கொரோனா வைரஸ் தடுப்பூசி:
உலகெங்கும் கொரோனா வைரஸ் தொற்றின் எண்ணிக்கை மீண்டும்
அதிகரித்து வருகிறது. இந்தியா, அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், அர்ஜென்டினா
பிரேசில் மற்றும் பல நாடுகளில் டெல்டா திரிபு மற்றும் ஒமிக்ரான் திரிபு ஆகிய
இரண்டும் சேர்ந்து தொற்றாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருகின்றன.
அறிவியலாளர்களும்
மருத்துவ ஊழியர்களும் பரிசோதனை செய்து, ஒப்புதல்
பெறப்பட்ட தடுப்பூசிகளையே தற்போது நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.
அவை கொரோனாவைக் கட்டுப்படுத்த எவ்வாறு உதவுகின்றன, உலகெங்கிலும் பல
நாடுகளிலும் கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் பெரும்பாலானவர்களுக்கு செலுத்தப்பட்ட
பின்பும் தடுப்பூசிகள் உண்மையாகவே பலன் அளித்துள்ளதா என்ற விவாதம் மீண்டும்
கிளம்பியுள்ளது.
ஆனால் கொரோனா தடுப்பூசி விநியோகத்தில் அரசுகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் போதுமான
அளவு இல்லாதது குறித்து கருத்து தெரிவிக்கும் விமர்சகர்கள், தடுப்பூசியின்
காரணமாக ஏற்பட வாய்ப்புள்ள பக்க விளைவுகள் அதிகம் உள்ளன என்பதற்கு மறுப்பு
தெரிவிக்கிறார்கள்.
ஏனென்றால் இப்போது வரை கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் உண்டாக்கும் பக்க விளைவுகள்
பெரும்பாலும் மிதமாகவும், தடுப்பூசி
செலுத்தப்பட்ட சில நாட்களிலேயே நீங்கிவிடும் வகையிலுமே உள்ளன.
தடுப்பூசி போடப்பட்ட இடத்தில் தோல் சிவத்தல், குளிர், காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு, தசை வலி மற்றும்
வாந்தி வருவது போன்ற உணர்வு ஆகியவையே இதுவரை கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுக்கு
பெரும்பாலும் உண்டான பக்க விளைவுகளாக உள்ளன.
தீவிரமான பக்க விளைவுகளான கடும் ஒவ்வாமை, ரத்தம் உறைதல், இதய வெளியுறை
சவ்வு வீக்கம், இதயத் தசை அழற்சி
போன்ற பக்க விளைவுகள் மிக மிக அரிதாக இருப்பதாகவே மருத்துவத் துறையினர்
கூறுகிறார்கள்.
கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்துவதன் மூலம் ஒரு நபருக்கு கிடைக்கும் பலன்கள்
தடுப்பூசியால் உண்டாகும் பக்க விளைவுகளை விடவும் அதிகம் என்று அவர்கள்
கூறுகிறார்கள்.
கொரோனா தடுப்பூசிகளின் நோக்கம்
என்ன?
பிரேசிலில் உள்ள பிரபல குழந்தைகள் நல மருத்துவரும் தொற்று நோயியல் நிபுணருமான
ரோனெட்டொ கேஃப்ரி இடம் பிபிசி பேசியது.
கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் ஆரம்ப காலத்தில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள், மருத்துவமனையில்
அனுமதிக்க வேண்டிய சூழல், மரணங்கள் உள்ளிட்ட தீவிர நோய் பாதிப்புகளை குறைப்பதையே
நோக்கமாக கொண்டிருந்தன என்று அவர் கூறுகிறார்.
லேசான, மிதமான அல்லது
அறிகுறிகளற்ற கொரோனாவை விடவும் இப்படி தீவிரமான உடல்நல பாதிப்பு உண்டாவதிலிருந்து
தடுப்பூசிகள் பாதுகாப்பு அளிக்கும் என்று கூறுகிறார் பிரேசிலியன் சொசைட்டி ஆஃப்
இம்யூனைசேஷன் எனும் அமைப்பின் இயக்குநராக இருக்கும் மருத்துவர் ரோனெட்டொ கேஃப்ரி.
கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் முக்கிய நோக்கம் என்பது ஒருவருக்கு கோவிட்-19 தொற்று வராமல்
தடுப்பதல்ல; ஆனால் ஒருவருக்கு
தொற்று ஏற்பட்ட பிறகு உடலில் அதன் தீவிரத் தன்மையைக் குறைப்பதுதான் என்கிறார்
அவர்.
