உணவைக் குறைத்தாலும் உடல் எடை குறையாதது ஏன்?

உடல் எடை குறைப்பு என்பது நீங்கள் செலவழிக்கும் கலோரிகளை விட குறைவான கலோரிகளை உணவில் எடுத்துக் கொள்வதுதானே?

 

ஆனாலும், இது முடியாத காரியமாக உள்ளது. ஏன் உடல் எடையைக் குறைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது என்று நிபுணர்களும், தங்களுக்கு எந்த முறை சரியாக இருந்தது என்று டயட் மூலம் உடல் எடையைக் குறைத்தவர்களும் விளக்குகின்றனர்.

 

"நீங்கள் மற்றவர்களின் உணவு முறையை பின்பற்றுகிறீர்கள்"

"பலரும் தங்களின் உடலுக்கு ஏற்ற உணவு முறையை கைவிட்டு விடுவதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை; ஏனென்றால் பலரும் யாரோ ஒருவர் இன்ஸ்டாகிராமில் பரிந்துரைத்த கடுமையான உணவு முறைகளையோ அல்லது பிரபலமானவர்களின் உணவு முறைகளையோ பின்பற்றுகிறார்கள். அது யதார்த்தமானதல்ல", என்கிறார் உணவுமுறை வல்லுநர் சோபி மெட்லின்.

 

"என்னை போல் இருக்க என்னை போல் சாப்பிடுங்கள்" என்ற கொள்கை மிகவும் தவறானது. நம் எல்லாருக்கும் வெவ்வெறு விதமான மரபியல் மற்றும் வாழ்க்கை முறைகள் உள்ளன. எனவே, நாம் எல்லாரும் ஒரே மாதிரி இருக்க முடியாது."

 

உணவுகளில் உள்ள கொழுப்பு, கார்போஹைட்ரேட்டுகள், குளுகோஸ் ஆகிய ஊட்டச்சத்துக்கு இரட்டை குழந்தைகள்கூட வெவ்வேறு விதமாக எடுத்துக்கொள்கின்றனர் என்று புதிய ஆய்வு கூறுகிறது. இதற்கு 'குடல் பாக்டீரியா'வுக்கு ஒரு வகையில் நன்றி கூற வேண்டும். இது எதை குறிக்கிறதெனில், ஒருவருக்கு சரியாக இருக்கும் உணவுமுறை, மற்றொருவருக்கு, அவர்கள் இரட்டை குழந்தைகளாகவே இருந்தாலும்கூட, வேலை செய்யாமல் போகலாம். இது குறித்த ஆய்வு நடந்துகொண்டு இருக்கிறது; ஒரு நாள் நமக்கு தனிப்பயனுக்காக உணவு முறை இருக்கும்.

 

நீண்ட கால எடை குறைப்புக்கும், இதய நலனுக்கும் மிகவும் ஏதுவான உணவு முறை வழக்கம் எதுவென்றால், நீங்கள் தேர்தெடுக்கும் உணவு பழக்கவழக்கங்கள் மற்றும் உங்கள் வாழ்க்கை முறையை ஒத்திருக்கும் முறையே என்று ஓர் ஆய்வு பரிந்துரைக்கிறது.

 

"எப்போதாவது ஒரு நாள் உங்களுக்கு விருப்பமான உணவையோ அல்லது பிறந்தநாள் கேக்கையோ சாப்பிடுவதால் உங்களை நீங்களே வருத்திக்கொள்ளாமல் இருப்பது முக்கியம்", என்கிறார் சோபி.

 

பென் கென்யோன் தான் கண்டறிந்ததை ட்விட்டரில் கூறினார்: "நமக்கு ஏதுவான உணவுமுறை எதுவென்றால், உங்கள் வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாக, நாம் நீண்டகாலம் கடைபிடிக்கக்கூடியதே ஆகும்".

 

தூக்கம் வராதவர்கள் அதிகம் சாப்பிடுவார்களா?

