"தமிழர்களின் பண்டைய நான்கு கற்கள்" / பகுதி 01



பண்டைய தமிழர்கள் தம் அன்றாட தேவைக்காகவும் மற்றும் சில பண்பாட்டு தேவைக்காகவும், குறிப்பாக நான்கு வெவ்வேறு கற்களை பாவித்தது தொல்லியலாளர்கள் மூலம் நாம் இன்று அறிகிறோம். அவை அரைவைக் கல் [அம்மி, ஆட்டுக்கல், திரிகை]கல் உரல் [மா இடிக்கும் உரல், எண்ணெய் பிழியும் செக்கு கல்], ஆவுரஞ்சிக் கல் மற்றும் சுமை தாங்கிக் கல், நடுகல் ஆகும். இங்கு அரைக்கும் கல் மேலும் மூன்று பிரிவாகவும், கல் உரல் மேலும் இரண்டு பிரிவாகவும், அதன் தொழிற் பாட்டின் அடிப்படையில் பிரிக்கப் பட்டுள்ளது. ஆட்டுக்கல் அமைப்பில் கல் உரல் மாதிரி இருந்தாலும், தொழிற் பாட்டில் அரைத்தால் முதன்மை பெறுகிறது. எனவே இதை அரைவைக் கல்லின் கீழ் வகை படுத்தி உள்ளேன். இவைகளில் அம்மி மற்றும் கல் உரல் இன்னும் கிராமப்புறங்களில் பாவனையில் இருப்பதையும், மற்றும் நடுக்கல், ஞாபகார்த்த கல்லாக [கற்களாக] இன்னும் தொடர்வதையும் காண்கிறோம். என்றாலும் ஆவுரஞ்சிக் கற்களினதும் அது போல்  சுமை தாங்கிக் கற்களினதும்  பாவனை பொதுவாக அற்று போய் விட்டது.

 

மாடுகள் தமது உடல் எரிச்சலைப் போக்குவதறகு ஆவுரஞ்சிக் கற்களும், மனிதன் தன் சுமையால் ஏற்படும் வலிக்கு ஆறுதல் கொடுக்க சுமை தாங்கிக் கற்களும் அன்று பாவிக்கப்பட்டன. இவை தொழிற்பாட்டில் மாடுக்கும் மனிதனுக்கும் ஆறுதல் கொடுப்பதால், அவையை ஒன்றாக வகுத்துள்ளேன், ஒருவேளை பொதுவாக "ஆறுதலாளிக்கும் கற்கள்" என்று கூறலாமோ என எனக்கு தோன்றுகிறது

 

நாம் மனித வரலாற்றை படிப்போமானால், உணவு தானியங்களை பதப்படுத்தலில் முதலில் அம்மி போன்ற ஒன்று பாவிக்கப்பட்டு இருப்பதையும் [படம் 01] அதை தொடர்ந்து ஆட்டுக்கல் அல்லது கல் உரல் போன்ற ஒன்று பாவனைக்கு வந்ததையும் அறிய முடியும். உதாரணமாக, மனித இனம் முதலில் தோன்றியதாக கருதப்படும் ஆப்பிரிக்கா மற்றும் பண்டைய நாகரிகங்கள் தோன்றியதாக கருதப்படும்  மெசொப்பொத்தேமியா, எகிப்து, சிந்து வெளி போன்ற இடங்களில் மேற்கொள்ளப் பட்ட அகழ்வாராய்ச்சியில் இதற்கான பல தடயங்கள் கண்டு எடுக்கப் பட்டுள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.

 

மிக பண்டைய காலங்களில், வேடடையாடி உணவு சேகரிப்பவர்கள், ஆயர்கள், மற்றும் விவசாயிகள் [hunter-gatherers, pastoralists, and agriculturalists] எல்லோரும் அரைக்கும் கல் தொழில் நுட்ப பாரம்பரியத்தை [Grinding-stone tools are a long-established technological tradition] தமது வாழ்வாதாரங்களில் இணைத்து இருந்தார்கள் என்பதை நாம் இன்று தொல்பொருள் ஆய்வு மூலம் அறிகிறோம். உண்மையில் மனித இனம் என ஒன்று உருவாகிய ஆதி காலத்தில், காட்டு தாவர இனங்களில் [wild species or plants] இருந்து பெறப்படும் தானியங்களை பதப்படுத்த இந்த தொழில் நுட்பம் முதலில் பயன்படுத்தப் பட்டுள்ளது. மேலும் தொல்பொருள் சான்றுகளை அல்லது சூழல்களை இணைத்து பார்க்கும் பொழுது [in archaeological contexts], அரைத்தல் ஒரு சமூக மற்றும் கலாச்சார ரீதியாக இணைக்கப் பட்ட ஒரு நடைமுறையாக [grinding as a socially and culturally embedded practice] உருவாகியதையும் அறிய முடிகிறது.

