கடவுள் உலகை ஏழு நாட்களில் படைத்தார்!

3700 வருடங்களுக்கு முந்திய மொசப்பத்தேமிய சூரியக் கடவுள் 'ஷாமாஷ்'  மற்றும் அவரின் உதவிக் கடவுள்களாலும், பின்னர் வந்த 'எல்' தலைமைக் கடவுளும், அவர் பரிவாரங்களாலும்  எப்படி உலகம் படைக்கப் பட்டது  என்று கூறி வைக்கப்பட்டதோ, அப்படியே பின்னர் வந்த ஆபிராஹாமிய மதங்கள் மூன்றும் அக்கதையைப் பிரதிபண்ணி, பல கடவுள்கள் என்பதை விடுத்து அதை ஒரு (தத்தம்) கடவுளாக்கி,  தங்கள் நூல்களில் தங்கள் கடவுள்கள்தான் உலகத்தைப் படைத்ததாக எழுதி வைத்த்துள்ளார்கள்.

 

எல்லோரும் ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கிறார்கள்; சிறு, சிறு வித்தியாசங்களுடன்.

'கடவுள் வந்தார், உலகை ஏழு நாட்களில் படைத்தார்' என்று.

 

ஒரு படைத்தல் கொள்கையை மட்டும் உதாரணத்திற்கு எடுத்துக் கொள்வோம்.

 

நாள் 1:

கடவுள் வந்து "ஒளி வரட்டும்" என்கிறார். வெளிச்சம் வந்தது. பார்த்தார், நன்றாய் இருந்தது. இருட்டில் இருந்து வெளிச்சத்தைப் பிரித்து அதை  'நாள்' என்றும், இருளுக்கு 'இரவு' என்று பெயர் இட்டார். 'காலை' என்றும், 'மாலை' என்றும் உருவாக்கினார்.

 

கேள்வி 1.1: இந்தச் சம்பவத்திற்கு முன்னர் கடவுள் என்று ஒருவர் இருக்கவில்லையா? இருந்திருந்தால்  அவர் எங்கு இருந்தார்? என்ன வேலை செய்து கொண்டிருந்தார்?  ஒரு வேலையுமுமே இல்லாது வெறும் வெட்டியாய்த்தானே உட்கார்ந்து இருந்திருப்பார்? நிற்கக் கூடி இடமே இன்னும் உருவாக்கப் படாத நிலையில் எங்குதான் இருந்திருப்பார்/படுத்திருப்பார்?

 

கேள்வி 1.2: கடவுளுக்குப் படைத்துப் பார்த்த பின்னர்தானா நன்றாய் இருப்பது தெரியவரும்? முதலிலேயே அறியும் சக்தி இல்லையா? முற்கூட்டியே திட்டமிடும் ஆற்றல் அற்றவரா?

 

நாள் 2:

கடவுள் வானத்தைப் படைத்தார்.

 

கேள்வி 2.1: 'நாள்' என்பதே இப்பொழுதுதானே படைக்கப்பட்டது. அப்படி என்றால் எப்படி இது இரண்டாம் நாள் ஆகும். இது முதல் நாளாய்த் தானே இருக்க வேண்டும்?

 

கே 2.2: எது வானம்? நிலம் என்றொரு தரை இருந்தால்தானே வானம் என்று ஒன்றைக் காணலாம். நிலம் இனித்தானே வரப்போகின்றது! பூமி என்று ஒன்று இல்லையேல் வானம் என்பது வெறும் 'வெறுமை' தானே? சூரியன் ஒளியினால்தான் மேகம் நீல நிறமாகத் தெரியும். இன்னும் சூரியனே வரவில்லையே! வானம் என்றால் அது எப்படி இருந்திருக்கும்?

 

நாள் 3:

கடவுள் பூமி, உலர் நிலம்  கடல், மரம், தாவரங்களைப் படைத்தார்.

 

கே 3.1: சூரிய ஒளி (இன்னமும் படைக்கப்படவில்லை), தேவையான வளி மண்டலம் (எப்பவும், என்றுமே  படைக்கப்படவே இல்லை) இன்றி எல்லாம் இறந்து விடுமே? (ஒரு நாள் என்பது ஒரு நாள் அல்ல, பல லட்ஷம் வருடங்கள் என்று நியாய படுத்தும் புத்தி ஜீவிகள் கவனத்திற்கு - அப்படி என்றால் கடவுளுக்கு அத்தனை காலம் ஆகுமா படைப்பதற்கு?)

கே 3.2: பாவம், கடவுளுக்கு மத்திய கிழக்கின் பாலைவனப் பகுதிகள் மட்டும்தான் இருப்பது தெரியும், அந்த 'உலர் நிலம். தான் பூமி என்று நினைத்து விட்டார்(கள், 'புனித' நூல்களை காலம், காலமாக எழுதிய புத்திசாலிகள்!)

 

நாள் 4:

கடவுள் பகலை ஆழ ஒளி கூடிய சூரியனையும், இரவை ஆழ ஒளி குறைந்த சந்திரனையும், மற்றும் நட்ஷத்திரங்களையும் படைத்தார். நல்லாய் இருந்தது.

