனர். மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி எழுத்துகள் இவை என்றும் உறுதி படுத்தினர். இதே போல சேலம் மாவட்டம் பெரிய கல்வராயன் மலைப் பகுதியிலும் 10ம் நூற்றாண்டின் செக்கு கல்வெட்டு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது  10ம் நூற்றாண்டைச் சேர்ந்த, சோழர் கால  செக்குக்  கல்வெட்டு என்பதை ஆசிரியர் பெருமாள் [அரசினர் உண்டு உறைவிடப்பள்ளி குன்னூர், சேலம் மாவட்டம் பெத்தநாய்க்கன்பாளையம்] உறுதி செய்தார். கல்வெட்டின் பாதி உடைந்து காணப் பட்டதுடன், அதில் 3 வரிகள் எழுதப்பட்டிருந்தது. தொடர்ந்து அந்த கல்வெட்டை படி எடுத்து பார்த்ததில், பவித்ர மாணிக்கம் என்னும் பெயருடைய பெண்ணும், மற்றொருவரும், தல சோமர் எடுத்த கோயிலுக்காக இதனை தானமாக கொடுத்ததாக தெரிகிறது. இது குறித்து தொல்லியல் ஆய்வாளர் ராஜகோபால் கூறுகையில், ‘‘10ம் நூற்றாண்டில் தேவரடியாராக விளங்கிய பெண்களுக்கு மாணிக்கம் என்று பெயர் சூட்டப் பட்டது. அப்போது, விளக்கு எரிப்பதற்கும், சமைக்கவும்,  எண்ணெய் இன்றியமையாததாக இருந்தது. எனவே எண்ணெய் ஆட்ட, கல்லால் ஆன செக்குகள் கொடையாக வழங்கப்பட்டன என்றார். பழங்காலத்தில் தனது உடன் பிறந்தோர் அல்லது உறவினர் நலம் பெற வேண்டி கோயிலுக்கு செக்குக்கல் செய்து கொடுப்பார். இவ்வாறு கொடுக்கும் செக்கில், அவரது விவரம் கல்வெட்டாக வெட்டி வைக்கப்படும். கிபி 8ம் நூற்றாண்டு முதல், தமிழகத்தில் பல இடங்களில் செக்குகள், கல்வெட்டுகளுடன் காணக்  கிடைக்கின்றன.

 

இதே போல, பெரம்பலூர் அருகே 400 ஆண்டு பழமையான கல்செக்கு ஒன்றும் கண்டு பிடிக்கப் பட்டது. இது சுமார் 7அடி உயரம் உள்ளது. இது சுமார் 400ஆண்டுப் பழமையான கல்செக்கு. ஆராய்ச்சியின் முடிவில் வரலாற்று ஆராய்ச்சியாளர் செல்வபாண்டியன் தெரிவித்ததாவது : பெரம்பலூர் மாவட்டத்தில் செஞ்சேரி, சத்திரமனை, வேலூர் ஆகிய கிராமங்களில் அப்பகுதிகளில் உள்ள சிவாலயங்களுக்கு திருவிளக்கு பூஜைகளுக்கு எண்ணெய் வழங்க உபயமாக வசதி படைத்த நபர்களால் அக்காலத்தில் அந்தந்த ஊர்களின் ஆலயங்களின் பயன்பாட்டிற்காக கல்செக்கு செய்து கொடுத்திருப்பது தெரிய வருகிறது என்கிறார்.

 

அண்மை காலம் வரை அல்லது முப்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை,  கற்களினால் ஆன செக்கில் இரட்டை மாடுகளை கட்டி, அதில் தேங்காய், எள் மற்றும் கடலை ஆகியவற்றை போட்டு அரைக்கப்பட்டு அதன் மூலம் கிடைக்கும் எண்ணெய்களையே அனைவரும் பயன்படுத்தி வந்தனர். ஆனால், காலப்போக்கில் நவீன இயந்திரங்கள் மூலம் தயாரிக்கப் பட்ட எண்ணெய் , பாக்கெட் எண்ணெய் ஆகியவற்றின் வருகையால் பாரம்பரிய கல் செக்கு எண்ணெய் உற்பத்தி தொழில் நலிவடைந்து கிட்ட தட்ட இன்று அழிந்தே போய் விட்டது.

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]/ : பகுதி 07  வாசிக்க அழுத்துங்கள்- Theebam.com: "தமிழர்களின் பண்டைய நான்கு கற்கள்" / பகுதி 07: 

ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துங்கள்- Theebam.com: "தமிழர்களின் பண்டைய நான்கு கற்கள்" / பகுதி 01:

0 comments:

Post a Comment