 

உணவு மற்றும் பல்வேறு பொருட்கள், அரைத்தல் மற்றும் நசுக்குதல் [grinding and crushing] போன்றவற்றால் பதப்படுத்தப் படும் பொழுது, அது பல நன்மைகளை தருகிறது என ஆதிகால மனிதன் உணர தொடங்கிய பொழுது, உதாரணமாக, முதலில் அவைகளை அரைத்தால் அல்லது சிறிதாக உடைத்தால், கடின தானியங்களை இலகுவாக சமைக்க முடியும் மற்றும் அது எளிதில் ஜீரணமாகும் என்பதை அனுபவ ரீதியாக அறிந்த பொழுது, பெரிய உப்புக் கட்டிகள் போன்றவை, சிறிய துண்டுகளாக நசுக்கி தூளாக்கும் பொழுது, அவையை இலகுவாக கையாளலாம் என அறிந்த பொழுது, அம்மி அல்லது கல் உரல் போன்ற ஒன்று தோன்றி இருக்கலாம் என் நாம் கருதலாம்.   

 

முன்னும் பின்னும் இயக்கத்தை [back and forth motion] முக்கியமாக பயன்படுத்தும் கீழ் இருக்கும் தடடையான அரைக்கும் கல் [Lower grinding-stones],  அரைக்கும் அடுக்குகள் [அம்மி / grinding-slabs]  என்று பொதுவாக அழைக்கப்படும். அதன் மற்றோரு சோடியான மேல் கல் [upper stone] தட்டையான கை கற்கள் [அம்மிக் குழவி / flat-handstones] என்று கூறப்படும். அதே போல ஒரு ஆழமான குழிவான கீழ் கல் [deeply concave lower stone], உரல் அல்லது கல்வம் [அரைக்கும் குழிக்கல்] என அழைக்கப்படுவதுடன், இங்கு தானியங்களை பொடியாக்குவதற்கு அல்லது மாவாக்குவதற்கு, குத்தும் அல்லது அமத்தி சுற்றும் மேல் கல்லு [upper mobile pestle], ஒன்றை பாவிக்கிறது. இதை உலக்கை [உரல், உலக்கை] அல்லது குழவி [ஆட்டுக்கல், குழவி] என்று அழைப்பார்கள்.

 

உடற்கூறியலின் படியான நவீன மனிதர்களின் [anatomically modern humans] முதல் தோற்றத்திலிருந்து இன்று வரை, தாவரப் பொருட்கள் மற்றும் பிற பொருட்களை [vegetative matter and other materials] அரைக்கும் அல்லது இடிக்கும் கற்களின்  முக்கியத்தை, ஆப்பிரிக்க மற்றும் மற்றைய இடங்களின் தொல்பொருள் சேகரிப்புகள் [archaeological assemblages] எமக்கு எடுத்து காட்டுகின்றன. இது அதிகமாக 100,000 ஆண்டுகளுக்கு முன்பில் இருந்தே, ஒரு வகை காட்டு தானியமான சோளப் பயிரை [wild cereal grains such as sorghum] பதப்படுத்த பயன்படுத்தப் பட்டுள்ளது தெரிய வருகிறது.

 

