************** ((1993-இல் எழுதப் பட்டது ))
இரவு, நடுச்சாமத்தை தாண்டியிருந்தது.....
மரியதாஸ் இப்போதுதான் "ஹொட்டல்" வேலை முடிந்து வீட்டுக்கு
வந்திருந்தான்.
சரியான அலுப்பிலிருந்தான். " எங்க .!.மகேசனை இன்னும் காணல்ல..என்னைப்போல அவனுக்கும் முறியல்தான் போலிருக்கு..." தனக்குள்ளாக முணு முணுத்துக்கொண்டான். "ரீச்சஸ் விஸ்கி"யையும்
கோலாவையும், எடுத்து மேசையில் வைத்துக்கொண்டு,தொலைக்காட்சியை முடுக்கிவிட்டான். அவன் எதிர் பார்த்தபடியே, "ஆர்.ரி.எல்.-பிளஸ் சனலில்" அலங்கோலப்படம் ஒன்று போய்க் கொண்டிருந்தது. அதைத்தான் அவனும் எதிர் பார்த்தான்.
"விஸ்கி"யை
"கிளாசில்" ஊற்றிக்கொண்டே, கண்களை அதில் இலயிக்கவிட்டான்.
அதே நேரம் மகேசனும், உள்ளே நுழைந்தான். வந்ததும் வராதுமாக, ஊற்றியிருந்த
விஸ்கியைக் எடுத்து மட மடவென ஒரே முடறில் குடித்துவிட்டு ,"அப்பாடா..முறிச்சுப்
போட்டாங்கள். நாரி கழண்டு போச்சு."
இன்னொரு கிளாஸை எடுத்துக்கொண்டுவந்து மேசையில் வைத்தான்.அதில் மரியதாஸிக்கு
ஊற்றிவிட்டு, தனக்கும்
ஊற்றிக்கொண்டான். தொலைக்காட்சியைப் பார்த்தவன், " ஓமடா....!
தினமும் இதுகளையே பார்....நாளைக்கு கலியாணத்துக்குப் பெட்டையைக் கூப்பிட வேணுமெண்டு புலம்பு.."
" ஏன்...நீ என்ன
குறைஞ்ச ஆளோ...? எனக்கும்
இண்டைக்கு சரியான முறியல்தான்.
நாளைக்கும் இரண்டு மூணு "ரூறிஸ்ட் பஸ்"கள் வாறதாக கதைச்சாங்கள். வேலைமட்டும் வாங்குவாங்கள்; சம்பளத்தை மட்டும் கூட்டமாட்டாங்கள். "
"மச்சான்...மரி..!.BBC "சனலை" மாத்தடா பாப்பம்.. இத்தாலிக்காரன் நம்மட பொடியன்களப்பற்றி என்னவோ சொன்னான். அவன்ர "டொச்சு" எனக்கு அரைவாசிதான் புரிஞ்சிது. ஊரில...சரியான சண்டை நடக்குது போல.." மரியதாஸ் BBC-யை மாற்றினான். பலஸ்தீனம், ஆப்கானிஸ்தான், காஸ்மீர் என உலகச் செய்திகள் அடுத்தடுத்து போயின. கடைசியாக பூநகரி தாக்குதல் பற்றிச் சொன்னபோது, இருவரும் நிமிர்ந்து அமர்ந்தனர்.
" ம்..ம்.!
இனி..அவ்வளவுதான்..சிறிது சிறிதாய்..சொறிஞ்சு..இப்ப பெரிய "காம்பை " யே
சுறண்டிற்றினம். அவன் அங்குள்ள சனங்கள் மேல, கண்டபாட்டுக்கு..குண்டுமழை பொழியப் போறான்.
கொழும்பில சீவிக்கிற நம்மட சனங்கள், அநியாயத்துக்கு அடி உதை வாங்கப் போகுதுகள்.
இவங்களின்ர சொறிச்சேட்டையால யாழ்ப்பாணமே தரை மட்டமாகப் போகுது." என்று
அலட்டிக் கொண்டான் மரியதாஸ். அவனுக்கு எந்த தமிழ் போராட்டக் குழுக்களையுமே
பிடிக்காது. நிதி கேட்டு, எவர் வந்தாலும் எடக்கு முடக்காக முகத்தில அடித்தமாதிரி
அர்த்தமற்ற கேள்வியெல்லாம் கேட்பான். ஒரு சதம் கூட ஈயமாட்டான். சரியான நப்பி...
