பூமி என்னும் சொர்க்கம் 19:



பூமியின் காந்தப் புலம்

காந்தக் கட்டை (magnet) பற்றி நீங்கள் படித்திருக்கலாம். காந்தக் கட்டையைச் சுற்றிக் காந்தப் புலம் இருக்கும். பூமியின் மையத்தில் ராட்சத காந்தக் கட்டை இருந்தால் எப்படி இருக்கும்? அது மாதிரி பூமிக்கும் காந்தப் புலம் உள்ளது. பூமியின் இந்தக் காந்தப் புலம்தான் பூமியில் உள்ள உயிரினத்தைக் காப்பாற்றிவருகிறது. இந்தக் காந்தப் புலம் பூமியைச் சுற்றி அமைந்துள்ளது. இதை நம்மால் பார்க்க முடியாது. ஆனால் நுட்பமான கருவிகள் மூலம் பூமியின் காந்தப் புலத்தை அறியமுடியும். பூமியின் இந்தக் காந்தப் புலம் நமக்கு எப்படி உதவுகிறது?

 

பூமியிலிருந்து சுமார் 15 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சூரியனிலிருந்து ஓயாது ஆற்றல் மிக்கத் துகள்கள் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவற்றுக்கு ஆங்கிலத்தில் Solar Wind என்று பெயர். தமிழில் இதைச் சூரியக் காற்று என்று சொல்ல முடியாது. ஏனெனில் உண்மையில் இது காற்று அல்ல. ஆனால் எப்படியோ இந்தத் துகள்களுக்கு விஞ்ஞானிகள் ’சூரியக் காற்று’ என்று பொருள்படும்படியாக ஒரு பொருத்தமில்லாத பெயரை வைத்து விட்டனர். சூரியத் துகள் வீச்சு என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும்.

 

சூரியத் துகள்கள் சூரியனிலிருந்து நாலாபுறங்களிலும் மணிக்கு சுமார் 14 லட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் பாய்ந்து கொண்டிருக்கின்றன. இந்தத் துகள்களின் அளவும் வேகமும் மாறுபடுவது உண்டு. சூரிய மண்டலத்தில் உள்ள கிரகங்களை இந்தத் துகள்கள் தாக்குகின்றன.

 

பூமியைச் சுற்றி உள்ள காந்தப் புலமானது இந்தத் துகள்களைத் தடுத்து விடுகின்றன. இவை பூமியில் உள்ள உயிரினங்களைத் தாக்குமானால் கடும் பாதிப்பு ஏற்படும். விண்வெளியிலிருந்து காஸ்மிக் கதிர்களும் வருகின்றன. இவையும் உயிரினத்தைப் பாதிக்கக்கூடியவையே. பூமியின் காந்த மண்டலமும் காற்று மண்டலமும் சேர்ந்து காஸ்மிக் கதிர்களைத் தடுத்துவிடுகின்றன,

 

பூமி எப்படிக் காந்தப் புலத்தைப் பெற்றிருக்கிறது? பூமியின் மையத்தில் மிகுந்த வெப்பத்தில் ஏராளமான இரும்பு உள்ளது. கடும் அழுத்தம் காரணமாக இது குழம்பு வடிவில் இன்றி, கெட்டியாக உள்ளது. அதைச் சுற்றி இரும்பு, நிக்கல் மற்றும் பல உலோகங்களால் ஆன நெருப்புக் குழம்பு உள்ளது. இது மையத்தில் உள்ள கெட்டி இரும்பைச் சுற்றிச் சுற்றிவருகிறது. இதன் விளைவாகவே பூமிக்குக் காந்தப் புலம் உள்ளதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

 

நதியின் நீரானது நதியின் நடுவே உள்ள தீவைத் தாண்டும்போது இரண்டாகப் பிரிந்து செல்வதைப்போல, சூரியத் துகள்கள் பூமியின் காந்தப் புலத்தைத் தாண்டும்போது பக்கவாட்டில் பிரிந்து சென்று விடுகின்றன. இப்படித் தாண்டியதும் அவற்றில் சில துகள்கள் பூமியின் வட, தென் துருவ முனைகளை நோக்கி வருகின்றன. இதன் விளைவாக துருவப் பகுதிக்கு மேலே வண்ண வான் ஒளிகள் தெரிகின்றன. வட துருவத்துக்கு மேலே தெரியும் இந்த ஒளியை அரோரா பொரியாலிஸ் (Aurora Borealis) என்று அழைக்கின்றனர்.

 

தென் துருவப் பகுதிக்கு மேலேயும் இப்படி அதிசய ஒளி தெரியும். ஆனால் வட துருவ ஒளிதான் பார்ப்பதற்கு மிக அழகாகத் தெரியும். துருவப் பகுதிகளுக்கு மேலே காற்று மண்டலத்தின் உயரே உள்ள அணுக்கள் மீது சூரியத் துகள்கள் மோதும் போது ஏற்படும் விளைவுகளால் இந்த ஒளிகள் தோன்றுகின்றன.

 

பூமியுடன் ஒப்பிட்டால் செவ்வாய் கிரகத்துக்கு காந்தப் புலம் கிடையாது. இதன் விளைவாக சூரியத் துகள்கள் செவ்வாய் கிரகத்தின் மெலிந்த காற்று மண்டலத்துடன் நேரடியாக மோதுகின்றன. இதனால் செவ்வாய் கிரகம் தனது காற்று மண்டலத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துவருகிறது. செவ்வாய் கிரகத்துக்கு அமெரிக்காவின் நாஸா அனுப்பிய ‘மாவென்’ என்னும் பெயர் கொண்ட விண்கலம் இதை அண்மையில் உறுதிப்படுத்தியுள்ளது.

 

பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் செவ்வாய் கிரகம் அடர்த்தியான காற்று மண்டலத்தைப் பெற்றிருக்க வேண்டும். சூரியத் துகள்களின் தாக்குதலால் அந்தக் காற்று மண்டலம் அடர்த்தியை இழந்திருக்க வேண்டும் என்றும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர். செவ்வாயின் காற்று மண்டலம் அடர்த்தியாக இருந்த காலத்தில் செவ்வாயில் நதிகள் பெருக்கெடுத்து ஓடியிருக்க வேண்டும் என்றும் சொல்கிறார்கள். செவ்வாயில் இன்று தண்ணீர் இல்லை. ஆனால் நதிகள் பெருக்கெடுத்து ஓடியதற்கான தடங்கள் மட்டும் இருக்கின்றன.

 

பூமிக்கு உள்ளதைப் போலவே செவ்வாயிலும் அதன் மையத்தில் இரும்புக் குழம்பு இருந்திருக்க வேண்டும். ஆனால் பூமியைவிட வடிவில் சிறியதான செவ்வாய் கிரகத்தின் மையத்தில் இருந்த இரும்புக் குழம்பு ஏதோ ஒரு கால கட்டத்தில் ஆறிப் போனதால் காந்தப் புலம் இல்லாமல் போய்விட்டது. எனவே அது கொஞ்ச நஞ்ச காற்று மண்டலத்தையும் இழந்துவருகிறது.

கட்டுரையாளர், எழுத்தாளர்-தொடர்புக்கு: nramadurai@gmail.com

 


No comments:

Post a Comment