கொரோனா: நான்காவது டோஸ் தடுப்பூசி இப்போது தேவையா?

மருத்துவ வல்லுநர்கள் சொல்வதென்ன?

சில நாடுகளில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கு பின் கூடுதலாக வழங்கப்படும், நான்காவது டோஸ் தடுப்பூசி இப்போதைக்குத் தேவை இல்லை என பிரிட்டனைச் சேர்ந்த சில மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். அப்படியானால் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியே போதுமானதா?

வயதானவர்களுக்குக் கூட, ஒமிக்ரான் திரிபினால் ஏற்படும் கடுமையான உடல்நலக் குறைவு மற்றும் நோய்வாய்ப்படுவதற்கு எதிராக அதிக பாதுகாப்பை பூஸ்டர் டோஸ், வழங்குகிறது என்கிறார்கள் மருத்துவ வல்லுநர்கள்.

 

பிரிட்டனின் சுகாதார பாதுகாப்பு முகமையின் தரவுகளின்படி, 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோர், பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொண்டு மூன்று மாதங்களுக்கு பிறகும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது, 90 சதவீதம் தவிர்க்கப்படுகிறது.

 

லேசான கொரோனா அறிகுறிகளுடன் கூடிய தொற்றுக்கு எதிரான பாதுகாப்பு பெரிதாகக் குறையவில்லை. அது சுமார் மூன்று மாதங்களில் 30% மட்டுமே குறைந்துள்ளது.

 

இதுவரை இரு டோஸ் கொரோனா தடுப்பூசி மட்டுமே செலுத்திக் கொண்டவர்கள், பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்வது ஏன் அவசியம் என்றும் தரவுகள் கூறுகின்றன.

 

இரு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகு கொரோனாவால் தீவிர நோய்வாய்ப்படுவதற்கு எதிரான பாதுகாப்பு மூன்று மாத காலத்துக்குப் பிறகு 70 சதவீதமாகவும், ஆறு மாதங்களுக்குப் பிறகு 50 சதவீதமாகவும் குறைகிறது.

 

இதுவரை இருடோஸ் தடுப்பூசி மற்றும் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ளாதவர்கள் அதைச் செலுத்திக் கொள்ள முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என பிரிட்டன் அரசுக்கு தடுப்பூசி கொள்கை தொடர்பாக ஆலோசனை வழங்கும் ஜே.சி.வி.ஐ (தடுப்பூசி மற்றும் தடுப்பூசிக்கான கூட்டுக் குழு) கூறுகிறது.

 

அதீத பரவும் திறன் கொண்ட, உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையை அதிகரித்து வரும் ஒமிக்ரான் திரிபை சமாளிக்க, இஸ்ரேல் போன்ற சில நாடுகள் நான்காவது டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தத் தொடங்கியுள்ளன.

 

"கொரோனாவால் எளிதில் பாதிக்கப்படக் கூடிய வயதானோர் குழுக்களுக்கு கூட, கடுமையாக நோய்வாய்ப்படுவதில் இருந்து, பூஸ்டர் டோஸ் தொடர்ந்து சிறப்பான பாதுகாப்பை வழங்கி வருவதாக தற்போதைய தரவுகள் கூறுகின்றன" என்கிறார் ஜே.சி.வி.ஐ குழுவின் தலைவர் பேராசிரியர் வெய் ஷென் லிம்.

 

"இது மிகவும் ஊக்கமளிப்பதாக இருக்கிறது. மேலும் பூஸ்டர் டோஸின் மதிப்பை வலியுறுத்துவதாக இருக்கிறது.

 

"ஒமிக்ரான் திரிபு தொடர்ந்து பரவி வரும் நிலையில், கடுமையாக நோய்வாய்ப்படுவதற்கு எதிராக பாதுகாப்பை அதிகரித்துக் கொள்ள, அனைவரும் முன் வந்து பூஸ்டர் டோஸையும், இரு டோஸ் தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ளவில்லை என்றால், அதை செலுத்திக் கொள்ளவும் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்" என்கிறார் பேராசிரியர் வெய் ஷென் லிம்.

 

'சரியான நேரமல்ல'

வயதானவர்கள் மோசமாக நோய்வாய்ப்படுவதற்கு எதிராக பாதுகாப்பு குறைவாக இருப்பதாக தரவுகள் கூறினால், உடனடி நடவடிக்கை தேவை என ஜே.சி.வி.ஐ அமைப்பின் துணைத் தலைவர் பேராசிரியர் ஆண்டனி ஹார்ண்டென் கூறினார்.

