-
பெண் என்றால் தியாகியா?
ஆண் என்பவன் அடக்கி ஆள்பவன். பெண் அவனுக்கு அடங்குபவள்.
பல்லாண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்ட நியதி.
”இது
இக்காலத்திற்கும் பொருந்துமா?” என்ற யோசனை எழுகிறது.
’காலம் மாறினால்
என்ன, நாங்கள் மாற
மாட்டோம்!’ என்று விடாப்பிடியாகப் பிடித்துக்கொண்டிருக்கின்றனர் சில ஆண்கள். ஏனெனில்
அடக்குவது அவர்களுக்குத்தானே சாதகமாக அமைந்திருக்கிறது!
எப்படியெல்லாம் அடக்குகிறார்கள்?
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பெண்மணி ஒருத்தி கூறினாள்: ”நான்
திரைப்படங்கள் பார்ப்பதில்லை. என் கணவருக்குப் பிடிக்காது”.
“விதவிதமான
ஜாக்கெட் அணிவீர்களா?”
“கிடையாது.
அவருக்குப் பிடிக்காது”.
“நான்
திருமணத்திற்குப்பிறகு படிப்பைத் தொடரலாம், வேலை பார்க்கலாம் என்றார். ஆனால் விடவில்லை”.
இப்படியாக, கணவருடைய
விருப்பங்களுக்கு மட்டுமே மதிப்புக் கொடுத்து நடக்கும் பெண்ணுக்கு வெளிப்படையாக
எதிர்ப்பது அழகாகுமோ என்ற குழப்பம். குடும்பத் தகறாறுகளைப் பிறரிடம் பகிர்ந்துகொள்ளவும்
தயக்கம்.
நாளடைவில், தன்
சுயவிருப்பங்களை மறைத்து, மறந்ததுபோல் நடந்துகொள்ள முற்படுகிறாள். கணவருக்காகவும்
குழந்தைகளுக்காகவும் நாள் முழுவதும் செலவிடுவதுதான் தான் பெண்ணாகப் பிறந்ததன் பயன் என்பதுபோல்
நடக்கிறாள்.
அவளை எவர் பாராட்டுகிறார்களோ, என்னவோ, அவளுக்கு மகிழ்ச்சி கிடைப்பதில்லை. ஒருவித
அயர்ச்சிதான்.
’நான் என்
வாழ்க்கையைப் பிறருக்காகத் தியாகம் செய்துவிட்டேன்!’ என்று சொன்னால் கேட்பதற்கு
நன்றாக இருக்கலாம். அந்தத் `தியாகி’யின்
மனப்போராட்டம் எவருக்குப் புரியும்?
சில ஆண்கள் நான்குபேருக்கு முன்னிலையில் மனைவியை அவமரியாதையாகப் பேசித்
திட்டினால், தமது கௌரவம்
உயர்ந்துவிட்டதென நம்புகிறார்கள். பிறரைத்
தாழ்த்தினால், நாம் உயர்ந்துவிடுவோமா?
மனைவி எதிர்ப்பு காட்டாமல், `அவர் குணம் அப்படி!’ என்று விட்டுக்கொடுக்கிறாள். இதனால் துணிச்சல் பெருக, பிற பெண்களிடமும் அப்படியே நடந்துகொள்ள முற்படுகிறார்கள் சிலர்.
பல குடும்பத்துடன் ஒன்றாக வெளியே செல்லும்போது, தன் அனுமதி
பெற்றுத்தான் ஒவ்வொரு பெண்ணும் செயல்பட வேண்டும் என்று எண்ணுகிறார்கள்
இப்படிப்பட்டவர்கள்.
அனேகமாக, எல்லாப் பெண்களும் அடங்கிப்போய்விடுவார்கள். அபூர்வமாக ஒரு பெண் எதிர்த்தால், முதலில் கோபமும், பிறகு அச்சமும் எழும். இத்தகைய ஆண்களுக்குத் தாம் செய்யும் தவறு என்னவென்று புரிவதில்லை.
மிருக இனங்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது எவ்வளவோ இருக்கிறது.
கதை
ஓர் அறுவை சிகிச்சை முடிந்து நான் வீடு திரும்பியபோது, எங்கள் வீட்டுப்
பூனைக்குட்டி நான் அமர்ந்திருந்த நாற்காலியின்மேல் பத்திரமாக ஏறி, ஊசி குத்தியதால்
மிகவும் வலித்த பாகத்திற்குச் சற்று கீழே அருமையாக நக்கிக் கொடுத்தது. (அதற்கு
எப்படித் தெரியும்,
எங்கு ஊசி குத்தப்பட்டதென?)
