ஒமிக்ரான்
திரிபு நோயெதிர்ப்பு மண்டலத்திடம் இருந்து தப்பித்தாலும் லேசான பாதிப்புகளையே
ஏற்படுத்துகிறதா?
கொரோனா வைரஸின் புதிய திரிபு குறித்த கவலை அதிகரித்து வருகிறது.
ஆல்ஃபா, பீட்டா போல
இதற்கும் ஒமிக்ரான் என்ற கிரேக்கப் பெயரை உலக சுகாதார நிறுவனம் சூட்டியுள்ளது.
இது மிகவும் அச்சுறுத்தக்கூடியது என ஓர் அறிவியலாளர் விவரித்துள்ளார்.
மற்றொருவரோ தாங்கள் கண்ட திரிபுகளிலேயே இதுதான் மிகவும் மோசமான திரிபு என என்னிடம்
கூறினார்.
ஆனால், கொரோனா வைரஸின்
டெல்டா திரிபு உள்ளிட்ட முந்தைய திரிபுகளை விட, ஒமிக்ரான்
குறைவான பாதிப்புடையதாக இருக்கலாம் என்ற கூற்றுகளும் உள்ளன.
இதுவரை 30-க்கும் மேற்பட்ட
நாடுகளில் இந்த திரிபு கண்டறியப்பட்டுள்ளது. இத்திரிபு, மனித உடலின்
நோயெதிர்ப்பு மண்டலத்தின் சில பகுதிகளை கடந்து தப்பிப்பதற்காக அறிகுறிகள் உள்ளன.
ஒமிக்ரான் குறித்து பல்வேறு ஊகங்கள் வலம் வருகின்றன. ஒமிக்ரான் குறித்து
நமக்கு என்ன தெரியும்?
நோயெதிர்ப்பு
மண்டலத்திடம் இருந்து தப்பித்தல்
பொதுவாக அதிக பிறழ்வுகள் என்றாலே ஆபத்தானவை என்று பொருள் அல்ல, அந்த பிறழ்வுகள்
என்ன செய்கின்றன என்பதை அறிந்து கொள்வது அவசியம்.
ஆனால், இங்கு பிரச்னை
என்னவெனில் சீனாவின் வூஹான் மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸிலிருந்து, இந்த திரிபு
மிகப்பெரிய மாற்றத்தைக் கண்டுள்ளது. அதாவது கொரோனா வைரஸின் 'ஒரிஜினல்
ஸ்ட்ரெயின்' என்றழைக்கப்படும்
ஆரம்பகால தொற்றுக் கிருமிகளைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகள் B.1.1.529 கொரோனா
திரிபுக்கு எதிராக அதிக செயல் திறனற்றுப் போகலாம்.
இந்த புதிய திரிபில் காணப்படும் சில பிறழ்வுகள், ஏற்கனவே வேறு சில
திரிபுகளில் காணப்பட்டுள்ளன. எனவே அப்பிறழ்வுகள் எப்படி செயல்படலாம் என சில விவரங்களை
நமக்கு வழங்குகின்றன.
உதாரணமாக,
N501Y பிறழ்வு கொரோனா வைரஸ் அதிகமாக பரவ வழிவகுத்தது.
ஆன்டிபாடிகள் வைரஸை அடையாளம் கண்டுகொள்வதை கடினமாக்கும் சில தன்மைகளும் இதில்
உள்ளன. இவை தடுப்பூசிகளின் செயல்திறனை குறைக்கச் செய்யலாம். மேலும், இதில் பல புதிய
மாற்றங்களும் உள்ளன.
காகிதத்தில் மிகவும் அச்சுறுத்த கூடியதாக தோன்றும் பல கொரோனா திரிபுகள், எதார்த்தத்தில்
ஒன்றுமில்லாமல் போய் உள்ளன. அதற்கு பல உதாரணங்கள் உள்ளன. கொரோனா வைரஸின் பீட்டா
திரிபு இந்த ஆண்டின் தொடக்கத்தில் மிகவும் அச்சுறுத்தக் கூடியதாக மக்கள் மத்தியில்
கவலைக்குரியதாக இருந்தது. அத்திரிபு மனிதர்களின் நோய் எதிர்ப்பு மண்டலத்தில்
சிக்காமல் தப்பிப்பதில் சிறந்து விளங்கியது. ஆனால், எதார்த்தத்தில்
அதிவேகமாக பரவக்கூடிய டெல்டா திரிபு உலகைத் தவிக்க வைத்தது.
