கொரோனா ஓமிக்ரோன்-பூஸ்டர்-எப்படி?

 


கொரோனா வைரஸ்: ஒமிக்ரானுக்கு எதிராக இரு டோஸ் தடுப்பூசி வேலை செய்யவில்லையா? பூஸ்டர் சிறப்பாக வேலை செய்கிறதா?

சில தடுப்பூசிகள் இரு டோஸ் செலுத்திக் கொண்ட பிறகும் ஒமிக்ரான் திரிபுக்கு எதிராக கிட்டத்தட்ட எந்த வித பாதுகாப்பும் வழங்கவில்லை என்றாலும், தீவிர உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அபாயத்தை கணிசமாக குறைக்க வேண்டும்.

 

தற்போது புழக்கத்தில் உள்ள எல்லா தடுப்பூசிகளும் ஏறாத்தாழ இரண்டு ஆண்டுகளுக்கு முன் பரவிக் கொண்டிருந்த கொரொனா திரிபுக்கு எதிராக செயல்பட உருவாக்கப்பட்டது.

 

எனவே, மூன்றாவது டோஸ் தடுப்பூசி அல்லது பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்வது பாதுகாப்பு விவகாரத்தில் ஏதேனும் மாற்றத்தைக் கொடுக்குமா அல்லது ஒமிக்ரான் திரிபு கொரோனா தடுப்பூசிகளின் பாதுகாப்பை கடந்துவிட்டதா?

 

அதிர்ஷ்டவசமாக, நமக்குச் செலுத்தப்படும் தடுப்பூசி மருந்து ஒரே மாதிரியானதாக இருந்தாலும், மனித உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்துக்கு பூஸ்டர் டோஸ் என்பது ஒரே மாதிரியான விளைவை ஏற்படுத்தாது.

 

மூன்றாவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்ட பின் உங்களுக்கு கிடைக்கும் பாதுகாப்பு மிக அதிகம்.

 

கொரோனா பள்ளி

கொரோனவுக்கு எதிராக போராடுவதை உங்கள் நோயெதிர்ப்பு மண்டலம் கற்றுக் கொள்ள வேண்டும்.

 

உண்மையாகவே கொரோனா வைரஸை எதிர்கொள்ளும் போது, நோயெதிர்ப்பு மண்டலம் வைரஸை எதிர்கொள்ளப் பழகலாம். ஆனால் அது தவறாகச் செல்லும் அபாயம் அதிகம். தீவிர உடல் நலக்குறைவு ஏற்படும் அபாயமும் உள்ளது.

 

தடுப்பூசிகள் என்பது ஒரு பள்ளியைப் போன்றது. மனிதர்களின் நோயெதிர்ப்பு மண்டலத்துக்கு கொரோனா தொடர்பான கல்வியை பயிற்றுவிக்கும் ஒரு பாதுகாப்பான சூழல் அது.

 

முதல் டோஸ் தடுப்பூசி என்பது தொடக்கப் பள்ளியில் பயிற்றுவிக்கப்படும் கல்வி போன்றது, அது அடிப்படைகளை நோயெதிர்ப்பு மண்டலத்துக்கு கற்றுக் கொடுக்கிறது.

 

இரண்டாவது டோஸ் தடுப்பூசி நோயெதிர்ப்பு மண்டலத்தை மேனிலைப் பள்ளிக்கும், மூன்றாவது டோஸ் பல்கலைக்கழகத்துக்கு அனுப்புவதற்குச் சமமானது. எனவே நோயெதிர்ப்பு மண்டலத்துக்கு, கொரோனா வைரஸ் தொடர்பான புரிதலை ஆழப்படுத்தும்.

 

"நோயெதிர்ப்பு மண்டலத்துக்கு கொரோனா வைரஸ் தொடர்பான ஆழ்ந்த அறிவையும் புரிதலையும் ஏற்படுத்துகிறது" என நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தின் நச்சுயிரியல் நிபுணர் பேராசிரியர் ஜோனதன் பால் கூறினார்.

 

கொரோனா வைரஸை எதிர்க்கும் விவகாரத்தில் நன்கு பயிற்சி பெற்ற நோயெதிர்ப்பு அமைப்பு என்பது ஒமிக்ரான் திரிபுக்கு சிக்கலானது மற்றும் அதன் வளர்ச்சிக்கு எதிரான சூழல் என்கிறார் ஜோனதன் பால்.

