சித்தர் சிந்திய முத்துகள்.......4/70(முடிவு)

 


***************************************************

சித்தர் சிவவாக்கியம் -547

இச்சகஞ் சனித்ததுவும் ஈசனைந் தெழுத்திலே

மெச்சவுஞ் சராசரங்கள் மேவுமைந்தேழுத்திலே

உச்சிதப் பல உயிர்கள் ஒங்கலஞ் செழுத்திலே

நிச்சய மெய்ஞ்ஞான போதம் நிற்குமைந்தெழுத்திலே.

 

இந்த உலகம் ஈசனுடைய நமசிவய என்ற அஞ்செழுத்தாலே, அனைத்து மேலான சராசரங்கள் யாவிலும் மேவியிருப்பது ஐந்தெழுத்தே. சத்தியமான மெய்ஞ்ஞானப் போதப்பொருளாக நிற்பதும் ஐந்தெழுத்தே. ஆனதால் ஐந்தெழுத்தை ஓதி ஐந்தெழுத்தின் உண்மைகளையும் பஞ்சபூத தன்மைகளையும் உணர்ந்து, ஐந்தெழுத்தே பஞ்சாட்சரமாகிய மெய்ப் பொருளாக இருப்பதை இருந்து அதையே நோக்கி தியானித்து ஈசன் அருள் பெறுங்கள். 

       

****************************************************

சித்தர் சிவவாக்கியம் -548

சாத்திரங்கள் பார்த்துப் பார்த்துத் தாங்குருடாவதால்

நேத்திரங்கெட வெய்யோனை நேர்துதி செய் மூடர்காள்

பாத்திர மறிந்து மோன பத்தி செய்ய வல்லிரேல்

சூத்திரப்படி யாவரும் சுத்தராவர் அங்ஙனே.                          

சாத்திரங்களைப் பார்த்துப் பார்த்து அதன்படியே நடந்து வந்தும் மெய்யறிவை அறியாமல் தாங்கள் குருடாகி இருளிலேயே இருக்கின்றீர்கள். கண்கள் கெட்டுப் போகும்படி உச்சி வெயிலில் சூரியனை நேராகப் பார்த்து மந்திரங்களை ஓதி துதி செய்யும் முட்டாள்களே! பக்குவப்பட்டு பாத்திரமாக இருக்கும் உயிரை அறிந்து, அதுவே மோனம் என்ற மெய்ப் பொருள் என்பதை உணர்ந்து, அதையே ஈசன் திருவடி எனப் பற்றி பக்தியுடன் தியானம் செய்ய வல்லவர் ஆனால், சாஸ்திரங்களின் சூத்திரப்படி, அதைத் தெரிந்தவர்கள் யாவரும் சுத்த ஞானியாக ஞானியாக ஆவார்கள். .     

 

***************************************************

சித்தர் சிவவாக்கியம் - 549

மன உறுதி தான் இலாத மட்டிப் பிண மாடுகள்

சினமுறப் பிறர் பொருளைச் சேகரித்து வைத்ததைத்

தினந்தினமும் ஊரெங்குஞ் சுற்றித் திண்டிக்கே அலைபவர்

இளமதிற் பலர்கள் வையும் இன்பற்ற பாவிகாள்.

தன்னிடம் மனதில் திட நம்பிக்கையுடன் இறைவனை எண்ணி தியானம் செய்ய வேண்டும். மனதில் உறுதியில்லாத மடமந்தை கொண்ட மாடுக்களைப் போன்று வாழ்ந்து கொண்டு பிணமாகப் போகும் மனிதர்களே! கோபம் அடைவார்கள். பிறர் பொருளை ஏமாற்றி சேகரித்து வைத்து யாருக்கும் சொல்லாமல் எதற்கும் பயனின்றி இறந்து போவார்கள். தினந்தோறும் ஊரெல்லாம் சுற்றி சோற்றுக்கு அலைபவர்கள் மெய்யின்பத்தை அறியா பாவிகள். இவர்களை வருங்காலம் தூற்றும் ஆதலால் இளமையிலேயே உண்மையை உணர்ந்து மனத்தில் உறுதியுடன் செத்தாலும் வைத்த அடி மாறாத திடநம்பிக்கையுடன் ஈசனைத் தியானித்திடுங்கள்.

 

***************************************************

சித்தர் சிவவாக்கியம் - 550

சிவாய வசியென்னவுஞ் செபிக்க இச்சகமெலாம்

சிவாய வசியென்னவுஞ் செபிக்க யாவும் சித்தியாம்

சிவாய வசியென்னவுஞ் செபிக்க வானமாளலாம்

சிவாய வசியென்பதே இருதலைத் தீயாகுமே.

சிவாய வசி என்று ஓதி செபிக்க இந்த சகம் எல்லாம் நம் வசம் ஆகுமே. சிவாயவசி என்று எண்ணி மனதிலேயே செபித்து தியானிக்க யாவும் சித்தியாகுமே. சிவாய வசி என வாசியேற்றி செபிக்க ஆகாயதலத்தில் ஆண்டவனைச் சேர்ந்து தேவர்களாகி வானம் ஆளலாம். சிவாய வசி என்பது இருதலைத் தீயாகி அதுவே சோதியான ஈசன் ஆகும்.

  

***************************************************

இத்துடன் சிவவாக்கியரின் பாடல் பதிவு முற்றுப் பெற்றது. - .அன்புடன் கே எம் தர்மா.

0 comments:

Post a Comment