ஈழ ஏதிலிகள் நிதியென்று வந்தவர்களிடம், "இஞ்ச ..நாங்களும் அகதிகள்தான்...கடன் பட்டு வந்த காசு இன்னுமே குடுத்து முடிக்கல்ல...அதுக்குள்ள தெண்டலுக்கு வந்தால் ஆரிட்டப் போறது...?அடுத்தமாதம் மட்டில பார்ப்பம்..." என்று சொல்வானே தவிர, அவனிடம் காரியம் ஆகாது. மகேசன், அவனுக்கு எதிர்மாறு. தன்னால் முடிந்ததை எழுதி விட்டு, மாதா மாதம் கொடுத்து முடிப்பான். மகேசனுக்கும் அவனுக்கும் இதனால், அடிக்கடி மோதல் வரும். கண்ட மேனிக்கு மகேசனை திட்டுவான். ஒரே ஊரவர்கள் என்பதால், மகேசன் பெரிது படுத்துவதில்லை. அவன் அமைதியான சுபாவமுடையவன். இனப் பற்றாளன்.
🛋
சென்ற வாரம், மரியதாஸுக்கு அவனுடைய அகதி நிலைக்கு, விசாரணை நடந்த போது, தனக்கு சாதகமான தீர்ப்பு வரவேண்டும் என்பதுக்காக, தன் குடும்பத்தில் அனைவருமே ஈழ விடுதலை அனுதாபிகள் என்றும், தன்னை இராணுவம் தேடியதால் தான், இங்கு தப்பி வந்ததாக பொய் சொல்லியிருந்தான். அண்மையில் தன் வீட்டை இராணுவம் குண்டு வைத்து தரைமட்ட மாக்கிவிட்டதாகவும், அதில் தன் பெற்றோர் அகப்பட்டு இறந்ததகவும், துணிந்து பொய் சொல்லியிருந்தான். உயிருடன் இருந்தவர்களை தன் அகதி நிலை வெற்றிபெற வேண்டும் என்பதுக்காக காவு கொடுத்தான். அதற்கான பொய் ஆதாரங்களையும் கூட சமர்ப்பித்திருந்தான். அதைப்பெருமையாக மகேசனிடம் பீத்திய போது, மகேசன் வாய்க்கு வந்தபடி கோபமாகத் திட்டித் தீர்த்தான்.
"அடேய்..பாவி..!
இதுக்காக, உயிரோட இருக்கிற
அப்பா..அம்மாவை காவு குடுக்கிறியே ! நீ யெல்லம் ஒரு மனிசனா....?" என்று
காறிதுப்பாத குறையாக கோபத்தில் திட்டினான். "அடேய்....உனக்கு
....கரிநாக்குடா..... சொல்லுற பொய்..
பலிச்சிடப்போகுது.." என்று மனதுக்குள் மகேசன் முணு முணுத்துக் கொண்டான்.
"அட..போடா..பன்னாட...!
எவன் .எவனெல்லம் பொய்; திருகுதாளங்கள் சொல்லி" கார்ட்டு"ம் எடுத்து, வீடு வாசல்,கார்,கடை எண்டு
கொடிகட்டிப் பறக்கிறானுகள். நான் ஒரு சின்னப் பொய்தானே சொன்னன். இதில என்ன
வந்திற்றுது எண்டு நீ
விண்ணுக்கும் மண்ணுக்கும் எகிறி குதிக்கிறா...? இருந்து பார்..!
எனக்கு கெதியில "கார்ட்டு" கிடக்குதா இல்லையா எண்டு...! நான்
சொன்னதையெல்லாம் அதிகாரிகள் முழுசா நம்பிற்றாங்கள். விசாரணை முடிஞ்சு வரக்கொள்ள, எனக்கு ஆறுதல்
சொல்லி அனுப்பினாங்கள். எனக்கு நூற்றுக்கு நூறு முழு நம்பிக்கை..!"என்று
பெருமையடித்தான் மரியதாஸ். அவனது சுயநலப் போக்கும், பிடிவாதக்
கொள்கையும் மகேசனுக்கு எரிச்சல் ஊட்டினாலும், மேற் கொண்டு அவனுடன் தர்க்கிப்பதை தவிர்த்துக்
கொண்டான்.
போத்தலின் மட்டம் இறங்கிக்கொண்டுவர, போதையின் மட்டம் ஏறிக்கொண்டுபோனது. "இனி,என்ன..மச்சான., இந்தச்
சென்மத்திலயும், நாடு பழைய
நிலைக்குத் திரும்பி வராது. ஆண்டவனே எண்டு
"கார்ட்"டும் கிடைச்சிட்டா இஞ்சயே ´செற்றில்´ ஆகிடலாம்.."
மரியதாசின் நாக்கு போதையில் மழலை பேசியது. ஆனால் மகேசன் எவ்வளவுதான் குடித்தாலும், நிலை
தளம்பமாட்டான். கனக்கவும் கதைக்கமாட்டான். அவ்வளவு நிதானம்.
"மச்சான்..!
மரியதாஸ்...என்ன இருந்தாலும், நீ..போன கிழமை அகதி நிதி கேட்டு வந்தவங்களோட, எடக்கு முடக்கா
கதைச்சியிருக்கக் கூடாது. நேற்று, நாலஞ்சு பேரை வழியில கண்டன்.
