பூமி என்னும் சொர்க்கம் 20:

உடலைத் துளைக்கும் நியூட்ரினோக்கள்

சூரியனிலிருந்து வரும் எக்ஸ் கதிர்கள், சூரியத் துகள்கள் (Solar Wind) ஆகியவற்றைப் பூமியின் காற்று மண்டலமும் பூமியின் காந்தப் புலமும் தடுத்துவிடுகின்றன. சூரியனிலிருந்து வரும் புற ஊதாக் கதிர்கள் பெரும்பாலும் தடுக்கப்பட்டுவிடுகின்றன. சூரிய ஒளியுடன் சேர்ந்து கிட்டத்தட்ட சரி சமமாக அகச்சிவப்புக் கதிர்களும் பூமியை வந்தடைகின்றன. இவை தவிர, சூரியனிலிருந்து நியூட்ரினோ எனப்படும் துகள்கள் பெரும் எண்ணிக்கையில் வருகின்றன.

 

நியூட்ரினோ வேறு, நியூட்ரான் வேறு. நியூட்ரான்கள் அணுத்துகள்கள். அவை அணுவுக்குள் அடங்கியிருப்பவை. பொதுவில் நியூட்ரான்கள் தனியே உலவுவது கிடையாது. நியூட்ரினோக்கள் நியூட்ரான்களை விட மிக மிகச் சிறியவை.

 

நியூட்ரான், புரோட்டான், எலக்ட்ரான் முதலியவை அப்படி அவை இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டதற்குப் பிறகே அவற்றுக்குப் பெயர் வைக்கப்பட்டன.

 

ஆனால் நியூட்ரினோக்கள் அப்படியல்ல. கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரபல விஞ்ஞானி ரூதர்போர்ட் அணுவுக்குள் புரோட்டான் இருப்பதைக் கண்டுபிடித்துக் கூறியதைத் தொடர்ந்து, விஞ்ஞானிகள் பலரும் அணுவை ஆராய ஆரம்பித்தனர். அப்போது அணு ஆராய்ச்சி தொடர்பான விளைவுகள் சமன்பாடுகள் வடிவில் விளக்கப்பட்டன. குறிப்பிட்ட ஆராய்ச்சி தொடர்பான சமன்பாட்டை எழுதும்போது கணக்கு உதைத்தது. இது ஏன் என்பது புரியவில்லை. விஞ்ஞானிகள் குழம்பி நின்றனர்.

 

வோல்ப்காங் பாலி என்ற விஞ்ஞானி 1930-ம் ஆண்டில் இதற்குத் தீர்வு கூறுகையில் நுண்ணியத் துகள் ஒன்று இருப்பதாகக் கற்பனை செய்துகொண்டால் கணக்குச் சரியாக வரும் என்று கூறினார். அவர் சொன்ன அந்தக் கற்பனையான துணுக்குதான் நியூட்ரினோ. அப்படி ஒரு துகள் இருக்கிறதா என்பது சந்தேகமே என்றும் அதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்றும் பாலி அப்போது கூறினார்.

 

அந்தக் கற்பனையான துகள் உண்மையில் இருக்கிறதா என்று கண்டறிய நீண்டகாலம் யாரும் முயலவில்லை. பின்னர் அமெரிக்காவில் இரு விஞ்ஞானிகள் பெரும்பாடுபட்டு பாதாளச் சுரங்கத்தில் ஆராய்ச்சி மேற்கொண்டு, நியூட்ரினோக்கள் இருக்கின்றன என்று கண்டுபிடித்தனர். ஆனால் அந்த நியூட்ரினோக்கள் அணு உலைகளிலிருந்து வெளிப்படுபவை. தவிர அவை எதிர் நியூட்ரினோக்கள்.

 

பின்னர் சூரியனிலிருந்து நியூட்ரினோக்கள் வெளிப்படுவதாக அறியப்பட்டது. சூரியனில் ஹைட்ரஜன் அணுக்கள் ஒன்று சேர்ந்து ஹீலியம் அணுவாக மாறுகின்றன. இது அணுச்சேர்க்கை என்று அழைக்கப்படுகிறது. இந்த அணுச்சேர்க்கையின்போது ஏராளமான நியூட்ரினோக்கள் வெளிப்படுகின்றன. இவை மிக வேகத்தில் பூமிக்கு வந்துசேருகின்றன. இரு அமெரிக்க விஞ்ஞானிகள் இந்தச் சூரிய நியூட்ரினோக்களைக் கண்டுபிடித்தனர். அத்துடன் சூரியனிலிருந்து எவ்வளவு சூரிய நியூட்ரினோக்கள் பூமிக்கு வந்து சேர வேண்டும் என்று கண்டறிய முற்பட்டனர். அவர்கள் அதில் ஈடுபட்டபோது நியாயமாக வந்து சேர வேண்டிய எண்ணிக்கையில் அவை வரவில்லை என்று தெரியவந்தது உலகெங்கிலும் பல இடங்களில் ஆராய்ச்சி நடத்தியபோதிலும் சுமார் 30 ஆண்டுக்காலம் விஞ்ஞானிகள் தீர்வு கிடைக்காமல் திண்டாடினர்.