 

கே 4.1: அட, இதென்னப்பா? அப்போ, முதல் 'நாளில்' படைத்த வெளிச்சம் எங்கிருந்து வந்தது? சூரிய, சந்திரனில் இருந்து இல்லையா? கடவுள் மறந்து போனாரா ஏற்கனவே வெளிச்சம் படைக்கப்பட்டு விட்டது என்று?? இப்போது சூரியன், சந்திரனின் வேலை என்னவோ? தலை சுற்றுகின்றதே!

 

நாள் 5:

கடவுள் கடல் வாழ்வனவற்றையும், பறவைகளும் படைத்தார்.

 

கே 5.1: மனிதனிலும் முன்பே வேறு உயிர்கள் தோன்றியதை ஏற்பவர்கள், மனிதகுல பரிணாம வளர்ச்சியை ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்?

 

நாள் 6:

கடவுள் நிலத்தில் வாழும் மிருகங்களைப் படைத்தார். 'தங்கள்' (தனது அல்ல, தங்கள் ) உருவம் ஒத்த மனிதன் ஒருவனை தூசிலிருந்து உருவாக்கினார். அவனின் எலும்பொன்றை உடைத்து பெண் ஒருத்தியையும் உருவாக்கினார்.

 

கே 6.1: கடவுளின் உருவம், மனிதனின் உருவம்தான் என்று கண்டு பிடித்தவர்கள், ஏன் கடவுளுக்கு மனித உருவத்தில் சிலை செய்து வணங்குவதில்லை?

கே 6.2: கடவுளே  'தங்கள்' என்று சொல்லி, கடவுள் ஒருவர் இல்லை, பலர் இருக்கிறார்கள் என்று சொல்லி யிருந்தும், ஏன்தான் ஒரே கடவுள் கொள்கையில் கட்டுப் பட்டு இருக்கின்றார்கள்?

கே 6.3: பெண்ணைப் படைக்க மேலும் தூசு கிடைக்காமலா ஆணின் எலும்பை உடைத்தார்?

 

நாள் 7:

படைத்தவற்றைப் பார்த்தார்; எல்லாம் நல்லாய் இருந்த்தது. கடைசி நாளில் விசேட விடுமுறையில் இருந்தார்.

 

கே 7.1: பாவம், கடவுள்! ஆறு நாட்களாக  ஒரே வேலை செய்து களை, களை என்று களைத்துப் போய் நிம்மதியாய் கொஞ்ச நேரம், (அவர் படைத்த இரவில்) நீட்டி, நிமிர்ந்து படுத்து ஆழ்ந்த உறக்கத்தில் போய் விட்டாரா?

 

கே 7.2: உறங்கி விட்டால் படைத்தது எல்லாம் இயங்காது நின்று விடாதா?

 

மற்றும்,

 

*: இந்தப் படைப்புகள் எல்லாவற்றையும் ஒரு கண் அசைப்பில் உருவாக்க முடியாத இந்தக் கடவுள் மிகவும் சக்தி குறைத்தவராக இருப்பாரோ? எனக்குத் தெரிந்த வேறு ஒரு கடவுள் ஓர் அசைவினாலேயே அண்ட, சரா சரங்கள் பலவற்றையும் வழக்கமாகப் படைத்து விடுவார் என்று கேள்வி!.

*:உயிர் வாழ்வுக்கு உகந்த பிராணவாயுவை எப்போது உருவாக்கினார்?

* பூமியில் மனிதன் வாழமுடியாத பகுதிகளாக்கி  (கடல், பாலைவனம், பனிக்கட்டி, கடும் குளிர், கடும் வெப்பம்  என்று) பெரும் பகுதியை ஏன் முட்டாள்தனமாக வீணாக்கினார்?

* கடவுளுக்கு உலகின் ஒரு வீதம் பரப்பளவு கொண்ட ஒரு சிறிய பகுதி (மத்திய கிழக்கு) மட்டும்தான் உலகம் என்று நினைத்து வேறு எந்த இடங்களையும் எப்படித் தெரியாமல் இருந்தார்?

* மனிதன் வாழக்கூடியதாக வேறு ஒரு கிரகத்தை எமக்கு அருகில், ஒரு சில கிலோமீட்டர் தூரத்தில் ஏன் படைக்கவில்லை?

* சாத்தானை ஏன் படைத்தார்? அல்லது சாத்தனைக் கட்டுப்படுத்தும் அளவுக்கு கடவுள் சக்தி அற்ற பலவீனனா?

* பூமியை வெறும் தட்டை வடிவமாகப் படைத்தார் சரி, எப்பொழுது திரும்பவும் வந்து எடுத்து திரட்டி, உருட்டி, சுழற்றி எறிந்துவிட்டுப் போனார்?

*பூமியைச் சுற்றிச் செல்ல படைக்கப்பட்ட சூரிய, சந்திர, நட்ஷத்திரங்களை எல்லாம், எப்பொழுது வந்து சந்திரன் பூமியையும்,  பூமி சூரியனையும், நட்ஷத்திரங்கள் பால் வெளியையும், மற்றைய பேரடைகளும் சுற்றும்படி மாற்றி ஓட விட்டார்?

