கொரோனா வைரஸ்: ஒமிக்ரான் திரிபுக்கு எதிராக…

 புழக்கத்தில் உள்ள தடுப்பூசிகள் வேலை செய்யுமா? புதிய தடுப்பூசி தயாரா?

இந்த உலகில் பல்லாயிரக்கணக்கான கொரோனா வைரஸ் திரிபுகள் இருக்கின்றன. அது எதிர்பார்த்த ஒன்று தான் காரணம், வைரஸ்கள் பொதுவாகவே பிறழக்கூடியவைதான்.

ஆனால், இந்த புதிய ஒமிக்ரான் கொரோனா திரிபு, முன்பு பரவிக்கொண்டிருந்த உண்மையான கொரோனாவிலிருந்து (ஒரிஜினல் கொரோனா) மிகவும் மாறுபட்டதாக உள்ளது. கொரோனா தடுப்பூசிகள் அனைத்தும் முன்பு பரவிக்கொண்டிருந்த கொரோனாவை (ஒரிஜினல் கொரோனா) அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டவை.

ஓமிக்ரான் திரிபில் மொத்தம் 50 பிறழ்வுகள் உள்ளன. அதில் 32 பிறழ்வுகள் ஸ்பைக் புரோட்டீன் என்றழைக்கப்படும் புரத இழையில் உள்ளன. இந்த ஸ்பைக் புரோட்டின் இழைகள் தான் கொரோனா தடுப்பூசிகளின் இலக்கு.

 

இது மிகவும் ஆரம்ப காலகட்டம் என்பதால், இப்போது ஒமிக்ரான் திரிபின் ஸ்பைக் புரோட்டீன்கள் எந்த அளவுக்கு அபாயகரமானவை என குறிப்பிட முடியாது.

 

தடுப்பூசிகள் வேலை செய்யுமா?

தற்போது புழக்கத்தில் உள்ள கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் இந்த திரிபுக்கு கச்சிதமாக பொருந்தி செல்லக் கூடியவை அல்ல. எனவே அத்திரிபுக்கு எதிராக சிறப்பாக செயல்பட முடியாமல் போகலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

 

ஆக, தற்போது புழக்கத்தில் இருக்கும் தடுப்பூசிகள் ஒமிக்ரான் திரிபுக்கு எதிராக கொஞ்சம் கூட பாதுகாப்பை வழங்காது என பொருளல்ல.

 

ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா ஆகிய கொரோனா திரிபுகளுக்கு எதிராக தற்போது புழக்கத்தில் இருக்கும் தடுப்பூசிகள் தீவிர உடல்நலக்குறைவு ஏற்படுவதிலிருந்து தடுத்து, நல்ல செயல்திறனோடு பாதுகாப்பு வழங்குகின்றன என்பது நினைவுகூரத்தக்கது.

 

பரிந்துரைக்கப்படும் அளவுக்கு தடுப்பூசி டோஸ்களை செலுத்திக் கொள்வது, தற்போது புழக்கத்தில் இருக்கும் மற்றும் புதிதாக உருவாகும் கொரோனா திரிபிலிருந்து பாதுகாத்துக் கொள்ளவது மிகவும் அவசியம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

 

தற்போது பிரிட்டனில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும்போதும், கொரோனாவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களும், அதனால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை முந்தைய கொரோனா அலைகளில் இருந்த எண்ணிக்கையை விட குறைந்திருக்கிறது.

 

இதற்கு தடுப்பூசித் திட்டத்தின் வெற்றிதான் காரணம் என நிபுணர்கள் கூறுகின்றனர். தற்போது புழக்கத்தில் இருக்கும் தடுப்பூசிகள் புதிய திரிபுக்கு எதிராக செயல்படுமா என்பதை கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் பல்வேறு சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

ஓமிக்ரான் திரிபில் உள்ள என்ன வகையான பிறழ்வுகள் அதை அதிகமாக தொற்றும் தன்மை கொண்டதாக்குகிறது, தடுப்பூசிகள் கொடுக்கும் பாதுகாப்பை எப்படி கடக்கின்றன என்பதை நிபுணர்கள் ஆராய்வர். மேலும் இத்திரிபு அதற்கு முந்தைய திரிபுகளை விட மிக தீவிர நோயை உண்டாக்குகிறதா எனவும் மதிப்பீடு செய்வர்.

 

கொரோனா திரிபுகளுக்கு எதிராக நமக்கு எப்போது புதிய தடுப்பூசிகள் கிடைக்கும்?

