புரத உணவுகளை அதிகமாக சாப்பிட்டால் என்னவாகும்?

 


ஒரு காலத்தில் விளையாட்டு வீரர்கள் மற்றும் பெண்கள் மட்டுமே பயன்படுத்தி வந்த உயர் அளவு புரதம் கொண்ட உணவுப் பழக்கங்கள் இப்போது பொதுவாக மாறிவிட்டன. பேலியோ, அட்கின்ஸ் போன்ற உணவு முறைகளில் எடையைக் குறைப்பதற்காக அதிக அளவு மீன், இறைச்சி, முட்டை, கொட்டை வகைகள், வெண்ணெய் ஆகியவை பரிந்துரைக்கப்படுகின்றன.

 

ஆனால் நினைத்த அளவுக்கு புரதம் சாப்பிடலாமா, எவ்வளவு புரதம் சாப்பிடுவது பாதுகாப்பானது? அதிக புரதம் சாப்பிட்டால் என்னவாகும் போன்ற பல கேள்விகள் எழுகின்றன.

 

உடல் எடை பராமரிப்பிற்கு உணவில் 20 சதவிகிதம் புரதம் இருக்க வேண்டும் என்றும், எடை இழப்புக்கு 25 சதவிகிதம் வரை புரதம் இருக்க வேண்டும் என்றும் பொதுவாக உயர் புரத உணவு முறைகளில் பரிந்துரைக்கப்படுகிறது.

 

புரோட்டீன் - எடை இழப்புக்கு உதவுகிறது. ஏனெனில் இது உங்களை நீண்ட நேரம் வயிறு நிறைந்து பசியில்லாமல் உணர வைக்கிறது. மூளையில் 'சாப்பிடுவதை நிறுத்து' என்ற சிக்னலைத் தூண்டும் குடல் ஹார்மோனை உற்பத்தி செய்வதுடன் இது தொடர்பு கொண்டிருக்கிறது.

 

ஆனால் நார்ச்சத்து குறைவாக உள்ள உணவு, மலச்சிக்கல் மற்றும் வைட்டமின் குறைபாடு போன்ற சிக்கல்களுக்கு வழிவகுத்து விடும். அதனால், மற்ற அனைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும், குறிப்பாக நார்ச்சத்துகளையும் நீங்கள் உட்கொண்டாக வேண்டும்.

 

அதே நேரத்தில் அதிகமாகப் புரதம் எடுத்துக் கொண்டால் அது உடல்நல ஆபத்துக்குக் காரணமாக அமையலாம் என சில விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். எனவே அதிக புரத உணவு முறையைப் பின்பற்றும்போது கவனமாக இருக்க வேண்டும்.

 

எவ்வளவு புரதம் சாப்பிடுவது பாதுகாப்பானது என்பதை இங்கே அறியலாம்.

 

நமக்கு ஏன் புரதம் தேவை?

புரோட்டீன் எனப்படும் புரதம் கிட்டத்தட்ட உடலின் ஒவ்வொரு திசுக்களிலும் உள்ளது. குறைந்தபட்சம் 10,000 வெவ்வேறு புரதங்கள் உண்டு. நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்பதைக் கட்டமைப்பதற்கான அடிப்படை இதுதான். உடலின் வளர்ச்சி, பழுதுபார்க்கும் பணிகளுக்கு புரதம் அவசியம்.

 

புரதம் அமினோ அமிலங்களிலிருந்து உருவாக்கப்படுகிறது. புதிதாகவும், சில நேரங்களில் பிற அமினோ அமிலங்களை மாற்றியமைப்பதன் மூலமும் இதை உடல் உருவாக்குகிறது. அத்தியாவசிய அமினோ அமிலங்கள் உணவில் இருந்து கிடைக்கின்றன. விலங்குகளில் இருந்து கிடைக்கும் புரதம் நமக்கு தேவையான அனைத்து அமினோ அமிலங்களையும் வழங்குகிறது.

 

எவ்வளவு புரதம் உடலுக்குத் தேவை?

புரத பொடிகள் மற்றும் ஷேக்குகளை பலர் தங்கள் உணவில் சேர்க்கிறார்கள். ஷேக்கில் ஒரு பாட்டிலுக்கு 45 கிராமுக்கு மேல் புரதம் இருக்கும். உண்மையில் அவ்வளவு புரதம் நமக்குத் தேவையா? ஒவ்வொரு நாளும் உண்மையில் எவ்வளவு புரதம் தேவை, அதை உட்கொள்வது எவ்வளவு பாதுகாப்பானது?