தென்னாப்பிரிக்காவில் உள்ள விஞ்ஞானிகள், ஒமிக்ரான் திரிபு
நம் உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தின் சில அம்சங்களில் சிக்காமல் தப்பிப்பதற்கான
ஆதாரங்கள் உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
கொரோனாவால் பலமுறை பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளதை
அவர்கள் கண்டறிந்துள்ளனர். இது, முந்தைய
திரிபுகளில் காணப்படவில்லை. எனினும், இதனால்
தடுப்பூசிகளுக்கு என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்று தெரியவில்லை எனக்
கூறியுள்ளனர்.
இந்தப் புதிய திரிபைத் தடுக்க மனித ரத்தத்தில் உள்ள ஆன்ட்டிபாடிகள் எவ்வளவு
திறனுடையதாக உள்ளன என்பதைக் கண்டறிவதற்கான ஆய்வகப் பரிசோதனைகள் நடைபெற்று
வருகின்றன.
"பீட்டா திரிபு நோயெதிர்ப்பு மண்டலத்தைக் கடப்பதில் மட்டுமே
சிறந்து விளங்கியது, ஆனால் டெல்டா திரிபோ
அதிகம் தொற்றும் தன்மை மற்றும் ஓரளவுக்கு நோய் எதிர்ப்பு மண்டலத்திலிருந்து
தப்பிக்கும் திறன் என இரண்டையும் கொண்டிருந்தது. இந்த இரு திறன்களும் கொரோனா வைரஸ்
பரவலை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றன" என்கிறார் கேம்பிரிட்ஜ்
பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ரவி குப்தா.
ஒமிக்ரான்
தொற்று லேசான பாதிப்புகளை மட்டுமே ஏற்படுத்துகிறதா?
தென்னாப்பிரிக்காவில் அதிகரிக்கும் கொரோனா பரவலுக்கு ஒமிக்ரான் திரிபு மீது
குற்றம்சாட்டப்படுகிறது. நவம்பர் மாத மத்தியில் தினந்தோறும் 250 பேர்
பாதிக்கப்பட்டனர். மற்ற திரிபுகளால் பெருந்தொற்று அலைகளை ஏற்கெனவே சந்தித்த
தென்னாப்பிரிக்காவில், இப்போது
தினந்தோறும் 8,000 பேர் கொரோனா தொற்றால்
பாதிக்கப்படுகின்றனர்.
பிற உலக நாடுகள் அனைத்திலும் இது நடக்கலாம் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
"அடுத்த சில வாரங்களில் டெல்டா திரிபை முந்தி, அதிக பாதிப்பை
ஏற்படுத்தும், அதிவேகமாக பரவும் திரிபாக
ஒமிக்ரான் மாறுவதற்கான ஆரம்ப அறிகுறிகள் உள்ளன," என, ஈஸ்ட் ஆங்லியா
பல்கலைக்கழக பேராசிரியர் பால் ஹன்டர் தெரிவித்துள்ளார்.
ஒமிக்ரான் தொற்றின் தீவிரத்தன்மை குறித்து இன்னும் கண்டறியப்பட வேண்டியுள்ளது.
ஒமிக்ரான் திரிபின் அறிகுறிகள் லேசானதாக இருக்கலாம் என தென்னாப்பிரிக்காவில்
கூறப்படுகிறது. ஒரு மருத்துவமனையில் உள்ள 40 நோயாளிகளில்
சிலர் மட்டுமே கடுமையாக பாதிக்கப்படுவதாக தரவு ஒன்று கூறுகிறது. எனினும், தொற்று
ஏற்படுவதற்கும் தீவிரமான உடல்நல பாதிப்புகள் ஏற்படுதற்கும் இடையில் காலதாமதம்
நிலவுகிறதா என்பதை உறுதிப்படுத்த இன்னும் சில வாரங்கள் ஆகும். தென்னாப்பிரிக்கா
ஒப்பீட்டளவில் இளம் மக்கள்தொகையைக் கொண்டுள்ளது. அவர்கள் லேசான கொரோனா
பாதிப்புக்கு ஆளாகின்றனர்.