பல்லாண்டு காலமாக பயன்பாட்டில் இருக்கும் பிற தடுப்பூசிகளின் நோக்கமும்
இதுதான். இன்ஃப்ளூயன்சா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி ஆண்டுதோறும்
செலுத்தப்படுகிறது. ஆனால் இதனால் யாருக்கும் ஃப்ளூ காய்ச்சல் வராமல் போவதில்லை
என்றாலும், அதிகம்
பாதிக்கப்பட வாய்ப்புள்ள குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் முதியோர்
ஆகியோருக்கு உண்டாகும் நோயின் தீவிரத்தை குறைக்கிறது என்கிறார் அவர்.
இன்னும் பரந்த கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டுமானால் நோய்த்தொற்றின் தீவிர
பாதிப்பு என்பது ஒட்டுமொத்த சுகாதார கட்டமைப்பின் மீதும் மோசமான தாக்கம் செலுத்த
வாய்ப்புள்ளது. மூச்சுக் கோளாறு காரணமாக பெரும்பாலானவர்கள் மருத்துவமனையில்
அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறையும்போது, பிற
நோயாளிகளுக்குத் தேவையான சிகிச்சையை மருத்துவப் ஊழியர்களால் முறையாக வழங்க
முடியும்.
உலகெங்கிலும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளும் இதையே காட்டுகின்றன. காமன்வெல்த்
ஃபண்ட் மேற்கொண்ட ஆய்வின்படி நவம்பர் 2021 வரையிலான காலகட்டத்தில் அமெரிக்காவில் மட்டும்
பதினோரு லட்சம் பேரின் மரணத்தையும் ஒரு கோடியே மூன்று லட்சம் பேர் மருத்துவமனையில்
அனுமதித்து சிகிச்சை பெற வேண்டிய சூழ்நிலையும் தடுப்பூசிகள் தடுத்துள்ளன என்று
தெரியவந்தது.
நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான ஐரோப்பிய மையம் மற்றும் உலக சுகாதார
நிறுவனம் ஆகியவை மேற்கொண்ட ஆய்வில் ஐரோப்பிய கண்டத்தில் தடுப்பூசி விநியோகம்
தொடங்கிய பின்பு,
33 நாடுகளில் 60 வயதுக்கும் மேற்பட்ட சுமார் 4 லட்சத்து 70 ஆயிரம் பேரின்
மரணம் தவிர்க்கப்பட்டுள்ளது என்று கண்டறியப்பட்டது.
தடுப்பூசி போட்டவர்களுக்கு
மீண்டும் தொற்று வர மூன்று காரணங்கள்
தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்பும் பலருக்கு மீண்டும் கொரோனா தொற்று உண்டாவது
சமீபகாலங்களில் உறுதியாகியுள்ளது. இதற்கு மூன்று முக்கிய காரணிகள் உள்ளன.
1. தடுப்பூசி போட்ட
பின்பு கிறிஸ்துமஸ்,
புத்தாண்டு போன்ற கொண்டாட்டங்களுக்காக மக்கள் அதிகமாக
வெளியே வருகிறார்கள். இதனால் கொரோனா வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.
2. இரண்டாவது காரணம்
கொரோனா தடுப்பூசி மூலம் கிடைக்கும் நோய் எதிர்ப்புத் திறன் மிகவும் நீண்ட
காலத்துக்கு நிலைப்பதில்லை.தடுப்பூசியை உடலில் செலுத்தி சில காலம் ஆன பின்பு அதன்
மூலம் கிடைக்கும் பாதுகாப்பு குறைகிறது. ஒருவருக்கு எந்தத் தடுப்பூசி
செலுத்தப்பட்டது, அவரின் வயது
உள்ளிட்டவை இதைத் தீர்மானிக்கின்றன என்கிறார் மருத்துவர் ரோனெட்டொ கேஃப்ரி.
இதனால்தான் பூஸ்டர் டோஸ் / மூன்றாவது டோஸ் தடுப்பூசியை முதியவர்களுக்கும் நோய்
எதிர்ப்பு திறன் குறைவாக உள்ளவர்களுக்கும், பின்பு ஒட்டு மொத்த மக்கள் தொகைக்கும் செலுத்த
வேண்டும் என்ற தேவை உண்டானது என்று அவர் கூறுகிறார்.
3. மூன்றாவது காரணம்
ஒமிக்ரான் திரிபு. இந்த திரிபுக்கு எதிராகத் தடுப்பூசிகள் மூலம் அல்லது ஏற்கனவே
தொற்றுக்கு உள்ளானபோது உடலில் உண்டான நோய் எதிர்ப்பான்கள் (ஆன்டிபாடி) மூலம்
கிடைக்கும் நோய் எதிர்ப்புத் திறன் ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதும், ஒமிக்ரான் மிக
வேகமாக பரவும் தன்மை உடையதும் ஆகும்.
தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று உண்டாவது மிகவும்
சாதாரணமாகிவிட்டது. இத்துடன் வாழப் பழகிக்கொள்ள வேண்டும் என்று கூறுகிறார்
மருத்துவர். ஆனால் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மருத்துவமனையில் சேர வேண்டிய
சூழல் சமீப காலங்களில் மிகவும் குறைவாகவே உள்ளது என்பதையும் அவர்
சுட்டிக்காட்டுகிறார்.
நோயின் தீவிரம் அதிகமாகும்போது, தடுப்பூசிகள்
நமக்கு பாதுகாப்பு அளிக்கின்றன என்று அவர் கூறுகிறார்.
கோவிட் பாதிப்புக்கு உள்ளாவது, மருத்துவமனையில்
அனுமதித்து சிகிச்சை பெறுவது, உயிரிழப்பது
உள்ளிட்டவை இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களைவிட தடுப்பு ஊசி செலுத்தி
கொண்டவர்களுக்கு மிகமிக குறைவாகவே இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
பிரிட்டனின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு முகமையின் சமீபத்திய அறிக்கை
ஒன்றும் இதையே காட்டுகிறது. இந்த அறிக்கையில் பிரிட்டனில் உள்ள கேம்பிரிட்ஜ்
பல்கலைக் கழகம் நடத்திய ஓர் ஆய்வின் தரவுகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இதன்படி ஒருவர் பாதிக்கப்பட்டால் பூஸ்டர் தடுப்பூசி உள்பட மூன்று டோஸ்
தடுப்பூசியும் செலுத்திக் கொண்டிருக்கும் நிலையில் அந்த நபர் மருத்துவமனையில்
சேர்ந்து சிகிச்சை பெறவேண்டிய தேவை என்பது 81 சதவிகிதம்
குறைவாக இருக்கிறது.
பிரிட்டன் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு முகமை தாமாகவே நடத்திய இன்னொரு
ஆய்வில் மூன்று டோஸ் தடுப்பூசியும் செலுத்தி கொண்டவர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு
எதிராக 88 சதவிகித பாதுகாப்பை பெற்றிருப்பதாக காட்டுகிறது. ஆனால்
இந்தப் பாதுகாப்பு அவர்களது உடலில் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது இன்னும்
தெரியவில்லை. ஒருவேளை இன்னொரு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி இனிவரும் மாதங்களில்
தேவைப்படலாம்.
இவை அனைத்துமே ஒமிக்ரான் பரவல் மற்றும் டெல்டா உள்ளிட்ட அனைத்து திரிபுகளால்
உண்டாகும் நோய்த் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்தல் ஆகியவற்றுக்கு எதிராகப் போரிட
உதவுகின்றன என்பதையே காட்டுகிறது என்கிறார் மருத்துவர் ரோனெட்டொ கேஃப்ரி.
எப்படிப் பார்த்தாலும் அனைவருக்கும் கோவிட் வரத்தான் போகிறது, அதனால் தடுப்பூசி
பெறுவதால் எந்த பலனும் இல்லை என்று நினைப்பது மிகவும் தவறு; ஏனென்றால்
தடுப்பூசிகள் கோவிட்-19 தொற்றை ஒரு
வலுவிழந்த நோயாக மாற்ற உதவுகின்றன.
பெரும்பாலான நேரங்களில் மருத்துவமனைக்குப் போகாமல், வீட்டிலேயே
தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை எடுத்துக் கொள்ளக் கூடிய நிலையை அடைய
தடுப்பூசிகள் உதவுகின்றன என்கிறார் அவர்.
குழந்தைகள் உள்பட மக்கள் தொகையில் பெரும்பாலானவர்களுக்குத் தடுப்பூசி செலுத்துதல், முகக் கவசம் அணிதல், சுகாதாரமாக இருப்பதற்கான அடிப்படை விதிகளைப் பின்பற்றுதல், கைகளை தூய்மைப் படுத்திக்கொள்ளுதல், கூட்டம் கூடுவதில் இருந்து விலகியிருத்தல் உள்ளிட்டவை இந்தப் பெருந்தொற்றில் இருந்து நாம் வெளியேற உதவும் என்று கூறுகிறார் தொற்று நோயியல் மருத்துவ நிபுணர் ரோனெட்டொ கேஃப்ரி.
(இக்கட்டுரை பிபிசி பிரேசில் சேவையின் செய்தியாளர் ஆண்ட்ரே பியர்நாத் எழுதிய கட்டுரையை மூலமாக வைத்து எழுதப்பட்டது.)
👈👉👈👉
No comments:
Post a Comment