உன்னைப்பற்றி சரியான குறைப் பட்டாங்கள். ´எவ்வளவோ குடிச்சி வெறிச்சி, ´நைற் கிளப்´புக்கும், பொம்பிளைகளுக்கும்
வாரியிறைகிற உனக்கு
ஐம்பதோ-நூறோ தந்திருக்கலாமே´ எண்டாங்கள். என்னால எதுவுமே உனக்காகக்
கதைக்க முடியாமல் போச்சுடா... நீ.. தாறியோ தாரல்லையோ, நீ தந்ததாக நான்
ஒரு ஐம்பதை நாளைக்கே என்ர காசில குடுக்கிறன்."
என்று மகேசன் மூச்சுவிடாமல்
சொல்லிக் கொண்டே அவனின் முகத்தைப் பார்த்தான்.
"ஆராக்களடா..என்னைப்
பற்றி நாக்கு வழிச்சவங்கள்...? சொல்லு..! நாளைக்கே முகறக்கட்டையை
நொறுக்கிறன்..."என்று தூசணைகளையும் தாராளமாய் தூவினான்.
வெறி கூடியதால்,
அப்படியே இருக்கையில் சரிந்துவிட்டான். மகேசன், அவனை அங்கேயே
கிடக்கவிட்டு,தானும்
படுக்கையில் முடங்கினான்.
மூன்று மாதங்கள் கடந்தன......
மகேசன் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தபோது, மரியதாஸ்
பேயறைந்தவன் போல, முகம் கறுத்து ´சோபா´வில் சரிந்து
கிடந்தான். மகேசன் வந்ததையே உணராமல் பிரமையில் உறைந்திருந்தான். அவன் முன்னே, இரண்டு கடிதங்கள்
பிரித்தபடியே கிடந்தன. ஒன்று ஈழத்து முத்திரையுடனும், மற்றது உள்ளூர்
முத்திரையுடனும் காணப்பட்டன.
"டேய்...மச்சான்..மரியதாஸ்..என்னடா...விசர்
பிடிச்சவன் மாதிரி இருக்கிறாய்..? வீட்டில ஏதும் பிரச்சனையோ..?"
" நீயே..எடுத்து
வாசி...." விரக்தியில் நொறுங்கிய ஈனக்குரலில் மரியதாஸ். மகேசன் எதுவும்
புலப்படாமல் முதலில்,´ டொச்´சில் இருந்ததை வாசித்தான்.......
" திரு. மரியதாஸ், நீங்கள் உங்கள்
வாக்கு மூலத்தில் கூறியவாறு, உங்கள் பெற்றோரின் உயிரிழப்பும்,வீடு தரை
மட்டமானதையும், நீங்கள்
சமர்ப்பித்த ஆதாரங்கள் மூலம்அறிந்து கொண்டோம். இராணுவமே காரணம்
என்பதும் நிரூபணமாகின்றன. இவற்றை இந்த நீதி மன்றம் ஏற்றுக்கொண்டு, உங்களுக்கு அகதி
அந்தஸ்த்து அளிக்கப் பரிந்துரை செய்கின்றது."
"ஓ..ஓ..!..நீ..சொன்னபடியே, உன்ர அகதி நிலை
வெற்றியாகிற்றுதே..! பிறகென்ன... கலக்கிற்றாடா...அதுக்கேன்ரா..பேயறைந்தவனாட்டம் இருக்கிறா..?" என்றுமகிழ்ந்தவன், அடுத்த
கடிதத்தையும் எடுத்து வாசித்தான். இப்போது மகேசனையும் பேய் அறைந்தது.
"அட...முருகா....!." என்று அலறிவிட்டான். அவனும், தடாலென
இருக்கையின் சரிந்தான்.
" மரியதாஸ்...உனக்குப்
பலதடவைகள் ´போன் எடுத்தும், உன்னைப்
பிடிக்கமுடியல்ல. கிளாலி... தாக்குதலால் சினம்
கொண்ட படையினர், கண்மூடித்தனமாக´செல்´ குண்டுகள்
வீசியதில், உனது பெற்றோரும், வேறு பலரும்
இறந்ததுடன், வீடுகளும் தரை
மட்டமாகிவிட்டன......" என்று, அவனது நண்பன் ஒருவன் கடிதம் எழுதியிருந்தான்.
"அற்ப, அகதி நிலைகைக்காக பொய் சொல்லப் போய், அதுவே உண்மையாய் நடந்துவிட்டதே...." என எண்ணிய மகேசன், மனம் பேதலிக்க, மரியதாசை தேற்றும் வகை அறியாது, அதிர்ச்சியில் உறைந்து கிடந்தான். மரியதாசுக்கு கரி நாக்கு.. என தான், அடிக்கடி சொல்லுவதை எண்ணிப்பார்த்து மனம் வருந்தினான்.
✍மயில். மகாலிங்கம்...( யேர்மனி )
0 comments:
Post a Comment