பழகத் தெரிய வேணும் – 2


மாமியார் இருக்கிறார்களா, வேண்டாம் இந்தச் சம்பந்தம்!

மாமியார்’ என்று சொல்லி, ஒரு துரும்பைத் தூக்கிப்போட்டால்கூட அது துள்ளுமாம். இதனாலோ என்னவோ, மகளின் கல்யாணத்துக்கு முன், ‘மாமியார் இல்லாத இடமாகப் பாருங்கள்!’ என்று பலர் கோரிக்கை விடுக்கிறார்கள்.

 

ஏன் மாமியாருக்கும் பெண்களுக்கும் ஒத்துப் போவதில்லை?

 

கதை:

வேற்றுமொழிப் பெண்ணை மகன் காதலித்து, உறுதியாக அவளையே மணந்துவிட்டது குறித்து வந்தனாவிற்கு வருத்தம்.

 

தன்போல் இல்லாமல், மருமகள் புவனா அதிகம் படித்து, லட்சக்கணக்கில் சம்பாதிப்பது வேறு அவளால் பொறுக்க முடியாது போயிற்று.

 

நாள் முழுவதும் அலுவலகத்தில் உத்தியோகம் பார்த்துவிட்டு வீடு திரும்பும் புவனாவிடம், “எனக்கு ஒத்தாசையாக வீட்டு வேலைகளைப் பார்த்துக்கொண்டு இரேன். எதுக்கு அலையறே?” என்று தினமும் குறை கூறுவாள்.

 

இப்படி ஓயாமல் என்னிடம் தப்பு கண்டுபிடிக்கும் மாமியாருடன் நான் வீட்டிலேயே தங்கியிருந்தால், எனக்குப் பைத்தியமே பிடித்துவிடும்!’ என்று புவனா எண்ணியதில் என்ன வியப்பு?

 

மெத்தப் படித்த டவுன் மருமகள் – கிராமப்புறத்தில் அதிகம் படிக்காது வளர்ந்த மாமியார். முகத்தைத் தூக்கிவைத்துக்கொள்ளும் தாய், உற்சாகமின்றி வளையவரும் மனைவி. இவர்களது மோதலில் புவனாவின் கணவனுக்குத்தான் தலைவலி.

 

புவனா பதின்மவயதுப் பெண்ணாக இருந்தபோது, நான் அவளுக்கு அறிவுரை கூறினேன்: “கல்யாணமானதும், உன் சம்பளத்தை அப்படியே கணவன் கையில் கொடுத்துவிடாதே. இப்படித்தான் சீனப்பெண்களுக்குச் சொல்லிக்கொடுப்பார்களாம். சின்ன வீடு, குடி, சூதாட்டம் என்று ஆண்கள் பணத்தை விரயம் செய்துவிடுவார்கள். பெற்றோரோ, மனைவியோ, இன்னொருவர் சம்பாதித்த காசின் அருமை அதைச் சுலபமாகப் பெறுகிறவர்களுக்குத் தெரிவதில்லை”.

 

இப்போது, தன் சம்பாத்தியத்தை தன் பெயரில் வங்கியில் சேமித்து வைக்கிறாள். கணவனும் அதைப் பொருட்படுத்துவதில்லை. (முதலிலேயே கண்டிப்பாகச் சொல்லி இருப்பாள்). பொருளாதாரச் சுதந்திரம் அவளுக்குச் சற்று தெம்பை அளிக்கிறது.

 

அன்பு என்பது வகுத்தல் கணக்கு இல்லை, பெருக்கல் என்பது இவர்களுக்குத் தெரியாமல் போய்விட்டது. ஒருவர்மீது அன்பு செலுத்தினால், இன்னும் பலர்மேல் அன்பு வைக்க முடியாதா, என்ன!

 

மாமியார்களின் புகார்:

என்னை ‘அம்மா’ என்று அழைக்கிறாள். ஆனால், நான் சொல்வது எதையும் கேட்பதில்லை”.

 

சிறுகுழந்தைகளாக இருந்தபோது, நம் பெண்கள் நாம் சொல்வதைக் கேட்பார்கள். ஆனால், அவர்களுக்கு எத்தனை வயதானாலும், விடாப்பிடியாக ஒவ்வொன்றையும் சொல்லிக்கொடுத்துக்கொண்டே இருந்தால் அவர்களுடைய சுயமுயற்சி அற்றுப்போய்விடும் அபாயம் இருக்கிறதே!

 

அவர்களுக்கு நேர்மாறாக வளர்க்கப்பட்டிருக்கும் சுதந்திரமான பெண்கள் பிறர் தம்மைக் கட்டுப்படுத்த முனையும்போது, அவர்களை அலட்சியப்படுத்தி, தம் வழியிலேயேதான் நடப்பார்கள்.