வைரஸின் தீவிரத் தன்மையில் உள்ள எந்த வித்தியாசமும் நாட்டின் நோய் எதிர்ப்பு
சக்தியின் அளவுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.
இப்போதைக்கு, ஒமிக்ரான் திரிபு, நமக்கு விடை
தெரியாத பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இத்திரிபை நெருக்கமாக கண்காணிக்க வேண்டும், அதோடு என்ன செய்ய
வேண்டும், எப்போது செய்ய வேண்டும்
என ஆழமான கேள்விகளைக் கேட்க வேண்டும். நமக்கு எல்லா விடைகளும் கிடைக்கும் வரை நாம்
காத்திருக்க முடியாது என்பது இந்தப் பெருந்தொற்றில் நாம் கற்றுக் கொண்ட பாடம்.
அதிக பிறழ்வுகளை கொண்டது
இதுவரை கண்டறியப்பட்ட கொரோனா திரிபுகளிலேயே ஒமிக்ரான், அதிக பிறழ்வுகளை
கொண்டதாக உள்ளது.
"புதிய கொரோனா
திரிபில் வழக்கத்துக்கு மாறாக பல்வேறு பிறழ்வுகள் உள்ளன. இது மற்ற கொரோனா
திரிபுகளிலிருந்து மிகவும் வேறுபட்டதாக உள்ளது" என, தென்னாப்பிரிக்காவில்
உள்ள சென்டர் ஃபார் எபிடமிக் ரெஸ்பான்ஸ் அண்ட் இன்னொவேஷன் என்கிற அமைப்பின்
இயக்குநர் பேராசிரியர் டுளியோ டி ஒலிவெரியா கூறினார்.
"இந்த கொரோனா
திரிபு எங்களை ஆச்சரியப்படுத்துகிறது. இத்திரிபு, அதன் பரிணாம
வளர்ச்சியில் மிகப் பெரும் பாய்ச்சலை கண்டுள்ளது. நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிக
அளவிலான பிறழ்வுகளை கொண்டுள்ளது" என்றும் கூறினார்.
இந்த புதிய கொரோனா வைரஸ் திரிபில் 50 மரபணு பிறழ்வுகள் உள்ளன என்றும், ஸ்பைக்
புரோட்டின் இடையில் 30-க்கும் மேற்பட்ட பிறழ்வுகள் இருப்பதாகவும் ஒரு
பத்திரிகையாளர் சந்திப்பில் குறிப்பிட்டார், பேராசிரியர் டுளியோ டி ஒலிவெரியா.
கொரோனா தடுப்பூசிகள் இந்த ஸ்பைக் புரத இழையைத்தான் இலக்கு வைக்கின்றன. அதேபோல, மனிதர்களின்
உடலுக்குள் ஊடுருவ கொரோனா வைரஸ் இந்த ஸ்பைக் புரத இழையைத்தான் பயன்படுத்துகின்றது.
மனிதர்களின் உடலோடு முதலில் தொடர்பு கொள்ளும் ரெசப்டாரில் 10 பிறழ்வுகள்
உள்ளன. உலகை உலுக்கிய கொரோனா வைரஸின் டெல்டா திரிபிலேயே ரெசப்டார்களில் இரண்டு
பிறழ்வுகள் மட்டுமே இருந்தன.
கொரோனா வைரஸை தோற்கடிக்க முடியாத ஒரு நோயாளியின் உடலிலிருந்து இத்தனை அதிக பிறழ்வுகள் ஏற்பட்டிருக்கலாம்.
ஜேம்ஸ்
காலேகர்/உடல்நலம்
&
அறிவியல் செய்தியாளர்/BBC
No comments:
Post a Comment