 

பிரிட்டனில் பெரியவர்கள் தங்கள் எடையில் உள்ள ஒவ்வொரு கிலோவிற்கும் 0.75 கிராம் புரதத்தை உண்ண அறிவுறுத்தப்படுகிறார்கள். உதாரணத்துக்கு 70 கிலோ எடையுள்ளவராக இருந்தால், ஒரு நாளைக்கு 52.5 கிராம் புரதத்தை உண்ண வேண்டும். இது Reference Nutrient Intake (RNI) என்ற குறியீட்டின் அடிப்படையிலானது.

 

எளிதாகச் சொல்ல வேண்டுமானால் ஒவ்வொருவரும் உள்ளங்கை அளவுக்கு புரதத்தை உள்கொள்ளலாம். சராசரியாக, ஆண்கள் 55 கிராம் மற்றும் பெண்கள் 45 கிராம் புரதத்தை தினமும் சாப்பிட வேண்டும். இது இறைச்சி, மீன், கொட்டை வகைகள், பருப்பு வகைகளின் இரு உள்ளங்கை அளவு.

 

ஆனால் பலரும் இதை மிக அதிகமாகவே சாப்பிட்டு விடுகிறார்கள். நேஷனல் டயட் மற்றும் நியூட்ரிஷன் ஆய்வின்படி படி, பிரிட்டனில் உள்ள ஆண்களும் பெண்களும் தங்களுக்கு ஒவ்வொரு நாளும் தேவைப்படுவதை விட 45-55 சதவீதம் அதிக புரதத்தை சாப்பிடுகிறார்கள்.

 

புரதத்திற்கான தற்போதைய RNI அளவை விட இரண்டு மடங்கு வரை சாப்பிடுவது பாதுகாப்பானது என்று பொதுவாகக் கருதப்படுகிறது. ஆனால் அதிகப்படியான புரதத்தை சாப்பிடுவதால் "எந்த நன்மையும் இல்லை." என ஊட்டச் சத்து நிபுணர் ஹெலென் க்ராவ்லி கூறுகிறார்.

 

அதிக புரதம் சாப்பிட்டால் என்ன ஆகும்?

சில உயர் புரத உணவுகள் கூடுதல் கொழுப்பு மற்றும் உப்பு போன்றவற்றையும் விட ஆரோக்கியக் கேடானவை.

 

அதிகப்படியான புரதத்தை உட்கொண்டால் அதைச் செயலாக்கும் செய்ய வேண்டிய பெரும் பணி சிறுநீரகத்தின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தும். ஏற்கெனவே சிறுநீரக நோய்கள் இருப்போருக்கு அதிகப்படியான மாமிச புரதம் சிறுநீரக கற்களை ஏற்படுத்தும். சில நிபுணர்கள், அதிகப்படியான புரதம் எலும்பு வலிமையைப் பாதிக்கலாம் என்று கூறுகிறார்கள். பிரிட்டிஷ் டயட்டெடிக் அசோசியேஷன் கூற்றின்படி, அதிகப்படியான புரதம் குமட்டல் போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

 

சப்ளிமென்ட்ஸ் அவசியமா?

ஆரோக்கியமான உணவில் இருந்து நமது உடலுக்குத் தேவையான அனைத்து புரதத்தையும் பெற முடியும்.

 

வே புரோட்டின் போன்ற புரதப் பொடிகள் மற்றும் அதிக புரதம் கொண்டவை என சந்தைப்படுத்தப்படும் உணவுகள், இப்போது பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. புரோட்டீன் ஷேக் மூலமாகவும் உணவில் கணிசமான அளவு கூடுதல் புரதத்தை சேர்க்கலாம்.

 

விளையாட்டு வீரர்கள் மற்றும் பெண்களுக்கு தசை வளர்ச்சி மற்றும் உடற்பயிற்சிக்குப் பிந்தைய தசை மீட்புக்கு புரதம் உதவுகிறது. ஆனால் சில ஆய்வுகள் ஆரோக்கியமான உணவு மட்டுமே தசை மீட்புக்கு தேவையான புரதத்தை வழங்க முடியும் என்று கூறுகின்றன.

நன்றி:பிபிசி தமிழ்

No comments:

Post a Comment