காகிதமும் புத்தகமும் வந்த வரலாறு

 


 காகிதத் தாள் (Paper)

காகிதம் முதலாவதாக 2000 ஆண்டுகட்கு முன்னர் சீனாவில் ட்சாய் லூன் (Tsai Lun) என்பவரால் உருவாக்கப்பட்டது எனக் கூறப்படுகிறது. மல்பெரி மரத்தின் மரப்பட்டை தட்டையான நூலிழையாக மாறும் வரை, அதனை அவர் தண்ணீரில் மூழ்கச் செய்தார். பின்னர் அதன் குழம்பை தட்டையான மூங்கில் படுகையில் பரவச் செய்தார்.

 

அதிலுள்ள நீரை மூங்கில் படுகையிலிருந்து வடிகட்டச் செய்து, நூலிழைகள் அதில் உலர்த்தப்பட்டன. இறுதியாக, உலர்ந்த, தட்டையான, நார்த்தன்மை கொண்ட பொருள் கிடைத்தது; இதுவே காகிதமாக விளங்கியது. பின்னர் படிப்படியாகக் கண்டுபிடிப்புகளும் முன்னேற்றங்களும் ஏற்பட்டன; இவற்றுள் ஒன்றாக ஸ்டார்ச்சு அக்காகிதத்தின் மீது பூசப்பட்டது.

காகிதத் தயாரிப்புக்கான இத்தொழில்நுட்பம் பின்னர் சீன வணிகர்கள் வாயிலாக ரஷ்யா, மத்தியக் கிழக்கு நாடுகளுக்குப் பரவியது. அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கும் காகிதம் செய்யும் முறை பரவிற்று.

 

காகிதம் செய்யும் முறையில் ஒரு புரட்சிகரமான முன்னேற்றமாக, பெருமளவில் காகிதம் உற்பத்தி செய்யும் தொழில்நுட்பம் துவங்கியது; 1798இல் பிரான்சு நாட்டில் லூயி ராபர்ட் என்பவர் காகிதம் உற்பத்தி செய்யும் எந்திரம் ஒன்றை உருவாக்கினார். அடுத்த நூற்றாண்டில் இங்கிலாந்தின் லண்டனில் ஃபோர்டினர் சகோதரர்கள் இத்தொழில் நுட்பத்தை மேலும் விரிவுபடுத்தினர்.

சீனர்களிடம் மேலும் ஒரு இரகசியமும் பொதிந்திருந்தது; அது பட்டு உற்பத்தியாகும். ஐரோப்பிய வணிகர்கள் வாயிலாக பட்டு ஐரோப்பியா முழுதும் பரவிற்று.

 

புத்தகம் (Book)

முதலாவது புத்தகம் 4000 ஆண்டுகட்கு முன்னர் எகிப்தியர்களால் தட்டையான நாணற்புல் (ஒரு வகை நீர்த் தாவரம்) அடுக்குகளிலான தாள்களால் உருவக்கப்பட்டது. இப்புத்தகம் சுருட்டப்பட்ட தாள்களின் உருளைகளாக – இன்றைய புத்தகங்களிலிருந்து பெரிதும் மாறுபட்டவையாக – விளங்கிற்று.

 

ஐந்தாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் இவ்வகைப் புத்தகங்களுக்குப் பதிலாக (ஆடுகளின்) தோலாலான தாள்கள் பயன்படுத்தப்பட்டன. இவ்வகைத் தாள்கள் ஒன்றன் மீது ஒன்று அடுக்கப்பட்டு அவை கட்டப்பட்டன.

 

அதன் பின்னர் இடைக்காலத்தில் நாம் இன்று பார்க்கும் புத்தக வகைகள் உருவாகத் துவங்கின. கன்றுக்குட்டியின் தோலால் தாள்கள் செய்யப்பட்டு, ஒவ்வொரு தாளும் நடுப்பகுதியில் மடிக்கப்பட்டது. இத்தகைய நான்கு தாள்களைக் கொண்டு எட்டுப் பக்கங்கள் உருவாகி ஒரு பிரிவாகக் (section) கருதப்பட்டது. ஆட்டுத்தோலைப் போலன்றி இவற்றில் இரு பக்கங்களிலும் எழுத முடிந்தது. எழுதி நிறைவுற்ற பிரிவுகள் அனைத்தும் ஒன்றாக அடுக்கித் தைக்கப்பட்டு முன்பக்கமும் பின்பக்கமும் மரப் பலகைகளால் மூடப்பட்டன. பின்னர் இப்பலகைகள் தோலினால் மூடப்பட்டு இன்றைய புத்தகங்கள் போன்று விளங்கின.

 

கி.பி.500 அளவில் சமயத் துறவிகள் கையால் எழுதி, புத்தகங்கள் பலவற்றை உருவாக்கினர்; இவற்றில் எழுத்துகளும் படங்களும் எழுதப்பட்டன. இப்பணி தாமதமாகவும் மிகுந்த முயற்சியுடனும் நடைபெற்றாலும், இறைவன் பெயரால் செய்யப்பட்டதால் மிகுந்த ஆர்வத்துடன் மேற்கொள்ளப்பட்டது.

படித்ததில் பிடித்தது

No comments:

Post a Comment