முதலில் ஓரளவு தட்டையான கற்களில் தனியங்களையோ அல்லது வேறு சிறு உணவு பொருட்களையோ வைத்து, வேறு ஒரு பாரமான கற்களால், அதன் மேல் அமத்தி அல்லது குத்தி முன்னும் பின்னும் அந்த மேல் கல்லை இழுத்து இருப்பார்கள். அப்பொழுது, கீழ் கல்லு தட்டையாக இருப்பதால், தானியங்கள் அல்லது மற்றவைகள் சிதறி வெளியே விழுவதையும் கண்டிருப்பார்கள். எனவே தம் மற்ற கையால் அவ்வற்றை தடுக்க கொஞ்சம் கொஞ்சமாக பழகி இருப்பார்கள். இந்த நிலையில், உதாரணமாக, பாறைப் படுக்கைகளில் இயற்கையாக உரல் போல் அமைந்த குழிகள் [Bedrock mortar] போன்றவை, அவர்களுக்கு உதவின [படம் 04 யை பார்க்கவும்]. அதாவது. அந்த குழிக்குள் [உரல் போல்] தானியங்களை போட்டு, ஒரு நீளமான  ஒடுங்கிய கல்லால் [உலக்கை போல்] குத்தினார்கள் என நாம் நம்பலாம். இதன் மூலம் வெளியே சிதறுவதையும், மற்றும் ஒரே நேரத்தில் பெரும் அளவு தானியங்களை இடித்து பதப்படுத்தவும் அவர்களால் முடிந்து இருக்கும். மேலும் கணிசமான எண்ணிக்கையிலான இத்தகைய துளைகள் அருகாமையில் இருக்கும் கொத்து அல்லது கூட்டம், தொல்பொருள் ஆய்வில் காணப்பட்டது [படம் 05 யை பார்க்கவும்], வரலாற்றுக்கு முந்தைய கலாச்சாரங்களில், உணவை அரைப்பதற்கு மக்கள் குழுக்களாக கூடினர் என்பதை இது குறிக்கிறது என நாம் கருதலாம் [considerable number of such holes in proximity indicating that people gathered in groups to conduct food grinding in prehistoric cultures]. அது மட்டும் அல்ல, இதற்கு மாற்று பெயராக  'வதந்தி கல்' என சில நேரங்களில் அழைக்கப் படுகிறது [the alternative name gossip stone is sometimes applied]. இவ்வகையான பாறைப்படுக்கை குழிகள், தொல்பொருள் ஆய்வின் பொழுது பல உலகப் பகுதிகளில் அடையாளம் காணப் பட்டது குறிப்பிடத் தக்கது. இந்த அவர்களின் அனுபவத்தின் நீட்சியே, பின்னாளில் பாறையில் குழி போட்டு செயற்கையாக அப்படி ஒரு அமைப்பை ஏற்படுத்தி இருக்கும். அவை  நாளடைவில் உரல் உலக்கை அல்லது ஆட்டுக்கல், குழவி  ஆக பரிணாமித்து இருக்கலாம்.

 

நூத்துபியப் பண்பாடை (பண்டைய அண்மை கிழக்கின் பிந்தை நடு கற்காலத்தில் லெவண்ட் பிரதேசத்தில் தற்கால இஸ்ரேல், பாலஸ்தீனம், லெபனான், ஜோர்தான் மற்றும் சிரியாவில் கிமு 12,000 முதல் 9,500 முடிய விளங்கிய ஒரு தொல்பொருள் பண்பாடு / Natufian culture) கவனத்தில் எடுக்கும் பொழுது, நூத்துப்பியப் பண்பாட்டு மக்கள் காட்டுத் தானியங்களையும், காட்டுச் சிறுமான்களையும் உணவாகக் கொண்டனர். இவர்கள் இந்த காட்டுத் தானியங்களை அரைத்து உண்டது, அங்கு கண்டு பிடிக்கப் பட்ட  மூல அல்லது தொல் அல்லது புரோட்டோ [proto] அம்மி, உரல், குழவி மற்றும் ஆட்டுக்கற்கள் சாட்சி பகிர்கின்றன [படம் 06 யை பார்க்கவும்]. இவை கி மு 10000 ஆண்டுகளுக்கு மேற்பட்டவை என்பது குறிப்பிடத் தக்கது. அதே போல கி மு 2345 முதல் கிமு 2181 வரை ஆட்சி செய்த எகிப்தின் ஆறாம் வம்ச காலத்தில் [Sixth Dynasty of Egypt], வேலைக்காரி ஒருவள் சோளம் அரைக்கும் சிலை [படம் 07], தொல்பொருள் ஆய்வில் கண்டு பிடிக்கப் பட்டது. மேலும் அங்கு கி மு 1352-1292 ஆண்டு அரச எழுத்தாளர் செனேனு [The royal scribe Senenu] தானியம் அரைக்கும்  இன்னும் ஒரு எகிப்திய சிற்பமும் [படம் 08] கண்டு பிடிக்கப் பட்டது. இந்தியாவிலும், மெஹெர்கரில் [Mehrgarh] நடைபெற்ற அகழ்வு ஆராச்சியில், 4000 ஆண்டுகளுக்கு முற்பட்ட  அரைக்கும் கற்கள் [படம் 09] கண்டு பிடிக்கப் பட்டன. அவை கோதுமை, பார்லி போன்றவை அரைக்கப் பாவிக்கப் பட்டு இருக்கலாம் என நம்பப் படுகிறது. அதே போல இலங்கையிலும், தொல்பொருளியல் பிரிவின் பேராசிரியர் ராஜ் சோமதேவ [Dr Raj Somadeva], தன் ஆய்வின் பொழுது பண்டைய ஒரு வீட்டின் சமையலறை ஒன்றை உடவளவை குன்றில் உள்ள, ரஞ்சமடம [Ranchamadama in Uda Walawe hillock] என்ற இடத்தில் கண்டு பிடித்தார். அங்கு  கி மு 1000 ஆண்டு பழமையான உணவு தயாரிக்க பாவித்த அரைத்தல், கலத்தல் போன்றவைக்கான [Grinding, mixing and blending etc] பாத்திரங்கள் அல்லது கருவிகள் [படம் 10] காணப் பட்டது குறிப்பிடத் தக்கது.

