***************************************************
சித்தர் சிவவாக்கியம் -527
வேத
மோது வேலையோ வீணதாகும் பாரிலே
காத
காத தூரமொடிக் காதல் பூசை வேணுமோ
ஆதிநாதன்
வெண்ணையுண்ட அவனிருக்க நம்முளே
கோது
பூசை வேதமோது குறித்துப் பாரும் உம்முளே.
வேதம் ஓதுவது சிறப்பானதுதான், ஆனால் அது ஒன்றை மட்டும் வேலையாக கொண்டு
செய்து கொண்டிருப்பது வீணாகத்தான் போகும். இந்த பூமியெங்கும் பலகாத தூரங்கள் ஓடி
ஓடி ஆசையினால் செய்யும் பூசைகள் இறைவனை அடைய முடியுமா? ஆதி மூலமாக
நமக்குள்ளே வெண்ணை உண்ட கண்ணன் இருக்கும் பொது கோ பூசை செய்வது எதற்கு? வேதங்கள் நான்கும்
சொல்லுகின்ற மெய்ப்பொருளை அறிந்து அதையே உங்களுக்குள் குறித்து நோக்கி
தியானித்துப் பாருங்கள். அது இறைவனை காட்டி இறவா நிலைத் தரும்.
****************************************************
சித்தர் சிவவாக்கியம் -528
பரமிலாத
தெவ்விடம் பரமிருப்ப தெவ்விடம்
அறமிலாத
பாவிகட்குப் பரமிலை யதுண்மையே
கரமிருந்தும்
பொருளிருந்தும் அருளிலாது போதது
பரமிலாத
சூன்யமாகும் பாழ் நரக மாகுமே.
பரம்பொருள் இல்லாத இடம் ஏதுமில்லை. நமக்குள் பரம்பொருள் எந்த இடத்தில்
இருக்கின்றது என்பதை அறிந்து கொண்டு தியானியுங்கள். அறம் சிறிதும் நெஞ்சில்
இல்லாத பாவிகளுக்கு பரமன் இல்லை என்பதும் அதை அறியாமலே அழிவதும் உண்மையே. இறைவனை
வணங்குவதற்கு கரங்கள் இருந்தும், அவனையே நினைத்து தியானம் செய்ய மெய்ப்பொருள்
இருந்தும், கடவுள் இல்லை
என்று சொல்லி அவனை வணங்காத் தன்மையினால் அவன் அருள் இல்லாத உயிர், பரம் பொருள்
இல்லாத சூன்யமாகி,
கண்களில் குருடு ஏற்பட்டு, பாழும் நரக
வாழ்வில் உழல்வது உண்மையாக நடக்கும். ஆதலால் கடவுள் இல்லை என்று சொல்லி உங்கள்
உயிர் இருக்கும்போது அதை உணராமல் பாழ் நரகில் விழாதீர்கள்.
***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 529
மாதர் தோள் சேராதவர் மாநிலத்தில் இல்லையே
மாதர் தோள் புணர்ந்தபோது மனிதர் வாழ் சிறக்குமே
மாதராகும் சக்தியொன்று மாட்டிக்கொண்ட தாதலால்
மாதராகும் நீலிகங்கை மகிழ்ந்து கொண்டான் ஈசனே.
மாதரைச் சேர்ந்து பெண்ணால் வரும் சுகத்தை அறியாதவர் எவரும் இப்பூவுலகில்
இல்லையே. நன் மங்கையரை மணந்து நன்மக்களைப் பெற்று வாழ்வதே மனிதர் வாழ்வு
சிறப்படையும், சக்தியே உமதுடல், சிவனே உமதுயிர்
என்பதை உணருங்கள். சக்தியும் சிவனும் இணைந்தே மனித வாழ்வு அமைந்துள்ளது. ஈசன்
சக்திக்கு தன் உடம்பில் பாதியையும், நீலியான கங்கையை தன் தலையிலும் வைத்து
மகிழ்ந்து கொண்டான் என்பதை அறிந்து கொண்டு மாதரை இம்மாநிலத்தில் மதித்து
இருங்கள்.
***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 530
சித்தரென்றும்
சிறியரென்றும் அறியொணாத சீவர்காள்
சித்தரிங்கு
இருந்தபோது பித்தரென்றே எண்ணுவீர்
சித்தரிங்கு
இருந்துமென்ன பித்தனாட்டிருப்பரே
அத்தநாடும்
இந்த நாடு மவர்களுக்கு எலாம் ஒன்றே.
இவர் பரந்த உள்ளம் கொண்ட சித்தரா அல்லது குறுகிய எண்ணம் கொண்டு வேடமிட்ட
சிறியரா என்பதை அறிய முடியாத மனிதர்களே! சித்தர் இங்கு இருந்த போதும் அவரை பித்தம்
பிடித்தவர் என்றே எண்ணுவீர்கள். சித்தர் இங்கிருந்தும் அவரை அறியாமல் பித்தன்
என்று விரட்டும் பைத்தியக்கார உலகில் இருக்கும் மூடர்களே! அத்தன் ஈசன் ஆடும்
சுடுகாடும், அவன் ஆலயம் கொண்டிருக்கும்
இந்த நாடும், அவர்களுக்கு
எல்லாம் ஒன்றே.
***************************************************
-அன்புடன்
கே எம் தர்மா.
No comments:
Post a Comment