சுபத்ரா இந்த விதிக்கு விலக்கு.

 

கதை:

பெரிய படிப்பு படித்திருந்தும், சுபத்ராவை உத்தியோகம் பார்க்க அனுமதிக்கவில்லை கணவன். உடல்வதையாக அவன் என்ன கொடுமை செய்தபோதிலும் அடங்கியே இருந்தாள்.

 

அவன் தந்தையும் அப்படித்தான் இருந்ததாகக் கூறி, மாமியார் அன்பைப் பொழிந்து, அவளைச் சமாதானப்படுத்துவாள்.

 

ஒருமுறை, ரத்தக்களறியாகக் கிடந்தவள் பொறுக்கமுடியாது, காவல்துறையினரை வரவழைக்க, விவாகரத்தில் முடிந்தது.

 

ஆனால், கதை இத்துடன் முடியவில்லை.

 

அம்மாவுக்கு உடம்பு சரியில்லை. நீ வந்து பார்த்துக்கொள்,” என்று கணவன் தகவல் அனுப்ப, இன்னொரு ஊரிலிருந்து வந்தாள் சுபத்ரா.

 

எப்போது உங்களுடன் இருந்த உறவு முறிந்ததோ, அப்புறம் உங்கள் தாய் மட்டும் எனக்கு என்ன உறவு?’ என்று கேட்கத் தோன்றாத அவளுடைய நல்ல குணம் கணவனுக்குப் புரியாது போனது ஏன்?

 

தன் ஒரே மகனது வாழ்க்கையில் இன்னொருத்தி குறுக்கிட்டுவிட்டாளே என்று ஆத்திரப்படுகிறார்கள் சராசரி மாமியார்கள்.

 

ஏதோ ஒரு முறை கீழே விழுந்து அடிபட்டுக்கொண்ட அந்த விதவைத்தாய், ‘இனி நடக்கலாம்,’ என்று மருத்துவர்கள் பச்சைக்கொடி காட்டியபின்னரும் படுக்கையைவிட்டு எழுந்திருக்க மறுத்தாள். இடுப்பிலோ, காலிலோ வலி கிடையாது. ஆனால், வேண்டாத மருமகளைத் தண்டிக்க வேறு என்ன வழி?

 

அந்த இரு பெண்களிடையே சிக்கிக்கொண்ட ஆணுக்குத்தான் சிரமம். யார் பக்கம் சாய்வது?

 

எப்போதோ படித்த துணுக்கு நினைவுக்கு வருகிறது.

 

முதலாமவர்: என் பெண்ணை மாப்பிள்ளை சினிமா, பீச் என்று அடிக்கடி அழைத்துப்போகிறார்!

 

இரண்டாமவர்: ஆகா! கேட்பதற்கே ஆனந்தமாக இருக்கிறது. உங்கள் மகன் எப்படி இருக்கிறான்?

 

முதலாமவர்: அதை ஏன் கேட்கிறீர்கள்! என் மருமகள் அடிக்கடி சினிமாவுக்கு அழைத்துப் போங்கள், பீச்சுக்கு அழைத்துப் போங்கள் என்று அவனை நச்சரிக்கிறாள்.

 

இரண்டாமவர்: அநியாயமாக இருக்கிறதே!

 

மாமியார் இல்லாத இடமாகப் பாருங்கள்!’ என்று கோரிக்கை விடுக்கிறார்கள் பெண்ணைப் பெற்றவர்கள்.

 

உலகின் போக்கு புரிந்து, தாய் தந்தையரைத் தனியே தவிக்க இசையாத மகன்களும் இல்லாமல் இல்லை.

 

கதை:

பாலன் உயர்கல்வி பெற்றவன். செழிப்பான எதிர்காலம் இருந்தது. அதனால், பெண்ணைப் பெற்றவர்கள் அவனைத் தன் மருமகனாக்கிக்கொள்ள முயன்றார்கள். ஆனால், அவன் ஒரு விஷயத்தில் கராறாக இருந்தான்: “கல்யாணத்திற்குப்பின், என் பெற்றோர் என்னுடன்தான் இருப்பார்கள்!’

 

சிலர் அஞ்சி விலக, ஒரு பெண் துணிந்து அவனை மணந்தாள்.

 

மகள் தன் சொற்படி மட்டும் நடக்கவேண்டும் என்பதுபோல் மிரட்டி அவளை வளர்த்திருந்தார் வினுதாவின் தந்தை. தாயும் அவளைச் சரிவர கவனிக்காது, உத்தியோகத்திற்காகவே நெடுநேரத்தைச் செலவழித்திருந்தாள்.

