பூமி என்னும் சொர்க்கம் 15:

 பலூன் மூலம் எவ்வளவு உயரம் செல்லலாம்?

ஒரு பெரிய பலூனின் அடிப்புறத்தில் அமைந்த பிரம்புத் தொட்டிலில் உட்கார்ந்தபடி வானில் பறக்க முடியும். அப்படிப் பறக்கும் போது கீழே உள்ள இயற்கைக் காட்சிகளைக் கண்டு ரசிக்கலாம். இது அற்புத அனுபவம்.

 

சரி, இப்படி பலூன் மூலம் எவ்வளவு உயரம் வரை செல்ல முடியும்? இது நல்ல கேள்வி. ஹீலியம் என்ற வாயு நிரப்பப்பட்ட பலூன் என்றால் மிக உயரத்துக்குச் செல்ல முடியும். பலூன் எவ்வளவு உயரம் வேண்டுமானாலும் செல்லக்கூடியதுதான். ஆனால் மனிதனுக்கு அது சரிப்பட்டு வருமா என்பதுதான் கேள்வி.

 

ஏனெனில் உயரே போகப் போக பல ஆபத்துகள் காத்திருக்கின்றன. இந்த ஆபத்துகள் பற்றி எதுவும் தெரியாத காலத்தில் அதாவது 1862-ம் ஆண்டில் ஜேம்ஸ் கிளைஷர், ஹென்றி காக்ஸ்வெல் ஆகிய இரு விஞ்ஞானிகள் 82 அடி உயரமுள்ள ஒரு ராட்சத பலூனின் அடிப்புறத்தில் இணைக்கப்பட்ட பிரம்புக் கூடையில் அமர்ந்து வானை நோக்கிக் கிளம்பினர்.

 

பலூன் மேலும் மேலும் உயரே சென்றது. சுமார் 11 கிலோ மீட்டர் உயரத்துக்குச் சென்றபோது அங்கு குளிர் மைனஸ் 11 டிகிரியை (செல்சியஸ்) எட்டியது. கிளைஷர் நினைவிழந்தார். காக்ஸ்வெல்லின் கைகள் குளிரில் மரத்துப் போயின. அவருக்கு உடலில் வலுக்குறைந்தது. இன்னும் மேலே போனால் ஆபத்து என்பதை காக்ஸ்வெல் உணர்ந்து கடைசியில் பற்களால் ஒரு கயிற்றைப் பிடித்து இழுத்தார். பலூன் மெல்லக் கீழே இறங்க ஆரம்பித்தது. நல்லவேளையாக இருவரும் உயிர் பிழைத்தனர்.

 

வானில் உயரே செல்லச் செல்ல காற்றின் அடர்த்தி குறையும். அந்த அளவில் மூச்சு விடும்போது உடலுக்குக் கிடைக்கும் ஆக்சிஜன் அளவு குறையும். 9100 மீட்டர் உயரத்தில் ஒரு நிமிடத்தில் நினைவு போய்விடும். 15 ஆயிரம் மீட்டர் உயரத்தில் 15 வினாடியில் நினைவு தவறி விடும். விசேஷக் காப்பு உடை, சுவாசிக்க விசேஷக் கருவி இல்லையென்றால் 19 கிலோ மீட்டர் உயரத்தில் உடலில் உள்ள திரவங்கள் ஆவியாக ஆரம்பித்துவிடும். ரத்தம் கொதிக்க ஆரம்பித்துவிடும். உடல் வீங்கிவிடும். உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும். உடலுக்குத் தகுந்த அளவுக்கு ஆக்சிஜன் கிடைக்கவில்லை என்றால் பிரச்சினைதான்.

 

ஒரு ஸ்பூன் மருந்தை கால் தம்ளர் தண்ணீரில் கலந்து சாப்பிட்டால் மருந்து உடலில் சேரும். ஆனால் அந்த ஒரு ஸ்பூன் மருந்தைப் பெரிய அண்டா தண்ணீரில் கலந்துவிட்டு அதிலிருந்து கால் தம்ளர் தண்ணீரை எடுத்துக் குடித்தால் உடலில் சேரும் மருந்து குறைந்த அளவில்தான் இருக்கும். அது மாதிரி வானில் மிக உயரத்தில் என்னதான் நன்றாக மூச்சை உள்ளே இழுத்தாலும் உடலுக்குக் கிடைக்கிற ஆக்சிஜன் குறைவான அளவில்தான் இருக்கும். மார்பு பத்து மடங்கு பெரிதாக இருக்குமானால் ஒரு வேளை தகுந்த அளவு ஆக்சிஜன் கிடைக்கலாம். ஆனால் அதற்குச் சாத்தியமில்லை.

 

இப்படியாக வானில் உயரே செல்வதில் காற்றழுத்தக் குறைவு, கடும் குளிர், சூரியனிலிருந்து வருகிற ஆபத்தான கதிர்களின் தாக்குதல் எனப் பல ஆபத்துகள் உள்ளன.

 

ஆனாலும் சாதனை புரியும் நோக்கில் 2012-ம் ஆண்டில் ஃபெலிக்ஸ் பாம்கார்ட்னர் என்னும் சாகச வீர்ர் ஹீலியம் வாயு அடங்கிய ஒரு பெரிய பலூனின் அடிப்புறத்தில் விசேஷமாக வடிவமைக்கப்பட்ட கூண்டுக்குள், பலத்த காப்பு உடை அணிந்தபடி உட்கார்ந்தார். 39 கிலோ மீட்டர் உயரம் வரை சென்று, அங்கிருந்து தலைகுப்புறக் கீழே குதித்தார். குறிப்பிட்ட உயரத்தில் பாரசூட் விரிந்ததும் அவர் பத்திரமாகத் தரையில் வந்து இறங்கினார்.

 

பாம்கார்ட்னர் உயரே கிளம்பியபோது அவர் 16 வகையான ஆபத்துகளை எதிர்ப்படுபவராக உயரே செல்கிறார் என்று ஒரு நிபுணர் கூறினார். இந்த ஆபத்துகளைச் சமாளிக்க அவர் நான்கு அடுக்குகளைக் கொண்ட விசேஷ உடையை அணிந்திருந்தார். தகுந்த காற்றழுத்தம் கொண்ட காற்றை சுவாசிக்க அவரது கூண்டுக்குள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 

பாம்கார்ட்னரின் பலூன் உயரே செல்ல இரண்டரை மணி நேரம் பிடித்தது. அவர் கீழே குதித்த போது சில நிமிடங்களில் பூமிக்கு வந்துசேர்ந்தார்.

 

பாம்கார்ட்னர் சாதனை நிகழ்த்திய பின் 2014-ம் ஆண்டில் ஆலன் யுஸ்டாஸ் என்பவர் இதே போல பலூனில் 41 கிலோ மீட்டர் உயரம் வரை சென்று கீழே குதித்து புதிய சாதனை நிகழ்த்தினார்.

கட்டுரையாளர், எழுத்தாளர்/தொடர்புக்கு: nramadurai@gmail.com

No comments:

Post a Comment