உடற்பயிற்சி செய்யும்போது மாரடைப்பு ஏற்படுமா?

 


மருத்துவர் விளக்கம்:-

நாற்பத்து ஆறே வயதான, தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்யக் கூடியவரான கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பால் மரணமடைந்ததைத் தொடர்ந்து அதிக உடற்பயிற்சி செய்தால் ஆபத்து ஏற்படக்கூடும் என்ற ஒரு கருத்து உலவி வருகிறது.

 

உடற்பயிற்சிக் கூடத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டவர்கள், மைதானத்தில் விளையாடிக் கொண்டிருக்கும்போதே மரணமடைந்தவர்கள் என பல்வேறு நிகழ்வுகளைக் கேள்விப்பட்டிருக்கிறோம். இவை குறித்து இதய சிகிச்சை நிபுணர் ஆர்.மோகன் தரும் விளக்கங்களை பார்க்கலாம்.

 

கேள்விகளும், அவரது பதில்களும்:

 

கேள்வி: உடற்பயிற்சியால் மாரடைப்பு ஏற்படும் என்பது எந்த அளவுக்கு உண்மை?

பதில்: மாரடைப்பு என்பது யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். ஆனால் உடற்பயிற்சியின் போது அதற்கான வாய்ப்பு அதிகமாகிறது. உடற்பயிற்சி செய்யும்போது முதலில் நமது இதயத் துடிப்பு அதிகமாகும். ரத்தத்தில் ஆக்சிஜன் தேவை அதிகரிக்கும் போது அதைச் சமப்படுத்துவதற்காக இதயத்தின் உந்தித் தள்ளும் வேகமும் அதிகரிக்கிறது. இவற்றுடன் ரத்த அழுத்தமும் கூடுகிறது. இவை அனைத்தும் சேர்ந்து இதயத்துக்கு கூடுதலாக அழுத்தத்தை அளிக்கின்றன. இதற்கு ஏற்றபடி இதயத்தின் தன்மை இல்லாவிட்டால் திடீர் மாரடைப்பு ஏற்படும்.

 

உடற்பயிற்சி செய்யும்போது யாருக்கு மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம்?

ஏற்கெனவே இதயத்தில் அறுவைச் சிகிச்சை கொண்டவர்கள், இதயத்தில் பிரச்னை உள்ளவர்கள், தூக்கம் சரியாக இல்லாதவர்கள், இதயப் பிரச்னை இருக்கும் குடும்ப உறுப்பினர்களைக் கொண்டவர்கள், அதிகமான மன அழுத்தம் இருப்பவர்கள், ரத்த அழுத்தம் சீராக இல்லாதவர்கள், நீரிழிவு நோய் உள்ளவர்கள், மூச்சுத் திணறல் ஏற்படுவோர், உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் போன்றோர் உடற்பயிற்சி செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும்.

 

உடற்பயிற்சியின்போது என்னென்ன முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளைச் செய்து கொள்ள வேண்டும்?

உடற்பயிற்சிக் கூடத்தில் சேரும்போதும், உடல் எடையைக் குறைப்பதற்காக உடற்பயிற்சிகளை மேற்கொள்ளும்போதும், இலக்கு வைத்து உடற்பயிற்சிகளைத் திட்டமிடும்போதும் மருத்துவர்களைக் கலந்து ஆலோசித்துக் கொள்ள வேண்டும். ஈசிஜி, டிரெட்மில் போன்ற பரிசோதனைகள் மூலமாக மருத்துவர்கள் உடற்பயிற்சி மேற்கொள்வது தொடர்பான ஆலோசனைகளை வழங்குவார்கள். அதீத உடற்பயிற்சிகள், நீண்டதூர ஓட்டங்கள் போன்றவற்றுக்கு முன்னதாகவும் இதயத்தை பரிசோதித்துக் கொள்வது நல்லது.

 

உடற்பயிற்சி மேற்கொள்ளும்போது இதயத் துடிப்பு அதிகரிக்கும். ஒவ்வொருவரின் வயதைப் பொறுத்து அதிகபட்ச இதயத்துடிப்பு நிர்ணியிக்கப்படுகிறது. அந்த எண்ணிக்கையைத் தாண்டாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இதயத்துடிப்பு அதிகமானால் இதயம் இயல்பு நிலைக்குத் திரும்பும்வரை ஓய்வெடுத்துவிட்டு, உடற்பயிற்சியைத் தொடரலாம்.