இனி நாம் விபரமாக ஒவ்வொரு கற்களை பற்றியும் அடுத்த பகுதிகளில் பார்ப்போம்   

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

பகுதி 02 வாசிக்க அழுத்துங்கள்- Theebam.com: "தமிழர்களின் பண்டைய நான்கு கற்கள்"/பகுதி 02:


படம் / Photo 01 - ஒரு புதிய கற்கால அரைக்கும் கல் / A Neolithic ground stone 

படம் / Photo 02 -  பூர்வீக அமெரிக்க குடி மக்களான நவகோ அல்லது நவாஜோ இன பெண் சோளம் அரைத்தல் / NAVAHO OR NAVAJO WOMAN GRINDING CORN / NEW MEXICO (1960's)

படம்/Photo 04 - தானியம் மற்றும் கருவாலிக்கொட்டை [ஏகோர்ன்] போன்றவற்றை அரைக்க பண்டைய காலத்தில் பயன்படுத்தப் பட்ட பாறைப்படுக்கை குழிகள்  / A bedrock mortar (BRM) is an anthropogenic circular depression in a rock outcrop or naturally occurring slab, used by people in the past for grinding of grain, acorns or other food products

படம் / Photo 05 - நூத்துபியன் பாறைப்படுக்கை குழிகள், இஸ்ரேல் / Natufian bedrock mortars at Mount Carmel, Israel.

படம் / Photo 06 - நூத்துப்பியப் பண்பாட்டுக் காலத்தில், மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலத்திய தானியங்கள் அரைக்கும் அம்மி, உரல், குழவி மற்றும் ஆட்டுக்கற்கள் / Mortars from Natufian Culture, grinding stones from Neolithic pre-pottery phase (Dagon Museum)

படம்/Photo 07 - கி மு 2345 முதல் கிமு 2181 வரை ஆட்சி செய்த எகிப்தின் ஆறாம் வம்ச காலத்தில், வேலைக்காரி ஒருவள் சோளம் அரைக்கும் சிலை / Servant grinding corn / Sixth Dynasty of Egypt  [ca. 2345 BC–ca. 2181 BC ]

படம்/Photo 08 - கி மு 1352-1292 ஆண்டு அரச எழுத்தாளர் செனேனு தானியம் அரைக்கும் ஒரு எகிப்திய சிற்பம்   / The royal scribe Senenu Grinding Grain.[1352-1292 B.C.E]

படம்/Photo09- சிந்துவெளி நாகரிக நகரமான, மெஹெர்கரில் [Mehrgarh] கண்டு பிடிக்கப் பட்ட  4000 ஆண்டுகளுக்கு முற்பட்ட  அரைக்கும் கற்கள்

படம்/Photo10- இலங்கை, உடவளவை குன்றில் உள்ள, ரஞ்சமடம [Ranchamadama in Uda Walawe hillock] என்ற இடத்தில் கண்டு பிடித்த  கி மு 1000 ஆண்டு பழமையான உணவு தயாரிக்க பாவித்த அரைக்கும் கல்


No comments:

Post a Comment