 

இப்பயிற்சியில் ஆன்டிபாடிகள் என்கிற எதிர்ப்பான்கள் மிகப்பெரிய நன்மை பயக்கும் விஷயம்.

 

இந்த ஒட்டும் திறன் கொண்ட புரதங்கள், கொரோனா வைரஸின் வெளிப்புறத்தில் தன்னைத்தானே ஒட்டிக் கொள்கின்றன. வைரஸை அழிக்கும் எதிர்ப்பான்கள் (ஆன்டிபாடிகள்) கொரோனா வைரஸை செயலிழக்கச் செய்வதால், வைரஸால் உடலில் இருக்கும் செல்லுக்குள் நுழைய முடியாமல் போகிறது. கொரோனா வைரஸின் மீதுள்ள ஆன்டிபாடிக்கள், 'வைரஸைக் கொல்லுங்கள்' என குறிப்பிடும் நியான் விளக்கைப் போன்று செயல்படுகிறது.

 

இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பின், உடலிலுள்ள வைரஸை அழிக்கும் எதிர்ப்பான்கள், ஒமிக்ரான் திரிபுக்கு எதிராக மிகவும் குறைந்த செயல்திறனோடு இருப்பதாக பல ஆய்வக பரிசோதனைகள் மற்றும் நிஜ உலக தரவுகள் குறிப்பிடுகின்றன.

 

நீங்கள் எந்த வித பாதுகாப்புமின்றி நோய் தொற்றுக்கு காத்திருக்கும் நபராக இருப்பீர் என்கிறார் இம்பீரியல் காலேஜ் ஆஃப் லண்டனைச் சேர்ந்த நோயெதிர்ப்பியல் நிபுணர் பேராசிரியர் டேனி ஆல்ட்மென்.

 

மீண்டும் பள்ளிக்குத் திரும்புவோம்.

 

ஒவ்வொரு டோஸ் தடுப்பூசியும், உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தில் இருக்கும் ஆன்டிபாடிகளின் அடுத்தகட்ட பரிணாம வளர்ச்சியைத் தூண்டுகின்றன. மேம்ட்ட ஆன்டிபாடிகள், வைரஸைத் தேடி இன்னும் உறுதியாக தன்னை இணைத்துக் கொள்கின்றன. இதை ஆங்கிலத்தில் Affinity Maturation என்கிறார்கள்.

 

"உங்கள் உடலில் உள்ள எதிர்ப்பான்கள் காலப்போக்கில் தங்களைப் புதுமைப்படுத்திக் கொள்ளும், நவீனப்படுத்திக்கொள்ளும்" என்கிறார் பேராசிரியர் ஆல்ட்மென்.

 

ஒருவேளை ஆன்டிபாடிகள் எனப்படும் நோய் எதிர்ப்பான்கள் கொரோனா வைரஸோடு இறுக்கமாக இணைய முடிந்தால், ஒமிக்ரான் திரிபுக்கு எதிர்ப்பான்களைக் கடப்பது சிரமமாக இருக்கும். ஒமிக்ரான் திரிபு அதிக பிறழ்வுகளைக் கொண்டது என்றாலும், அடிப்படையில் ஒரே மாதிரியான கொரோனா வைரஸ்தான். அதன் பல பாகங்கள் இன்னும் பெரிதாக மாறவில்லை.

 

மேற்கொண்டு செலுத்தப்படும் தடுப்பூசி டோஸ்கள், புதிய எதிர்ப்பான்களோடு நோயெதிர்ப்பு மண்டலத்தை விரிவுபடுத்துவதாக இருக்கும். அது கொரோனா வைரஸைக் கொல்ல பல புதிய வழிகளைக் கண்டுபிடிக்கும்.

 

எண் விளையாட்டு

 

கூடுதல் தடுப்பூசி டோஸ்களால் ஆன்டிபாடிகள் எனப்படும் நோய் எதிர்ப்பான்களின் தரம் மட்டுமல்ல, எண்ணிக்கையையும் அதிகரிக்கும்.