 

நீங்கள் ஒருவகையான தூக்கமின்மையில் இருந்தால், நன்றாக தூங்கும் மனிதர்களை விட ஒரு நாளைக்கு 400 கலோரிகள் அதிகம் சாப்பிட வாய்ப்பு உள்ளது. உங்களை விழிப்புடன் வைத்துக்கொள்ள நீங்கள் விரைவாக ஆற்றல் கிடைக்கும் உணவுகளை எடுத்துக்கொள்வீர்கள், பொதுவாக அவை கார்போஹைட்ரேட்டுகளாக இருக்கும். மேலும், தூக்கக் கலக்கம் பசியை தூண்டும் ஹார்மோன்களை அதிகரிக்கும், என்கிறார் சோபி. இது இரட்டை சிக்கல்.

 

"அலுவலகப் பணிக்கு செல்லும் முன் நீங்கள் உடற்பயிற்சி மையத்திற்கு செல்ல காலை நான்கு மணிக்கு எழுந்து கொள்ளலாம். ஆனால், இந்த செயல் உங்களை மாலையில் மிகவும் சோர்வாக்கும். இது தோற்கும் போரில் சண்டையிடுவது போன்றதாகும்", என்று எச்சரிக்கிறார் அவர்.

 

பெரும்பாலும், நமக்கு தூக்கம் வர சிரமமாக இருக்கும். தூங்க செல்வதற்குமுன் அதிக ஒளி உள்ள இடத்தில் இருப்பது மற்றும் அதிக மன அழுத்தம் இருப்பது இரண்டும் தூக்கத்தைப் பாதிக்கும் விஷயங்கள்," என்று மருத்துவர் ஆயிஷா முகமது கூறுகிறார். தூக்கமின்மை காரணமாக மன அழுத்தம் கிளறப்படும். இது கொடிய சுழற்சி.

 

"நீங்கள் மன அழுத்தத்துடன் இருக்கிறீர்கள்"

அதிக உடல் எடை குறியீட்டிற்கும் மற்றும் மன அழுத்தம் உள்ளிட்ட மனரீதியான சிக்கல்களுக்கும் தொடர்பு இருப்பது தெளிவாக தெரிகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆனாலும், எடை குறைப்புக்கு மனநலமும் ஒரு பங்கு வகிக்கிறது என்று பத்தில் ஒருவர்தான் நினைக்கின்றனர்.

 

நம்மை ஒரு சிங்கம் துரத்துவதன் மூலம் ஏற்படும் மன அழுத்ததிற்கும், வேலையில் இருக்கும் காலக்கெடுவால் ஏற்படும் மன அழுத்தத்திற்கும் நம் உடலால் வித்தியாசம் காண முடியாது. நாம் ஒரே விளைவைத்தான் காணமுடியும். அப்போது கர்டிசோல் (Cortisol) ஹார்மோன் அதிகரிப்பதை காண முடியும். அது கொழுப்பு சேகரிப்பை (குறிப்பாக வயிற்றுப்பகுதியில்) அதிகரிப்பது உள்ளிட்ட பிறவற்றுக்கு காரணமாக இருக்கும். ஏன்?

 

"ஏனென்றால், ஒரு சிங்கம் உங்களை துரத்தி வந்தால், நாம் ஒளிந்துகொண்டு, பல நாட்களுக்கு உணவு இல்லாமல் இருக்க தயாராக இருக்க வேண்டும் என்று நம் உடல் கண்டுபிடித்துவிடும்", என்கிறார் ஆயிஷா முகமது.

 

"நீங்கள் மன அழுத்ததுடன் இருந்தால், எளிதில் ஜீரணமாகக்கூடிய, எளிதில் ஆற்றலை வெளியிடக்கூடிய உணவுகளுக்கு ஆசைப்படுவீர்கள். 'ஆறுதல் அளிக்கும் உணவு' என்று அழைக்கப்படும் சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் இத்தகைய விஷயங்களுக்கு போராட உதவும். உங்கள் உடல் இன்னும் குகை மனிதர்கள் உடல் போல்தான் உள்ளது", என்று சோபி மெட்லின் கூறுகிறார்.