* கடவுள் படைத்த முதல் மனிதனின் பரம்பரைகளை கணக்குப் போட்டுப் பார்த்தால் ஆகக் கூட ஒரு 3200 வருடங்களுக்கு முன்னர்தான் கடவுள் வந்து பூமியைப் படைத்தார் என்றால், புதைந்து கிடைக்கும் டைனசோர்ஸ்களின் எலும்புக்கு கூடுகள் எல்லாம் ஒரு 2000 வருடங்களுக்கு முன்னயவைதானா?

* அதற்குள் (வெகு சமீபத்தில்) பூமியை முழு வெள்ளத்தில் (உயர்ந்த மலையையே மூடும் அளவுக்கு) மூழ்கடித்து உயிர்கள் எல்லாவற்றையும் கொல்ல ஏன் முடிவெடுத்தார்? அந்த நிலைக்கு வர விட்டது அவரின் கையாலாகாத தனமா?  நிர்வாக திறமையீனமா?

* நோவா குடும்பத்தையும், மற்றும் உலகின் சகல உயிரினங்களின் ஒவ்வொரு ஜோடிகளையும்  எப்படி, எல்லாவற்றையும் ஒரு 150மீ x 25மீ அளவு, மூடப்பட்ட பேழை ஒன்றுக்குள் அடக்கி ஏற்றி 40 நாட்களாக உயிர் பிழைக்க  வைத்தார்?

* பேழைக்குள் இவர்களுக்கெல்லாம் உணவு யார் அளித்தார்கள்?

* இந்தப்பேழைக்குள் ஒரு சில மிருகங்கள் இருந்தாலே, அவைகளின் சல, மல, வாயு நாற்றமே போதுமே எல்லா உயிர்களும் ஒரே நிமிடத்தில் மடிய! எப்படி உயிர் தப்பி வந்தார்கள்?

*அக்காலத்தில் அடிக்கடி வந்து போன ஒரு கடவுளையேனும் இப்பொழுது ஒருமுறை வந்து போகச் செய்ய எவராலும் இயலுமா? பார்க்க ஆசையாய் இருக்கு!

 

இங்கு நடக்கும் செயல்கள் எல்லாம் கடவுளால்தானே நடக்கின்றது என்ற அனுமானம் வேண்டாம். நீங்கள் தினசரி வணங்குவதை கைவிட்டாலும் உலகில் நடப்பது நடந்துகொண்டுதான் இருக்கும். ஒரு மாற்றமும் வரப்போவது இல்லை.

 

பல்வேறு மனிதர்களால், வெவ்வேறு காலங்களில் தத்தம் மனங்களில் தோன்றிய விடயங்களை  சொல்லப்பட்டும், வாய் மொழி மூலம் பரப்பப்பட்டும், பின்னர் பல நூறு ஆண்டுகளாக மாற்றி, மாற்றி எழுதப்பட்டும் இருக்கும் ஒரு நூல் தொகுப்பினை கையில் வைத்துக்கொண்டு, அதை கடவுள் எழுதினார், கடவுள் கூறினார், இவர் கேட்டார், அவர் சொன்னார் என்று கூறிக்கொண்டு, இது தெய்வீக நூல், புனித நூல் என்று கூறி, கடவுள் பயத்தினால் பலவீனமானவர்களை வசியம் செய்து, சுயமாய், அறிவு சாரச் சிந்திப்பதை முற்றிலும் தடை செய்து கொண்டே இருக்கின்றார்கள்.

 

"ஐயையோ, இது எல்லாம் கடவுள் சமாச்சாரம்; கேள்விகள் கேட்கப்படாது, பழங்காலத்துப் புத்திசாலிகள் எழுதி வைத்துவிட்டுப் போய்விட்டார்கள்; கண்ணை மூடிக்கொண்டு, காதை பொத்துக்கொண்டு, மூளையைக் கழட்டி தூர எறிந்து விட்டு, அப்படியே முழுமையாக உங்களை அர்ப்பணித்து, எங்கள் கடவுளை மட்டும் நம்பி, வணங்குவோர், இறந்தபின்னர் நிச்சயமாக சொர்க்கலோகம் போவார்கள் என்பது உண்மையிலும் உண்மை.

 

இதை விளங்காது புறக்கணிப்போருக்கு, வேறு கடவுள்களை வணங்குவோருக்கு நரகம் நிச்சயம், நிச்சயம்!"

 

என்று, இறந்த பின்னர் நமக்குத் தெரியாத, தொடர்பே இல்லாத ஆன்மாவுக்கோ, வேறு எதுவுக்கோ, என்னவோ,  எங்கோ, ஏதோ நடக்கும் என்று கூறப்படும் பொய்களை நம்பி, அதற்கு நாளாந்தம் காரணமின்றி அஞ்சும் மூளை சலவை செய்யப்பட்ட மன நிலையில் இருந்து மனித குலம் வெளியே வர நீண்ட காலம் எடுக்கும்!

-சந்திரகாசன் செல்வதுரை

No comments:

Post a Comment