சித்தர் சிந்திய முத்துகள் ..... 4/62

 

***************************************************

 

சித்தர் சிவவாக்கியம் - -516

தூர தூரமும் தொடர்ந்தெழுந்த தூரமும்

பார பாரம் என்றுமே பரிந்திருந்த பாவிகாள்

நேர நேர நேரமும் நினைந்திருக்க வல்லிரேல்

தூர தூர தூரமும் தொடர்ந்து கூடலாகுமே.             

இறைவன் ஆகாயத்தில் இருக்கின்றான் என்று எவ்வளவு தூரம் சென்று தேடினாலும் அது தொடர்ந்து தூரமாக எழுந்து நிற்கின்றது. அவனை அடைவது என்பது மிகவும் கஷ்டம் என்று எண்ணி தொடர்ந்த துன்பங்களில் வாழ்ந்திருக்கும் பாவிகளே!!! அல்லும் பகலும் அனவரதமும் எந்த நேரத்திலும் ஈசனையே எண்ணி நினைவால் நினைந்து தியானித்து இருக்க வல்லவரானால் வெகு தூர தூரமாய் உள்ள ஆகாயம் உங்களுக்குள்ளேயே வெளியான மனதிலேயே இறைவனைக் கண்டு அவனையே தொடர்ந்து முயன்று பயின்று கூடலாம். இது உண்மையே.

***************************************************

 

சித்தர் சிவவாக்கியம் -517

குண்டலங்கள் பூண்டு நீர் குளங்கள் தோறும் மூழ்கிறீர்

மண்டுகங்கள் போல நீர் மனத்தின் மாசரறுக்கிலீர்

மண்டையேந்து கியரை மனத்திருத்த வல்லிரேல்

பண்டை மாலயன் தொழப் பணிந்து வாழலாகுமே.  

காதில் குண்டலங்கள் அணிந்து கொண்டு பெரிய பக்தர் என எண்ணும்படி வேடம் பூண்டு புண்ணிய நீர்கள் உள்ள திருக்குளங்கள் தோறும் தேடிச் சென்று, அதில் மூழ்கி எழுந்தால் பாவங்கள் யாவும் அகன்று விடும் என்று சொல்லி மண்டுகங்கலான வாத்து போல மூழ்கிக் குளிக்கின்றீர்களே! அதனால் நீங்கள் செய்த பாவம் போய்விடுமா? உங்களுக்குள் உள்ள மனதை அறிந்து அதிலுள்ள பாவங்களையும் குற்றங்களையும் நீக்கும் நீர் உள்ள குளமான இடத்தில் அன்பால் கசிந்துருகி ஈசனையே எண்ணத்தில் வைத்து மூழ்கியிருந்தால் மன மாசுகள் யாவுமே அகன்றுவிடும். கபாலத்தை கையில் ஏந்தியுள்ள ஈசனை மனத்திலேயே இருத்தி தியானிக்க வல்லவரானால் உங்கள் உள்ளத்தில் ஆதியான மெய்ப் பொருளில் திருமாலும் பிரமனும் தேடியும் கிடைக்காத திருவடியில் பணிந்து ஈசனோடு சேர்ந்து வாழல் ஆகும்.       

****************************************************

 

சித்தர் சிவவாக்கியம் -518

கூடுகட்டி முட்டையிட்டுக் கொண்டிருந்த வாறு போல்

ஆடிரண்டு கன்றையீன்ற அம்பலத்துள் ஆடுதே

மாடு கொண்டு வெண்ணையுண்ணும் மானிடப் பசுக்களே

வீடு கண்டு கொண்டபின்பு வெட்ட வெளியும் காணுமே.                       

சிலந்தியானது தன் வாயிலிருந்த எச்சிலால் கூடு கட்டி அதிலே முட்டையிட்டு அடைகாத்து அதிலேயே வாழ்ந்து கொண்டிருப்பதைப் போல் நம் உடம்பில் சந்திர சூரிய கலைகளாக ஆடிக் கொண்டிருந்த அகாரமும் உகாரமும் ஒரேழுத்தான ஆதியிலிருந்தே பிறந்து வெளியாக அம்பலத்தில் ஆடிக் கொண்டிருக்கின்றது. அதுவே நம் உயிர் உள்ள இடம் என்பதையும் அறிந்து கொள்ளாமல், ஈசனை அடைய சைவத்தை கடைப் பிடிக்க வேண்டும் என்று உபதேசம் செய்து, பசுவின் இரத்தத்திலிருந்து வரும் பாலில் இருந்து கடைந்த வெண்ணெய்யை உண்ணும் மானிடப் பசுக்களே! உங்கள் உயிர் இருக்கும் வீட்டை அறிந்து கண்டு கொண்ட பின்பு வெட்ட வெளியாக ஈசனை காணலாம்.      

***************************************************

 

சித்தர் சிவவாக்கியம் - 520

நட்ட கல்லைத் தெய்வமென்று நாலுபுட்பம் சாற்றியே

சுற்றி வந்து முணமுணென்று சொல்லு மந்த்ர மேதடா

நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்

சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ.               

நட்டு வைத்த கற்சிலைகளையே தெய்வம் என்று சொல்லி பூக்களைச் சூடி அலங்கரித்து கோயிலைச் சுற்றி வந்து வாய்க்குள் முணுமுணுத்து மந்திரங்களைச் சொல்லி வணங்குகிறீர்கள். அந்த நட்ட கல்லும் பேசுமா? நாதன் இருப்பதைக் காட்டுமா? சட்டியில் வைத்து சுட்டு சமைத்த கறியின் சுவையை அந்தச் சட்டி, சட்டுவம் அறிய முடியுமா? அது போல இல்லாமல் நாதனாகிய ஈசன் நம்முள் நடுவாக நட்டகல்லாக இருப்பதை உணர்ந்து கொள்ளுங்கள். அதையே தெய்வம் என்று அறிந்து மனம் புத்தி சித்தம் அகங்காரம் என்ற நான்கு மலர்களை சாற்றி அதையே நினைவால் சுற்றிவந்து மௌனம் என்ற மந்திரத்தையே தியானம் செய்யுங்கள். நம் உள்ளிருக்கும் குருநாதன் பேசுவார். உடலில் உள்ளே உள்ள இந்த உண்மையை உணர்ந்து ஊணுருக உயிர் உருக தவம் இருந்து அறிந்து கொள்ளுங்கள்.              

***************************************************

அன்புடன் கே எம் தர்மா.

 

0 comments:

Post a Comment