 

இவையெல்லாம் நம்மை காப்பாற்றிக்கொள்ள சிறந்த செயல்முறைகள். ஆனால், நாம் அனுபவிக்கும் சமகால மன அழுத்ததிற்கு இது தேவையில்லை. மன அழுத்ததை சமாளிக்கும் வழிமுறைகளுடன் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தையும் கடைபிடித்தால், எடையை குறைப்பதில் நல்ல பலன் கிடைக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

 

" உங்கள் மன அழுத்ததை கண்டறிந்து, ஒரு சாக்லேட்டை சாப்பிடுவதற்கு பதில் அதற்கு தீர்வாக ஐந்து நிமிடங்கள் தியானம் அல்லது 15 நிமிடங்கள் நடை பயணம் செய்யும் உலகத்தை நினைத்துப்பாருங்கள். இதனால் கிடைக்கும் மனரீதியான, உடல்ரீதியான நன்மைகள் அதிகம்", என்கிறார் சோபி.

 

ஸ்டெஃபானி பர்னஸ், தனக்கு உதவிய உடற்பயிற்சி குறித்து ட்விட்டரில் இப்படிக் கூறியுள்ளார். "நான் நன்றாக சாப்பிட்டேன்; உடற்பயிற்சி செய்தேன்; எனக்கு வேண்டியதை செய்தேன். ஆறு கிலோ எடை குறைத்தேன். மகிழ்ச்சியாக இருப்பதும், உணவுடன் நல்ல நேர்மறையான பழக்கத்தை உருவாக்குவதும் முக்கியம்".

 

"நீங்கள் எவ்வளவு சாப்பிடுகிறீர்கள் என்பதை குறைத்து மதிப்பிடுகிறீர்கள்"

 

பிரிட்டனின் சராசரி உடல் எடை கடந்த 20 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. ஆனால், அந்நாட்டின் தேசிய உணவுமுறை மற்றும் ஊட்டச்சத்து ஆய்வில், நாம் உண்ணும் கலோரிகளின் அளவாக நாம் கூறுவது குறைந்து வருகிறது. நாம் என்ன, எவ்வளவு உணவு சாப்பிடுகிறோம் என்பதை தவறாக கூறுவதுதான் இந்த வேறுபாடுக்கு காரணம்.

 

அதிக எடையை குறைந்தவர்கள், உணவு மற்றும் எடையை சரிபார்ப்பதில் விடாமுயற்சியுடன் செயல்பட்டவர்கள் என்று ஆய்வுகள் காட்டுகின்றன.

 

டிவி பார்க்கும்போது திண்பண்டங்களை சாப்பிடுவது என சாப்பிடும்போது மற்ற விஷயங்களில் கவனம் இருப்பது போன்ற சில விஷயங்கள் சாப்பிடுவதை மறக்கடிக்கலாம்.

 

" காபி ஷாப்பில் இருந்து நீங்கள் உங்கள் டீ-யை குடிப்பதாக இருந்தாலும், அல்லது வேலை முடித்த பிறகு பார்ட்டியில் சில பானங்கள் குடிப்பதாக இருந்தாலும் சரி, நீங்கள் அதற்கான விளைவுகளை காணாமல் இருப்பதற்கு காரணம், நீங்கள் உங்கள் கலோரிகளை குடிக்கிறீர்கள்", என்கிறார் டாக்டர் ஆயிஷா முகமது.

 

"உங்களுடைய பானங்களில் நிறைய கலோரிகளும் சர்க்கரையும் இருக்கும். ஆனால், உங்களுடைய மூளை இதை முழுமை பெற்றதாக கருதாது; அதனை 'கூடுதல்' கலோரிகளாக சேர்க்கும். மது, சூடான பானங்கள், புரதப் பானங்கள், ஆற்றல் மற்றும் விளையாட்டு பானங்கள் மற்றும் மற்ற சர்க்கரை சேர்த்த பானங்களில் கவனமாக இருங்கள்."

 

நீண்டகாலம் இவற்றை உட்கொள்ளும் வழக்கத்தை நீங்கள் கடைபிடித்தால், உடலுக்கு போதுமான அளவு என்ன என்பதைத் தெரிந்து வைத்திருப்பதும் அவசியம்.

நன்றி:பி பி சி தமிழ்

No comments:

Post a Comment