‘சரீரமாத்யம் கலு தர்மசாதனம்’
உள்ளம் பெருங் கோயில்; ஊனுடம்பு
ஆலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய் கோபுரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளா மணி விளக்கே
திருமந்திரம், பாடல் எண் 1823
பொருள்:-
மனமே இறைவன் இருக்கும் கருவறை/கோயில். கோபுர வாசல் நம்முடைய வாய். சமய
நூல்களைக் கற்றுத் தெளிந்தோர்க்கு ஆத்மாவே சிவலிங்கம். இந்தக் கோவிலில் எரியும்
ஐந்து விளக்குகள் நம்முடைய ஐம்புலன்களாகும் எளிதில் தீய வழிகளில் செல்லக்கூடியவை
என்பதால் கள்ளப் புலன்கள் என்றார் திருமூலர்.
“ஆத்மலிங்கம் பஜரே, அதி அத்புத
லிங்கம் பஜரே” — என்று பஜனையில் பாடல்கள் பாடுவதும், உள்ளே உறையும்
இறைவனை நினைத்தே.
சுவரை வைத்துத்தான் சித்திரம் என்று தமிழில் ஒரு பழமொழி உள்ளது. ஆரோக்கியமான
உடலின்றி மனிதன் ஆன்மீக முன்னேற்றம் அடைய முடியது. பலவீனமான உடலினால் ஆத்ம
முன்னேற்றம் அடைய முடியாது என்பதால்தான், பகவத் கீதையைப் படிப்பதைவிட கால்பந்து
விளையாடுவது மேல் என்று சுவாமி விவேகாநந்தரும் சொன்னார்.
அப்பரும் தேவாரத் திருப்பதிகத்தில் இந்தக் கருத்தை
வலியுறுத்துவார்:
காயமே கோயிலாகக் கடிமனம் அடிமையாக
வாய்மையே தூய்மையாக மனமணி யிலிங்கமாக
நேயமே நெய்யும்பாலா நிறையநீ ரமையவாட்டிப்
பூசனை ஈசனார்க்குப்
போற்றவிக் காட்டினோமே
-நாலாம்
திருமுறை, தேவாரம்
பொருள்:
இவ்வுடம்பைக் கோயிலாகவும், நல்ல நினைவுகளை
உடைய மனத்தை அடிமையாகவும் கொண்டு, வாய்மையைத் தூய்மையாகவும் வைத்து, மனதிற்குள்
ரத்தினம் போல ஜொலிக்கும் ஆன்மாவை இலிங்கமாகப் பாவித்து, அன்பை நெய்யும்
பாலாய் நிறைய வைத்துப் பூசித்து, இறைவனைப் போற்றினேன்.
இந்தப் பாடல்களுக்கு பலவகையில் பொருள் கொள்ளமுடியும்:
1.இறைவன்
எல்லோரிடமும் உள்ளான். ஆகவே எல்லோரையும், நல்ல ஆத்மாவாகக் காண வேண்டும்
2.நாமே இறைவன்; அஹம்
பிரம்மாஸ்மி– என்னும் உபநிஷத் கருத்து. எல்லோரிடமும் இறைவன் இருக்கிறான். அவனைக்
காணும் பக்குவம் நமக்கு வேண்டும்.
3.மூன்றாவது
பொருள்- இறைவனைத் தேடி ஆறு, கடல், கோயில், குளம், மலை, காடு என்று யாத்திரை போக வேண்டிய அவசியமில்லை
அவனை உள்ளத்தில் பார்க்கத் தெரிந்து கொண்டால்.
நாலாவது பொருள் — இறைவனை உணர வேண்டுமானால், உடலைச் சரிவரப்
பாதுகாக்கவேண்டும். பலவீனனால் ஆத்மாவை உண்ர முடியாதென்று உபநிஷத் கூறும்.
‘சரீரமாத்யம் கலு தர்மசாதனம்
காளிதாசனும் உடலைப் பராமரிக்கவேண்டியதன் அவசியத்தை ஒரு பொன்மொழியால் உணர்த்துகிறான்.
சரீரமாத்யம் கலு தர்மசாதனம்– குமார சம்பவம் 5-3
சிவனை அடைய தவமியற்றும் பார்வதியை ஒரு யோகி சந்தித்துச் சொல்கிறார்: உன்
உடலின் சக்திக்கேற்ற தவத்தை மேற்கொண்டிருக்கிறாயா? ஏனெனில் தர்ம
காரியங்களைச் செய்வதற்கு மூல நம்முடைய உடல்தான் ;அதாவது உடலை
வருத்தி தவம் இயற்றுதல் அவசியமன்று.
உடலில் உயிர் துடிப்பு இருக்கும்வரை எந்தப் புருஷார்த்தத்தைத்தான் அடைய
முடியாது? என்று கதாசரித்
சாகரம் சொல்லும். (நான்கு புருஷார்த்தம்: அறம், பொருள், இன்பம், வீடு)
சரீரே சதிகோ நாம புருஷார்த்தோ ந சித்யதி
நாமும் உடலை ஆலயமாகக் கருதி உள்ளத்தே ஆண்டவனைக் காண முயற்சியும் பயிற்சியும் செய்வோம்.
-லண்டன் சுவாமிநாதன்
No comments:
Post a Comment