அரைவைக் கல் / திரிகை [hand cranked
millstone]
அம்மியை அடுத்து, அதே தொழில் நுட்பத்தை, ஆனால் முன்னுக்கு பின்னுக்கு தேய்த்து அரைக்கும் அசைவுக்கு பதிலாக. வட்டமாக
தேய்த்து சுற்றி அரைக்கும் தொழில் நுட்பம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு, சக்கரம் கண்டு பிடித்த பின், விருத்தி அடைந்து சமையல் கலையுடன் சேர்ந்து கொண்டது. இங்கு
மேல் கல்லில் புனல் வடிவ வாய் [opening] அமைக்கப் பட்டது, இது அரைப்பவர் தானியத்தை
அதில் நிரப்பிக் கொண்டே இருப்பதற்கு உதவியது; அப்படி நிரப்பப் பட்ட தானியம் கற்களுக்கு இடையே தானாகவே சென்று அரைபட்டது.
உலர்ந்த தானியங்களை அரைக்கவும், பொருட்களை மாவு ஆக்கவும், பருப்பு வகைகள், தானியங்களை
உடைத் தெடுக்கவும் திரிகை பயன் படுத்தப் பட்டன.
உதாரணமாக, பயறு உழுந்து போன்ற தானியங்களை உடைத்துப் பருப்பாக்குவதற்கோ
அல்லது மாவாக்குவதற்கோ பயன் பட்ட வட்ட வடிவில் அமைந்த மேலும் கீழும் இரு
பாகங்களைக் கொண்ட கருங் கல்லினாலான சாதனம் திரிகை என்று சொல்லலாம்.
இது, வட்டவடிவில் இரண்டு கருங் கற்கள் குடைந்து
வைக்கப்பட்டிருக்கும். ஒன்று நகர முடியாதபடி அடி கனத்து இருக்கும். மேல் கல் சற்று
கனம் குறைந்து காணப்படும். மேல் கல்லில் கைப்பிடி அமைப்பதற்கு ஒரு சிறு துளை
இருக்கும். அத்துளையில் மரக்கொம்பினால் ஆன கைப்பிடி பொருத்தப் பட்டிருக்கும்.
மேல் கல்லையும், கீழ் கல்லையும் நடுவில்
சிறிய அச்சு ஒன்று இணைக்கும்.மேல் கல்லில் உள்ள வாய் அகன்ற துளையின் வழியாக
தானியங்களை சிறிது சிறிதாக போட்டு கல்லை சுற்றுவார்கள். சுற்றும் போது, தானியங்கள் அரை பட்டு, மாவு பொருட்கள் கல்லைச் சுற்றி விழும். இது தான் இதன் தொழிற்பாடு ஆகும்.
பண்டைய தமிழ் இலக்கியத்தில் திரிகை குறிப்பிட்டு இருப்பதும் கவனிக்கத்தக்கது. உதாரணமாக , பெரும்பாணாற்றுப்படையில்,
"களிற்றுத்
தாள் புரையும் திரிமரப் பந்தர்
குறுஞ்சாட்டு உருளையொடு கலப்பை சார்த்தி,!
என வரி 187 -188, யானைக் காலின் அடிபாகத்தைப் போன்று திரிகை இருந்தது. அதன் அருகே கலப்பையும் சாத்தி வைக்கப்பட்டிருக்கிறது என்று கூறுகிறது.
"ஆடும்
திரிகை அசைந்து நிற்கும் முன்
ஓடும் சிந்தை ஒன்பதாயிரம்"
என்கிறது ஒரு பழமொழி. மேலும் அகநானுறு 224, வீட்டுப் பெண்கள் பதமாகக் காய்ந்த அரிசியைப் பெய்து, சுற்றுவதிலே ஈடுபட்டிருக்கும் திரிகையின் குரல் ஒலி போல, என
" மனையோள்ஐது
உணங்கு வல்சி பெய்து முறுக்கு உறுத்த
திரிமரக் குரலிசைப் கடுப்ப, "
என்று வரி 11 - 13 கூறுகிறது. பைபிளிலும், உதாரணமாக எரேமியா 25:10 [Jeremiah 25:10] இல், திரிகையை பற்றி கூறி இருப்பதும், அந்த காலத்தில் இதன் முக்கியம் எமக்கு தெரியவருகிறது.
"அங்கே கொண்டாட்டமோ குதூகலமோ இனி இருக்காது. மணமகனுடைய
குரலும் மணமகளுடைய குரலும் மாவு அரைக்கும் சத்தமும் கேட்காது. விளக்கும்
எரியாது." [I will banish from them the sounds of joy and gladness, the voices of bride
and bridegroom, the sound of millstones and the light of the lamp.]
-என்கிறது அந்த வசனம்.
“இதோ, பூமியின்மேல் எங்கும் விதைதரும் சகலவிதப் பூண்டுகளையும், விதைதரும் கனிமரங்களாகிய சகலவித விருட்சங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகள் உங்களுக்கு ஆகாரமாயிருக்கக்கடவது” என முதல் தம்பதியரான ஆதாம் ஏவாளிடம் யெகோவா சொன்னார் என ஆதியாகமம் 1:29 கூறுகிறது. ஆனால், மனிதரால் தானியங்களை அப்படியே முழுமையாக சாப்பிட்டு ஜீரணிப்பது இலகுவல்ல. இங்கு தான் அரைவைக் கல்லின் அல்லது கல் உரலின் செயல் பாடு முக்கியமாகிறது.
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]:-பகுதி 05 வாசிக்க அழுத்துங்கள்- Theebam.com: "தமிழர்களின் பண்டைய நான்கு கற்கள்" / பகுதி 05:
ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துங்கள்- Theebam.com: "தமிழர்களின் பண்டைய நான்கு கற்கள்" / பகுதி 01:
No comments:
Post a Comment