 

கல்யாணமான புதிதில், எந்த ஒரு காரியத்திற்கும் தாயின் ஆலோசனையை நாடினாள் வினுதா.

 

என்னிடம் கேட்கக்கூடாதா!” என்று மாமியாருக்குச் சற்று வருத்தம் ஏற்பட்டது.

 

மகன் தாயைச் சமாதானப்படுத்தினான்: “இத்தனை வருடமும் அம்மாவிடம்தானே கேட்டுச் செய்திருக்கிறாள்! விட்டுப்பிடி!”

 

மாமியார் பொறுமை காத்தாள்.

புக்ககத்திற்கு வந்த வினுதாவுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. அவளை அவள் போக்கில் விட்ட கணவன்!

 

உனக்கு எது மகிழ்ச்சியைத் தருகிறதோ, அதைச் செய்!’ என்று அவளுக்குப் பிடித்த கலையில் மீண்டும் ஈடுபட உற்சாகம் அளித்து, இயன்றவகையில் தானும் பங்கெடுத்துக்கொண்டான் பாலன்.

 

தான் பெற்ற குழந்தையை வினுதா மிரட்டி வளர்க்க ஆரம்பித்தபோது, நல்லவிதமாக அறிவுரை கூறிய புக்ககத்தினரிடம், “எங்கப்பா இப்படித்தான் என்னை வளர்த்தார்,” என்றாள். திமிராக இல்லை. ‘நான் வேறு எப்படி நடக்கமுடியும்!’ என்ற விரக்தியுடன்.

 

தான் பெற்ற பெண்ணைவிட அதிகமாக அவளிடம் அன்பு செலுத்தினாள் மாமியார். அவள் போக்கில் தலையிடாது, மாமனாரும் தன் மகிழ்ச்சியை அவளுடன் பகிர்ந்துகொண்டார்.

 

நாளடைவில், கணவன் அளித்த சுதந்திரமும், வீட்டுப் பெரியவர்களின் அன்பும் அவளைச் சிறுகச் சிறுக மாற்றியது. குறைநிறைகளுடன் அவள் இருந்தபடியே ஏற்றதால், அவர்களிடம் மரியாதை பெருகியது.

 

சில வருடங்களில், கணவனின் உறவினர்களைத் தனக்கும் வேண்டியவர்களாக ஏற்றாள். உளமார அவர்களை உபசரித்தாள்.

 

இந்தக் கதையில், யாரால் அக்குடும்பம் எல்லாருக்கும் நிறைவளிப்பதாக மாறியது?

 

கேவலம் பெண்! தனக்குக் கீழ்ப்படிந்து நடந்தால்தான் அவள் நல்ல மனைவி!’ என்றெண்ணாது நடந்த பாலனைத்தான் முதலில் குறிப்பிடவேண்டும். மனைவியின் பொழுதுபோக்கில் ஆர்வம் காட்டி, அத்துறையில் அவள் மேலும் வளர வழிவகுத்து இருக்கிறான்.

 

குழந்தைகளை இப்படி அதிகாரம் செய்து, மிரட்டி வளர்க்கிறாளே!’ என்று வருந்திய தாயைச் சமாதானப்படுத்தி இருக்கிறான்.

 

பெண் ஆணுக்கு அடிமை’ என்று, காலத்துக்கு ஒவ்வாத கருத்தைப் பின்பற்றும் ஆண்கள்தாம் மனைவிமாரைச் சாடுகிறார்கள். திருமணம் ஒருவனது நிம்மதியைக் குலைத்துவிடும் என்று முழங்குகிறார்கள்.

 

மனைவிக்கும் உணர்வுகள் உண்டு, அவைகளை மதித்து நடந்தால் அவள் நல்ல மனைவியாக நடப்பது மட்டுமின்றி, சிறந்த மருமகளாகவும் பாராட்டப்படுவாள் என்று புரிந்து வைத்திருக்கும் பாலனைக் கேட்டேன்: “உன் மணவாழ்க்கை எப்படி இருக்கிறது?”

“Fantastic!”

திருமணமாகி சுமார் பதினைந்து ஆண்டுகளுக்குப்பின் எத்தனை ஆண்கள் இப்படிச் சொல்வார்கள்?


✍நிர்மலா ராகவன்:-எழுத்தாளர், சமூக ஆர்வலர். மலேசியா

தொடரும்.... 


👉அடுத்த பகுதி வாசிக்க அழுத்துக...

Theebam.com: பழகத் தெரிய வேணும்-3:

👉👉ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக 

No comments:

Post a Comment