குட்டியாக இருக்கையில் என் மடியிலேயேதான் உட்கார்ந்திருக்கும். இடி இடித்தால், பயந்து ஓடிவந்து, என் மடியில்
புகல் தேடும். நான் பாடும்போது, பூனையின் முதுகில் தாளம் போட, அதன் வாலும்
தாளத்திற்குச் சரியாக ஆடும்! நன்றாகத் தமிழ் புரியும். `விஷமம் பண்ணினா
அடி!’ என்று நான் மிரட்டியதில் புத்தகங்களைக் கிழிப்பதில்லை.
நான்தான் தினமும் இரு பூனைகளுக்கும் (இப்போது மூன்று) ஆகாரம் போடுவேன். அது
எனக்குப் பெரிய விஷயமில்லை. ஆனால், அவற்றுக்கு முக்கியம். பரஸ்பர அன்பை வளர்க்கும்
ஒரு செயல். அதைவிட முக்கியம் அன்பாகப் பேசி நடத்துவது. ஒரு சிறு காகிதத்தைச்
சுருட்டி தரையில் போட்டால், மிகுந்த மகிழ்ச்சியுடன் `கால்பந்து’
விளையாடும்.
இப்போது, ’பூனை’ என்ற
இடத்தில் மனைவியை வைத்துப் பாருங்கள். அவளிடம் அருமையாக நடந்துகொள்ளாது, `நான் சம்பாதித்து
உனக்குச் சாப்பாடு போடுகிறேன். அதனால் நீ எனக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்,’ என்பதுபோல்
நடத்தி, பிற ஆண்களிடம், `என்
மனைவி நான் சொல்வதைத் தட்டமாட்டாள்!’ என்று பெருமை
பேசுவார்கள் சிலர்.
பெண்ணுக்கென தனி மனமே இருக்காதா? அப்படியே இருந்தாலும், அதை அடக்கினால்தான் நல்லவளா?
வாய்ப்பு கிடைக்கும்போது, மனைவி நெருக்கமான ஓரிருவரிடம் தன் ஏக்கங்களைக்
கொட்டக்கூடும். அதனால் நிலைமை என்னவோ மாறப் போவதில்லை.
குழந்தைகளுக்காகத் தியாகம்
’எனக்குத்தான்
ஆசைப்பட்டதெல்லாம் கிடைக்கவில்லை. என் குழந்தைகள் கஷ்டமே படக்கூடாது.’
நடக்கிற காரியமா?
எவ்வளவுதான் கவனமாக வளர்க்கப்பட்டிருந்தாலும், மனிதனாகப் பிறந்த
எவருமே கஷ்டமே இல்லாமல் வாழ்க்கை நடத்திவிட முடியாது.
’என் குழந்தைகளின் முன்னேற்றத்துக்காக என் ஆசைகளை ஒடுக்கிக்கொண்டுவிட்டேன்!’
இந்த மனப்பான்மையால் ஒரு தாயின் மகிழ்ச்சி குன்றிவிடும். ஏதோ ஒரு வகையில், குழந்தைகளையும்
பாதிக்கும்.
’நான் உனக்காக
எவ்வளவு செய்கிறேன்!’ என்று சுட்டிக் காட்டியபடி இருந்தால், அதுவும்
ஒருவகையான வதைதான் – உணர்ச்சிபூர்வமான வதை.
பயந்த குழந்தை குற்ற உணர்ச்சியுடன், தாய் சொல்லைத் தட்டாது நடக்க முற்படுகிறான்.
இதனால் தாய், மகன்
இருவருக்குமே சுதந்திரம் கிடைப்பதில்லை. அவள் எண்ணியதுபோல் அவன் சிறப்படையாது
போய்விட வாய்ப்புண்டு. இருவருக்குமே ஏமாற்றம்தான்.
தியாகம் எதற்கும்?
எழுத்தாளர்களான பெண்கள் பலர், திருமணத்திற்குப் பிறகு எழுதுவதை
நிறுத்திவிடுகிறார்கள். அவர்கள் கூறும் காரணம்: `குடும்பத்தைக்
கவனிக்கவே நேரம் சரியாக இருக்கிறது! எழுதினால் என்ன கிடைக்கிறது!’
இது தம்மையே சமாதானப்படுத்திக்கொள்ளும் முயற்சி.