 

கடைசியில் சூரிய நியூட்ரினோக்கள் சூரியனிலிருந்து கிளம்பிய பின்னர், நடு வழியில் வேறு வகை நியூட்ரினோக்களாக மாறி விடுகின்றன என்று கண்டுபிடித்தபோது பிரச்சினை தீர்ந்தது. நியூட்ரினோக்களில் மூன்று வகைகள் உள்ளன.

 

நியூட்ரினோக்கள் மிகவும் நுண்ணியவை என்பதால் அவை எந்தப் பொருளாக இருந்தாலும் ஊடுருவிச் சென்றுவிடுகின்றன. ஒவ்வொரு வினாடியும் கோடிக்கணக்கான நியூட்ரினோக்கள் நம் உடலைத் துளைத்துச் செல்கின்றன.

 

நியூட்ரினோக்கள் தீங்கு விளைவிக்காதவை. அவை பூமியையும் துளைத்துக் கொண்டு மறுபுறம் சென்றுவிடுகின்றன. பல பூமிகளைப் பக்கம் பக்கமாக அடுக்கி வைத்தாலும் அவை அனைத்தையும் நியூட்ரினோக்கள் துளைத்துச் சென்று விடும். நியூட்ரினோக்கள் எந்தக் கருவியிலும் சிக்காதவை. எதையும் ஊடுருவிச் செல்பவை. அப்படிச் செல்லும்போது சில நேரம் அவை அணுக்கள் மீது மோதிச் செல்லலாம். அப்போது ஏற்படுகிற விளைவுகளை வைத்துதான் நியூட்ரினோக்கள் பற்றி அறிய முடிகிறது.

 

நியூட்ரினோக்கள் சூரியனிலிருந்து மட்டுமன்றி நட்சத்திரங்களிலிருந்தும் அண்டவெளியிலிருந்தும் வருகின்றன. நியூட்ரினோக்கள் பற்றி மேலும் ஆராய்வதற்கான ஆராய்ச்சிக்கூடங்கள் மிக ஆழமான சுரங்கங்களில் அல்லது குன்றுகளுக்கு அடியில்தான் அமைக்கப்படுகின்றன. சூரியனிலிருந்தும் விண்வெளியிலிருந்தும் வருகிற வேறு வகையான கதிர்களையும் துகள்களையும் பாறைகளும் மண்ணும் தடுத்து நிறுத்திவிடும். எனவே ஆராய்ச்சிக் கருவிகளுக்கு நியூட்ரினோக்கள் மட்டுமே வந்து சேரும் என்பதால்தான் இப்படிப் பாதாள சுரங்கங்களில் ஆராய்ச்சிக்கூடங்கள் அமைக்கப்படுகின்றன.

 

உலகில் ஆழமான ஏரிக்கு அடியிலும் கடலுக்கு அடியிலும் நியூட்ரினோ ஆராய்ச்சிக்கூடங்கள் உள்ளன. அண்டார்டிகாவில் பனிக்கட்டிக்கு அடியிலும் ஐஸ் க்யூப் எனப்படும் ஆராய்ச்சிக்கூடம் உள்ளது. தமிழகத்தில் தேனிக்கு அருகே ஒரு குன்றுக்கு அடியில் நியூட்ரினோ ஆராய்ச்சிக்கூடத்தை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

 

இயற்கையில் வரும் நியூட்ரினோக்களை ஆராய்வதுடன், செயற்கையாக நியூட்ரினோக்களை உண்டாக்கி அவற்றை ஓரிடத்திலிருந்து பாதாளம் வழியே பிற இடங்களுக்கு அனுப்பியும் ஆராய்ச்சி நடத்துகிறார்கள்.

 

எதிர்காலத்தில் தகவல் தொடர்புக்கு நியூட்ரினோக்கள் உதவலாம் என்று கருதப்படுகிறது.

 

கட்டுரையாளர், எழுத்தாளர் -:தொடர்புக்கு:- nramadurai@gmail.com

No comments:

Post a Comment