சித்தர் சிந்திய முத்துக்கள்.....3/69

 

***************************************************

சித்தர் சிவவாக்கியம் - 544

செம்மை சேர் மரத்திலே சிலை தலைகள் செய்கிறீர்

கொம்மையற்ற கிளையில் பாதகுறடு செய்தழிக்கிறீர்

நும்முளே விளங்குவோனை நாடி நோக்க வல்லிரேல்

இம்மலமும் மும்மலமும் எம்மலமும் அல்லவே.

 

செம்மை மிகுந்த பழமையான மரத்தில் சிலைகளையும், தலைகளையும் செய்து வணங்குகின்றீர்கள். கொம்பில்லாத அம்மரக்கிளையில் பாதக் குறடுகள் செய்து காலில் போட்டு அழிக்கிறீர்கள். கையெடுத்து வணங்கியதும் காலில் போட்டு மிதித்ததும் ஒரே மரத்தில் ஆனது தானே. உங்களுக்குள்ளே சோதியாக விளங்கும் ஈசனை அறிந்து அவனையே நாடியிருந்து நோக்கி தியானிக்க வல்லவரானால் இம்மலமான உடம்பில் ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களும் எக்குற்றங்களும் இல்லாது மனத்தூய்மை பெறுவீர்கள். மாசற்ற மனதில் ஈசன் வாழ்வான்.  

 

***************************************************

சித்தர் சிவவாக்கியம் - 545

எத்திசை எங்கெங்குமோடி எண்ணிலாத நதிகளில்

சுற்றியும் தலை முழுகச் சுத்த ஞானி யாவரோ

பக்தியோடு அரன்பதம் பணிந்திடாத பாவிகாள்

முத்தியின்றிப் பாழ் நரகில் மூழ்கி நொந்தலைவரே. 

 

எல்லாத் திசைகளுக்கும் சென்று எங்கெங்கும் ஓடி சுற்றி வந்தாலும் எண்ணற்ற புண்ணிய நதிகளில் தலை முழுகுவதாலும் சுத்த ஞானியாக ஆக முடியுமோ! மெய்பக்தியோடு மெய்ப்பொருளை அறிந்து அரன்பதம் பணிந்திடாத பாவிகளே! மெய்ப்பொருளை அறிந்து தவம் செய்து உணர்ந்தால் தான் சுத்த ஞானி ஆக முடியும். இதைவிடுத்து அலைவதால் முக்தி கிடைக்காது. பாழும் நரகத்தில்தான் மூழ்கி நொந்து போவீர்கள். ஆதலால் மெய்ப்பொருளை அறிந்து தியானியுங்கள்.             

 

***************************************************

சித்தர் சிவவாக்கியம் - 546

கல்லு வெள்ளி செம்பிரும்பு கைச்சிடும் தராக்களில்

வல்ல தேவ ரூபபேதம் அங்கமைத்துப் போற்றிடின்

தொல்லையற்றிடப் பெருஞ் சுகம் தருமோ சொல்லுவீர்

இல்லை இல்லை இல்லை இல்லை ஈசன் ஆணை.

           

கல்லிலும், வெள்ளி, செம்பு, இரும்பு என்று காய்ச்சிடும் தராக்களிலும் வல்லமையுள்ள தெய்வ உருவங்களை பலவித பேதங்களில் அமைத்து அங்கு போற்றி வழிப்பட்டாலும் தொல்லையற்று இருக்க முடியமா? அது உண்மையில் பெருஞ்சுகமாகிய இறை இன்பத்தை தருமோ சொல்லுங்கள். உங்களில் உள்ள சோதியில்தான் மெய்யின்பம் பெற முடியுமேயன்றி வேறு வகைகளில் போற்றுவதனால் இல்லையென்று ஈசன் மீது ஆணையிட்டு சொல்கின்றேன்.

 

***************************************************

..அன்புடன் கே எம் தர்மா.

No comments:

Post a Comment