சித்தர் சிந்திய முத்துக்கள்....3/63

****************************************************

 

சித்தர் சிவவாக்கியம் -523

பேய்கள் கூடி பிணங்கள் தின்னும் பிரியமில்லாக் காட்டிலே

நாய்கள் கற்ற நடனமாடம் நம்பன் வாழ்க்கை ஏதடா

தாய்கள் பாலுதிக்கும் இச்சை தவிர வேண்டி நாடினால்

நோய்கள் பட்டு உழல்வதேது நோக்கிப்பாரும் உம்முளே.

நமக்குள் நாய்கள் போல் சுற்றும் மனதிற்குள் நடனமாடும் நம் அப்பனான ஈசன் இல்லாது போய்விட்டால் நமக்கு வாழ்க்கை என்பது ஏது? இவ்வுடம்பிற்கு பிணம் என்று பேர் வைத்து பேய்கள் கூடிப் பிணங்கள் தின்னும் நாம் விரும்பாத சுடுகாட்டிற்குத் தான் கொண்டு செல்வார்கள். பெண்களை தாயாக பாவித்து அவர்களின் இளமையிலும், செழுமையிலும் ஏற்படும் காம இச்சையை தவிர்த்துவிட்டு அவனை தனக்குள்ளேயே நாடி யோக ஞானத்தால் தியானித்திருப்பவர்களுக்கு நோய்கள் பட்டு உழலும் துன்ப வாழ்க்கை ஏற்படாது. ஈசனையே நாடியிருந்து அவன் இருக்கும் இடத்தையே தியானம் செய்யுங்கள்.

***************************************************

 

சித்தர் சிவவாக்கியம் - 524

உப்பை நீக்கில் அழுகிப் போகும் ஊற்றையாகும் உடலில் நீ

அப்பியாசை கொண்டிருக்க லாகுமோ சொலறிவிலா

தப்பிலிப் பொய் மானங்கெட்ட தடியனாகும் மனமே கேள்

ஒப்பிலாச் செஞ்சடையனாகும் ஒருவன் பாதம் உண்மையே.

உப்பான பொருள் நீங்கினால் உயிர் போய் அழுகி நாற்றமடித்து ஊத்தையாகும் உடம்பில் நீங்கள் அபிப்பிராயம் வைத்து ஆசை கொண்டு இருப்பதால் பயன் ஏதும் ஆகுமோ சொல்லுங்கள். அறிவில்லாமல் தப்பிலித் தனங்களை செய்து பொய் பேசும் மானங்கெட்ட தடியனாக திரியும் மனமே கேள். குரங்கு போல் தாவும் மனதை ஒருமுகப்படுத்தி ஒப்பிலாத ஒருவனாகிய செஞ்சடையனாகும் ஈசன் பாதம் மெய்ப் பொருளாக உண்மையில் உள்ளதை உணர்ந்து அந்த ஒன்றையே மனதில் நிறுத்தி தியானம் செய்யுங்கள். அதன் பயனால் உயிரும் போகாது, உடம்பும் நாறாது, மரணமிலாப் பெரு வாழ்வில் வாழலாகும். ஈசன் பாதம் ஒன்றே உண்மை என்பதை உணருங்கள்.

***************************************************

 

சித்தர் சிவவாக்கியம் - 525

பிறப்பதேலாம் இறப்பதுண்டு பேதை மக்கள் தெரிகிலாது

இறப்பதில்லை யென மகிழ்ந்தே எங்கள் உங்கள் சொத்தெனக்

குறிப்புப் பேசித் திரிவரன்றிக் கொண்ட கோலம் என்னவோ

நிரப்பும் பொந்தி அழிந்தபோது நேசமாமோ வீசனே.

இப்பூமியில் பிறப்பவை எல்லாம் ஒருநாள் இறந்து போகும் என்பதை தெரிந்து கொள்ளாமல் பேதை மனிதர்கள், நாமும் ஒரு நாள் இறந்து போவோம் என்பதை அறியாமல், இது என் சொத்து, அது உன் சொத்து என மகிழ்ந்து அது குறித்தே பேசிக் கொண்டு திரிவார்கள். அதனால் அவர்களின் மரணத்தை தடுத்து நிறுத்த முடியுமா? அவர்கள் இன்றிருக்கும் கோலம் என்றும் நிலைத்திடுமா? வயிறு நிரம்ப தின்று வளர்த்த இந்த உடம்பு அழிந்த போது அவையாவும் உங்களுடன் நேசமாகி கூட வருமா? ஈசன் ஒருவனே என்றும் நித்தியமானவன்.

***************************************************

..அன்புடன் கே எம் தர்மா.

0 comments:

Post a Comment