 

"அதிகம் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் போது, ரத்தத்தில் எதிர்ப்பான்களின் எண்ணிக்கை அதிகரிக்கும், ஆனால் அந்த பாதுகாப்பு எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்பது தெரியவில்லை. அதிக முறை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது, நீண்ட காலத்துக்கு நோயெதிர்ப்பு நினைவைக் கொடுக்கும்," என்கிறார் பேராசிரியர் சர்லஸ் பங்கம்.

 

ஒமிக்ரான் திரிபுக்கு எதிராக இரண்டு டோஸ் தடுப்பூசி பலவீனமானது என, இது போன்ற ஆய்வுகளில், இதன் தாக்கம் குறித்து தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இருடோஸ் தடுப்பூசிக்குப் பிறகு, பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொண்ட பின், கொரோனா தொற்று ஏற்படுவதிலிருந்து கிடைக்கும் பாதுகாப்பு 75 சதவீதம் வரை அதிகரிக்கிறது.

 

அதுபோக பூஸ்டர் டோஸ்கள் மனித நோயெதிர்ப்பு மண்டலத்துக்கு, எதிர்கால கொரோனா திரிபுகளுக்கு எதிராகவும் பாதுகாப்பு வழங்குகிறது.

 

மனித உடலில் உள்ள பீ -செல்கள்தான் ஆன்டிபாடிகளை அதிகளவில் உற்பத்தி செய்கின்றன. பூஸ்டர் செலுத்தப்பட்ட பின், முதிர்ச்சியடைந்த சில பீ செல்கள் அதீத ஒட்டுத்தன்மை கொண்ட நோய் எதிர்ப்பான்களை உருவாக்குகின்றன. மற்ற முதிர்ச்சியடையாத பீ செல்களால் கொரோனா வைரஸை அடையாளம் காண முடியும். ஆனால் அதனால் முழுமையாக செயல்பட முடியாதவையாக, வளைந்து கொடுக்கும் தன்மை கொண்டதாக இருக்கும்.

 

"இது பல திசைகளில் பயணிக்கக் கூடியது, பல்கிப் பெருகும் போது அவை, புதிய கொரோனா திரிபைத் தொடர்ந்து சென்று தாக்கத் தொடங்கும்" என்கிறார் பேராசிரியர் பால்.

 

பூஸ்டர் செலுத்திக் கொண்டால்,உடலில் உள்ள டி செல்கள் எண்ணிக்கையில் அதிகரித்து, கொரோனா வைரஸைத் தாக்கும்.

 

டி-செல்கள் கொரோனா வைரஸைக் கண்டுபிடிக்க வேறொரு வழியைப் பயன்படுத்துகின்றன. உடலின் காவலர்களைப் போல ரோந்து செல்லும் டி-செல்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள உடல் பாகங்களைக் கண்டுபிடிக்கின்றன. கொரோனாவால் எளிதில் பிறழ்வுகளை ஏற்படுத்திக் கொள்ள முடியாத பாகங்களை டி செல்கள் கண்டுபிடிக்கின்றன.

 

எனவே, ஒமிக்ரான் மனித உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தைக் கடந்து செல்ல முயற்சிக்கும் போது, ஒவ்வொரு தடுப்பூசி டோஸ் மற்றும் ஒவ்வொரு முறை கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் போதும், கொரோனா வைரஸை அழிக்க நம் உடலின் பாதுகாப்பு அமைப்புகளுக்கு கூடுதல் சாதனங்கள் கிடைக்கின்றன.

 

"ஒரு வைரஸுக்கு எதிராக எப்போதுமே கிட்டத்தட்ட முழுமையான பாதுகாப்பு கிடைக்காது, எப்போதும் கிட்டத்தட்ட மீண்டும் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. நீங்கள் உங்களுக்கே தெரியாமல் அல்லது தொற்று ஏற்பட்ட தெரியாத அளவுக்கு மீண்டும் லேசாக தொற்றுக்கு உட்படுவது மட்டுமே நீங்கள் செய்ய வேண்டும்" என்கிறார் பேராசிரியர் பங்கம்.

ஜேம்ஸ் கலேகர்:சுகாதாரம் மற்றும் அறிவியல் செய்தியாளர்/BBC

No comments:

Post a Comment