"தமிழர்களின் பண்டைய நான்கு கற்கள்" / பகுதி 05

கல் உரல் [கல்லுரல்]

இன்று நவீன இயந்திரங்கள் வந்து விட்டதால், அரை நூற்றாண்டு காலமாக கல்லுரலின் பாவனைகள் நலிவடைந்து வந்தாலும், கிராமப் புறங்களில் கல் உரல் மற்றும் அம்மி கல்லுக்கு இன்னும் மதிப்பு இருக்கத்தான் செய்கிறது.

 

முன்பு அன்றன்றைக்கு உணவுக்கு வேண்டிய சிறுதானியங்களை உடனுக்குடன் கல் உரலில் இட்டு, இடித்துத்தான் தயார் செய்வார்கள். அப்படியே பண்டைய காலத்தில் நெல்மணிகளையும் இடித்தார்கள் என்பது வரலாறு.  

 

பழங்காலத்தில் ஆண்கள் வேட்டையாடச் சென்ற நிலையில் பெண்கள் இருப்பிடத்திலேயே விதைகளைக் கொண்டு உற்பத்தி செய்யப் பழகினர். உற்பத்திப் பொருள்களை உணவுப் பண்டமாக மாற்றப் பாறைகளின் சிறிய குழிகளை உரலாகவும் உருண்டையான நீண்ட மரக்கட்டைகளை உலக்கையாகவும் பயன்படுத்தினர். காலபோக்கில் பாறைகளில் இருந்து கற்களை வெட்டி எடுத்து, தனியாக உரல் போன்ற அமைப்பை ஏற்படுத்திக் கொண்டார்கள்.

 

முதலில் கல் உரலை எம் கவனத்துக்கு எடுத்தால், அவற்றின் பருமன், உயரம், நடுவில் உள்ள துளையின் அளவு போன்றவற்றாலும் அதன் செயல் பாட்டாலும் பொதுவாக இதை இரண்டாக பிரிக்கலாம். அவை மா இடிக்கும் உரல், எண்ணெய் பிழியும் செக்கு கல் ஆகும்.

 

கல் உரல் / உரல், உலக்கை

உரல் கற்களில்  இருந்து செய்தாலும் உலக்கை நீளமாக கைக்கு அடக்கமாக இருக்க வேண்டும் என்பதால், உறுதியான மரங்களில் இருந்து தயாரித்துப் பயன்படுத்தத் தொடங்கினார்கள் என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள். உதாரணமாக, தேக்கு, மருதமரம், கடம்பமரம் ஆகிய உறுதியான மரங்களில் தான் உலக்கை செய்யப் படுகிறது. கட்டையின் இரு முனைப் பகுதியிலும் இரும்புப் பூன் மற்றும் வெண்கலப் பூண்களைப் பூட்டினர். (பூண் - வளையம்). ஒரு முனையில் சமமானதும் மற்றொரு முனையில் சிறிது குழிந்த பூணும் பூட்டப்பட்டன. இதனால் முனைகள் சிதையாமலும், விரிசலடையாமலும் நீண்ட காலம் பயன்பட்டன.  மஞ்சள், மிளகாய் ஆகியவற்றை இடிக்கும் உலக்கையில் பூண் இருக்காது.

 

உரல் என்பது அரிசி முதலான தானியங்களைக் குற்ற, இடிக்கப் பயன் படுத்தப் படுகிறது. இது மூன்று அடி வரை உயரமுள்ள ஏறத்தாழ ஓர் அடி விட்டமுள்ள மரத்தினால் அல்லது கருங்கல்லினால் ஆக்கப்பட்டிருக்கும். இதன் ஒரு பக்கத்தில் அரை அடி முதல் ஓர் அடிவரையான ஆழத்தில் ஒரு குழி போன்று அமைக்கப்பட்டிருக்கும்.

 

உரலில் தானியங்களைப் பொடியாக்குவதுபோல் சில தானியங்களின் வெளிப்புற உமியை நீக்குவதற்கும் பயன் படுத்துவார்கள். எடுத்துக் காட்டாக, நெல் மணிகளை உரலில் இட்டு சிறிது நேரம் குற்றுவதன் மூலம் அரிசியும் உமியும் வெவ்வேறாகப் பிரிக்கப் படும். அதன் பின்னர் சுளகு (முறம்) பயன்படுத்தி புடைப்பதன் மூலம் அரிசியையும் உமியையும் வேறாக்குவர்.

 

சங்க இலக்கியத்தில், உதாரணமாக அகநானூறு 141 இல், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட  ஒரு சமையல் சம்பவம் படம் பிடித்து காட்டப் பட்டுள்ளது. 

