சித்தர் சிந்திய முத்துக்கள் .........4/60

 

***************************************************

 

சித்தர் சிவவாக்கியம் -496

காணவேண்டும் என்று நீர் கடல் மலைகள் ஏறுவீர்

ஆணவம் அதல்லவோ அறிவிலாத மாந்தரே

வேணுமென்ற அவ்வீசர் பாதம் மெய்யுளே தரிப்பிரேல்

தாணுவாக நின்ற தான் சிவமதாகுமே.              

இறைவனைக் காண வேண்டும் என்று ஆவல் கொண்டு கடல் கடந்தும் மலைகள் பல ஏறியும் செல்கின்றீர்கள். அதனால் நீங்கள் ஆண்டவனைக் கண்டு கொண்டீர்களா? அதனால் ஆணவம் வருமே அன்றி ஆண்டவனை அறிய முடியாது. அறிவை அறியமுடியாத அறியாத மனிதர்களே! ஞானம் அடைய வேண்டும் என்ற ஞான வேட்கையுடன் அந்த ஈசனின் பாதம் நமது உடம்பிலேயே இருப்பதை அறிந்து அதையே பற்றித் தியானித்து இருந்திடுங்கள். தாணுவாகிய சிவனே நம் சீவனாகிய உயிரிலே தங்கியிருப்பதைக் கண்டு கொள்ளலாம். அதுவே சிவமாகிய பரம்பொருள்.

***************************************************

 

சித்தர் சிவவாக்கியம் -498

எச்சிலெச்சில் என்று நீரிடைந்திருக்கும் எழைகாள்

துச்சிலெச்சில் அல்லவோ தூய காய மானதும்

வைச்சலெச்சில் தேனலோ வண்டின் எச்சில் பூவலோ

கைச் சுதாவில் வைத்ததுடன் கறந்த பாலும் எச்சிலே.                    

எச்சில் எச்சில் என்று சொல்லி எச்சலாகிய நீரால் ஆன உடம்பைப் பெற்று அதனால் இடர் அடைந்து வாழும் ஏழை மக்களே! உங்கள் உச்சியிலிருந்து இறங்கி விழுந்த எச்சிலான சுக்கிலத்தால் தானே இத்தூல உடம்பு உண்டானது. தேன் வண்டு பூக்களில் இருந்து உறிஞ்சி எடுத்து தேனடையில் வைத்த எச்சில் தானே சுவை மிகுந்த தேன் ஆகியது. கைப்பாத்திரத்தில் பசுவின் மடியிலிருந்து கறந்தவுடன் எடுத்து வரும் தூய பாலும் கன்றின் எச்சில் தானே. ஆகையால் எச்சில் என்று இகழாமல் எச்சில் ஆகிய நீரை அறிந்து கொள்ளுங்கள்.     

***************************************************

 

சித்தர் சிவவாக்கியம் - 499

தீர்த்த லிங்க மூர்த்தியென்று தேடி ஓடும் தீதரே

தீர்த்த லிங்க முள்ளில் நின்று சிவனைத் தெளியுமே

தீர்த்தலிங்கம் உம்முளே தெளிந்து காண வல்லிரேல்

தீர்த்தலிங்கம் தானதாய்ச் சிறந்ததே சிவாயமே. 

தீர்த்தம் தலம் மூர்த்தி என்றும் ஜோதிர்லிங்கம் என்றும் தேடி ஓடும் தீயை அறியாத பக்தர்களே! தீர்த்தமாகிய நீரையும் லிங்கமாகிய நெருப்பையும் ஒன்றாக்கி நின்று உலாவும் உயிரைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள். நீராகவும், லிங்கமாகவும் உமக்குள் உள்ள மெய்ப்பொருளை அறிந்து அதையே தெளிந்து தியானித்துக் கண்டு ஞானத்தில் வல்லவராகுங்கள். நீராகவும் லிங்கமாகவும் திகழும் அதுவே தான் என்ற ஞானமாகி சிறந்து இருப்பதுவே சிவம் என்பதை உணர்ந்து தியானியுங்கள்.        

***************************************************

 

சித்தர் சிவவாக்கியம் - 500

ஆடுகொண்டு கூறுசெய்து அமர்ந்திருக்குமாறு போல்

தேடுகின்ற செம்பினைத் திடப்படப் பரப்பியே

நாடுகின்ற தம்பிரானும் நம்முளே இருக்கவே

போடு தர்ப்ப பூசையொன்றும் பூசை யென்ன பூசையே.

ஆட்டைக் கொன்று அதன் தசைகளை கூறு போட்டு அடுக்கி வைத்து அதை விற்பதற்கு அமர்ந்திருப்பதைப் போல், ஆண்டவனுக்கு பூசை செய்கிறோம் என்று தேடி வைத்த செம்புச் சொம்புகளில் எல்லாம் நீர் நிரப்பி எட்டுத் திசைகளிலும் திடப்படப் பரப்பி வைத்து நீங்கள் போடுகின்ற பூசை என்ன பூசையோ! நீங்கள் நாடி செய்கின்ற பூசைக்குரிய தம்பிரான் ஆன ஈசன் நமக்குள் உள்ள ஆன்மாவில் பூவாக இருப்பதை அறிந்து அதிலேயே மனதை ஒன்றி நிறுத்தி அசையாமல் இருந்து அதிலேயே மனதை ஒன்றி இருந்து தியானிப்பதுவே உண்மையான பூசையாகும்.             

***************************************************

அன்புடன்:கே எம் தர்மா & கிருஷ்ணமூர்த்தி

No comments:

Post a Comment