கொரோனா திரிபுகளுக்கு எதிராக புதிய கொரோனா தடுப்பூசிகள் ஏற்கனவே மேம்படுத்தப்பட்டு, பரிசோதனையிலும் உள்ளன.

 

ஒருவேளை அப்படி ஒரு புதிய கொரோனா தடுப்பூசிக்கான தேவை ஏற்பட்டால், அடுத்த சில வாரங்களில் புதிய தடுப்பூசி கொண்டு வரப்பட்டு முறையாக பரிசோதிக்கப்படும்.

 

தடுப்பூசி உற்பத்தியாளர்களும் விரைவாக தங்கள் உற்பத்தியை அதிகரிக்க முடியும், மேலும் மருந்து நெறிமுறையாளர்கள் தடுப்பூசிக்கான அனுமதி நடைமுறையை விரைவுபடுத்துவது தொடர்பாகவும் ஏற்கனவே விவாதித்துள்ளனர்.

 

அனுமதி நடைமுறையை வேகப்படுத்துவது தொடர்பான விவகாரத்தில் எந்தவித சமரசமும் இருக்காது. ஆனால், முதன்முதலில் கொரோனா தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்ட போது இருந்ததை விட, தற்போது தடுப்பூசியை வடிவமைப்பது முதல் அனுமதிக்கப்படுவது வரையான அனைத்து செயல்முறைகளும் வேகமாக இருக்கும்.

 

மற்ற திரிபுகள் என்ன ஆயின?

சுகாதார அதிகாரிகள் மற்ற சில கொரோனா திரிபுகளையும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

 

டெல்டா (B.1.617.2): இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த திரிபு, தற்போது உலகம் முழுக்க பரவலாக காணப்படுகிறது. பிரிட்டனில் இந்த திரிபுதான் அதிகம் காணப்படுகின்றன.

 

ஆல்ஃபா (B.1.1.7): பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த திரிபு, 50 நாடுகளுக்கு மேல் பரவியது.

 

பீட்டா (B.1.351): தென்னாப்பிரிக்காவில் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த திரிபு குறைந்தபட்சம் 20 மற்ற உலக நாடுகளிலும் காணப்பட்டது.

 

காமா (P.1) : பிரேசிலில் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த திரிபு பத்துக்கும் மேற்பட்ட உலக நாடுகளில் காணப்பட்டது.

 

பிரிட்டன் அதிகாரிகள் டெல்டா பிளஸ் என்றழைக்கப்படும் AY.4.2 திரிபை கண்காணித்து வருகிறார்கள்.


கொரோனா திரிபுகள் எத்தனை அபாயகரமானவை?

எந்த ஒரு கொரோனா திரிபும், பெரும்பகுதியான மக்களுக்கு மிகத் தீவிர உடல் நலக்குறைவை ஏற்படுத்தும் என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை.


பொதுவாக வயதானவர்கள் அல்லது மிக மோசமான உடல் நலக்குறைவைக் கொண்டவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் அபாயம் அதிகம் உள்ளது.


ஒருவேளை ஏதோ ஒரு குறிப்பிட்ட கொரோனா வைரஸ் திரிபு அதிக தொற்றுத்தன்மை கொண்டதாக இருந்தால், அது தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் அதிகம் உயிரிழக்க காரணமாக அமையும்.


பொதுவாக, கொரோனா தடுப்பூசிகள், கொரோனா வைரஸால் மிக தீவிரமாக உடல்நலக்குறைவு ஏற்படுவதிலிருந்து அதிக பாதுகாப்பு வழங்குகிறது. இதில் கவலைக்குரிய கொரோனா வைரஸ் திரிபுகளும் அடக்கம். மேலும் தடுப்பூசிகள் கொரோனா தொற்று ஏற்படும் அபாயத்தையும் குறைக்கிறது. ஆனால் தடுப்பூசிகள் கொரோனாவால் ஏற்படும் அனைத்து அபாயங்களையும் முழுமையாக களைவதில்லை.

 

கொரோனா தொற்றைத் தவிர்க்க அனைத்து கொரோனா வைரஸ் திரிபுகளுக்கும் ஒரே மாதிரியான அறிவுரைகள் தான்:

 

கைகளைக் கழுவுங்கள், சமூக இடைவெளியை கடைபிடியுங்கள், மக்கள் நெரிசல் மிகுந்த பகுதிகளில் முகக் கவசம் அணிந்து கொள்ளுங்கள், காற்றோட்டமான இடத்தில் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

மிஷெல் ராபர்ட்ஸ்
சுகாதார ஆசிரியர்,
பிபிசி நியூஸ் வலைதளம்

No comments:

Post a Comment