 

புதுமணப்பெண் அன்றைக்கு முதல் முதலாகச் சமைக்க ஆரம்பிக்கிறாள். அதற்கு அவல் பாயசம் செய்ய எண்ணுகிறாள். உலையில் பசும் பாலை வைத்தாகி விட்டது. அவலுக்காக, நன்றாக முற்றிய நெற்கதிர்கள் சிலவற்றை அறுத்துக் கொணர்ந்திருக்கிறார்கள். அதை கூந்தலில் கூழைமுடி போட்டுக்கொண்டு மகளிர் வளையல் குலுங்க அவல் உலக்கையால் இடிக்கின்றனர். அந்த நேரத்தில், அருகில் உள்ள ஒரு வாழை மரத்தின் உச்சியில் ஒரு கொக்கு அமர்ந்திருக்கிறது. இந்த இடிக்கும் சத்தத்தால் கொக்கு வெருண்டு போகிறது. வாழை மரத்தை விட்டுப் பறந்து சென்று, அருகில் இருக்கும் ஓர் உயரமான மா மரத்தின் கிளையில் அமர்கிறது என்கிறது.

"புது மண மகடூஉ அயினிய கடி நகர்ப்

பல் கோட்டு அடுப்பில் பால் உலை இரீஇ,

கூழைக் கூந்தற் குறுந் தொடி மகளிர்

பெருஞ் செய் நெல்லின் வாங்குகதிர் முறித்து,

பாசவல் இடிக்கும் இருங் காழ் உலக்கைக்

கடிது இடி வெரீஇய கமஞ்சூல் வெண் குருகு

தீம் குலை வாழை ஓங்கு மடல் இராது;

நெடுங் கால் மாஅத்துக் குறும் பறை பயிற்றும்"

[வரி 14 - 21]

 

இங்கு நெல்லை உலக்கையால் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்கள், வீட்டு முற்றத்தில் உரலில் இடிப்பதை காண்கிறோம். மேலும் உலக்கையைக் கொண்டு தானியங்களைக் குற்றும் பொழுது பெண்கள் தலைவனைப் புகழ்ந்து பாடுவதாகச் சிலப்பதிகார வாழ்த்துக் காதை கூறுகிறது. இது ''வள்ளைப்பாட்டு'' எனக் குறிப்பிடப்படுகின்றது. வள்ளை என்றால் உலக்கை. அது மட்டும் அல்ல, தாய் இறந்த பொழுது மகள்பாடும் ஒப்பாரிப் பாடலிலும்

''தங்க அரிசி குத்தி

தனிப்பாலம் சுத்தி வந்தேன்''

என்றும் உலக்கையைப் பற்றிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.  அது மட்டும் அல்ல, உரல், உலக்கையை பற்றி ஒரு விடுகதை கூட உண்டு

"அக்காள் சப்பாணி தங்கை நர்த்தனப் பெண்

இந்த இருவரும் இல்லாவிட்டால்

குடித்தனப் பெண் சிணுங்குவாள் !"

மள்ளர் ['செருமலை வீரரும் திண்ணியோடும், மருத நில மக்களும் மள்ளர்' என்கிறது பிங்கல நிகண்டு / மருத நிலத்து விவசாய மக்கள்] இன மக்கள் தங்கள் வாழ்க்கை வட்டச் சடங்குகளான பெயர் வைத்தல், பூப்பு, குடிசை கட்டுதல், சடங்கு கழித்தல், திருமணம், இப்படி பலவற்றிலும் உலக்கையை  சடங்குப் பொருளாகப் பயன்படுத்தி வந்துள்ளனர் / வருகின்றனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. உதாரணமாக,  தானியங்களைக் குற்றி உணவு சமைக்கப்பயன்படும் உலக்கையானது திருமணத்தின் போது தாய் வீட்டுச் சீதனமாகப் பெண்களுக்குக் கொடுத்தனுப்பப் படுகின்றது. அதே போல, பூப்புச் சடங்கின் பொழுது பெண்ணை நீராட்டிய பின், வீட்டு வாசலில் உலக்கையைக் கிடத்தித் தாண்டச் செய்து வீட்டிற்குள் அனுமதிக்கின்றனர். இதனால் பேய் அல்லது காத்துக் கருப்பு வீட்டின் உள்ளே வராது என்று நம்புகின்றனர்.

 

இறுதியாக, ஒரு ஆரோக்கியமான கருத்தாக, சில ஆண்டுகளுக்கு முன்பு வரையில், பெரும்பாலான பெண்கள் அம்மிக் கல்லில் அரைத்தல், உரலில் உலக்கை வைத்து இடித்தல், ஆட்டுக்கல்லில் மாவு அரைத்தல் உள்ளிட்ட பணிகளை வீட்டில் செய்து வந்துள்ளனர். இந்த வேலைகளைச் செய்வதால், அவர்களின் இடுப்பு எலும்புகள் வலுவாகவும், ஆரோக்கியமாகவும் இருந்தன. இதனால், பிரசவத்தின் போது இடுப்பு எலும்புகள் விரிவடைந்து, அவர்கள் சுகப் பிரசவம் ஆனார்கள் என கருதப் படுகிறது. 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

பகுதி 06 வாசிக்க அழுத்துங்கள்- Theebam.com: "தமிழர்களின் பண்டைய நான்கு கற்கள்" / பகுதி 06:

ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துங்கள்- Theebam.com: "தமிழர்களின் பண்டைய நான்கு கற்கள்" / பகுதி 01:

No comments:

Post a Comment