நமக்குப் பிடித்த காரியங்களைச் செய்யவும் சிறிது நேரத்தை ஒதுக்கினால், முதலில் ’சுயநலம்’ என்று நமக்கே தோன்றலாம். அல்லது, பிறர் அவ்வாறு
பழி சுமத்தலாம்.
ஆனால், ஒருவர் தன் சொந்த
விருப்பங்களுக்கு மதிப்பு கொடுக்காது நடப்பதால் சிரிப்பையே
இழந்துவிடும் அபாயம் இருக்கிறது. அப்படியே சிரித்தாலும், அது பிறரிடம்
குறைகண்டு, அதனால் ஏற்படும்
அற்ப மகிழ்ச்சியால் இருக்கும்.
ஒப்பீடும் நிம்மதியும்
நாம் ஒவ்வொருவரும் தனிப்பிறவி. வெவ்வேறு திறமைகளைக் கொண்டு பிறக்கிறோம்.
பிறருடன் நம்மை ஒப்பிட்டுக்கொள்ளும்போதுதான் வேண்டாத குழப்பங்கள் எழுகின்றன.
பெரிய படிப்பு படித்தால்தான் மதிக்கத்தக்கவர் என்பதில்லை.
பெரும்பாலும்,
’தான் அதிகம் படிக்கவில்லையே, பெரிய
உத்தியோகத்தில் அமரவில்லையே!’ என்ற ஏக்கத்தை உள்ளடக்கி வைத்திருக்கும் ஆண்கள் வீட்டிலிருக்கும் பெண்களை அடக்கியாள்வார்கள்.
தங்கள் நிலையை உள்ளபடி ஏற்றால் வருத்தம் எழாது.
இக்குணத்தைப் பெண்களிடமும் காணலாம்.
கணவர் கல்வித் தகுதியிலோ, செல்வச் செழிப்பிலோ தன்னைவிடத் தாழ்ந்த
நிலையில் இருந்தால் அவரை ஆட்டி வைப்பார்கள்.
இருப்பினும், ஆண்கள் வீட்டில்
கழிக்கும் நேரத்தைவிட அதிகமாக வெளியில் செலவிடுவதால் அதிக உளைச்சலுக்கு
ஆளாகிறார்களோ, என்னவோ! நிலைமையை
மாற்றமுடியாது என்று புரிந்தபின், அதை மாற்றும் வழி தெரியாது, ’உத்தியோகமே கதி!’ என்று சிலர்
காலத்தைக் கழிக்கிறார்கள். இதனால் நஷ்டம் பெண்ணுக்குத்தான். கணவர் தன்னைவிட்டு ஏன்
விலகுகிறார் என்று புரியாது, மனஉளைச்சலுக்கு ஆளாவாள்.
கல்யாணமும் உல்லாசமும்
’அவர் எப்போதும்
சிரித்த முகத்துடன்,
ஜாலியாக இருக்கிறார்! காரணம் —
அவர் கல்யாணமே செய்துகொள்ளவில்லை!’ என் சக ஆசிரியர் ஒருவரைப்பற்றி நாங்கள்
கணித்தது.
முட்டாள்தனமாக மணவாழ்க்கையில் சிக்கி, பலரும் திண்டாடுகிறார்களே என்று பயந்து, எத்தனைபேர் ’கல்யாணமே வேண்டாம்’ என்று வைராக்கியமாக இருக்கிறார்கள்!
இல்லறத்தில் எப்போதும் ஒருவர் கை மட்டுமே ஓங்கி இருந்தால் இன்னொருவருக்கு
கசப்புதான் மிஞ்சும். இல்லையேல், எந்தவித எதிர்பார்ப்புமின்றி வாழ்க்கையைக்
கடத்தும் வெறுமை.
அன்பு என்பது…
’சாப்பிட்டாயா? தூங்கினாயா?’ என்று
விசாரிப்பதுடன் அன்பு நின்றுவிடுவதில்லை.
கணவனோ, மனைவியோ, மற்றவருடைய தனிப்பட்ட ஆசைக்கும் மதிப்பு கொடுத்து, இயன்றவரை தானும் அதற்கு உறுதுணையாக இருந்தால்தான் அன்பும் மரியாதையும் நிலைக்கும்.
(தொடரும்….)
நிர்மலா ராகவன்-:எழுத்தாளர், சமூக ஆர்வலர். மலேசியா.
No comments:
Post a Comment