நான்மணிக்கடிகை/04/வாழ்க்கை உண்மைகளை வெளிக்காட்டும்...

 


சங்ககால இலக்கியங்களில், பதினெண் கீழ் கணக்கு நூல்களில் ஒன்றான 'நான்மணிக்கடிகை' என்பது நான்கு இரத்தினத் துண்டங்கள் என்னும் பொருளைத் தரும். ஒவ்வொரு பாடலிலும் நான்கு சிறந்த கருத்துக்களைக் கூறுவதால் 'நான்மணிக்கடிகை' எனப் பெயர் பெற்றது. இதனை இயற்றியவர் விளம்பி நாகனார்.இவரின் காலம் கி.பி. 200 க்கு முன்னர் ஆகும்.

 தொடர்கிறது....

⇴⇴⇴⇴⇴⇴⇴16.

கடற் குட்டம் போழ்வர், கலவர்; படைக் குட்டம்
பாய்மா உடையான் உடைக்கிற்கும்; தோம் இல்
தவக் குட்டம் தன்னுடையான் நீந்தும்; அவைக் குட்டம்
கற்றான் கடந்துவிடும். 

மரக்கலமுடையவர் கடலின் ஆழமான நீரைப் பிளந்து செல்வர். விரைந்து செல்லும் குதிரைப் படையை உடையவன் கடல் போன்று பகைவரது படையைப் பொருது உடைத்து விடுவான். தன் மனதைத் தன்வயப்படுத்தியவன் குற்றமில்லாத தவமென்னும் கடலை நீந்திச் செல்வான். தெளியக் கற்றவன் கற்றறிவுடையார் நிரம்பிய அவைக் கடலைக் கடந்து விடுவான்.

 

⇴⇴⇴⇴⇴⇴⇴17.

பொய்த்தல் இறுவாய, நட்புக்கண்; மெய்த்தாக
முத்தல் இறுவாய்த்து, இள நலம்; தூக்கு இல்
மிகுதி இறுவாய, செல்வங்கள்; தம் தம்
தகுதி இறுவாய்த்து, உயிர். 

நண்பர்கள் பொய் கூறும் இயல்பைப் பெறுவாராயின் அவர்களின் நட்புக் கெடும். மூப்பு தோன்றும் போது இளமை அழிந்துவிடும். மிகையான செயல்களைச் செய்யும் போது செல்வம் அழியும். வாழ்நாள் எல்லை கடந்ததும் உயிரும் அழியும்.

 

⇴⇴⇴⇴⇴⇴⇴18.

மனைக்கு ஆக்கம் மாண்ட மகளிர்; ஒருவன்
வினைக்கு ஆக்கம் செவ்வியன் ஆதல்; சினச் செவ் வேல்,
நாட்டு ஆக்கம் நல்லன் இவ் வேந்து என்றல்; கேட்டு ஆக்கம்
கேளிர் ஒரீஇவிடல்.

நல்லியல்பு கொண்ட பெண்களால் குடும்பம் சிறப்படையும். படைப்பயிற்சி சிறப்பாகக் கொண்டவன் போரில் வெற்றியைப் பெறுவான் செங்கோல் அரசன் நாட்டை உயர்த்துவான். உறவினரை ஒதுக்கியவன் கேட்டினை அடைவான்.

 

⇴⇴⇴⇴⇴⇴⇴19.

பெற்றான் அதிர்ப்பின், பிணை அன்னாள் தான் அதிர்க்கும்;
கற்றான் அதிர்ப்பின், பொருள் அதிர்க்கும்; பற்றிய
மண் அதிர்ப்பின், மன்னவன் கோல் அதிர்க்கும்; பண் அதிர்ப்பின்,
பாடல் அதிர்ந்துவிடும். 

கணவன் ஒழுக்கத்தில் கலங்கினால் அவன் மனைவி தன் கடமையில் கலங்குவாள். கற்ற புலவன் அறிவு கலங்கினால் அவனது கருத்துக்களும் கலங்கும். குடிமக்கள் நிலை கலங்கினால் மன்னனது ஆட்சி நடுங்கும். பண் அதிர்ந்தால் பாடலும் அதிர்ந்து விடும்.

 

⇴⇴⇴⇴⇴⇴⇴20.

மனைக்குப் பாழ், வாணுதல் இன்மை; தான் செல்லும்
திசைக்குப் பாழ், நட்டோ ரை இன்மை; இருந்த
அவைக்குப் பாழ், மூத்தோரை இன்மை; தனக்குப் பாழ்,
கற்று அறிவு இல்லா உடம்பு.   

மனைவி இல்லாத வீடு பாழ். சார்ந்தொழுகும் நண்பர்கள் இல்லையெனில் தன் நிலை துன்பமாகும். கல்வி, கேள்விகளில் சிறந்த ஆன்றோரில்லாத அவை பாழானது. கற்றறிவில்லாத உடம்பு பாழானது.


'நான்மணிக்கடிகை' தொடரும்....

ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக👉

Theebam.com: 'நான்மணிக்கடிகை' /01/வாழ்க்கை உண்மைகளை வெளிப்படு...

தேட‌ல்:

நான்மணிக்கடிகை - பதினெண் கீழ்க்கணக்கு, பாழ், குட்டம், ஆக்கம், இலக்கியங்கள், அதிர்ப்பின், அதிர்க்கும், நான்மணிக்கடிகை, கலங்கினால், பதினெண், கீழ்க்கணக்கு, இன்மை, தான், அறிவு, பாழானது, நிலை, உடம்பு, மனைவி, நண்பர்கள், கற்றான், அவைக், கல்வி, சங்க, செல்லும், விடுவான், போது, இறுவாய்த்து, இறுவாய, அழியும்.

No comments:

Post a Comment