 

"இப்போதைக்கு எல்லா சமிக்ஞைகளும் நன்றாகவே இருக்கின்றன" என பிபிசி ரேடியோ 4ன் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கூறினார். "ஒவ்வொரு மூன்று மாதத்துக்கும் ஒரு தடுப்பூசியைச் செலுத்துவது, தடுப்பூசி திட்டத்துக்கு ஒத்து வராது" என்றும் கூறினார்.

 

கொரோனாவால் பாதிக்கப்படக் கூடிய மக்களுக்கு நான்காவது டோஸ் தடுப்பூசி செலுத்துவதற்கு சரியான நேரம் மிகவும் அவசியம் என்கிறார்.

"நான்காவது டோஸ் தடுப்பூசி செலுத்த இந்த ஆண்டின் எதிர்வரும் காலம் சரியாக இருக்கலாம்... ஆனால் இப்போது சரியான நேரமல்ல என்று நாங்கள் கருதுகிறோம்" என்றார் ஆண்டனி ஹார்ண்டென்.

 

ஆனால், கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட வாய்ப்புள்ள நோயாளிகள், நோயெதிர்ப்பு மண்டலம் முழுமையாக செயல்படாதவர்கள், வழக்கமான மூன்று டோஸ் தடுப்பூசிக்கு பதிலாக நான்கு டோஸ் தடுப்பூசியைச் செலுத்திக் கொள்வது நல்லது.

 

கொரோனா தடுப்பூசிகள் சிறப்பாக செயல்பட்டு வந்தாலும், அதிக எண்ணிக்கையில் கொரோனா தொற்று பரவி வருவதால், சிலருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு, மருத்துவமனை சிகிச்சைகள் தேவைப்படுகின்றன.

 

பிரிட்டன் முழுக்க வேறுபடும் கொரோனா விதிமுறைகள் மக்களை நிச்சயமற்ற தன்மையை உணரச் செய்வதாக தான் நம்புவதாக ஸ்வான்சீ பல்கலைக்கழகத்தின் உளவியல் விரிவுரையாளர் டாக்டர் சைமன் வில்லியம்ஸ் பிபிசியிடம் கூறினார்.

 

கொரோனா வைரஸின் ஒமிக்ரான் திரிபு அலையில் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு, குறிப்பாக வயதானவர்கள் எண்ணிக்கை கவலையளிப்பதாக பிரிட்டனின் சுகாதாரச் செயலர் சஜீத் ஜாவேத் கூறுகிறார்.

 

"மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதை இப்போதும் நாங்கள் தொடர்ந்து பார்க்க முடிகிறது. குறிப்பாக வயதானவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பது கவலைக்குரியதாக இருக்கிறது" என்கிறார் அவர்.

 

"தேசிய சுகாதார சேவையின் நிலையைப் பார்க்கும் போது, நாம் நேர்மையாக இருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். அடுத்த சில வாரங்களில் தேசிய சுகாதார சேவை மிகவும் சிக்கல் நிறைந்த ஒன்றாகலாம்" என்றார் சஜித் ஜாவேத்.

 

ஒருபக்கம் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவது அதிகரிக்கிறது என்றால், மறுபக்கம் கொரோனா தொடர்பாக இங்கிலாந்தில் சுகாதாரப் பணியாளர்கள் வருகை கணிசமாகக் குறைந்துள்ளது. இப்பிரச்னை கடந்த டிசம்பர் மாத தொடக்கத்திலிருந்து தொடர்கிறது.

 

ஜனவரி 2ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், இங்கிலாந்தில் தினமும் சுமார் 36,000 மருத்துவப் பணியாளர்கள் கொரோனா காரணங்களால் ஒவ்வொரு நாளும் பணிக்கு வரவில்லை. இது மொத்த மருத்துவ பணியாளர்கள் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட நான்கு சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மற்ற உடல்நலக் குறைவு காரணங்களைச் சேர்த்தால் இந்த எண்ணிக்கை ஒன்பது சதவீதமாக அதிகரிக்கிறது.

 

மிஷெல் ராபர்ட்ஸ்

சுகாதார ஆசிரியர், பிபிசி நியூஸ் இணையம்


No comments:

Post a Comment