'நான்மணிக்கடிகை' /02/வாழ்க்கை உண்மைகளை வெளிப்படுத்தும்....

சங்ககால இலக்கியங்களில், பதினெண் கீழ் கணக்கு நூல்களில் ஒன்றான 'நான்மணிக்கடிகை' என்பது நான்கு இரத்தினத் துண்டங்கள் என்னும் பொருளைத் தரும். ஒவ்வொரு பாடலிலும் நான்கு சிறந்த கருத்துக்களைக் கூறுவதால் 'நான்மணிக்கடிகை' எனப் பெயர் பெற்றது. இதனை இயற்றியவர் விளம்பி நாகனார்.இவரின் காலம் கி.பி. 200 க்கு முன்னர் ஆகும்.

↠↠↠↠↠ 

6👉

திரு ஒக்கும், தீது இல் ஒழுக்கம்; பெரிய

அறன் ஒக்கும், ஆற்றின் ஒழுகல்; பிறனைக்

கொலை ஒக்கும், கொண்டு கண்மாறல்; புலை ஒக்கும்,

போற்றாதார் முன்னர்ச் செலவு.

நல்லொழுக்கம் செல்வம் போன்றது. முறையான இல்லற ஒழுக்கம் துறவறத்தைப் போன்று தூய்மையானது. பிறரைப் பழித்துப் புறங்கூறுதல் கொலை செய்தல் போன்றது. தம்மை மதியாதவரை மதித்தல் என்பது இழிதகைமையானது ஆகும்.

 ↠↠↠↠↠ 

7 👉

'கள்வம்!' என்பார்க்கும் துயில் இல்லை; காதலி மாட்டு

உள்ளம் வைப்பார்க்கும் துயில் இல்லை; 'ஒண் பொருள்

செய்வம்!' என்பார்க்கும் துயில் இல்லை; அப் பொருள்

காப்பார்க்கும் இல்லை, துயில்.  

திருடர்களுக்கும் தூக்கம் இல்லை. ஒரு பெண்ணை விரும்பும் தலைமகனுக்கும் தூக்கம் இல்லை. செல்வத்தை ஈட்டுபவனுக்கும் தூக்கம் இல்லை. அச்செல்வத்தைத் திருடு போகாது காப்பாற்றுபவனுக்கும் தூக்கம் இல்லை.

 ↠↠↠↠↠ 

8 👉

கற்றார்முன் தோன்றா, கழிவு இரக்கம்; காதலித்து ஒன்று

உற்றார்முன் தோன்றா, உறா முதல்; தெற்றென

அல்ல புரிந்தார்க்கு அறம் தோன்றா; எல்லாம்

வெகுண்டார் முன் தோன்றா கெடும்.

இழந்த பொருள்களுக்காக வருந்துதல் கற்றுணர்ந்த பெரியோர்களுக்கு இல்லை. சிறந்த நிலையை அடைய ஊக்கத்துடன் செயல்படுபவரிடத்து அந்நிலை விரைவில் கிட்டவில்லையே என்ற முயற்சித் துன்பம் இல்லை. அறத்தின் நல் இயல்பைத் தீயவர்கள் அறிய முடியாது. கோபம் கொள்பவர் முன் எல்லா நன்மைகளும் புலப்படாமல் போகும்.

 ↠↠↠↠↠ 

9 👉

நிலத்துக்கு அணி என்ப, நெல்லும் கரும்பும்;

குளத்துக்கு அணி என்ப தாமரை; பெண்மை

நலத்துக்கு அணி என்ப, நாணம்; தனக்கு அணி

தான் செல் உலகத்து அறம்.

நெல்லும், கரும்பும், வயலுக்கு அழகு சேர்க்கும். தாமரை மலர்கள் குளத்துக்கு அழகு சேர்க்கும். நாணம் பெண்ணுக்கு அழகு. மறுபிறவியில் வீடுபேறு அடைய செய்யப்படும் அறம் ஒருவனுக்கு அழகாகும்.

 ↠↠↠↠↠ 

10 👉

கந்தில் பிணிப்பர், களிற்றை; கதம் தவிர,

மந்திரத்தினால் பிணிப்பர், மா நாகம்; கொந்தி,

இரும்பின் பிணிப்பர், கயத்தை; சான்றோரை

நயத்தின் பிணித்துவிடல்!  

யானையைக் கட்டுத் தறியினாலும், பாம்பை மந்திரத்தாலும், கீழ்மக்களைக் கொடிய இரும்பு விலங்காலும் வயப்படுத்துவர். சான்றோரை இன் சொற்களால் தன்வயப்படுத்துவர்.

'நான்மணிக்கடிகை' தொடரும்.... 

ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக👉

Theebam.com: 'நான்மணிக்கடிகை' /01/வாழ்க்கை உண்மைகளை வெளிப்படு...

தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்:

நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்குபிறக்கும்நான்மணிக்கடிகைஒக்கும்ஒத்திருக்கும்அறிவார்கள்அறிபஇலக்கியங்கள்பதினெண்கீழ்க்கணக்குஎல்லாம்அவனதுநலம்பின்நல்லியல்பைஅகில்கடலுள்அரிதாரம்மான்உயர்வயிற்றுஉயிர்கதிர்சிறந்தநான்குசங்கஞாயிறுமலர்மாட்டார்கள்ஏற்பட்டால்கொள்ளாதேபொன்னின்

👐👐👐👐👐👐👐👐👐👐👐👐👐👐


0 comments:

Post a Comment