 

உடற்பயிற்சி செய்வோர் பொதுவாகச் செய்யும் தவறுகள் என்ன?

உடல் வலிமை என்பது வேறு, இதயத்தின் வலிமை என்பது வேறு. உடல் வலிமை இருப்பவர்களுக்கு இதயம் வலுவாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. நல்ல உடல் வலிமை கொண்டிருப்போருக்கும்கூட இதயம் பலவீனமாக இருப்பதற்கு வாய்ப்புண்டு. இதை பலரும் புரிந்து கொள்வதில்லை.

 

சில மாதங்களுக்கு முன்பு செய்ய முடிந்த உடற்பயிற்சியை இப்போதும் செய்ய முடியும் என்று கருதக்கூடாது. ஏனென்றால் சில மாதங்களில்கூட இதயத்தில் மாற்றங்கள் வந்திருக்கக்கூடும். அதனால் பல மாதங்களுக்குப் முன் செய்த உடற்பயிற்சிகளை மீண்டும் தொடங்கும்போது படிப்படியாகவே தொடங்க வேண்டும். சிலர் உடனடியாக பழைய தீவிரத் தன்மையுடன் உடற்பயிற்சிகளைத் தொடங்குகிறார்கள். இது ஆபத்தானது.

 

உடற்பயிற்சி செய்வோர் மத்தியில் இதயத்துடிப்பு தொடர்பான விழிப்புணர்வு இருக்கிறது. ஆனால் பெரும்பாலும் ரத்த அழுத்தத்தை கவனிக்கத் தவறுகிறார்கள். உடற்பயிற்சிக் கூடத்திலேயே ரத்த அழுத்தத்தை பரிசோதிக்கும் கருவிகள் கண்டிப்பாக இருக்க வேண்டும். அவ்வப்போது ரத்த அழுத்தத்தை பரிசோதித்துக் கொள்ள வேண்டும். சிறிய அளவு நெஞ்சு வலியோ, மூச்சுத் திணறலோ ஏற்பட்டாலும் மருத்துவரை அணுக வேண்டும்.

 

இதுவரை உடற்பயிற்சியே செய்யாதவர்கள் திடீரென உடற்பயிற்சி, உடல் எடைக் குறைப்பு என ஆர்வம் ஏற்பட்டு தீவிரமாக உடற்பயிற்சி செய்கிறார்கள். இது உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதைவிடவும் ஆபத்தானது. அவர்கள் படிப்படியாகவே உடற்பயிற்சியின் தீவிரத்தை அதிகரிக்க வேண்டும்.

 

உடற்பயிற்சி செய்வோர் சப்ளிமென்ட் எனப்படும் துணை ஊட்டச் சத்து உணவுகளை எடுத்துக் கொள்ளும்போது கண்டிப்பாக அது தொடர்பான மருத்துவரின் ஆலோசனை அவசியம். பொதுவாகவே இதை யாரும் பின்பற்றுவதில்லை.

 

எந்த அளவு உடற்பயிற்சி செய்வது நல்லது, எதையெல்லாம் செய்யக்கூடாது?

எந்த உடற்பயிற்சி கூடாது என்ற வரம்பு எதுவும் இல்லை. ஒவ்வொரின் உடல் கூறுகளைப் பொறுத்து உடற்பயிற்சியின் அளவும் இருக்க வேண்டும். குறிப்பிட்ட வயதுடைய ஒருவரால் செய்ய முடிகிற உடற்பயிற்சியை அதே வயதுடைய மற்றவரால் செய்ய முடியும் என்று கூற முடியாது. எனினும் தீவிரமான உடற்பயிற்சிகளை மேற்கொள்வதற்கு முன் இதயம் அதைத் தாங்குமா என்பதைப் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

 

உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும்போது, இதயத்துடிப்பு உள்ளிட்டவற்றை எப்படி கண்காணிப்பது?

கைகளில் கட்டிக் கொள்ளத்தக்க வகையிலான உடற்பயிற்சிக் கருவிகள் ஏராளமாகச் சந்தையில் கிடைக்கின்றன. அவற்றில் நமது இதயத்துடிப்பு, ஆக்சிஜன் அளவு போன்றவற்றை கண்காணித்துக் கொள்ளலாம். ஆனால் ரத்த அழுத்தத்தை அப்படி கணக்கிட முடிவதில்லை. குறைந்தது வாரம் ஒரு முறையாவது அதை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

 

எம்.மணிகண்டன்/பிபிசி தமிழ்

0 comments:

Post a Comment